என் பார்வையில் வினவு – 13 : வெங்கடேசன்
ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வினவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு வருட பழக்கம். தினமும் இரு முறையாவது தளத்திற்கு வந்து விடுகிறேன். முதன் முதலில் எழுதிய மறுமொழி நினைவுக்கு வருகிறது. “ஒரு வரி செய்திகள்” கட்டுரை ஒன்றில் திருமாலை நக்கல் அடித்து இருந்த வரி ஒன்றை படித்து விட்டு, ஆவேசமாகி, சம்பந்தமில்லாமல் பெரியாரை அசிங்கமாய் திட்டி ஒரு மறுமொழி எழுதி அது வெளியிடப்படாமல் போனதில் இருந்து தொடர்பு தொடங்கியது. இந்த ஒரு வருடத்தில் குறிப்பிடத் தகுந்த சிந்தனை மாற்றத்தை உணர்கிறேன். குறைந்த பட்சம் என் எண்ணங்கள், நம்பிக்கைகளுக்கு எதிராக வினவு ஏதாவது எழுதும் போது, உடனே துள்ளி எழுந்து கூச்சல் போடாமல், என் கருத்துகளை முதலில் அசை போடும் பொறுமை அதிகரித்திருக்கிறது. ஒரு சமகால நிகழ்வு குறித்து சோ என்ன கருதுகிறார் என்பதை அறிவதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்போது வினவு என்ன சொல்கிறது என அறிவதில் ஆர்வம் அதிகமாய் உள்ளது.
நான் படிப்பவற்றுள், என் தொழில் சம்பந்தமானவற்றை நீக்கிவிட்டால், வினவு கட்டுரைகள் அதிக பயன் தருவதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. பொதுவில் எனது படிப்பு, ஒயின் குடித்துக்கொண்டே, “பேஷ், பேஷ். ரொம்ப நன்னாயிருக்கு” என சொல்லும் வாசிப்பு இன்பத்தை குறிக்கோளாய் கொண்டது. வினவு கட்டுரைகள் நேரெதிர் வகை. வினவு கருத்துகளை ஏற்றாலும், எதிர்த்தாலும், நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்குபவை. சிந்தனை மாற்றம் உண்டாக்க வல்லவை. (இங்கே வினவோடு எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உண்டு. “பேஷ், பேஷ்” வகை எழுத்தும் தேவை என்பது என் எண்ணம். புரட்சியின் மூலமாகவோ, மற்ற வகையிலோ சமூக-பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்டோர் மேலுழுந்து வரும் போது அவர்களும் என்னை போலவே குறுந்தொகையோ, சுஜாதாவோ ஏதாவது ஒரு பேஷ்-பேஷை தேடுவார்கள் என நினைக்கிறேன்.)
வினவின் மீதான என் ஈர்ப்புக்கு பல காரணங்கள். பலரும் சொன்னவையே. வினவு கட்டுரைகள் சமகால சமூக-அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆழமான, முழுமையான அலசலை முன்வைக்கின்றன. இவற்றினூடே பல பொதுவான கோட்பாடுகளையும் பேசி செல்கின்றன. இத்தகு கட்டுரைகளை இத்தனை அதிக அளவில், கிட்டத்தட்ட தினசரி, வெளியிடுவது பெரும் ஆச்சரியம் தருகிறது. மேலும், வாய் சொல் வீரர்களுக்கு மத்தியில், சமூக பிரச்சனைகளில் நேரடியாய் செயலில் இருங்குவதால் வினவின் சொல்லுக்கு வலிமை கூடுகிறது. இவ்வகை தீவிர கட்டுரைகளை படைப்பதில் முதலாவது என்றோ, முதன்மையானது என்றோ ஐஸ் கட்டி வைக்க மனமில்லை. ஆனால், நூலகங்களிலும், சிறு பத்திரிகைகளிலும் குடியிருந்த இவ்வகை எழுத்தை சந்தைக்கு இழுத்து வந்து அனைவருக்குமாய் கடை விரித்ததில் வினவு பெரும் பணி ஆற்றியுள்ளது. (இந்த வெற்றியின் பின்னால் இணையமும், அதன் பின்னால் ஐடி தொழிலாளர்களும் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு, அவர்களை குட்டுவதை குறைத்து கொள்வீராக! நன்றி மறப்பது நன்றன்று!).
வினவு கட்டுரைகளில் எனக்கு ஈர்ப்புடைய இரு பாடுபொருள்கள் பற்றி சில கருத்துகள்.

முதலாவது முதலாளித்துவம்-தொழிலாளர்கள் பற்றியது. இந்த விஷயத்தில் சிந்தனை மாற்றத்தை உணர்கிறேன். சுடும் வெயிலில் தார் சாலை போட்டுவிட்டு, அருகிலேயே தகர கொட்டகையில் உறங்கும் தொழிலாளர்கள் இப்போது குற்ற உணர்ச்சியை தருகிறார்கள். இருவரும் எட்டு மணி நேரம் உழைக்கும் போது, எங்கள் இருவரின் வாழ்க்கை வசதிகளில் இத்தனை வேறுபாடு இருப்பது அநியாயம். இந்த நிலை மாற வேண்டும் என எண்ணுகிறேன். எட்டு மணி நேரம் உழைக்கும் எவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வசதி-வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.இதை அடைவதற்கு வினவு கூறும் வழிமுறைகளில் தான் தெளிவு கிடைக்கவில்லை.
வினவு கூறும் கம்யுனிச-சமத்துவ உலகம் எப்படி இருக்கும்? அதை எப்படி அடைவது? போன்றவை பற்றி தெளிவில்லை. அந்த வகையில் மற்ற பலரும் சொன்ன ஒரு பரிந்துரையை நானும் முன் வைக்கிறேன். உங்கள் சித்தாந்தம் குறித்து பால பாடத்தில் தொடங்கி தொடர் கட்டுரை வெளியிட்டால் நலம். இந்த தொடரானது வழக்கமான உணர்ச்சி பெருக்கில் இல்லாமல், ஒரு கணிதவியல் ஆராய்ச்சி கட்டுரை போல, வறட்டு அறிவு நிலையில் எழுதப்படவேண்டும் என் சொந்த விருப்பம். இதற்கு தேவையான ஆள்பலமோ, நேரமோ இல்லை என்றால் இதை பற்றி அறிய எங்கிருந்து தொடங்குவது என ஒரு பாடத்திட்டம் வெளியிட்டால் பயன் இருக்கும்.
இரண்டாவது விஷயம் இந்து மதம். இந்த விஷயத்தில் சிந்தனை மாற்றம் ஏற்படாவிட்டாலும், என் நம்பிக்கைகளை மறுஆய்வு செய்து சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது. இந்த மதம் முழுதும் தீமையால் ஆனது, வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டியது என்பது வினவின் கருத்து. இதன் முதல் நூல் மனு ஸ்மிருதி என்றும், மூல வாக்கியம் “ப்ராஹ்மநோஸ்ய முகமாஸீத்..” என்றும் வினவு கருதுகிறது. கடந்த காலத்தில் (நிகழ் காலத்திலும்?) இந்த நிலை இருந்திருக்கலாம். ஆனால், நான் இவற்றை முக்கியமாக கருதவில்லை. “ஈசா வாஸ்யம் இதம் ஸர்வம்” என்பதையே நான் முக்கிய வாக்கியமாக கருதுகிறேன். இந்த மதத்தில் நல்ல விஷயங்களும் உண்டு என்பதும், அவை பிரித்து எடுத்து நிலை நிறுத்தப்படவேண்டும் என்பதும் என் எண்ணம். ஆனால், “எங்கே ஒரு நாலு நல்ல விஷயம் சொல்லு” என்றால் பதில் சொல்லும் அளவு எனக்கு தெளிவில்லை.
எனவே, முதலில் இவற்றை என்னளவில் அடையாளம் கண்டு நடை முறைப்படுத்த வேண்டும் என திட்டம். பார்ப்போம். அதே போல இந்து மத mysticism என்பதை என்னால் முழுதும் நிராகரிக்க முடியவில்லை. கதோபனிஷத் முதலில் வேதங்களை வானளாவ புகழ்ந்துவிட்டு பிறகு சொல்கிறது, “இப்படிப்பட்ட வேதங்களையே உச்சபட்சமாக கருதுபவன் முழு மூடன். உண்மையான அறிவு அதற்கு அப்பாற்பட்டது. அது ஆன்ம அறிவு”. இந்த ஆன்ம அறிவு எனக்கு பெரும் புதிராக உள்ளது. இதை நான் ஒரு புராண கதை கோட்பாடாக நினைக்கவில்லை. இதில் ஏதோ உண்மை இருக்கிறது என நம்புகிறேன். ஆயினும், என்னளவில் இது குறித்து தெளிவு கிடைக்கும் வரை இது பற்றி வெற்று கூச்சல் போடாமல் இருக்க முடிவு செய்துள்ளேன். இதுவும் வினவின் விளைவு.
எனக்கு வினவு கட்டுரைகள் மீது இரண்டு பொதுவான விமர்சனங்கள் உண்டு.
- முதலில், “நான் மட்டும் 100% நல்லவன், மற்றவர்கள் 100% கெட்டவர்கள்” என்ற ஒரு தோற்றத்தை தருகின்றன. “Shades of gray” என்ற இயற்கை நியதியை புறந்தள்ளுகின்றன. இந்த ஒரு வருடத்தில் யாரையாவது பாராட்டி ஒரு வார்த்தை சொன்னதாய் நினைவில் இல்லை. உதாரணமாக, போலி கம்யூனிஸ்டுகளை அடிக்கடி தாக்கி எழுதுகிறீர்கள். அவர்களது இயக்கம் சமூகத்துக்கு நல்லது எதையுமே செய்யவில்லையா? வேறொரு உதாரணமாக, “தி இந்து” பார்ப்பனீய பத்திரிகை என்கிறீர்கள். சரி. ஆனால், மேற்கோள் காட்டுவது, ஆதாரம் காண்பிப்பது என தமிழக பத்திரிகைகளில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது இதையே என்பது என் எண்ணம். இவ்வகையிலாவது அது உபயோகமாய் உள்ளதல்லவா? தீமையை பற்றியே பேசினால் அதே மட்டுமே உலகில் உள்ளது என்ற பிரமை தோன்றி விடும். அது நன்மையை அதிகப் படுத்துவதற்கு தடைக்கல் என்பது என் எண்ணம்.
- இரண்டாவது விமர்சனம் மற்ற சிலரும் சொன்ன விஷயம். கருத்துகளை மிகக் காட்டமாக முன்வைக்கிறீர்கள். சில சமயம் இது சொல்லப்படும் கருத்திலிருந்து கவனத்தை திசை திருப்பி கோவம்-ஆத்திரம் என்ற வகையில் மனம் சென்று விடுகிறது. உங்களது கட்டுரைகளின் நோக்கம் உங்கள் கருத்துகளை ஏற்பவர்களுக்காக மட்டுமல்ல. எதிர் கருத்து கொண்டிருப்போரையும் சிந்திக்க வைக்க வேண்டாமா? சொல்லும் முறை காட்டமாய் இருந்தால் இது நிகழும் வாய்ப்பு குறைந்து விடும். ஒரு மறுமொழியில், ஜாதி, மத பற்று அதிகம் உள்ளவர்கள் மனம் நோகாதவாறு பேசுவது கடினம், என்று கூறினீர்கள். முயற்சி செய்ய வேண்டுகிறேன். ராவணனை லட்சுமண கோட்டின் அந்தப் பக்கமே வைத்து திட்டி கொண்டிருப்பதில் பயன் என்ன? இந்த பக்கம் இழுக்க வேண்டாமா?
சில பரிந்துரைகள்:
- வினவு சொல்லும் விஷயங்கள் பெரும்பாலும் தமிழகம் தாண்டி, இந்திய-உலக அளவில் பயனுள்ளவை. எனவே, ஆங்கில தளம் ஒன்று தொடங்கினால் மேலும் பலரை சென்றடையும். முக்கிய கட்டுரைகளையாவது மொழி பெயர்த்து வெளியிடலாம். இந்த விஷயத்தில் என்னாலான உதவிகள் செய்ய விருப்பம்.
- மறுமொழிகள் சில சமயங்களில் கருத்து பரிமாற்றமாய் இராமல், வெட்டி பேச்சு, குழாயடி சண்டை, தனி நபர் தாக்குதல் என்ற வகையில் அமைந்து விடுகிறது (நானும் இந்த குற்றத்தை செய்துள்ளேன்). இவை, ஆழமான கட்டுரைகளுக்கு மரியாதை செய்வதாய் இல்லை. ஜனநாயகம் முக்கியம் எனினும், மறுமொழிகளை மேலும் மட்டறுக்கலாம்.
- நன்கொடை கேட்டு ஓரிரு முறை விளம்பரம் செய்துள்ளீர்கள். வங்கிக் கணக்கு எண், முகவரி போன்ற இந்த தகவல்களை ஒரு நிரந்தர பக்கமாக்கி முகப்பில் இருந்து சுட்டி தரலாம். விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நிதி அனுப்ப வசதியாய் இருக்கும்.
இந்த தளம், அதற்கு வெளியே செயல் என இரு வகைகளிலும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க எல்லாம் வல்ல திருமால் அருள் புரியட்டும்! என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
-வெங்கடேசன்