privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா !

ஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா !

-

லகின் ஒற்றைத் துருவ வல்லரசின் தொடைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எட்வர்ட் ஸ்னோடன் என்ற தனி ஒரு மனிதரை எதிர்த்து உலக நாடுகளின் அரசுகளுக்கெல்லாம் மிரட்டல் அனுப்பி கொண்டிருக்கிறது அமெரிக்க ‘வல்லரசு’.

பொலிவிய அதிபர் விமானம்
திசை திருப்பப்பட்ட பொலிவிய அதிபர் விமானம்

மனித உரிமை, பேச்சுரிமை, தகவல் உரிமை என்று முழக்கங்களை வைத்து நூறு ஆண்டுகளுக்கு மேல் புனித பிரச்சாரம் செய்து வந்த அமெரிக்க போதனையின் லட்சணம் உலகெங்கும் நாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களுக்கு எதிராக எந்த வித குற்றச் செயலும் செய்யாத ஸ்னோடனை தேடிப் பிடிக்கும் நோக்கத்தில் அடிப்படை மனித நாகரீங்கள் அனைத்தையும் மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு.

மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு சென்ற பொலிவிய அதிபர் ஈவோ மோராலசின் விமானத்தை தமது வான் எல்லைக்குள் அனுமதிக்க மறுத்து பிரான்சும் போர்ச்சுகலும் இத்தாலியும் அடாவடி செய்திருக்கின்றன. அந்த விமானத்தில் எட்வர்ட் ஸ்னோடன் இருக்கிறார் என்ற வதந்தியை நம்பி, அமெரிக்க அரசுக்கு கோபம் வந்து விடுமோ என்ற பயத்தில் அந்த அரசுகள் அப்படி செய்திருக்கின்றன. இறுதியில் ஸ்பெயின் நாட்டில் எரிபொருள் நிரப்பிய பிறகு அந்த விமானம் திசை திருப்பப்பட்டு வியன்னாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவில் அரசு முறை பயணமாக போயிருந்த பொலிவிய அதிபர் ஸ்னோடனின் புகலிட கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளப் போவதாகச் சொல்லியிருந்தார்.

பொலிவிய அதிபரும், வெனிசுவேலா அதிபர் மடேரோவும் ஸ்னோடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாஸ்கோ விமான நிலையம் ஒன்றின் தங்கும் கூடத்தில் இருந்து கொண்டே எட்வர்ட் ஸ்னோடன் உலக நாட்டு அரசுகளின் முகமூடிகளை ஒவ்வொன்றாக கழற்றி எறிந்து கொண்டிருக்கிறார். பொலிவியா, வெனிசுவேலா நாடுகளைத் தவிர 19 நாடுகளிடம் ஸ்னோடனின் வழக்கறிஞர் விக்கி லீக்சைச் சேர்ந்த சாரா ஹேரிசன் புகலிட கோரிக்கை அனுப்பியிருக்கிறார்.

இந்திய தூதரகம்
ஒட்டுக் கேட்கப்பட்ட இந்திய தூதரகம்

அந்த கோரிக்கையில் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசினால் தனது உயிருக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்னோடன் குறிப்பிட்டிருக்கிறார். உலக நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தின்படி அரசியல் புகலிடம் தேடி வருபவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். ஆனால், ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய ‘ஜனநாயக’ நாடுகள் புகலிட கோரிக்கையை தமது நாட்டிற்குள் வந்துதான் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி விட்டிருக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும் நாடு, மனித உரிமைகளை தூக்கிப் பிடிக்க தலாய் லாமாவுக்கே அடைக்கலம் கொடுத்த நாடான இந்தியா இன்று ஸ்னோடனின் புகலிட கோரிக்கையை வெகு வேகமாக நிராகரித்திருக்கிறது. மன்மோகன் சிங்கின் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதற்கே சில நாட்கள் காத்திருக்கும் அரசு, ஸ்னோடனின் கோரிக்கையை நிராகரிக்க சில மணி நேரங்களே எடுத்துக் கொண்டிருக்கிறது. வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஸ்னோடனிடமிருந்து புகலிட கோரிக்கை வந்ததாகவும், அதை கவனமாக பரிசீலித்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று முடிவு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அரசு இந்திய தூதரகத்தை உளவு பார்த்தது என்ற தகவல்களுக்கு பெயரளவில் கூட தனது கண்டனத்தை தெரிவிக்க தைரியமில்லாமல் வாலை கால்களுக்குள் இடுக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வெளிக் கேட்டில் இருக்கும் பெயின்டை சுரண்டுவதற்கு கூட தைரியமில்லாத அடிமை இந்திய அரசு ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்ப்பது சகஜம்தான் என்று அமெரிக்கா இந்திய தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்களை கண்காணித்ததை சப்பை கட்டுக் கட்டுகிறது.

தூதரகங்களை உளவு பார்ப்பது 1961-ம் ஆண்டின் வெளியுறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்திற்கு விரோதமானதாகும். ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இந்திய தூதரகத்தை அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஒட்டுக் கேட்டன என்ற தகவலை பெரிது படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். “தகவல் பரிமாற்றங்களையே அவர்கள் ஒட்டுக் கேட்கவில்லை. மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும் பற்றிய விபரங்களைத்தான் அவர்கள் திரட்டி ஆய்வு செய்திருக்கிறார்கள்” என்று அவர் அமெரிக்காவுக்கு துதி பாடியிருக்கிறார்.

சல்மான் குர்ஷீதும், ஜான் கெரியும்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெரியும் அவருக்கு சேவை செய்யும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீதும்.

இந்திய-அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கையெழுத்தான காலத்தில் இந்தியாவின் அமெரிக்க தூதராக வாஷிங்டனில் இருந்தவர் ரொணன் சென் என்ற அதிகாரி இப்போது டாடா மோட்டார்சின் இயக்குனராக பிழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் “நாடுகள் ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது சாதாரணமாக நடப்பதுதான். வாஷிங்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மின்னணு தகவல் பரிமாற்றங்களை அமெரிக்க உளவுத் துறை கண்காணித்ததில் ஒன்றும் தவறில்லை” என்று தனது விசுவாசத்தை தெரிவித்திருக்கிறார்.

தனது பதவி காலத்தில் இந்திய தூதரகத்துக்கு யாரிடமிருந்தெல்லாம் அழைப்புகள் வருகின்றன, என்னென்ன தகவல் பரிமாற்றங்கள் நடந்தன என்ற தகவல்கள், அமெரிக்க அரசு தனக்கு சாதகமாக அணுசக்தி ஒப்பந்த பேச்சு வார்த்தையை நடத்த உதவியிருக்கும் என்ற அடிப்படை நாட்டுப் பற்று கூட இல்லாத ரோணண் சென் போன்றவர்கள்தான் நாட்டையும், நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் நிர்வகிக்கிறார்கள்.

அமெரிக்காவின் அழுக்கு உண்மைகளை மேலும் வெளியிட மாட்டேன் என்று உறுதி அளித்தால் ரஷ்யாவில் புகலிடம் தருவதாக சொன்ன ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் நிபந்தனையுடன் கூடிய புகலிடத்தை நிராகரித்திருக்கிறார், ஸ்னோடன். ஸ்னோடனின் தந்தை லன் ஸ்னோடன், தனது மகனை அமெரிக்க சுதந்திர போராட்ட வீரர் பால் ரெவருடன் ஒப்பிட்டு ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதியுள்ளார்.

உலக மக்களின் உரிமைகளுக்காக தனி மனிதனாக, மாஸ்கோ விமான நிலையத்தின் தங்கும் கூடத்தில் இருந்து கொண்டு உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்து போராடும் ஸ்னோடனை பாதுகாக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.