Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

-

ன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது.

சாய்பாபாகணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் மின்னஞ்சல் வந்திருக்கிறது. அது கணபதி ராஜுவின் மின்னஞ்சல் முகவரி rajug1958@yahoo.com யை உட்டாலக்கடி அடித்து உருவாக்கப்பட்ட போலி முகவரி இதைச் செய்தது ரத்னாகாராகத்தான் இருக்கும் என்று கணபதி ராஜு புகார் செய்திருக்கிறார்.

ஜூலை 7-ம் தேதி கணபதி ராஜு வீட்டை சிலர் தாக்கியிருக்கிறார்கள். அது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கச் சென்ற கணபதி ராஜு சில நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்பவில்லை. இதற்கிடையில் ரத்னாகர் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை (ஸ்ரீபிரசாத்) கணபதி ராஜு தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணபதி ராஜு ஜூலை 14-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார்.

இதுதான் வெளியாகியுள்ள தகவல்களின் சுருக்கம். அகில உலகையும் ரட்சிக்கும் சிவ-சக்தியின் அம்சம் என்று அவரது பக்தர்களால் போற்றப்படும் சாய் பாபா என்ற சத்யநாராயண ராஜு உலக விதிகளின் படி ஒரு பெற்றோருக்கு பிறந்து, உடன் பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சொத்து ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இறந்திருக்கிறார். தனது சொத்துக்களை ஆள்பவதற்கு நெருங்கிய உறவினர்களை விடுத்து வேறு சீடர்களெல்லாம் அவருக்குத் தோன்றவில்லை. இதுதான் முற்றும் துறந்த முனிவன் ஒரு முதலாளி போல நடந்திருக்கும் இலட்சணம்.

சிவ-சக்தி அவதாரமாக தன்னை அறிவித்துக் கொண்ட பிறகு தன்னை நம்பி வந்த பக்தர்களை படு மோசமான முறையில் நடத்தியிருக்கிறார் சாய்பாபா. தரிசன கூட்டங்களில் தனது விபூதி வரவழைப்பது, லிங்கம் தோன்றச் செய்வது, வாட்ச் எடுத்து கொடுப்பது என்று பல மாய வித்தைகள் செய்து தனது பிராண்டை உருவாக்கினார்.

கானி லார்சன் என்பவர் 1976-ம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகள் தான் பிரசாந்தி நிலையத்தில் கழித்த அனுபவங்களை வெளியிட்டிருக்கிறார். சாயிபாபா பக்தர்களில் ஒரு குடும்பத்தை அல்லது சில நபர்களை தனியாக அழைத்து அவர்களுக்கு ஆன்மீக அறிவுரை வழங்குவதாக பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் வெளியாகின. குழந்தைகள் வக்கிரமான முறையில் பாலியல் உறவுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனம் யுனஸ்கோ புட்டபர்த்தியுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது.

1993-ம் ஆண்டு ஆசிரமத்தில் 6 பேர் மர்மமாக கொலை செய்யப்பட்டனர். அவர்கள் பாபாவை கொலை செய்ய வந்தவர்கள் என்று சொல்லப்பட்டு உண்மைக் காரணம் மறைக்கப்பட்டு வழக்கு மூழகடிக்கப்பட்டது. இவ்வ்வளவு கொலை நடந்தாலும் அரசு, அதிகார வர்க்கம், அரசியல்கட்சிகள் ஆதரவு காரணமாக அயோக்கியனான சாய்பாபா ஒரு யோக்கியனாக உலா வரமுடிந்தது.

பிருந்தாவன் ஆசிரமம்
பெங்களூர் பிருந்தாவன் ஆசிரமத்தில் சொத்துக் குவியல்.

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரஷாந்தி நிலையத்தில் கழித்தார் சாய்பாபா. வெயில் காலங்களில் சூட்டை தாங்க முடியாவிட்டால் வொயிட்பீல்டிலுள்ள பிருந்தாவனம் ஆசிரமத்திற்கு போய் விடுவாராம். இன்னும் கொஞ்சம் சொகுசு தேவைப்பட்டால் கொடைக்கானலில் இருக்கும் சாய் சுருதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்வாராம். பகவானாகப் பிறந்தவருக்கும் வெயில் அடித்தால் சுடும், மலைக்கு மேல் போனால் சுகமாக இருக்கும் என்ற சொகுசு வாழ்க்கையிலிருந்து தப்ப முடியவில்லை.

சத்ய சாயி அறக்கட்டளைக்கு ஆண்டு தோறும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் வந்தன. அதன் மூலம் பணப் பரிமாற்றங்களுக்கான மையமாக புட்டபர்த்தி மாறியது. சாய் பாபாவின் இறப்புக்குப் பிறகு புட்டபர்த்தி ஆசிரமத்தில் அவரது அறையிலிருந்து இருந்து ரூ 21 கோடி மதிப்பிலான 98 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும் ரூ 1.6 கோடி மதிப்பிலான 307 கிலோ வெள்ளி நகைகள், ரூ 11.6 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த மாதம் மற்ற அறைகளிலிருந்து 77 லட்ச ரூபாய் பணம், 1000 பட்டுச் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், 500 ஜதை செருப்புகள், பெர்ப்யூம்கள், ஹேர்ஸ்ப்ரே, வாட்சுகள், தங்க, வெள்ளி தாலிகள், வைரங்கள். 750 காவி, வெள்ளை உடைகள் எடுக்கப்பட்டன. கண் இமைக்கும் நேரத்தில் தன் கையில் பொருட்களை தோன்றச் செய்யும் கடவுளின் அவதாரம் இத்தனை பொருட்களையும் சேர்த்து வைத்தற்கு என்ன காரணம் என்று பக்தர்கள் யோசிக்க வேண்டும்.

வளர்ப்பு மகனது திருமணத்தின் போது ‘புரட்சித் தலைவியும்’ இத்தகைய டாம்பீகத்தை காட்டினார். எனினும் ஜெயலலிதாவை இந்த விசயத்தில் விஞ்சுகிறார் பாபா. அதே போன்று பெங்களூர் வொயிட் ஃபீல்டில் உள்ள ஆசிரமத்தில் இருந்து 6 கிலோ தங்கம், 245 கிலோ வெள்ளி., 80 லட்சம் ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது.

குவிந்து கொண்டிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் சிறு பகுதியை மருத்துவமனை, கல்லூரி, குடிநீர்த் திட்டம் என்று செலவழித்து ஆசிரமத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான முகமூடியையும் தயாரித்துக் கொண்டனர் சத்ய சாய் பாபாவும் அவரது அறக்கட்டளையும்.

2003-ம் ஆண்டு ஸ்டூலில் ஏறி நின்ற ஒரு பையன் அவர் மீது விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாய்பாபா இயல்பாக நடமாட முடியாமல் போய் விட்டது. 2004 முதல் பொதுவில் வந்து அருள் பாலிப்பது குறைந்து விட்டது. அதன் பிறகு சில ஆண்டுகள் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த 2011-ம் ஆண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

வாழ்நாளில் சமூகத்தை அட்டை போல் உறிந்து வாழ்ந்த இந்த மனிதரின் இறப்புக்கு 5 லட்சம் பேர் கூடினார்களாம். அவருக்கு இரங்கல் தெரிவித்தவர்கள், பக்தர்கள் பட்டியலில் மன்மோகன் சிங், சோனியா காந்தி, நரேந்திர மோடி, எஸ் எம் கிருஷ்ணா, அம்பிகா சோனி, மகிந்த ராஜபக்ச, தலாய் லாமா, சச்சின் டெண்டூல்கர் என்று பல்வேறு பிரபலங்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து “என்னுடைய புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். பொய் குற்றச்சாட்டுக்களை உலகம் முழுவதும் கொட்டை எழுத்தக்களில் விளம்பரப்படுத்தினாலும் அது ஒரு நாள் கூட ஒரு துளி கூட குறையாது. சில பக்தர்கள் இந்த பொய் குற்றச்சாட்டுக்களால் மனம் சஞ்சலித்திருப்பது போல தெரிகிறது” என்று உயிரோடு இருக்கும் போது சாய்பாபா சொல்லியிருக்கிறார். தனது முட்டாள் பக்தர்கள் குறித்து அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் சாய்பாபா.

அவரது இறப்புக்குப் பிறகு அப்படி விளம்பரப்படுத்தலுக்கு தேவை இல்லாமலேயே அவரது உறவினர்களின் சொத்துச் சண்டை அந்த மோசடி விவகாரங்களை தெருவில் இழுத்து விட ஆரம்பித்திருக்கின்றன. காவிச் சட்டையும் கொஞ்சம் கண்கட்டு வித்தைகளையும் காண்பித்தால் ஒரு தரகு முதலாளிக்கு இணையாக சுருட்ட முடியும் என்று சாய்பாபா நிரூபித்திருக்கிறார்.

வாரிசுரிமைச் சண்டைகளுக்காக உடன்பிறந்தோரையும் கொல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று முகலாய மன்னர்களை கேலி செய்யும் சங்கபரிவாரத்தினருக்கு ஆதரங்களோடு வருகிறார்கள் இந்து கார்ப்பரேட் சாமியார்கள்.

– பண்பரசு

மேலும் படிக்க