privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்

நீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்

-

என் பார்வையில் வினவு – 27 : திப்பு

நான் பொதுவுடமையாளன் அல்ல. ஆனாலும் மாணவப் பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றியதில் இருந்தே பொதுவுடைமை கொள்கைகளின் பால் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வருகிறது. சாண்டில்யனின் கடல்புறாவும் சுஜாதாவின் நைலான் கயிறும் அதி அற்புத இலக்கியங்களாக மதி மயங்கி கிடந்த அந்த இளமை காலத்தில்தான் “தாய்” புதினமும் “அதிகாலையின் அமைதியில்” போர் புதினமும் இலக்கியம் என்றால் என்னவென உணர்த்தின.

உழைக்கும் மக்கள்.
விரிவாக மக்களை சென்றடையலாம்.

தொடர்ந்து ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் தேடித் தேடி படிக்கலானேன். “இனிப்பும் கரிப்பும்” எழுதிய ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் என ஆபாச இலக்கியம் எழுதும் அளவுக்கு சீரழிந்ததற்கு அவர் இடதுசாரி கொள்கைகளிலிருந்து விலகி சென்றதே காரணம் என உணர்ந்தபோது அக்கொள்கைகளின் மீதான மதிப்பு கூடியது. இப்படியாக தேடிப் படித்ததில் புதிய ஜனநாயகமும் புதிய கலாச்சாரமும் அறிமுகமாகி அவற்றின் வழியே வினவை அறிந்து கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்து அவ்வப்போது பின்னூட்டங்கள் எழுதி நமக்கும் எழுத முடிகிறதே என்று உணர வைத்த,எழுத வாய்ப்பளித்த வினவுக்கு நன்றியோடு இப்போது இந்த “பார்வை” யை எழுதுகிறேன்.

வினவு தளம் இன்னும் விரிவாக மக்களை சென்றடைய வேண்டும்.இளவரசன் சாவு குறித்த செய்திகள் வெளியானபோது பார்வையாளர்கள் எண்ணிக்கை 50,000 ஐ தொட்டதாக தெரிவித்திருக்கிறீர்கள். இன்னும் பல இலட்சம், சில கோடிகள் என அது உயர வேண்டும். அத்தனை பேருக்கு இணைய வசதி இருக்காதே என கேள்வி எழலாம். திராவிட இயக்கம் வளர்ந்து வந்த காலத்தில் படிப்பகங்கள் நடத்தி அவர்கள் ஏடுகளையும் நூல்களையும் மக்கள் இலவசமாக படிக்க வழங்கினார்கள். அதே போன்று ஊருக்கு ஊர் வினவு வாசகர் வட்டம் உருவாக்கி அதன் மூலம் இலவச “வினவு படிப்பகம்” நடத்தலாம். இன்னும் விரிவாக மக்களை சென்றடையலாம். அப்படி ஒரு முயற்சி நடக்குமேயானால் என்னாலான உதவிகளை செய்ய அணியமாக இருக்கிறேன்.

இந்த கனவு நனவானால் தமிழகம் பாரிய சமூக மாற்றம் காணும் எனபது உறுதி. ஆம், தோழர்களே இதற்கு இளவரசனையே ஆதாரமாக சொல்ல முடியும்.

இளவரசன் மட்டும் வினவு போன்ற இணைய தளங்களை படிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருப்பாரேயானால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்க மாட்டார். இந்திய சமூகத்தை பீடித்திருக்கும் நோயான கேடு கெட்ட வர்ணாசிரம சாதிய கொடுங்கோன்மைதான் தனது காதல் வாழ்க்கையையும் காவு வாங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருந்திருப்பார். இது தனக்கு மட்டுமே நேர்ந்த துன்பம் என கழிவிரக்கம் கொண்டு, அடுத்த பிறவி என்ற பார்ப்பனிய மூடத்தனத்தை நம்பி அதில் தனது காதல் மனைவியையும் பெற்றோரையும் அடைந்து விடலாம் என அப்பாவித்தனமாக நம்பி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். மாறாக இந்த சாதிய கொடுங்கோன்மைக்கு எதிராக போராடுவதன் மூலமாக, அப்படி போராடி வருபவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமே தனது காதல் வாழ்க்கையையும் தக்க வைக்க முடியும் என்று தெளிவடைந்திருப்பார்.

தனியார் முதலாளிகளின் இலாப வெறியால் வேலையிழக்கும் IT தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம், இது தனக்கு மட்டும் நேர்ந்த துன்பமாக கருதுவதும், சங்கமாக திரண்டு போராடாததுமே காரணம் என வினவு ஒரு கட்டுரையில் மிக தெளிவாக விளக்கியிருந்தது.

வினவின் எழுத்து நடை, சொற்கள் துள்ளி விளையாடும் எள்ளல் மொழி,பேசும் பொருளின் தன்மைக்கு ஏற்ப கடும் சொற்கள் என அருமையாக உள்ளது. மோடியை கொலைகாரன் என்றோ, மன்மோகனை ஏகாதிபத்திய எடுபிடி என்று சொல்வதிலோ என்ன தவறு இருக்க முடியும். அது உண்மைதானே. தீயோருக்கு உண்மை கசக்கவே செய்யும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

நிற்க. குறைகளை சொல்லாமல் நிறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் அது சரியல்லவே.

இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் குடி கெடுப்பார் இல்லானும் கெடும் .. அல்லவா.

தாராளமயமாக்கல் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தாய்மொழி கல்வி, அருகமை பள்ளி, கல்வி கொள்ளையர்கள் எதிர்ப்பு, தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போராட்டம் என அனைத்திலும் சரியான நிலைப்பாட்டில் இருந்து எழுதும் வினவு அண்மைகாலமாக ஈழப்பிரச்னையில் சற்று தடுமாறுகிறது. ஈழத்தமிழர்களின் தன்னுரிமையை ஏற்கும் அதே சமயம் தனி ஈழம்தான் தீர்வு என்பதை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறீர்கள்.சொல்லொண்ணா துன்பங்களை, எழுதி மாளாத இன்னல்களை சிங்கள பேரினவாதத்தால் அனுபவித்த, அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் இவ்வளவு பெரிய இன அழிப்புக்கும் பிறகும் ஒன்றுபட்ட இலங்கையில் சேர்ந்து வாழ விரும்புவார்களா. அப்படியே சிறுவீத மக்கள் விரும்பினாலும் தனி ஈழம்தான் சரியான தீர்வு என எடுத்து சொல்லி அவர்களிடமும் ஈழ விடுதலைக்கு ஆதரவு திரட்ட வேண்டியது நம்முடையே கடமை இல்லையா. இந்த நிலைப்பாடு உங்களை ஈழ விடுதலையின் எதிரிகளாக சித்தரிக்க உதவும் என்பதை நீங்கள் உணரவில்லையா.

அடுத்து, ஆங்கில மற்றும் வட மொழி சொற்களை உங்கள் எழுத்துக்களில் தாராளமாக பயன்படுத்துகிறீர்கள். இதனை தவிர்த்து தூய தமிழில் எழுத வேண்டுமென கோருகிறேன். மொழித்தூய்மை கோருவது வெறுமனே மொழியின் மீது கொண்ட காதலினால் மட்டும் அல்ல.

வடமொழியின் மூலமாக தமிழ் சமூகத்தை சீரழிக்கும் ஜோசியம், அதிர்ஷ்டம், வாஸ்து, அஷ்டமி, நவமி போன்ற மூடத்தனங்களை வேரறுக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியே மொழித்தூய்மை என்பதையும் வடமொழி என்பதே இந்திய மொழிகள்,அவற்றை பேசும் இனங்களின் மீதான பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கான கருவி என்பதையும் கருவறை நுழைவு போராட்டம் நடத்திய, தில்லை நடராசர் கோவிலில் தமிழில் வழிபடும் உரிமைக்காக போராடிய உங்களுக்கு நான் விளக்க முயன்றால் அது கொல்லர் தெருவில் ஊசி விற்க முயலும் மூடத்தனம் ஆகி விடும்.

ஆங்கிலமும் அப்படித்தானே. காலனிய அடிமைத்தனத்தின் நீட்சியாக ஏகாதிபத்திய அடிமை மனோபாவத்தை உருவாக்கும் கருவி இல்லையா அது. ஆகவே இந்த ஒடுக்குமுறை கருவிகளின் பிடியில் சிக்காமல் அழகிய தமிழை பயன்படுத்தலாமே. கனியிருப்ப காய் கவர்ந்தற்று இல்லையா.

வினவு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு

நட்புடன்
– திப்பு

என் பார்வையில் வினவு – 28 : சித்ரகுப்தன்

ன்னுடன் பணியாற்றும் மற்றும் தொழிற்சங்கத்தில் உடன் பொறுப்பில் இருக்கும் தோழர் ஒருவரின் மூலம் ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்பாக பு.ஜ வும், பு.க வும் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாதந்தோறும் எனக்கு அந்த இதழ்கள் கிடைத்துவிடும். அவற்றை துவக்கத்தில் முழுமையாக வாசிக்காமல் ஒன்றிரண்டு கட்டுரைகளை மட்டும் வாசித்துவிட்டு இருந்து விட்டாலும் கூட சுற்றுப்புற அரசியலை தெரிந்து கொள்ள அவை பெரிதும் உதவியிருக்கிறது.

தொடர்ந்து இந்திய பாராளுமன்றத்தை, தமிழக சட்டமன்றத்தை ஆள்பவர்கள் மாறினாலும், தனியார் மயம், தொழிலாளர் விரோத போக்கு என்பவை தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைகளாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில்தான் 2001-ல் தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 17 நாட்கள் சிறைவாசம், அதனை தொடர்ந்து போராட்டத்தை கையிலெடுத்த அரசு ஊழியர்களில் ஒரே நாளில் லட்சக்கணக்கில் அரசு பணியாளர்கள் வேலை நீக்கம். அந்த சமயத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்த விதத்தை விமர்சனம் செய்து எதனால் தோற்றார்கள் என ஒரு கட்டுரை எழுதி அனுப்பி பு.ஜ விலா அல்லது பு.க விலா என தெரியவில்லை பிரசுரம் ஆகியது.

பின்னர் மின்னஞ்சல், இணையதளம் பார்ப்பது போன்ற வசதிகள் வந்து, வீட்டிற்கென்று சொந்தமாக கணணி வாங்கி, அதற்கு பிறகு இணையதள இணைப்பு பெற்ற பிறகு ஒன்றிரண்டு வலை தளங்களை பார்க்க நேர்ந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் வினவு தளம் பார்த்து, அதிலுள்ள கட்டுரைகளை படித்த போது, இதில் ஏதாவது எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி, வினவு ஆசிரியர் குழுமத்துடன் தொலைபேசியில் பேசி, நான் பணிபுரியும் துறை சார்ந்து ஒரு கட்டுரை அனுப்பினேன். உடனே ஒன்றிரண்டு தினங்களில் அது பதிவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து தி இந்து, பிரன்ட்லயன் போன்ற பத்திரிகைகளில் வருகிற தொழிலாளர் சார்ந்த, தாராளமய சீரழிவு சார்ந்த, பொது நலன் சார்ந்த கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வினவிற்கு அனுப்பலாமே என தோன்றியது. அதற்கு முன்னமே சிலர் வினவில் அந்த பணியை செய்து கொண்டிருந்தார்கள் என்ற போதிலும், வேதாந்தா, விவசாயிகள் தற்கொலை, சிதம்பரத்தின் காவி பாசம் போன்ற கட்டுரைகள் ஒவ்வொன்று ஆங்கிலத்தில் பார்த்தவுடன் வினவு ஆசிரியர் குழுமத்துடன் தொடர்பு கொள்வேன், இதை தமிழாக்கம் செய்யலாமா என்பேன், அந்த கட்டுரையின் சாராம்சம் குறித்து சிறிதாக விளக்கியவுடனே எனக்கு அனுமதி கிடைக்கும். இந்த பணி வினவோடு எனக்கு சற்று நெருக்கத்தை ஏற்படுத்தியது. பல நல்ல தோழர்களின் நட்பு கிடைத்தது.

தாரளமயத்தின் விளைவுகள், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, வால்மார்ட், வால் தெரு போராட்டம், நோக்கியா போன்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழில்துறைகளில் தொழிலாளர் போராட்டம், மாருதி போராட்டம், அண்ணா ஹசாரேயை அம்பலப்படுத்தியது போன்ற கட்டுரைகளில் செவிட்டில் அறைந்த மாதிரி நிதர்சனம் புலப்பட்டிருக்கிறது.

சாதிய மோதல்களுக்கு பின்னாலும் வசதியில் உயர்ந்தவர் – தாழ்ந்தவர், முதலாளித்துவம் – கூலிக்காரர்கள் என்பதுதான் இருக்கிறது என்று நான் அவற்றைப் பார்க்கிறேன். எனவே அடிப்படையான தாராளமயம், புதிய பொருளாதார கொள்கை ஆகியவை தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதில் மிகுந்த உடன்பாடு உண்டு.

அந்த வகையில் வினவு கடந்த 6 ஆண்டுகளில் நல்ல பல கட்டுரைகளை தந்திருக்கிறது. எனது பார்வையில் வினவு என எழுதிய பலரும் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல பல பொழுது போக்கு சமாச்சாரங்கள், ஆபாசம், வன்முறை, பாலியல் வக்கிரங்கள் என பெரும்பான்மை ஊடகங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலிலும், சமூக வலைதளம் என்பதில் பொது பார்வையோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதில் வினவு முதன்மையாக இருக்கிறது. பலர் விரும்பியும், விரும்பாமலும் ஆனால் இணையத்தில் நுழையும் ஒவ்வொரு முறையும் ஒரு முறை சொடுக்கிவிட்டு செல்லும் தளமாக வினவு மாறிவிட்டது.

வினவில் தொடர்ந்த மொழியாக்க கட்டுரைகளின் வாயிலாக கீழைக்காற்று பதிப்பகத்தின் நட்பு கிடைத்ததோடு, மீண்டும் தொழிலாளர் வர்க்கம் என்ற புத்தகத்தில் எனது இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியதோடு, பகத்சிங்கின் வெளிவராத சிறை ஆவணங்களை மொழியாக்கம் செய்து புத்தகமாகவும் வெளி வந்தது. அதனை தொடர்ந்து விடியல் பதிப்பகத்தில் அவுட் லுக் ஆங்கில இதழில் வெளியான அருந்ததி ராயின் நெடிய கட்டுரை எனது மொழியாக்கத்தில் முதலாளியியம் ஒரு பேய்க்கதை என்ற புத்தகமாக வெளிவந்தது. இவையெல்லாம் வினவின் தொடர்பால் எனக்கு கிடைத்த சிறிய அங்கீகாரங்கள்.

தோழர் செங்கொடி கூறியதைப் போல முதலாளித்துவம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றால் மறுகாலனியாக்கம் தொடர்பான நிகழ்வுகளுக்கெதிரான வினவின் போராட்டம் தொடர வேண்டும், தொடரும் என்பதில் அய்யமில்லை. பல வாசகர்களோடு இணைந்து எனது வாழ்த்தையும் பதிவு செய்து கொள்கிறேன்.

– சித்ரகுப்தன்