privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்பாரதிராஜா - தமிழ் சினிமாவின் ஜெயமோகன் !

பாரதிராஜா – தமிழ் சினிமாவின் ஜெயமோகன் !

-

தை ஜெயமோகன் – இலக்கியத்தின் பாரதிராஜா என்றும் அழைக்கலாம். இந்த ஒப்பீடு ஏன் என்பதை ‘தேர்ந்த’ வாசகர்கள் கூர்ந்து யோசித்தால் புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு பிரச்சினை, விசயம், ரசனை குறித்தும் வெளியே ஏகப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவையே போதுமான புரிதலை, ரசனையை தருவதாக இருந்தாலும் ஜெயமோகன் அடங்கமாட்டார். அதில் தன்னுடைய சிந்தனை என்று ஒன்றை – அநேகமாக அது முன்னொரு காலத்தில் சொல்லப்பட்டவையாகவே இருக்கும் – உருவாக்காமல் தூங்க மாட்டார்.

பாரதி ராஜா - ஜெயமோகன்சான்றாக, அண்ணா ஹசாரே பத்திரிகையாளர் சந்திப்பில் சொதப்புகிறாரே, ஒரு வாக்கியம் கூட பேசத் தெரியாதவராக இருக்கிறாரே என்றால், “அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதி, கிராமத்து மனிதர், இத்தகையவர்கள் ராஜதந்திரத்துடனும், சாணக்கியத்தனத்துடனும் பேசத் தெரியாதவர்கள்” என்றார் ஜெயமோகன். இப்படி ஒரு பாராட்டை அண்ணா ஹசாரேவோ அவரை மார்கெட் பண்ணியவர்களோ கூட யோசித்திருக்க மாட்டார்கள்.

ஆனாலும் அரவிந்த் கேஜ்ரிவால் தனிக் கம்பெனி ஆரம்பித்ததும், இந்த காந்தியவாதி என்னென்ன ராஜதந்திரத்துடன் சொதப்பினார் என்பதை நாடே அறியும். போகட்டும். ரிலையன்ஸ் கம்பெனி அனைத்து பொருட்களையும், சேவைகளையும் தயாரிப்பதில் போட்டி போடுவது போல ஜெயமோகன் அனைத்திலும் தன்னைக் கண்டுபிடித்து எழுதி வருகிறார். எனினும் இங்கு நாம் பேசப்போவது ஜெயமோகனைப் பற்றியல்ல, பாரதி ராஜாவைப் பற்றி!

பாரதிராஜாவிடம் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கேட்டீர்கள் என்றால் பதிலாக பாரதிராஜா புராணம்தான் வரும். இத்தனை வருடங்கள் ஆகியும் இதற்கு மட்டும் அவர் சலித்ததே இல்லை. இந்த வார ஆனந்த விகடனில் வாசகர் கேள்விகளுக்கு பாரதிராஜா அளித்திருக்கும் பதில்களைப் பாருங்கள்!

முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனை இயக்கிய அனுபவத்தை ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு பாரதிராஜா, சிவாஜியிடம் “அண்ணே… உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது, மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்கக்கூட வேணாம்..” என்று வேலை வாங்கியதைக் கூறுகிறார். பிறகு ஒரு முறை சிவாஜி கேட்டு இவர் நடித்துக் காண்பித்தாராம். அதற்கு சிவாஜி,” இவன் நடிக்கிறதுல பத்து பெர்சன்ட் நடிச்சாக்கூடப் போதும்…ஜெயிச்சுரலாம்டி பொண்ணே” என்று நடிகை ராதாவிடம் சொல்கிறாராம். அதற்கு பாரதிராஜா, மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து சிவாஜியை சினிமாவுல கவிழ்க்கணும்னுதான் வந்தேன் என்று நைசாகச் சொன்னாரம்.

பாரதிராஜாஇறுதியில் படம் முடிந்து பிரிவ்யூ பார்த்துவிட்டு இது இண்டர்னேஷனல் கிளாசிக் என்று சிவாஜி உருகினாராம். பதிலுக்கு சிவாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது பிரம்மாண்டமான விழவை பாரதிராஜா எடுத்தாராம். போகட்டும். பாரதிராஜா சிவாஜியின் வாயாலேயே தன்னைப் பாராட்டிக் கொள்வதை உண்மை என்று சொல்ல சிவாஜி இல்லை என்பதால் பாரதிராஜாவுக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் நடிகர் திலகம் என்று கமலஹாசன் உட்பட பல ஜாம்பவான்களும் தூக்கிச் சுமக்கும் ஒரு ஆளுமையை பாரதிராஜா இங்கே கேலி செய்யவில்லை. மாறாக அந்த ஆளுமையை விட பாரதிராஜாவின் ஆளுமை  எவ்வளவு மகத்தானது என்பதை புரியவைக்கிறார். இங்கே எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஆளுமை’யை அவர் இறந்த பிறகு ஜெயமோகன் காலி செய்து எழுதிய காவியத்தை நினைத்துப் பார்க்கவும்.

அடுத்ததாக காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம் எல்லாப் பிரச்சினையிலும் பாதியிலேயே பாரதிராஜா ஓடுவது ஏன் என்று ஒருவர் கேட்கிறார்.

தமிழனுக்காக சிரமப்பட்டு பாரதிராஜா போராடும் இடத்திலெல்லாம் யாரோ ஒருவர் கட்சிக் கொடியை நட்டு விடுகிறாராம். இப்படித்தான் இவரோட ஆதரவை சிலர் சுயநலமா அறுவடை செய்கிறார்களாம். அதனாலதான் மனம் வெறுத்து ஒதுங்கி தமிழன் செத்தால் சாகட்டும் என்று தற்போது அமைதியாக இருக்கிறாராம். மற்றபடி பயமெல்லாம் இல்லையாம்.

திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் இவர் பயந்து போய் முறையே கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்கியதை நாடே அறியும். ஆனால் அவருக்கு இந்த தலைவர்களால் சின்னப் பிரச்சினை கூட வந்ததில்லை என்று இப்போதும் அவர்களைப் புகழ்கிறார் பாரதிராஜா. இந்த விசயத்தில் ஜெயமோகனும் கூட அண்ணா ஹசாரே, காந்தி, இந்துத்துவம் என்று பாதுகாப்புடன் இந்திய ஆளும் வர்க்கம் தூக்கிப்பிடிக்கிற கருத்து, இயக்கங்களில் மட்டும் கருத்தளவில் கலந்து கொள்கிறார். மற்றபடி புரட்சிகரக் கருத்துக்கள் எல்லாம் இந்திய ஞானமரபுக்கு விரோதமானது என்று ஒதுக்கி வைவார்.

அடுத்த வாசகர் பாக்யராஜ் குறித்து பேசுகிறார். மணிவண்ணன் மறைவிற்குப் பிறகு உசராக இருக்கும் பாரதிராஜா, தன்னிடம் வேலைக்கு சேர்ந்த அப்பாவி இளைஞன் பாக்யராஜ் குறித்து முக்கியமாக அவருக்கு வாழ்வு கொடுத்ததை நினைவு கூர்கிறார். இறுதியாக, “இப்பவும் அவனைப் பலமுறை, பல மேடைகளில் கோபமாத் திட்டியிருக்கேன். ஆனா, ஒரு தடவைகூட, ஒரு இடத்தில்கூட என்னை அவன் விட்டுக் கொடுத்துப் பேசினதே இல்லை. யார் கிட்ட எப்போ என்னைப் பத்திப் பேசினாலும் ‘எங்க டைரக்டர்’னு உண்மையான பாசத்தோட பேசுவான். ஸ்வீட் ராஸ்கல்!” என்கிறார். அவரைத் திட்டியும் அவர் இவரை விட்டுக்கொடுக்கமாட்டார் என்பது இவருக்கு பெருமை என்று பாரதிராஜா நினைக்கிறார். ஆனானப்பட்ட பாக்யராஜையும் நான் எப்பவும் திட்டிக் கொண்டேதான் இருப்பேன் என்கிறார்.

ஜெயமோகனைப் பொறுத்தவரை இந்த லிஸ்ட்டில் ஏராளம் சீடர்களை வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் தூக்கத்தின் போதும் ஜெயமோகனது புராண பெருமை பேசுவதால் அவர்களைத் திட்டும் வாய்ப்பு இதுவரை ஜெயமோகனுக்கு வரவில்லை. மற்றபடி அவர்களாகவே தாங்கள் முட்டாள்கள், குருவிடம்தான் ஞானம் கற்று வருகிறோம் என்று அடிக்கடி ஜெபிப்பதன் படி பார்த்தாலும் அவர்களைத் திட்டும் பாக்கியம் ஜெயமோகனுக்கு வரவில்லை.

ஜெயமோகன்அடுத்த கேள்வியில் 16 வயதினிலே திரைப்படத்திற்கு விகடன் 62.5 மதிப்பெண் கொடுத்தது இன்று வரை ரிக்கார்டு, யாரும் முறியடிக்கவில்லை என்பதை எப்படி நினைக்கிறீர்கள் என்பதை ஒருவர் கேட்கிறார்.

ஸ்டூடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு கூட்டிச் சென்றதால் அந்த மதிப்பெண் விகடனால் அளிக்கப்பட்டிருக்கிறது என்று பணிவாக பேசும் பாரதிராஜா தற்போது அதை இன்றைய இளம் இயக்குநர்கள் முறியடிப்பார்கள் என்கிறார். ஆனால் அப்படி யாராவது முறியடித்தால் உடனே படம் எடுத்து அதை இவர் முறியடிப்பாராம். என்ன ஒரு ஸ்போர்ட்டிவான சிந்தனை!

இந்த விசயத்தில் ஜெயமோகன் தன்னை விஞ்சும் படைப்பாளிகள் இக்கணம் வரை தமிழ்நாட்டில் யாருமில்லை என்றுதான் எழுதியிருக்கிறார். ஒருவேளை விஞ்சினாலும் அவரது கீ போர்டு அதை அனுமதிக்காது என்பதால் இங்கும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல்தான் இருக்கிறார்கள்.

இறுதியாக ”உங்களைக் குருநாதர்னு கொண்டாட சினிமாவில் ஒரு பட்டாளமே இருக்கு. ஆனா, உங்க குருநாதர் பத்திப் பெருசா தகவல் எதுவும் கேள்விப்பட்டதில்லையே..?” என்ற கேள்விக்கு பாரதிராஜா என்ன பதிலளித்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

பெற்றோர்கள், பல்வேறு பழைய இயக்குநர்களிடமிருந்தெல்லாம் கற்றுக் கொண்டேன் என்று சொல்லுபவர் இறுதியாக, “இதுல யார்னு ஒருத்தரை மட்டும் என் குருநாதரா குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? எனக்குத் தனியா ‘குரு’னு யாரும் கிடையாது. அடமா யாரையாவது சொல்லுங்கனு கேட்டா, இந்த இயக்குநர் பாரதி ராஜாவின் குருவா, அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமியைச் சொல்லலாம்!” என்கிறார்.

இதற்கு விளக்கம் தேவையா?

அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் யார் என்று தெரியாதவர்களுக்காக அது பாரதிராஜாதான் என்று தெரிவிக்கிறோம்.

ஜெயமோகனைப் பொறுத்தவரை பெற்றோர்களின் ஆளுமையில் வளர்ந்திருப்பதோடு ஊட்டியில் ஒரு குருவையும் வைத்திருந்தார். ஆனால் அந்த குருவை விஞ்சிய சீடன் என்று யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆவலுடன் காத்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் ஜெயமோகன் – பாரதிராஜாவை யாரும் பிரிக்க முடியாது என்பதை சவாலாகவே தெரிவிக்கிறோம்.