privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!

மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!

-

பாமகவின் வன்னிய சாதிவெறிக்கு பலியான இளவரசன் மரணம் குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டிருக்கும் சுவரொட்டியை பார்த்தோம். இது இணையத்திற்காகவோ இல்லை வெளியே ஒட்டுவதற்காகவோ தயாரிக்கப்பட்டிருக்கலாம். அதில் இடம்பெற்றிருக்கும் முழக்கங்களை கீழே படிக்கலாம்.
_________________________

posterசாதீய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட இளவரசன் சொல்லிச் சென்றது என்ன?
இளவரசன் – சாதி பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என புரிய வைத்து சென்றவன்.
இளவரசன் – சாதி வெறியர்களை தனிமைப்படுத்துங்கள் என்று சொல்லிச் சென்றவன்.
இளவரசன் – சாதிய பயங்கரவாதத்தை உணர்த்தியவன், தமிழ் சமூக மௌனத்தால் மரணித்தவன்.
இளவரசன் – நம் சமூகத்தின் பாராமுகத்தை வெளிப்படுத்தியவன்.
இளவரசன் – அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வி அடைந்தது என்று உணர்த்தியவன்.
இளவரசன் – தன் காதல் நாடக காதல் அல்ல, தூய்மையானது என்று நிரூபித்தவன்.
இளவரசன் – சாதி, ஒடுக்கும் அரசின் பங்காளி என புரிய வைத்தவன்
இளவரசன் – சாதி ஒழிக்கப்பட வேண்டியது, உரிமை மீட்கப்பட வேண்டியது என்று சொல்லிச் சென்றவன்.

“சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்”. உயர்வு தாழ்வு போதிக்கும் சாதி அடையாளத்தை மறுப்போம், தமிழராய் ஒன்றிணைவோம்.

மே பதினேழு இயக்கம்.
________________________________
இனி நமது விமரிசனம்.

சீமானுக்கு சொன்ன விளக்கம் பெரும்பாலும் இங்கேயும் பொருந்தும் என்றாலும் சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

சாதீய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட இளவரசன் எனும் தலைப்பே பாமக சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற உண்மையை மறைப்பதோடு திசை திருப்புகிறது. இளவரசன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் கூட அடுத்த ஜென்மத்திலாவது ஒரே சாதியில் பிறந்து திருமணம் செய்வோம் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த அளவு நிகழ்கால பாமகவின் ஆதிக்க சாதிவெறி அவரை அச்சுறுத்தியிருக்கிறது. இளவரசன் எதற்கு அஞ்சினாரோ, எந்த சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று விரக்தியடைந்தாரோ அதே சாதிவெறியை பெயரிட்டு கண்டிப்பதற்கு மே 17-ம் அஞ்சுகிறது.

ஈழத்தமிழ் மக்களின் இனப்படுகொலை, பேரினவாதம்தான் கொன்றது என்ற உண்மையை சொல்லிச் சென்றது, பேரினவாதிகளை தனிமைப்படுத்துங்கள் என்றது, பேரினவாதத்தின் பயங்கரவாதத்தை உணர்த்தியது, பேரினவாதத்தை ஒழிக்கப்பட வேண்டியது என்பதை உலகிற்கு உணர்த்தியது என்று எழுதுவதற்கும் இங்கே மே 17 சாதீய பயங்கரவாதம் குறித்து எழுதியதற்கும் வேறுபாடு உண்டா?

இதையே குஜராத் முசுலீம் மக்களின் இனப்படுகொலை, மதவெறிதான் கொன்றது என்ற உண்மையை சொல்லிச் சென்றது, மதவெறியை தனிமைப்படுத்துங்கள் என்றது, மதவெறி ஒழிக்கப்படவேண்டியது என்பதை உணர்த்தியது என்றும் சொல்லலாம்.

ஆக இந்துமதவெறி, சிங்கள இனவெறி என்று குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக சொல்வது மட்டும் எப்படி ஒரு ஏமாற்றோ அது போலத்தான் வன்னிய சாதிவெறி என்று சொல்லாமல் சாதியம் என்று மட்டும் பேசுவது. இதனால் சாதியம் குறித்து பொதுவாகவே சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு பிரச்சினையின் குறிப்பான காரணத்தை சொல்லிவிட்டே பொதுவான அடிப்படைகளை பேசவேண்டும்.

சாதிப்பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என்று சொல்லும் மே 17 இயக்கம் சாதிவெறி கொண்ட கட்சியை சொல்ல மறுப்பதுதான் தமிழின உணர்வு என்கிறதா ? இங்கே இளவரசன், திவ்யாவை பிரிப்பதற்காக பல மாதங்களாக பல்வேறு சதி வேலைகளை செய்து வந்த பாமகவின் வன்னிய சாதி வெறியர்கள்தான் இளவரசனது மரணத்திற்கு முதற் காரணம். அப்பேற்பட்ட பாமவை கண்டிக்க மே 17 பயப்படுகிறது என்பதுதான் பாமகவின் பலம். இங்கே மே 17 அவர்களை பெயரிட்டு சொல்ல அஞ்சுகிறது. இளவரசன் இவர்களை நேரிட்டு எதிர் கொண்டு வாழ முடியாது என்று சோர்ந்து ‘தற்கொலை’ செய்து கொண்டார்.

அந்த வகையில் இளவரசன் இந்த சமூகத்தைப் பார்த்து நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததற்கும் மே 17 போன்றவர்களும் ஒரு காரணமில்லையா? வன்னிய சாதிவெறியை வெளிப்படையாக கண்டிக்க முன் வராத இவர்கள் சமூகத்தின் பாராமுகத்தால் இளவரசன் இறந்து போனதாக சொல்லுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. தமிழ் மக்களின் மவுனத்தால்தான் இளவரசன் மரணமடைந்தார் என்றால் அந்த மவுனத்தில் மே 17-ம் இருக்கிறது என்கிறோம். மக்களுக்கு உபதேசிக்கும் முன் இவர்கள் தங்களுடைய நடவடிக்கை அதற்கு முரண்பாடாக இருப்பதை ஏன் பார்க்கவில்லை?

இளவரசன் மரணம் என்றில்லை, தேவர் சாதிவெறி என்று கண்டிக்காமல் பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்க முடியுமா, இல்லை கொடியங்குளம் ‘கலவரத்தைதான்’ கண்டிப்பதாக சொல்ல முடியுமா? முருகேசன் கொலையை தேவர் சாதிவெறி செய்தது என்று சொல்வதற்கும் சாதீய பயங்கரவாதம்தான் என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? எது சரி என்பது இவர்களுக்கு பிரச்சினை இல்லை. எது பாதுகாப்பானது, எது பிரச்சினையற்றது என்பதே இவர்களுக்கு முக்கியம்.

சீமானோ, மே 17 இயக்கமோ இப்படி தேவர் சாதிவெறி, வன்னிய சாதிவெறி என்று குறிப்பிட்டு கண்டிக்க முடியாததற்கு என்ன காரணம்? அப்படிக் கண்டித்தால் இவர்கள் திரட்டும் தமிழின உணர்வு கலைந்து விடும் என்று பயப்படுகிறார்கள். வன்னிய சாதி வெறி என்று கண்டித்தால் இவர்கள் நடத்தும் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வன்னியர்கள் வராமல் புறக்கணித்துவிட்டால் என்ன செய்வது என்று மே 17 யோசிக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்த ராமதாஸின் பங்களிப்பு முக்கியமானது என்று இவர்கள் கருதுவதால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான இவர்களது சாதிய வெறிக்கு மறைமுகமாக சலுகை காண்பிக்கிறார்கள்.

சரி, தலித் மக்களை ஒடுக்கும் வன்னிய சாதிவெறியை யாரும் கேட்க கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் ஈழத்திற்கோ, தமிழினத்திற்கோ பாமகவினர் குரல் கொடுப்பார்கள். அந்த பெரிய பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த சிறிய பாதகத்தை மன்னித்து அருளுகிறார்கள். தமிழகத்தில் நாடகக்காதல் என்று சொல்லி, அறிமுகப்படுத்தி, ஊர் ஊராக எல்லா ஆதிக்க சாதிகளையும் அழைத்துக் கொண்டு கூட்டம் போட்ட்து யார்? அந்த ராமதாஸை பெயர் போட்டு கண்டித்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டுவதற்கு முன்வராத நீங்கள் ஈழத்திற்கு என்ன சாதிப்பீர்கள் என்று கேட்கலாமா, கூடாதா?

ஒரு மனிதனின் அடிப்படை அற விழுமியங்கள் வேறு வேறு பிரச்சினைகளுக்கு வேறு மாதிரி இருக்காது என்ற உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறியையே தனது சாதி உணர்வாக கொண்டிருக்கும் ஒரு நபர் முள்ளிவாய்க்கால் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக அழுகிறார் என்றால் அது ஏமாற்று இல்லையா?

இளவரசன் மரணம் என்பது ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனது அவலமான மரணம் அல்ல. அது இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மறுப்பதின் ஒரு வெளிப்பாடு. அந்த உரிமைகளை மறுத்து அவர்களை ஒடுக்குவது ஆதிக்க சாதிவெறி. அத்தகைய ஆதிக்க சாதிவெறிகளை குறிப்பான சம்பவத்திற்கேற்ப குறிப்பான பெயரோடு அடையாளம் காட்டி கண்டிக்க வேண்டும்.

சாதிய பயங்கரவாதத்தை கண்டிப்பதாக மட்டும் பொதுவாகப் போட்டால் எந்த சாதிக்காரனுக்கும் பிரச்சினை இல்லை. அதை படித்து விட்டு அவர்கள் மே 17-ன் ஏனைய கொள்கைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் வன்னிய சாதிவெறி, தேவர் சாதிவெறி, முதலியார் சாதிவெறி என்று குறிப்பாக பேசினால் அவர்கள் மே 17-க்கு குட்பை சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இதுதான் மே 17-ன் பயம்.

எனில் மே 17 தனக்கு திரட்டி வைத்திருக்கும் சமூக அடிப்படையே இத்தகையதுதான் என்றால் அந்த செல்வாக்கை வைத்து எதையும் செய்ய முடியாது. ஏனெனில் சாதிவெறி கண்டிஸன்ஸ் அப்ளைக்கு உட்பட்டதல்ல விடுதலை உணர்வு.

இந்தப் பிரச்சினை எங்களுக்கில்லையா? நாங்கள் தலித் மக்களிடத்தில் மட்டும் அரசியல் வேலை செய்யவில்லை. நாங்கள் பேசும் வர்க்க அரசியலின் அடிப்படையில் எல்லா பிரிவு உழைக்கும் மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். அந்த வகையில் வன்னிய மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். வர்க்க விடுதலைக்கான அணி சேர்க்கையும் சாதிய வெறியை ஒழிப்பதும் வேறு வேறு அல்ல என்ற வகையில் நாங்கள் வேலை செய்கிறோம்.

இந்துக்களிடம் இந்து மதவெறியையும், இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும், வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிய வெறியையும், தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்து பேசுகிறோம். இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்த பிரிவு மக்களை மெல்ல மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம். மேலும் மத உணர்வு, சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த பிரிவு மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை தருகிறது என்பதை தொடர் போராட்டத்தில் புரிய வைக்கிறோம். இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.

தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப் படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும். நத்தம் காலனியில் உடமைகளை இழந்த தலித் மக்களுக்கும், இளவரசனது மரணத்திற்கும் போராட விரும்புவோர் பாமக மற்றும் வன்னிய சாதிவெறியை கண்டிப்பதற்கு முன் வரவேண்டும். அதுவும் வன்னிய மக்களிடத்தில், வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் செய்ய வேண்டும். இதன்றி ஆதிக்க சாதிவெறியை அகற்றுவதற்கு வேறு வழிகளில்லை.