“ஏன் சித்தப்பா இந்த வயசுலயும் மூட்டைத் தூக்குற, இந்த தள்ளாத வயசுல எதுன்னா ஒன்னு நடந்துச்சுன்னா என்ன செய்வே. நானும் சின்ன வயசுலேருந்து ஒன்ன பாத்துக்கிட்டுதான் இருக்கேன். அந்த ரெண்டு துண்டு நெலத்த வச்சுகிட்டு நடவு சீசன்ல நடவு செய்யற, அறுப்புக்குப் பிறகு உளுந்து, பயிறு போடுற, கோடையில வெண்டை-கொத்தவரை போட்ற, ஓச்சல் இல்லாம உழைக்கிற, போறப்ப என்னத்த வாரிகிட்டு போகப்போறியோ? தெரியல” என்றேன்.
அவர் மனதில் தேங்கிக் கெடந்த ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார்.
“எண்பது வயசாகுது எனக்கு, பதினைஞ்சு வயசுலேருந்து வெவசாயம் பண்றேன். எங்கப்பன் கட்டிவச்சுட்டு போன வீட்டுக்கு ஒழுகாம ஓலை மாத்த முடியல என்னால. என்னத்த ராப்பகலா ஓடி ஓடி ஒழைச்சாலும், வயித்துக்கும் வாயிக்குமே சரியாப் போவுது.
வெவசாய மொறைதான் மாறியிருக்கே தவிர, நம்மள மாதிரி பாடுபட்டு ஒழைக்கிற மனுசங்க நெலமை இன்னும் மாறவே இல்ல. ஏக்கர் கணக்குல நெலம், பத்து ஏரு, வண்டி, மாடுன்னு வச்சுருந்தவனெல்லாம் இன்னைக்கு டிராக்டர், குபேட்டா, கதிரறுக்குற – அடிக்குற மெசினு, மோட்டார் வண்டின்னு போய்ட்டே இருக்கானுவ. அவனுவளுக்கு பொளைக்க வழி தெரியுது.
நம்மெல்லாம் கால் ஏக்கரு, அரை ஏக்கரு வச்சிருந்தாலும் கையில ஏரு மாடும் வச்சுருந்தோம், உழுதது போக மத்தவனுக்கு கூலிக்கு ஏரு ஓட்டுனோம். இப்ப ஒண்ணுமே இல்லாம போச்சு, இருந்ததும் போச்சே நொள்ள கண்ணான்னு ஏரு ஓட்டவும், கதிரருக்கவும், அறுத்த கதிர ஏத்திக்கிட்டு வரவும், அவனுவகிட்ட எதிர் பாத்து நிக்கிற நெலமையா போச்சு.
பெரும்பாலான நம்ம சனமெல்லாம் வெவசாயத்த விட்டுப்புட்டு டவுன பார்க்க கூலி வேலைக்கி போறாய்ங்க. இதுல பத்துரூவா கெடைக்குமா, அதுல பத்துரூவா கெடைக்குமான்னு வயித்துப்பாட்டுக்கு திண்டாட வேண்டியிருக்கு. ஒரு வருசமா இப்ப வாங்கிருவோம் அப்ப வாங்கிருவம்ன்னு டயரு போன சைக்கிளுக்கு டயரு மாத்தாம பஞ்சர் ஓட்டியே காலத்த ஓட்றேன். இதுதான் என்னையப் போல வெவசாயம் பண்றவனோட நெலமை!
‘உழுதவன் கணக்கு பாத்தா ஒழக்கும் மிஞ்சாது’ வெவசாயம் பண்ணி நம்ம ஒன்னும் கப்ப சீமானா ஆக முடியாது. வயிறுன்னு ஒண்ணு இருக்கே? அதுக்குத்தான் இந்த பாடு. நம்ம கிட்ட இருக்குற கையிருப்பு உழைப்பு ஒன்னுதான். ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் ஒழச்சுட்டு போகவேண்டியதுதான்.”
தன் ஒட்டுமொத்த வர்க்கத்தோட நிலைமையைப் தான் ஒருவராக புலம்பி தீர்த்தார்.
அக்கறையாக விசாரிப்பதாக நினைத்துக் கொண்டு, வெவசாயத்தோட நெலமை புரிஞ்சும், சித்தப்பா மனசு வருத்தப்படும்படி கேட்டுவிட்டேன் என்பது உண்மைதான். வெவசாயம் செஞ்சு முன்னுக்கு வர முடியாது என்று அவர் புலம்புவதும் உண்மைதான். ஓடி ஓடி ஒழைச்சாலும் வெவசாயி வீடு வெறும் வீடாதான் இருக்கும். இருக்குறத அடகு வச்சு, வட்டிக்கு வாங்கி விவசாயம் பண்ணுவாங்க. கதிரறுத்ததும் கடனடைப்பாங்க. இப்படியே வட்டமா சுத்திக்கிட்டே இருக்கும். இந்த வட்டம் சுத்தி சுத்தி தேஞ்சு புள்ளியாப் போயி பிறகு காணாம போயிடும்.
ஒரு சாதாரண சிறு வெவசாயியோட வீடுகளில் கறவை மாடு, காளைமாடு, ஆடு, கோழின்னு வளர்ப்பாங்க. அதோட கழிவுகளை எருக்குழி வெட்டி ஒரு வருடத்துக்கு போட்டு வைப்பாங்க. ஒருவருட காலத்தில், சாணம் எருவாகி விடும். தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பிக்கும் காலத்தில் எருவள்ளி வயலில் போடுவாங்க.
ஆத்துல தண்ணி வந்ததும் நாத்துவிட ஆரம்பிக்கணும். நாத்தாங்காலுக்கு (நாத்து விடும் இடம்) மட்டும் வேலை பரபரப்பா நடக்கும். நாத்துவிட்டு முப்பது, முப்பத்தஞ்சு நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். பத்து நாட்களுக்கு முன்பே நடவு ஆளுக்கு பணம் கொடுத்து முன்பதிவு செஞ்சுவைக்கணும்.
நாலு அஞ்சு ஓட்டு ஓட்டுனாதான் நடவுக்கு வயல் தயாராகும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 15 முதல் 18 ஆள்வரை வேணும். வரப்பு வெட்ட, பட்டம் புடிக்க, நாத்து பறிக்க, நாத்து வெலம்ப என்று ஒவ்வொரு வேலைக்கும் ஆளு நின்னு நடவு நட்டு முடிப்பாங்க. பிறகு மொத களை ரெண்டாவது களைன்னு மூணு களையெடுக்கணும். அடி உரம்னும் மேல் உரம்னும் ரெண்டுதடவ மருந்தடிக்கணும். பூச்சி மருந்தடிக்கணும். இதுக்கு மேலயும் பயிரு நல்லா இல்லைன்னா மேலும் மருந்தும், பூச்சியடிச்சா பூச்சி மருந்தும் அடிக்கணும்.
இதுவரை சொன்ன வேலைகளுக்கு செலவு செய்ய என்ன செய்வான் சிறு விவசாயி. ஏரு மாடு அவர்கிட்ட இருக்கும். இப்ப அதுவும் இல்ல. அந்த குடும்பத்தில் உள்ள பெரியவங்கள்ளேர்ந்து, சின்ன புள்ள வரைக்கும் பாதி வேலை செய்வாங்க. மீதி உள்ள பணத் தேவைக்கு தோடு, மூக்குத்தி, தாலி முதல் தண்ணி எடுக்கும் குடம், தோண்டி வரை அடகு கடைக்கு போயிரும்.
வெவசாய வேல இருக்குற காலகட்டத்துல நெதமும் கூலி வேலைக்கு போகவும் செய்வாங்க. அதுல வர்ர வருமானத்துலதான் கொழப்பு காச்சுறதுல இருந்து, வெத்தல பாக்கு, மூக்குப் பொடி வரைக்கும் வாங்கனும். பிறகு கொண்டான் கொடுத்தான் (சொந்தக்காரன்) கல்யாணம், காதுகுத்து முதல் கருமாதி எழவு வரைக்கும் மொய்யெழுதணும்.
இந்த அளவு கஷ்டப்பட்ட பிறகு மனச குளிரவைக்கிற மாதிரி கதுரு வந்து எட்டி பாக்கும். கதுரு வர்ர வனப்பை பாத்தா ஊருலய நமக்குதான் நல்ல வெளைச்சல் வரும். கதுரருத்து வச்சதையல்லாம் மூட்டுட்டு சாப்பாட்டுக்கு வருசத்துக்கும் வச்சுக்கனும் என்ற பெரும் பேராசை மனசு நெறையா நெறஞ்சு கெடக்கும்.
கதுரு வந்து ஒத்தழிக்குற நேரமா பாத்து மழை அதிகமா போச்சு அத்தனையும் சாவியா போயிரும். இல்ல வறட்சி வந்து தண்ணியே இல்லாம அத்தனையும் கருக்கா போயிரும். வானம் கண்ண தொறந்தோ இல்ல கண்ண மூடியோ எண்ணத்துல மண்ணள்ளி போட்டுரும்.
வெவசாயம்னா நீங்க குளிச்சு முடிச்சு ஃபுல் மேக்கப்புல ஏசி காருல ஆபிசுக்கு போறது மாதிரி அவ்வளவு சுலபம் இல்லைங்க. கோழி கூவ எந்திரிச்சா, கரிச்சான் கத்துறப்ப கூட படுக்க முடியாது. ஒரு தண்ணி பாச்ச பத்து நடை நடக்கனும். தண்ணிய தொறந்து விட்டுட்டு சாப்பிட்டுட்டுப் போகலான்னு வீட்டுக்கு வந்தா அடுத்தவன் வந்து மடைய தொறந்துருவான். மழை வந்தா கதுரு சாஞ்சுருமேன்னு தண்ணிய வடிய வைக்கனும். மழை வராமப் போச்சுன்னா திரும்ப தண்ணிய பாச்சணும்.
ஆடு மாடு மேச்சலுக்கு போகையிலும், கட்டுத்தறிக்கு ஓட்டிட்டு வரும்போதும் காவல் காக்கணும். இல்லன்னா திங்கறதோட விடாம பயிர தொவச்சு எடுத்துறும். நெல்லு பழுத்துட்டா சிட்டு வெறட்டனும். நடவு நட்டு கதுரு அறுக்குறதுக்குள்ள வீட்டுக்கும் வயலுக்குமா ஒரு பயிருக்கு ஒரு நட நடக்கனும்.
வருசமெல்லாம் பாடுபடுபட்டாலும், அவன் செய்ற வேலைக்கு கூலி கணக்கு பாக்குறதில்ல. வெளஞ்ச வெள்ளாம மட்டுந்தான் கணக்கு. காலமெல்லாம் ஒழச்சாலும் நித்தமும் சாப்பாட்டுக்குப் போராட்டமாதான் இருக்கும். இதுதான் சாதாரண சிறு விவசாயி வெள்ளாமை விட்டு பொழைக்கிற பொழைப்பு
தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி ஆலோசித்துக் கொண்டும், பீட்சான்னும் பர்க்கர்ன்னு வயிருமுட்ட தின்னுட்டு, செரிமானத்துக்காக மல்டிப்ள்க்ஸ் தியேட்டர்ல படம் பார்த்துட்டு, மால்ல ஷாப்பிங் பண்ணிட்டு, வீக் எண்டு கொண்டாட்டம் போடும் நுகர்வோருக்கு மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
– வேணி
//என்ன வாங்கலாம் என்பது பத்தி ஆலோசித்துக் கொண்டும், பீட்சான்னும் பர்க்கர்ன்னு வயிருமுட்ட தின்னுட்டு, செரிமானத்துக்காக மல்டிப்ள்க்ஸ் தியேட்டர்ல படம் பார்த்துட்டு, மால்ல ஷாப்பிங் பண்ணிட்டு, வீக் எண்டு கொண்டாட்டம் போடும் நுகர்வோருக்கு மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!//
வீக் டேசுல ஒழுங்கா உழைத்தால் தான் வீக் எண்டு கொண்டாட்டம் போட முடியுது…
ஓர் ஏழை விவசாயியின் உழைப்பு மட்டுமே உண்மை என்பதுமில்லை…
பீட்சா பர்க்கர் சாப்பிடுகிறவ்ர்கள் எல்லாம் உழைக்காமல் உண்பவரும் இல்லை…
/ஓர் ஏழை விவசாயியின் உழைப்பு மட்டுமே உண்மை என்பதுமில்லை…
பீட்சா பர்க்கர் சாப்பிடுகிறவ்ர்கள் எல்லாம் உழைக்காமல் உண்பவரும் இல்லை…//
பையா,
உழைப்புக்கு கணக்கில்லை என்பதுதானே தலைப்பு
நீங்கள் சொல்லும் உழைப்பு குதிரைப்பந்தயத்தில் ஓடும் குதிரையின் உழைப்பு. ஆனால் விவசாயியின் உழைப்பு மனிதகுல வாழ்வாதாரத்திற்கான உழைப்பு.
வினவு தளம் இயங்குவது, நானும் நீங்களும் மறுமொழி கூறிக் கொண்டிருப்பது எல்லாம் குதிரைப் பந்தய உழைப்பால் தான்! (அது சரி. பட்டு நெசவாளி, பொற்கொல்லர் ஆகியோர் உழைப்பு எந்த வகை?)
இரண்டு வகை உழைப்பும் தேவைதான். இரண்டும் சரி சமமாக மதிக்கப் பட வேண்டும், ஒரே மாதிரி ஊதியப் பலன் கிடைக்க வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்கும்.
வெங்கடேசன் ,
எல்லோருடைய உழைப்பும் சரி சமமா ?
விவசாயி , பட்டு நெசவாளி, பொற்கொல்லர் , நகர சுத்திகரிப்பு பணியாளர்கள் இன்னும் பிற உடல் உழைப்பில் ஈடுபடுகிறவர்கள் உழைப்பு என்ற அளவில் சமமானவர்களே …
ஏசி அறைல உக்காந்து வேல பாக்கும் மென்பொருள் வல்லுனரும் காடு கழனியில கடும் வெயில் பனியில வேல பாக்குற ஒரு சாதாரண(!) உழைப்பாளியும் உங்க அளவு கோளுல ஒண்ணா ?
கட்டுரை எந்த விதத்திலும் ஏனைய உழைப்பாளர்களை மட்டம் தட்டி பேசவில்லையே ..
என்னோட பணி புரிபவர் ஒரு நாள் சொன்னார் நாம வருமான வரி செலுத்தறோம் அதனால நமக்கு 24 மணி நேரமும் மிந்தரம் கொடுக்கணும் ஆனா விவசாயத்துக்கு 8 மணி நேரம் தொடர்ந்து கொடுத்தா போதும் தானே அப்புறம் ஏன்யா சும்மா போராட்டம் பண்றன்னுங்க ? ..
இந்த கூட்டுழைப்பில்(!) அனைவரும் விவசாயத்தை சார்ந்து உள்ளனரா இல்லையா ?
எல்லாரும் சமம் என்று சொல்றீங்க ஆனா அது நடைமுறையில் இருக்கா ?
கட்டுரையோட மைய கருத்துல இருந்து விலகி போகாதீங்க …
நன்றி
செல்வகுமார்
எல்லோருடைய உழைப்பும் சரி சமமா?//
இப்படியே பேசிக்கிட்டிருந்தா..பேசிக்கிடிட்டே இருக்க வேண்டியது தான்…..இந்த உழைப்பு பெரியது, இந்த உழைப்பு சிறியது…என்ச்சொல்ல யாருக்கும் எந்த அறுகதையும் இல்லை…
//ஏசி அறைல உக்காந்து வேல பாக்கும் மென்பொருள் வல்லுனரும் காடு கழனியில கடும் வெயில் பனியில வேல பாக்குற ஒரு சாதாரண(!) உழைப்பாளியும் உங்க அளவு கோளுல ஒண்ணா ?//
சரி அப்ப அத விட இயற்க்கை ஏசியான பணியில பார்டர்ல உக்காந்துநாட்டப்பாதுகாக்கின்றவனின் உழைப்பையும் கம்ப்பேர் பண்ணுவீறோ…
//இப்படியே பேசிக்கிட்டிருந்தா..பேசிக்கிடிட்டே இருக்க வேண்டியது தான்…..இந்த உழைப்பு பெரியது, இந்த உழைப்பு சிறியது…என்ச்சொல்ல யாருக்கும் எந்த அறுகதையும் இல்லை…//
இங்க நீங்க எஸ்கேப் ஆகுறீங்க பையா ….
நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா அவன் அதிகமா கொள்ளை அடிக்கறான் இவன் கம்மிய கொள்ளை அடிக்கறான் அக மொத்ததுல எல்லோருமே கொள்ளை அடிக்கறாங்க அதனால அதா பத்தி பேச யாருக்கும் அருகதையே இல்ல போல இருக்கு .
இங்க நடைமுறையில உள்ளத வெச்சு தான் நாம் பேச முடியுமோ ஒழிய சும்மா வாய்சொல்லில் இல்ல
செல்வகுமார்,
எனது மறுமொழி கட்டுரைக்கு அல்ல. உங்கள் கருத்துக்கு.
கட்டுரை மற்ற உழைப்பாளிகளை மட்டம் தட்டவில்லை. நீங்கள் தான் உழைப்பை “வாழ்வாதாரம் தொடர்பானது”, “குதிரைப் பந்தயம்” என இரண்டாக பிரித்தீர்கள். இதில் விவசாயியின் உழைப்பை முதலாவதில் சேர்த்தீர்கள். அப்படியானால், பட்டு ஆடைகள், நகைகள் எல்லாம் அடிப்படை வாழ்வாதாரம் தொடர்பற்ற “வெட்டி” செயல்கள் தானே. அவற்றை குதிரை பந்தயத்தில் அல்லவா சேர்க்க வேண்டும். உங்கள் கொள்கைப்படி இவர்களை விவசாயியோடு எப்படி சமன் படுத்த முடியும்?
“சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்றாலும் வாழ்க்கையில் உணவு மட்டுமே போதுமா? வினவு கட்டுரைகள் பலரை சென்றடைவது, விவசாயியின் கையில் இருக்கும் செல்போன், என பல விஷயங்களுக்குப் விஷயங்களுக்கு பின்னால் ஏசி அறை மென்பொருளாளர் உழைப்பு உள்ளது. உலக அளவில் ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூகுளில் தேடுகின்றனர். கூகுள் அவ்வளவு துல்லியமாகவும், விரைவாகவும் பதில் தருகிறது. இதற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என தெரியுமா?
விவசாயி போன்றோரின் உழைப்பு மற்ற ஏசி வகை உழைப்புக்கு கீழானதாக கருதப்படுகிறது என்பதே எதார்த்தம். இந்த நிலை மாற வேண்டும் என்பதே என் எண்ணமும். நீங்கள் மேற் சொன்ன நிலைக்கு நேர் எதிரான நிலையை ஆதரிக்கிறீர்கள். அதை நான் ஏற்கவில்லை.
NICE COMMENT
கதுரு வந்து ஒத்தழிக்குற நேரமா பாத்து மழை அதிகமா போச்சு அத்தனையும் சாவியா போயிரும். இல்ல வறட்சி வந்து தண்ணியே இல்லாம அத்தனையும் கருக்கா போயிரும். வானம் கண்ண தொறந்தோ இல்ல கண்ண மூடியோ எண்ணத்துல மண்ணள்ளி போட்டுரும்–இப்போ.தனியார்மயமும் தாராளமயமும் மொத்தமா மண்ண அள்ளி மூடியிருச்சு
edward snowden-what about your comments