முகப்புசெய்திகருப்பு வெள்ளையல்ல வாழ்க்கை ! - வெங்கடேசன்

கருப்பு வெள்ளையல்ல வாழ்க்கை ! – வெங்கடேசன்

-

என் பார்வையில் வினவு – 13 : வெங்கடேசன்

றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வினவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடந்த ஒரு வருட பழக்கம். தினமும் இரு முறையாவது தளத்திற்கு வந்து விடுகிறேன். முதன் முதலில் எழுதிய மறுமொழி நினைவுக்கு வருகிறது. “ஒரு வரி செய்திகள்” கட்டுரை ஒன்றில் திருமாலை நக்கல் அடித்து இருந்த வரி ஒன்றை படித்து விட்டு, ஆவேசமாகி, சம்பந்தமில்லாமல் பெரியாரை அசிங்கமாய் திட்டி ஒரு மறுமொழி எழுதி அது வெளியிடப்படாமல் போனதில் இருந்து தொடர்பு தொடங்கியது. இந்த ஒரு வருடத்தில் குறிப்பிடத் தகுந்த சிந்தனை மாற்றத்தை உணர்கிறேன். குறைந்த பட்சம் என் எண்ணங்கள், நம்பிக்கைகளுக்கு எதிராக வினவு ஏதாவது எழுதும் போது, உடனே துள்ளி எழுந்து கூச்சல் போடாமல், என் கருத்துகளை முதலில் அசை போடும் பொறுமை அதிகரித்திருக்கிறது. ஒரு சமகால நிகழ்வு குறித்து சோ என்ன கருதுகிறார் என்பதை அறிவதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்போது வினவு என்ன சொல்கிறது என அறிவதில் ஆர்வம் அதிகமாய் உள்ளது.

நான் படிப்பவற்றுள், என் தொழில் சம்பந்தமானவற்றை நீக்கிவிட்டால், வினவு கட்டுரைகள் அதிக பயன் தருவதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. பொதுவில் எனது படிப்பு, ஒயின் குடித்துக்கொண்டே, “பேஷ், பேஷ். ரொம்ப நன்னாயிருக்கு” என சொல்லும் வாசிப்பு இன்பத்தை குறிக்கோளாய் கொண்டது. வினவு கட்டுரைகள் நேரெதிர் வகை. வினவு கருத்துகளை ஏற்றாலும், எதிர்த்தாலும், நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்குபவை. சிந்தனை மாற்றம் உண்டாக்க வல்லவை. (இங்கே வினவோடு எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உண்டு. “பேஷ், பேஷ்” வகை எழுத்தும் தேவை என்பது என் எண்ணம். புரட்சியின் மூலமாகவோ, மற்ற வகையிலோ சமூக-பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்டோர் மேலுழுந்து வரும் போது அவர்களும் என்னை போலவே குறுந்தொகையோ, சுஜாதாவோ ஏதாவது ஒரு பேஷ்-பேஷை தேடுவார்கள் என நினைக்கிறேன்.)

வினவின் மீதான என் ஈர்ப்புக்கு பல காரணங்கள். பலரும் சொன்னவையே. வினவு கட்டுரைகள் சமகால சமூக-அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆழமான, முழுமையான அலசலை முன்வைக்கின்றன. இவற்றினூடே பல பொதுவான கோட்பாடுகளையும் பேசி செல்கின்றன. இத்தகு கட்டுரைகளை இத்தனை அதிக அளவில், கிட்டத்தட்ட தினசரி, வெளியிடுவது பெரும் ஆச்சரியம் தருகிறது. மேலும், வாய் சொல் வீரர்களுக்கு மத்தியில், சமூக பிரச்சனைகளில் நேரடியாய் செயலில் இருங்குவதால் வினவின் சொல்லுக்கு வலிமை கூடுகிறது. இவ்வகை தீவிர கட்டுரைகளை படைப்பதில் முதலாவது என்றோ, முதன்மையானது என்றோ ஐஸ் கட்டி வைக்க மனமில்லை. ஆனால், நூலகங்களிலும், சிறு பத்திரிகைகளிலும் குடியிருந்த இவ்வகை எழுத்தை சந்தைக்கு இழுத்து வந்து அனைவருக்குமாய் கடை விரித்ததில் வினவு பெரும் பணி ஆற்றியுள்ளது. (இந்த வெற்றியின் பின்னால் இணையமும், அதன் பின்னால் ஐடி தொழிலாளர்களும் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு, அவர்களை குட்டுவதை குறைத்து கொள்வீராக! நன்றி மறப்பது நன்றன்று!).

வினவு கட்டுரைகளில் எனக்கு ஈர்ப்புடைய இரு பாடுபொருள்கள் பற்றி சில கருத்துகள்.

தொழிலாளர்கள்
சுடும் வெயிலில் தார் சாலை போட்டுவிட்டு, அருகிலேயே தகர கொட்டகையில் உறங்கும் தொழிலாளர்கள் இப்போது குற்ற உணர்ச்சியை தருகிறார்கள்.

முதலாவது முதலாளித்துவம்-தொழிலாளர்கள் பற்றியது. இந்த விஷயத்தில் சிந்தனை மாற்றத்தை உணர்கிறேன். சுடும் வெயிலில் தார் சாலை போட்டுவிட்டு, அருகிலேயே தகர கொட்டகையில் உறங்கும் தொழிலாளர்கள் இப்போது குற்ற உணர்ச்சியை தருகிறார்கள். இருவரும் எட்டு மணி நேரம் உழைக்கும் போது, எங்கள் இருவரின் வாழ்க்கை வசதிகளில் இத்தனை வேறுபாடு இருப்பது அநியாயம். இந்த நிலை மாற வேண்டும் என எண்ணுகிறேன். எட்டு மணி நேரம் உழைக்கும் எவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வசதி-வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.இதை அடைவதற்கு வினவு கூறும் வழிமுறைகளில் தான் தெளிவு கிடைக்கவில்லை.

வினவு கூறும் கம்யுனிச-சமத்துவ உலகம் எப்படி இருக்கும்? அதை எப்படி அடைவது? போன்றவை பற்றி தெளிவில்லை. அந்த வகையில் மற்ற பலரும் சொன்ன ஒரு பரிந்துரையை நானும் முன் வைக்கிறேன். உங்கள் சித்தாந்தம் குறித்து பால பாடத்தில் தொடங்கி தொடர் கட்டுரை வெளியிட்டால் நலம். இந்த தொடரானது வழக்கமான உணர்ச்சி பெருக்கில் இல்லாமல், ஒரு கணிதவியல் ஆராய்ச்சி கட்டுரை போல, வறட்டு அறிவு நிலையில் எழுதப்படவேண்டும் என் சொந்த விருப்பம். இதற்கு தேவையான ஆள்பலமோ, நேரமோ இல்லை என்றால் இதை பற்றி அறிய எங்கிருந்து தொடங்குவது என ஒரு பாடத்திட்டம் வெளியிட்டால் பயன் இருக்கும்.

இரண்டாவது விஷயம் இந்து மதம். இந்த விஷயத்தில் சிந்தனை மாற்றம் ஏற்படாவிட்டாலும், என் நம்பிக்கைகளை மறுஆய்வு செய்து சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது. இந்த மதம் முழுதும் தீமையால் ஆனது, வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டியது என்பது வினவின் கருத்து. இதன் முதல் நூல் மனு ஸ்மிருதி என்றும், மூல வாக்கியம் “ப்ராஹ்மநோஸ்ய முகமாஸீத்..” என்றும் வினவு கருதுகிறது. கடந்த காலத்தில் (நிகழ் காலத்திலும்?) இந்த நிலை இருந்திருக்கலாம். ஆனால், நான் இவற்றை முக்கியமாக கருதவில்லை. “ஈசா வாஸ்யம் இதம் ஸர்வம்” என்பதையே நான் முக்கிய வாக்கியமாக கருதுகிறேன். இந்த மதத்தில் நல்ல விஷயங்களும் உண்டு என்பதும், அவை பிரித்து எடுத்து நிலை நிறுத்தப்படவேண்டும் என்பதும் என் எண்ணம். ஆனால், “எங்கே ஒரு நாலு நல்ல விஷயம் சொல்லு” என்றால் பதில் சொல்லும் அளவு எனக்கு தெளிவில்லை.

எனவே, முதலில் இவற்றை என்னளவில் அடையாளம் கண்டு நடை முறைப்படுத்த வேண்டும் என திட்டம். பார்ப்போம். அதே போல இந்து மத mysticism என்பதை என்னால் முழுதும் நிராகரிக்க முடியவில்லை. கதோபனிஷத் முதலில் வேதங்களை வானளாவ புகழ்ந்துவிட்டு பிறகு சொல்கிறது, “இப்படிப்பட்ட வேதங்களையே உச்சபட்சமாக கருதுபவன் முழு மூடன். உண்மையான அறிவு அதற்கு அப்பாற்பட்டது. அது ஆன்ம அறிவு”. இந்த ஆன்ம அறிவு எனக்கு பெரும் புதிராக உள்ளது. இதை நான் ஒரு புராண கதை கோட்பாடாக நினைக்கவில்லை. இதில் ஏதோ உண்மை இருக்கிறது என நம்புகிறேன். ஆயினும், என்னளவில் இது குறித்து தெளிவு கிடைக்கும் வரை இது பற்றி வெற்று கூச்சல் போடாமல் இருக்க முடிவு செய்துள்ளேன். இதுவும் வினவின் விளைவு.

எனக்கு வினவு கட்டுரைகள் மீது இரண்டு பொதுவான விமர்சனங்கள் உண்டு.

 1. முதலில், “நான் மட்டும் 100% நல்லவன், மற்றவர்கள் 100% கெட்டவர்கள்” என்ற ஒரு தோற்றத்தை தருகின்றன. “Shades of gray” என்ற இயற்கை நியதியை புறந்தள்ளுகின்றன. இந்த ஒரு வருடத்தில் யாரையாவது பாராட்டி ஒரு வார்த்தை சொன்னதாய் நினைவில் இல்லை. உதாரணமாக, போலி கம்யூனிஸ்டுகளை அடிக்கடி தாக்கி எழுதுகிறீர்கள். அவர்களது இயக்கம் சமூகத்துக்கு நல்லது எதையுமே செய்யவில்லையா? வேறொரு உதாரணமாக, “தி இந்து” பார்ப்பனீய பத்திரிகை என்கிறீர்கள். சரி. ஆனால், மேற்கோள் காட்டுவது, ஆதாரம் காண்பிப்பது என தமிழக பத்திரிகைகளில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது இதையே என்பது என் எண்ணம். இவ்வகையிலாவது அது உபயோகமாய் உள்ளதல்லவா? தீமையை பற்றியே பேசினால் அதே மட்டுமே உலகில் உள்ளது என்ற பிரமை தோன்றி விடும். அது நன்மையை அதிகப் படுத்துவதற்கு தடைக்கல் என்பது என் எண்ணம்.
 2. இரண்டாவது விமர்சனம் மற்ற சிலரும் சொன்ன விஷயம். கருத்துகளை மிகக் காட்டமாக முன்வைக்கிறீர்கள். சில சமயம் இது சொல்லப்படும் கருத்திலிருந்து கவனத்தை திசை திருப்பி கோவம்-ஆத்திரம் என்ற வகையில் மனம் சென்று விடுகிறது. உங்களது கட்டுரைகளின் நோக்கம் உங்கள் கருத்துகளை ஏற்பவர்களுக்காக மட்டுமல்ல. எதிர் கருத்து கொண்டிருப்போரையும் சிந்திக்க வைக்க வேண்டாமா? சொல்லும் முறை காட்டமாய் இருந்தால் இது நிகழும் வாய்ப்பு குறைந்து விடும். ஒரு மறுமொழியில், ஜாதி, மத பற்று அதிகம் உள்ளவர்கள் மனம் நோகாதவாறு பேசுவது கடினம், என்று கூறினீர்கள். முயற்சி செய்ய வேண்டுகிறேன். ராவணனை லட்சுமண கோட்டின் அந்தப் பக்கமே வைத்து திட்டி கொண்டிருப்பதில் பயன் என்ன? இந்த பக்கம் இழுக்க வேண்டாமா?

சில பரிந்துரைகள்:

 • வினவு சொல்லும் விஷயங்கள் பெரும்பாலும் தமிழகம் தாண்டி, இந்திய-உலக அளவில் பயனுள்ளவை. எனவே, ஆங்கில தளம் ஒன்று தொடங்கினால் மேலும் பலரை சென்றடையும். முக்கிய கட்டுரைகளையாவது மொழி பெயர்த்து வெளியிடலாம். இந்த விஷயத்தில் என்னாலான உதவிகள் செய்ய விருப்பம்.
 • மறுமொழிகள் சில சமயங்களில் கருத்து பரிமாற்றமாய் இராமல், வெட்டி பேச்சு, குழாயடி சண்டை, தனி நபர் தாக்குதல் என்ற வகையில் அமைந்து விடுகிறது (நானும் இந்த குற்றத்தை செய்துள்ளேன்). இவை, ஆழமான கட்டுரைகளுக்கு மரியாதை செய்வதாய் இல்லை. ஜனநாயகம் முக்கியம் எனினும், மறுமொழிகளை மேலும் மட்டறுக்கலாம்.
 • நன்கொடை கேட்டு ஓரிரு முறை விளம்பரம் செய்துள்ளீர்கள். வங்கிக் கணக்கு எண், முகவரி போன்ற இந்த தகவல்களை ஒரு நிரந்தர பக்கமாக்கி முகப்பில் இருந்து சுட்டி தரலாம். விரும்புவோர் எப்போது வேண்டுமானாலும் நிதி அனுப்ப வசதியாய் இருக்கும்.

இந்த தளம், அதற்கு வெளியே செயல் என இரு வகைகளிலும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க எல்லாம் வல்ல திருமால் அருள் புரியட்டும்! என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

-வெங்கடேசன்

 1. கருப்புக்கும், வெள்ளைக்கும் நடுவில் உள்ள கிரே வண்ணப்பகுதி பற்றிய உங்களது எதிர்பார்ப்புடன் முழுதும் உடன்படுகிறேன். ஆனால் விமர்சிக்குமளவுக்கு எந்த கட்டுரையும் 100 சதவீதம் என்ற அளவில் என் கண்ணுக்கு தெரியவில்லை. தெரிந்தால் உதவியாக இருக்கும்.
  லட்சுமணக் கோடு விவகாரத்தில் கூட உடன்படுகிறேன். ஆனால் எங்கேயும் வளையாத லட்சுமணக்கோடு வேணும். அப்படி இருக்கும் ஊரக் காட்டுங்க ஒன்னா போய் சேரலாம்.

 2. அழகான பதிவு வெங்கடேசன்! மாறுதலின் இயக்கவியலை சிறப்பாக முன்வைத்துள்ளீர்கள். அந்த metamorphosis முழுமை பெற தோழமையுடன் வாழ்த்துகிறேன்.

 3. அருமை பாஸ்..உங்க வயசு என்னன்னு தெரியல ..அனாலும் உங்கள் எழுத்தில் ஒரு முதிர்சி தெரிகிறது..உங்கள் கருத்தே எனது எண்ணத்தோடு ஒட்டியே செல்கிறது …மதங்களில் நாம் ஊறி போனதால், நம்மால் அதை , வினவு அளவுக்கு விமர்சிக்க முடியவில்லை என்பது எனது எண்ணம்..லைட் டீவியசென் …

  நல்ல ஒரு மதிப்பிடு, வினவை பற்றி …

  • // மதங்களில் நாம் ஊறி போனதால், நம்மால் அதை , வினவு அளவுக்கு விமர்சிக்க முடியவில்லை

   உண்மைதான். தொட்டில் பழக்க பாசம். யாராவது விமர்சித்தால், நாய்க்குட்டியை பாதுகாக்கும் நாய் போல குரைத்து விரட்ட தோன்றுகிறது!

 4. வெங்கடேசனின் பின்னூட்டங்களை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். இக்கட்டுரை மிகச் சிறந்த பகிர்தல். நானே சொல்ல நினைத்த ஆனால் வினவின் அன்பின்பால் சொல்லாமல் விட்ட ஓரிரு விஷயங்களையும் தெளிவாக உரைத்திருக்கிறீர்கள். நடை சிறப்பாக உள்ளது. உங்களைப் போன்றோர் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். வெங்கடேசனை ஏற்றுக்கொள்கிறேன்; வெங்கடாசலபதியை ஏற்பதற்கில்லை! 🙂

  போகட்டும்.. இந்துமத mystics பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அவை இந்து மதத்திற்கென்று சொந்தமானதல்ல. இந்தியா எனும் நிலப்பரப்புக்குட்பட்ட அறிவியலுக்கப்பாற்பட்ட (அறிவியலால் இன்னும் நெருங்க முடியாத?!!) mystics-ஐ இந்து மதவாளர்கள் தங்களுக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டதாக எனக்கு தோன்றுகிறது. இந்து மதத்தை ஒதுக்கிக் தள்ளிய mystics-ஐ மீட்டுக் கொண்டுவர வேண்டும் என எண்ணுகிறேன்.

  • நன்றி ரிஷி. உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட ‘மெய்ஞானம்’ என்பதைத்தான், வார்த்தை சட்டென மனதில் தோன்றாமல், mysticism என எழுதினேன். உங்களுக்கு பதில் சொன்ன அம்பியின் மெய்ஞான வகைப்பாடுகள் பற்றிய அவதானிப்பு சுவாரஸ்யமானது!
   ‘இந்து மதம்’ என்பதை வரையறுப்பது கடினம் என்பதால் இந்த மெய்ஞான ஆராய்ச்சியின் மூலம் பற்றி அறிவது எளிதல்ல என நினைக்கிறேன். வெளியில் இருந்து வந்திருக்கவும் வாய்ப்புண்டு. மெய்ஞானப் புலம்பலை வேறொரு சமயம் வைத்துக் கொள்வோம் 🙂

 5. வினவு யாரையும் பாரட்டுவதில்லை என்று சொல்ல முடியாது. தேவைப்படும் பொழுது மற்ற இயங்களின் பணியை அங்கீகரிக்கவே செய்கிறது, ஆனால் இது அரிது. மூவர் தூக்கு கட்டுரையில் வை.கோ மற்றும் சீமானின் பங்கு முக்கியமானதென்று தோழர் மருதையன் குறிப்பிட்டுள்ளார். https://www.vinavu.com/2011/09/07/justice-at-the-gallows/ இதே போல மே 17 இயக்கம் அருந்ததி ராய் கலந்து கொண்ட கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பொழுது அவர்களை ஆதரித்து ஒரு முழு கட்டுரையே எழுதப்பட்டது. வறட்டுத்தனமாக அருந்ததி ராய் சொல்வது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. https://www.vinavu.com/2012/01/12/may-17-protest-kalachuvadu-book-fair/ இளவரசன் கொலையை தொடர்ந்து மே 17 அணுகுமுறையை கண்டித்து சமீபத்தில் முழுக்கட்டுரையே எழுதப்பட்டது. அரசியல் சரியாக இருக்கும்பட்சத்தில் அதை தோழர்கள் ஆதரிக்கவே செய்கிறார்கள். இதே போல் மனுஷ்ய புத்திரனை கண்டித்தும் கட்டுரைகள் கிடைக்கும், அவரை ரீசானா நபீக் விவகாரத்தில் ஆதரித்து எழுதிய எழுத்துக்களும் கிடைக்கும் எனவே ஆதரவோ எதிர்ப்போ அரசியலின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.

  இந்து பத்திரிக்கை குறித்து சொல்லியிருந்தீர்கள், மே17 இயக்கம் குறித்து மேலே நான் பகிர்ந்து கொண்ட கட்டுரையில் காலச்சுவடு முற்போக்கான பதிப்பகமா எனும் கேள்விக்கு பதில் இப்படி வரும்

  //காலச்சுவடு அப்படிப்பட்ட நிறுவனம் அல்ல என்பதற்கு சேரனின் கவிதைகள், தலித்தும் தண்ணீரும் என்ற நூல், பஷ்ரத் பீர் எழுதிய காஷ்மீர் நினைவுகள் என்ற நூல், ராய் எழுதிய உடைந்த குடியரசு போன்ற நூல்களெல்லாம் இல்லையா என்று ராய் கேட்கிறார்.

  இவையெல்லாம் காலச்சுவடு வெளியிட்டதற்கு காரணம் விற்பனை நோக்கம் தவிர வேறு இல்லை. இந்த நூல்களெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள்தான், அதை வினவிலும் கூட வெளியிட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பதிப்பகம் அதன் முழுமையான அரசியல் பார்வை, நடத்தையில்தானே என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறது என்று பார்க்கப்படவேண்டும் ராய் அவர்களே? நாளைக்கே பாபர் மசூதி இடிப்பின் இனிய நினைவுகள் என்று அரவிந்தன் நீலகண்டன் எழுதி, குஜாரத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இனிய நினைவுகள் என்று ஜடாயு எழுதி அவற்றினை காலச்சுவடு வெளியிடாது என்று யாராவது உறுதி மொழி அளிக்க முடியுமா?//

  இதே பதில் இந்துக்குவும் பொருந்துமென நினைக்கிறேன்.

  • நன்றி சீனிவாசன்.

   இப்போதும் என் மனம் மாறவில்லை. வேண்டுமானால் என் கருத்தை சிறிது மாற்றலாம். வினவு ஒருவரின் அடிப்படை கொள்கைகள் எவை என அதன் பார்வையில் தெரிகிறதோ, அதன் அடிப்படையில் அவர் கருப்பு அல்லது வெள்ளை என முத்திரை குத்தப்படுவார். உதாரணமாக, காலச்சுவடு கருப்பு. அருந்ததி ராய் வெள்ளை. வெள்ளை மனிதர்களிடம் கருப்பும் உண்டு. பெரும்பாலும் அவர்களது கருப்பு விமர்சிக்கப்படும். எப்போதாவது அவர்களது வெள்ளையும் சுட்டிக் காட்டப்படும். ஆனால், கருப்பு மனிதர்கள் முழுதும் கருப்பு. அவர்களிடம் வெள்ளை பொட்டு கூட இருக்காது. அதாவது, வெள்ளையில் கருப்பு இருக்கும். ஆனால், கருப்பில் வெள்ளை இருக்காது.

   காலச்சுவடு லாபத்திற்காக நல்ல நூல்களை விற்பதாக சொன்னீர்கள். இதுவே எனக்கு வெள்ளையாகத்தான் தோன்றுகிறது. வண்ணத்திரை, டைம் பாஸ் என விற்று லாபம் பார்க்காமல் நல்ல நூல்களை விற்கிறார்களே. இவர்களது செயலால் நல்ல நூல்கள் மக்களை சென்று அடைகிறது, அல்லவா?

 6. விமர்சன முறை பற்றி இந்த கட்டுரையை படித்து பார்க்கவும்…http://www.keetru.com/vizhippunarvu/jun08/maruthaiyan.php லிங்குகளாய் கொடுத்து உங்களை வெறுப்பேற்றுவது எனது நோக்கமல்ல. சாராம்சத்தை நான் சுருக்கி கொடுப்பதை விடவும் முழுக்கட்டுரையையும் நீங்கள் படித்தால் நல்ல புரிதல் ஏற்படும்.

  • சுட்டிக்கு நன்றி, சீனிவாசன். நல்ல கட்டுரை. என்னளவில், அம்பேத்கரின் ஆணித்தரமான, அமைதியான நடையே பிடித்திருக்கிறது. இதுவே சிந்திக்க வைக்கிறது. ஆனால், பெரியார் பாணியின் அவசியத்தையும் இந்த கட்டுரை மூலம் உணர்கிறேன்.

 7. // எட்டு மணி நேரம் உழைக்கும் எவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வசதி-வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது //

  Kindly visit Cuba or talk to Cubans! Idea/Theories may look great on paper but practicality is not POSSIBLE.

  • //Kindly visit Cuba or talk to Cubans! Idea/Theories may look great on paper but practicality is not POSSIBLE.//

   இப்படிச் சொல்வதன் மூலம் பலரை வசதி-வாய்ப்பற்றவர்களாக்கினால்தான் சிலர் செழிப்பாக வாழ முடியும் என்பதைப் பதிவு செய்கிறீர்களா ராமன்??

   • Everybody wants everything! Sure I would love to see everybody get everything and every individual is happy!

    And making a statement like that will make me look like a good person. And others would appreciate such a noble thought!

    But reality is different. Such a system , stealing the one’s hard work and sharing it with other is not a good idea either.

    Cubans did it.Cubans enjoy free health care,But there doctors are going to hospitals in bicycles.

    Now in India, free food for poor means hard work of farmers distributed for free. System cannot sustain.I will compare it Great Chinese famine. Refer http://en.wikipedia.org/wiki/Great_Chinese_Famine.

    These kind of risk reward system will bring down the innovation and that will further bring down the quality of human life.

    How many of us are ready to accept below statements.

    I dont need a salary hike, Instead will share my wealth to see the peon get a decent salary
    I dont need a Car, Instead will share my wealth to see fellow Indian getting a health care
    I dont need a Bus and will walk, Instead will share my wealth to see fellow Indian getting a meal
    I am saving 5000 rupees per month after fulfilling my needs, would like to donate to poor
    So what if my colleague is not working hard and lazy, I still like to see him get the same salary as mine. because there is family for him

   • Disparity ll always exist,reducing it artificially wont help and nor is it the nature of man.

    But,whats needed is that when we go to a western country,the richest man and the poorest man get to eat food of similar quality and hygeiene and also gets to use public infrastructure/health care which are similar atleast for day to day health issues.

    we dont want people living in unhealthy/dirty/bad socieities.

    Most of this problem is caused by urbanization and poor town planning.

 8. // (இங்கே வினவோடு எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உண்டு. “பேஷ், பேஷ்” வகை எழுத்தும் தேவை என்பது என் எண்ணம். புரட்சியின் மூலமாகவோ, மற்ற வகையிலோ சமூக-பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்டோர் மேலுழுந்து வரும் போது அவர்களும் என்னை போலவே குறுந்தொகையோ, சுஜாதாவோ ஏதாவது ஒரு பேஷ்-பேஷை தேடுவார்கள் என நினைக்கிறேன்.)//

  வெங்கடேசன், வாசிப்பின்பம்கிறது காலந் தோறும் மாறக்கூடிய ஒண்ணுன்னுதான் வினவு கட்டுரைங்க சொல்லுது.அத படி, இத படிக்காதன்னு எங்கேயும் சொன்னதா தெரியல. அப்படிப் பாத்தா வினவு வாசிப்ப தெறந்து வெச்சுருக்கு, நீங்க சுஜதா மட்டும்தான்னு மூடுறீங்க.. 😎

  ஆனாலும் தோழரா மாறப்போறவங்க கிட்ட வெளிப்படுற தேடல் பயனுள்ளதா இருக்கும்ணு நிரூபிச்சிட்டீங்க,

  மனதார வாழ்த்துக்கள்!

 9. வினவு யாரையுமே பாராட்டுவதில்லை என சொல்ல முடியாது, தேவைப்படும்பொழுது மாற்று இயக்கங்களின் பணியை அங்கீகரிப்பதாகவே கருதுகிறேன் நான். இதற்க்கு நல்ல உதாரணம் மூவர் தூக்கு தொடர்பாக வைகோ, சீமான் மற்றும் புகழேந்தி ஆகியோரின் செயலை அங்கீகரித்தது. https://www.vinavu.com/2011/09/07/justice-at-the-gallows/ மற்ற நேரங்களில் வைகோ மற்றும் சீமான் மீது வினவு வைக்கும் விமர்சனங்கள் யாவரும் அறிந்ததே. இதே போல் மே17 இயக்கத்தினர் காலச்சுவடு நூல் வெளியீட்டின் போது அருந்ததிராய்க்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தபொழுது, அவர்களை ஆதரித்து முழுக்கட்டுரையே எழுதப்பட்டது. https://www.vinavu.com/2012/01/12/may-17-protest-kalachuvadu-book-fair/ இதே மே17 இயக்கத்தினரை இளவரசன் கொலை தொடர்பான சாதிவெறியை கண்டிக்கும் அணுகுமுறை குறித்து,கடுமையாக கண்டித்தும் கட்டுரை வெளியிடப்பட்டது. இதே போல் மனுஷ்ய புத்திரன் குறித்து கண்டித்தும், ரிசான நபீக் விவகாரத்தில் அவரை ஆதரித்தும் எழுத்துக்கள் காணக்கிடைக்கும். ஒருவரை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் அடிப்படையிலேயே.

  இந்து பத்திரிக்கை தொடர்பாக உங்களது கருத்திற்க்கு மேலே நான் கொடுத்துள்ள மே17 பற்றிய கட்டுரையில் வரும் சில பத்திகள் பொருத்தமாய் இருக்குமென நினைக்கிறேன்…

  //காலச்சுவடு அப்படிப்பட்ட நிறுவனம் அல்ல என்பதற்கு சேரனின் கவிதைகள், தலித்தும் தண்ணீரும் என்ற நூல், பஷ்ரத் பீர் எழுதிய காஷ்மீர் நினைவுகள் என்ற நூல், ராய் எழுதிய உடைந்த குடியரசு போன்ற நூல்களெல்லாம் இல்லையா என்று ராய் கேட்கிறார்.

  இவையெல்லாம் காலச்சுவடு வெளியிட்டதற்கு காரணம் விற்பனை நோக்கம் தவிர வேறு இல்லை. இந்த நூல்களெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள்தான், அதை வினவிலும் கூட வெளியிட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பதிப்பகம் அதன் முழுமையான அரசியல் பார்வை, நடத்தையில்தானே என்ன அரசியல் சார்பு கொண்டிருக்கிறது என்று பார்க்கப்படவேண்டும் ராய் அவர்களே? நாளைக்கே பாபர் மசூதி இடிப்பின் இனிய நினைவுகள் என்று அரவிந்தன் நீலகண்டன் எழுதி, குஜாரத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இனிய நினைவுகள் என்று ஜடாயு எழுதி அவற்றினை காலச்சுவடு வெளியிடாது என்று யாராவது உறுதி மொழி அளிக்க முடியுமா?//

  மற்றபடிக்கு தொடர்ந்து பின்னூட்டங்களில் ஆக்கபூர்வமான முறையில் கருத்தளிக்கும் வெங்கடேசனுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 10. // ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம், யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் தேனக் யக்தேன புஞ்ஜீதா மா க்ருத கஸ்யஸ்வித் தனம் என்ற ஈசா வாஸ்ய உபநிஷத்தின் முதல் வாக்கியம். இப்பிரபஞ்சம் இறைச் சக்தியால் பொதிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, இதில் உள்ள யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை ஆகையால் எதையும் தனதெனக் கொள்ளாமல் அனுபவிப்பாயாக என்பது இந்த வாக்கியத்தின் பொருள்.//

  வெங்கடேசன், நீங்க எழுதியிருக்கும் உபநிடத வாக்கியத்தை கூகிளில் தேடியதில் கிடைத்தது. இந்த பொருள் சரியா? இல்லை வேறு பொருளா? சரி, நீங்க புரிஞ்சிக்கிட்டிருக்கிற அளவுல இந்த வாக்கியத்தை ஏன் முக்கியமா கருதுரீங்க? எட்டிக்கு போட்டியா கேக்குறதா தப்பா நினைக்காதீங்க, உங்கள புரிஞ்சிக்கிறதுக்காக கேட்குறேன்.

 11. சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதற்கும்
  குளவிக்கூட்டுக்குள் மாட்டிய புழுவிற்கும்
  இடையேயான வித்தியாசம் தான்
  கருப்புக்கும் வெள்ளைக்கும் ….
  வெங்கடேசன் இன்னமும் கிரே தான் !!
  You still have a chance !!!

 12. வினவு ஐயா ,
  எப்படியோ பொழப்ப ஓட்டுங்கோ கொஞ்சம் மக்களையும் வாழ விடுங்கோ .நீங்க நல்லா இருப்பிங்கோ

 13. // இந்த ஒரு வருடத்தில் யாரையாவது பாராட்டி ஒரு வார்த்தை சொன்னதாய் நினைவில் இல்லை. //

  வெங்கடேசன் இது சரியா 13 மாசத்துக்கு முன்னாடி வந்த பாராட்டு, இது ஓகேயா? 🙂

  வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?

 14. Venkatesan,

  //(இந்த வெற்றியின் பின்னால் இணையமும், அதன் பின்னால் ஐடி தொழிலாளர்களும் உள்ளனர் என்பதை மனதில் கொண்டு, அவர்களை குட்டுவதை குறைத்து கொள்வீராக! நன்றி மறப்பது நன்றன்று!).//

  The success of Internet is not due to the ‘ஐடி தொழிலாளர்கள்’ that you mean. ஐடி தொழிலாளர்கள்’ that you mean are doing just the CLERICAL WORK of data base management for Western companies.

  • //The success of Internet is not due to the ‘ஐடி தொழிலாளர்கள்’ that you mean. ஐடி தொழிலாளர்கள்’ that you mean are doing just the CLERICAL WORK of data base management for Western companies.//

   டேட்டா பேசில் கிளெரிகல் வொர்க் செய்யும் கலையை உங்களிடம் தான் கற்க வேண்டும்…
   இன்றைய உலக ஐடி – யின் இதயமாக பெங்களுர், சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்கள் இருக்கின்றன என்பது தான் உண்மை…

   அன்றாடம் பயன்படுத்தும் டிக்கெட் புக்கிங், பேங்க், ஆன்லைன் வர்த்தகம், தெருவோர பலசரக்கு கடையில் உள்ள பில்லடிக்கும் இயந்திரம், ATM, டிவி , போன் , மொபைல் , திரைப்படம், சமூக தளங்கள், பிற பெரும்பாலான இணைய தளங்கள் etc etc – இப்படி எல்லாவற்றுக்கும் பின்னர் இந்திய ஐடி துறையினரின் உழைப்பு இருக்கிறது என்பதை அறியவும்..

   நீங்கள் எழுதி தள்ளும் கூகிள் பிளாக்குகளுக்கு பின்னாலும் கூட ஒரு இந்திய இஞ்சினீயர் உண்டு என தெரிந்து கொள்ளுங்கள்..

   நீங்கள் சொல்லும் கிளெரிகல் ஜாப்கள் இருப்பதும் உண்மை… எல்லா துறைகளிளும் இது உண்டு… உங்கள் பார்வையில் இந்திய ஜனாதிபதியே கிளெரிகல் வொர்க்கராக தெரியும்போது / தோன்றும்போது ஐடி- யில் இருக்கும் அண்ணன் தம்பி தங்கைகளை கிளெரிகல் என்று சொல்வதில் வியப்பேதும் இல்லை..

   இந்திய ஐடி துறை வல்லுனர்களுக்கு விசா மறுக்கப்பட்டால் மைக்ரோசாப்டின் தலைமை அலுவலகத்தை ஏதாவது ஒரு இந்திய நகரத்துக்கு மாற்றுவோம் என கூறிய பில்கேட்ஸ் சாதாரண கிளெரிகல் வொர்க் செய்யும் தொழிலாளிக்காக அப்படி கூறியிருப்பார் என்றால் அது என்ன வகை முதலாளித்துவம் ?

   • //டேட்டா பேசில் கிளெரிகல் வொர்க் செய்யும் கலையை//
    Clerk = a worker, especially in an office, who keeps records, files, etc.
    What is Database? Records and Files. This art or science is to design tabular columns, add rows, copy rows, delete rows, fetch rows, etc. This is called clerical work.

    //உலக ஐடி – யின் இதயமாக பெங்களுர், சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்கள் இருக்கின்றன//
    What happened to on-shore locations? Why is there a heavy competition among IT guys to go to on-shore? Why are they queuing at Consulates to get Visa?
    // அன்றாடம் பயன்படுத்தும் டிக்கெட் புக்கிங், பேங்க்,************ etc etc//
    All are databases.
    // கூகிள் பிளாக்குகளுக்கு பின்னாலும் கூட ஒரு இந்திய இஞ்சினீயர் உண்டு//
    Again databases. Nothing special about it beyond database or diary.
    // உங்கள் பார்வையில் இந்திய ஜனாதிபதியே கிளெரிகல் வொர்க்கராக தெரியும்போது//
    ???
    // ஐடி- யில் இருக்கும் அண்ணன் தம்பி தங்கைகளை கிளெரிகல் என்று சொல்வதில் வியப்பேதும் இல்லை//
    What is wrong in saying Clerical? Is it demeaning to call a clerical work, a clerical work?
    //மைக்ரோசாப்டின் தலைமை அலுவலகத்தை ஏதாவது ஒரு இந்திய நகரத்துக்கு மாற்றுவோம்//
    He told and you believed? Micro soft has offices in India itself. Why they have to go to Silicon Valley? Can’t they work from ‘home’?

 15. // “தி இந்து” பார்ப்பனீய பத்திரிகை என்கிறீர்கள். சரி. ஆனால், மேற்கோள் காட்டுவது, ஆதாரம் காண்பிப்பது என தமிழக பத்திரிகைகளில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது இதையே என்பது என் எண்ணம்.//
  Venkatesan,
  That does not mean Vinavu is depending on பார்ப்பனீய பத்திரிகை and vouching for it. Let me recall you that Vinavu is not giving the news but giving an analysis of the news in the angle of Communism. While doing so, it is giving a reference to another Source in order not to make the post without any other reference. Vinavu is quoting from numerous sources as needed. I hope you understood now.

  • வினவு அவர்களின் கருத்துக்கள் என்று வரும் உளறல்களை விமர்சனம் செய்யும் போது அவருக்கு கோபம் வராமல் இருக்க காரணம் அவர் ஒரு நவீன காலத்து இயேசு என்பது அல்ல.சரக்கு அவரோடது இல்லை.எங்கேயோ சுட்டது .ஆனால் அவர் கொஞ்சம் மக்களையும் நினைத்து பார்க்கவேண்டும்.போலி அரசியல் ,சுரண்டல்,சினிமா,அரசு,ஊடகம்,சமூகம் ,மொழியுணர்வு,வணிகம் ,இப்படி எல்லா வகையிலும் மூளை சிதறல் ஏற்பட்டு,யோசிப்பதையே மறந்து போன மனிதர்கள் கண்களில் எப்படியோ வினவு பார்க்கப்பட்டு ,ஆகா ஒரு ஆறுதல் (சினிமா வடிவேல் மாதிரி)என்று ஒரு வாசகன் நினைத்தாள் அங்கேயும் தவறான மூளை சலவை.அதுவும் பல பேரால் திட்டமிடப்பட்டு.இதன் தொடர்ச்சியாக போராட்டம் என்று அவன் வாழ்கை ,அவனை சார்ந்தோர் வாழ்க்கை வீணாகி போவதை தான் ,பரிசாக வினவு கொடுக்கிறது,படித்த குற்றத்திற்காக .

 16. “நான் மட்டும் 100% நல்லவன், மற்றவர்கள் 100% கெட்டவர்கள்” என்ற ஒரு தோற்றத்தை தருகின்றன.

  // கருத்துகளை மிகக் காட்டமாக முன்வைக்கிறீர்கள்//

  It can’t be helped. When one critiques the prevailing unjust order any amount of soft talk will look the same way.

  //சில சமயம் இது சொல்லப்படும் கருத்திலிருந்து கவனத்தை திசை திருப்பி கோவம்-ஆத்திரம் என்ற வகையில் மனம் சென்று விடுகிறது.//

  It too can’t be helped. You too have reacted similarly in the beginning. Now you seem to have got the point. So people with a sense of just will realize that it is not ‘HARSH’ sooner or later.

  • yeah but if you are just proposing another system with biases,flaws and fissures and something which we know have failed here in India and elsewhere,then why would anyone not get angry.

   It is easy for one to be good/idealistic but to make people follow your lead is the toughest.

   • Harikumar,

    // with biases,flaws and fissures//

    People can debate them over and find solutions.

    // something which we know have failed here in India//

    Sorry, I don’t think it has not been tried here in India.

    // failed//

    Reasons are varied. Some are apparent. Others are not so apparent. We can rectify the flaws, give it a new name if you prefer, and try the new system.

    // It is easy for one to be good/idealistic but to make people follow your lead//

    People are already following/conforming to a system willingly or unwillingly. It is clear that the current system needs rectification. One need not follow other. Once enough people gather, debate and found a system of collective wellbeing which is really beneficial to ALL, you won’t have any objection. Welcome to contribute in this process of rebuilding.

 17. பதிவின் மீது கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி. சில பதில் கருத்துகள் சொல்ல விருப்பம். ஆனால், “Since I am suffering from fever…” என்னுமாப்போலே சில பிரச்சனைகள். ஓரிரு தினங்களில் எழுதுகிறேன்.

 18. naan enudaya kalloori padipai mudithu oru thaniyar aluvalagathil velai parkum oru ilaignyan. naan siriya mana kulapathil ullen. “facebook, twitter” social network aagiyavai verum poluthu pokukathana. athan moolam naam sathika vali irukiratha..??? oru kuluvaga sernthu oru amaipai uruvaki yelai eliyoruku uthava mudiyuma???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க