முகப்புசெய்திநீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்

நீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்

-

என் பார்வையில் வினவு – 27 : திப்பு

நான் பொதுவுடமையாளன் அல்ல. ஆனாலும் மாணவப் பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றியதில் இருந்தே பொதுவுடைமை கொள்கைகளின் பால் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்து வருகிறது. சாண்டில்யனின் கடல்புறாவும் சுஜாதாவின் நைலான் கயிறும் அதி அற்புத இலக்கியங்களாக மதி மயங்கி கிடந்த அந்த இளமை காலத்தில்தான் “தாய்” புதினமும் “அதிகாலையின் அமைதியில்” போர் புதினமும் இலக்கியம் என்றால் என்னவென உணர்த்தின.

உழைக்கும் மக்கள்.
விரிவாக மக்களை சென்றடையலாம்.

தொடர்ந்து ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் தேடித் தேடி படிக்கலானேன். “இனிப்பும் கரிப்பும்” எழுதிய ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் என ஆபாச இலக்கியம் எழுதும் அளவுக்கு சீரழிந்ததற்கு அவர் இடதுசாரி கொள்கைகளிலிருந்து விலகி சென்றதே காரணம் என உணர்ந்தபோது அக்கொள்கைகளின் மீதான மதிப்பு கூடியது. இப்படியாக தேடிப் படித்ததில் புதிய ஜனநாயகமும் புதிய கலாச்சாரமும் அறிமுகமாகி அவற்றின் வழியே வினவை அறிந்து கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்து அவ்வப்போது பின்னூட்டங்கள் எழுதி நமக்கும் எழுத முடிகிறதே என்று உணர வைத்த,எழுத வாய்ப்பளித்த வினவுக்கு நன்றியோடு இப்போது இந்த “பார்வை” யை எழுதுகிறேன்.

வினவு தளம் இன்னும் விரிவாக மக்களை சென்றடைய வேண்டும்.இளவரசன் சாவு குறித்த செய்திகள் வெளியானபோது பார்வையாளர்கள் எண்ணிக்கை 50,000 ஐ தொட்டதாக தெரிவித்திருக்கிறீர்கள். இன்னும் பல இலட்சம், சில கோடிகள் என அது உயர வேண்டும். அத்தனை பேருக்கு இணைய வசதி இருக்காதே என கேள்வி எழலாம். திராவிட இயக்கம் வளர்ந்து வந்த காலத்தில் படிப்பகங்கள் நடத்தி அவர்கள் ஏடுகளையும் நூல்களையும் மக்கள் இலவசமாக படிக்க வழங்கினார்கள். அதே போன்று ஊருக்கு ஊர் வினவு வாசகர் வட்டம் உருவாக்கி அதன் மூலம் இலவச “வினவு படிப்பகம்” நடத்தலாம். இன்னும் விரிவாக மக்களை சென்றடையலாம். அப்படி ஒரு முயற்சி நடக்குமேயானால் என்னாலான உதவிகளை செய்ய அணியமாக இருக்கிறேன்.

இந்த கனவு நனவானால் தமிழகம் பாரிய சமூக மாற்றம் காணும் எனபது உறுதி. ஆம், தோழர்களே இதற்கு இளவரசனையே ஆதாரமாக சொல்ல முடியும்.

இளவரசன் மட்டும் வினவு போன்ற இணைய தளங்களை படிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருப்பாரேயானால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்க மாட்டார். இந்திய சமூகத்தை பீடித்திருக்கும் நோயான கேடு கெட்ட வர்ணாசிரம சாதிய கொடுங்கோன்மைதான் தனது காதல் வாழ்க்கையையும் காவு வாங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருந்திருப்பார். இது தனக்கு மட்டுமே நேர்ந்த துன்பம் என கழிவிரக்கம் கொண்டு, அடுத்த பிறவி என்ற பார்ப்பனிய மூடத்தனத்தை நம்பி அதில் தனது காதல் மனைவியையும் பெற்றோரையும் அடைந்து விடலாம் என அப்பாவித்தனமாக நம்பி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். மாறாக இந்த சாதிய கொடுங்கோன்மைக்கு எதிராக போராடுவதன் மூலமாக, அப்படி போராடி வருபவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமே தனது காதல் வாழ்க்கையையும் தக்க வைக்க முடியும் என்று தெளிவடைந்திருப்பார்.

தனியார் முதலாளிகளின் இலாப வெறியால் வேலையிழக்கும் IT தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம், இது தனக்கு மட்டும் நேர்ந்த துன்பமாக கருதுவதும், சங்கமாக திரண்டு போராடாததுமே காரணம் என வினவு ஒரு கட்டுரையில் மிக தெளிவாக விளக்கியிருந்தது.

வினவின் எழுத்து நடை, சொற்கள் துள்ளி விளையாடும் எள்ளல் மொழி,பேசும் பொருளின் தன்மைக்கு ஏற்ப கடும் சொற்கள் என அருமையாக உள்ளது. மோடியை கொலைகாரன் என்றோ, மன்மோகனை ஏகாதிபத்திய எடுபிடி என்று சொல்வதிலோ என்ன தவறு இருக்க முடியும். அது உண்மைதானே. தீயோருக்கு உண்மை கசக்கவே செய்யும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

நிற்க. குறைகளை சொல்லாமல் நிறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் அது சரியல்லவே.

இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் குடி கெடுப்பார் இல்லானும் கெடும் .. அல்லவா.

தாராளமயமாக்கல் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தாய்மொழி கல்வி, அருகமை பள்ளி, கல்வி கொள்ளையர்கள் எதிர்ப்பு, தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போராட்டம் என அனைத்திலும் சரியான நிலைப்பாட்டில் இருந்து எழுதும் வினவு அண்மைகாலமாக ஈழப்பிரச்னையில் சற்று தடுமாறுகிறது. ஈழத்தமிழர்களின் தன்னுரிமையை ஏற்கும் அதே சமயம் தனி ஈழம்தான் தீர்வு என்பதை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறீர்கள்.சொல்லொண்ணா துன்பங்களை, எழுதி மாளாத இன்னல்களை சிங்கள பேரினவாதத்தால் அனுபவித்த, அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் இவ்வளவு பெரிய இன அழிப்புக்கும் பிறகும் ஒன்றுபட்ட இலங்கையில் சேர்ந்து வாழ விரும்புவார்களா. அப்படியே சிறுவீத மக்கள் விரும்பினாலும் தனி ஈழம்தான் சரியான தீர்வு என எடுத்து சொல்லி அவர்களிடமும் ஈழ விடுதலைக்கு ஆதரவு திரட்ட வேண்டியது நம்முடையே கடமை இல்லையா. இந்த நிலைப்பாடு உங்களை ஈழ விடுதலையின் எதிரிகளாக சித்தரிக்க உதவும் என்பதை நீங்கள் உணரவில்லையா.

அடுத்து, ஆங்கில மற்றும் வட மொழி சொற்களை உங்கள் எழுத்துக்களில் தாராளமாக பயன்படுத்துகிறீர்கள். இதனை தவிர்த்து தூய தமிழில் எழுத வேண்டுமென கோருகிறேன். மொழித்தூய்மை கோருவது வெறுமனே மொழியின் மீது கொண்ட காதலினால் மட்டும் அல்ல.

வடமொழியின் மூலமாக தமிழ் சமூகத்தை சீரழிக்கும் ஜோசியம், அதிர்ஷ்டம், வாஸ்து, அஷ்டமி, நவமி போன்ற மூடத்தனங்களை வேரறுக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியே மொழித்தூய்மை என்பதையும் வடமொழி என்பதே இந்திய மொழிகள்,அவற்றை பேசும் இனங்களின் மீதான பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கான கருவி என்பதையும் கருவறை நுழைவு போராட்டம் நடத்திய, தில்லை நடராசர் கோவிலில் தமிழில் வழிபடும் உரிமைக்காக போராடிய உங்களுக்கு நான் விளக்க முயன்றால் அது கொல்லர் தெருவில் ஊசி விற்க முயலும் மூடத்தனம் ஆகி விடும்.

ஆங்கிலமும் அப்படித்தானே. காலனிய அடிமைத்தனத்தின் நீட்சியாக ஏகாதிபத்திய அடிமை மனோபாவத்தை உருவாக்கும் கருவி இல்லையா அது. ஆகவே இந்த ஒடுக்குமுறை கருவிகளின் பிடியில் சிக்காமல் அழகிய தமிழை பயன்படுத்தலாமே. கனியிருப்ப காய் கவர்ந்தற்று இல்லையா.

வினவு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு

நட்புடன்
– திப்பு

என் பார்வையில் வினவு – 28 : சித்ரகுப்தன்

ன்னுடன் பணியாற்றும் மற்றும் தொழிற்சங்கத்தில் உடன் பொறுப்பில் இருக்கும் தோழர் ஒருவரின் மூலம் ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்பாக பு.ஜ வும், பு.க வும் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாதந்தோறும் எனக்கு அந்த இதழ்கள் கிடைத்துவிடும். அவற்றை துவக்கத்தில் முழுமையாக வாசிக்காமல் ஒன்றிரண்டு கட்டுரைகளை மட்டும் வாசித்துவிட்டு இருந்து விட்டாலும் கூட சுற்றுப்புற அரசியலை தெரிந்து கொள்ள அவை பெரிதும் உதவியிருக்கிறது.

தொடர்ந்து இந்திய பாராளுமன்றத்தை, தமிழக சட்டமன்றத்தை ஆள்பவர்கள் மாறினாலும், தனியார் மயம், தொழிலாளர் விரோத போக்கு என்பவை தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைகளாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில்தான் 2001-ல் தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 17 நாட்கள் சிறைவாசம், அதனை தொடர்ந்து போராட்டத்தை கையிலெடுத்த அரசு ஊழியர்களில் ஒரே நாளில் லட்சக்கணக்கில் அரசு பணியாளர்கள் வேலை நீக்கம். அந்த சமயத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்த விதத்தை விமர்சனம் செய்து எதனால் தோற்றார்கள் என ஒரு கட்டுரை எழுதி அனுப்பி பு.ஜ விலா அல்லது பு.க விலா என தெரியவில்லை பிரசுரம் ஆகியது.

பின்னர் மின்னஞ்சல், இணையதளம் பார்ப்பது போன்ற வசதிகள் வந்து, வீட்டிற்கென்று சொந்தமாக கணணி வாங்கி, அதற்கு பிறகு இணையதள இணைப்பு பெற்ற பிறகு ஒன்றிரண்டு வலை தளங்களை பார்க்க நேர்ந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் வினவு தளம் பார்த்து, அதிலுள்ள கட்டுரைகளை படித்த போது, இதில் ஏதாவது எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி, வினவு ஆசிரியர் குழுமத்துடன் தொலைபேசியில் பேசி, நான் பணிபுரியும் துறை சார்ந்து ஒரு கட்டுரை அனுப்பினேன். உடனே ஒன்றிரண்டு தினங்களில் அது பதிவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து தி இந்து, பிரன்ட்லயன் போன்ற பத்திரிகைகளில் வருகிற தொழிலாளர் சார்ந்த, தாராளமய சீரழிவு சார்ந்த, பொது நலன் சார்ந்த கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வினவிற்கு அனுப்பலாமே என தோன்றியது. அதற்கு முன்னமே சிலர் வினவில் அந்த பணியை செய்து கொண்டிருந்தார்கள் என்ற போதிலும், வேதாந்தா, விவசாயிகள் தற்கொலை, சிதம்பரத்தின் காவி பாசம் போன்ற கட்டுரைகள் ஒவ்வொன்று ஆங்கிலத்தில் பார்த்தவுடன் வினவு ஆசிரியர் குழுமத்துடன் தொடர்பு கொள்வேன், இதை தமிழாக்கம் செய்யலாமா என்பேன், அந்த கட்டுரையின் சாராம்சம் குறித்து சிறிதாக விளக்கியவுடனே எனக்கு அனுமதி கிடைக்கும். இந்த பணி வினவோடு எனக்கு சற்று நெருக்கத்தை ஏற்படுத்தியது. பல நல்ல தோழர்களின் நட்பு கிடைத்தது.

தாரளமயத்தின் விளைவுகள், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, வால்மார்ட், வால் தெரு போராட்டம், நோக்கியா போன்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழில்துறைகளில் தொழிலாளர் போராட்டம், மாருதி போராட்டம், அண்ணா ஹசாரேயை அம்பலப்படுத்தியது போன்ற கட்டுரைகளில் செவிட்டில் அறைந்த மாதிரி நிதர்சனம் புலப்பட்டிருக்கிறது.

சாதிய மோதல்களுக்கு பின்னாலும் வசதியில் உயர்ந்தவர் – தாழ்ந்தவர், முதலாளித்துவம் – கூலிக்காரர்கள் என்பதுதான் இருக்கிறது என்று நான் அவற்றைப் பார்க்கிறேன். எனவே அடிப்படையான தாராளமயம், புதிய பொருளாதார கொள்கை ஆகியவை தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதில் மிகுந்த உடன்பாடு உண்டு.

அந்த வகையில் வினவு கடந்த 6 ஆண்டுகளில் நல்ல பல கட்டுரைகளை தந்திருக்கிறது. எனது பார்வையில் வினவு என எழுதிய பலரும் குறிப்பிட்டுச் சொன்னதைப் போல பல பொழுது போக்கு சமாச்சாரங்கள், ஆபாசம், வன்முறை, பாலியல் வக்கிரங்கள் என பெரும்பான்மை ஊடகங்கள் மாறிவிட்ட இன்றைய சூழலிலும், சமூக வலைதளம் என்பதில் பொது பார்வையோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதில் வினவு முதன்மையாக இருக்கிறது. பலர் விரும்பியும், விரும்பாமலும் ஆனால் இணையத்தில் நுழையும் ஒவ்வொரு முறையும் ஒரு முறை சொடுக்கிவிட்டு செல்லும் தளமாக வினவு மாறிவிட்டது.

வினவில் தொடர்ந்த மொழியாக்க கட்டுரைகளின் வாயிலாக கீழைக்காற்று பதிப்பகத்தின் நட்பு கிடைத்ததோடு, மீண்டும் தொழிலாளர் வர்க்கம் என்ற புத்தகத்தில் எனது இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியதோடு, பகத்சிங்கின் வெளிவராத சிறை ஆவணங்களை மொழியாக்கம் செய்து புத்தகமாகவும் வெளி வந்தது. அதனை தொடர்ந்து விடியல் பதிப்பகத்தில் அவுட் லுக் ஆங்கில இதழில் வெளியான அருந்ததி ராயின் நெடிய கட்டுரை எனது மொழியாக்கத்தில் முதலாளியியம் ஒரு பேய்க்கதை என்ற புத்தகமாக வெளிவந்தது. இவையெல்லாம் வினவின் தொடர்பால் எனக்கு கிடைத்த சிறிய அங்கீகாரங்கள்.

தோழர் செங்கொடி கூறியதைப் போல முதலாளித்துவம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றால் மறுகாலனியாக்கம் தொடர்பான நிகழ்வுகளுக்கெதிரான வினவின் போராட்டம் தொடர வேண்டும், தொடரும் என்பதில் அய்யமில்லை. பல வாசகர்களோடு இணைந்து எனது வாழ்த்தையும் பதிவு செய்து கொள்கிறேன்.

– சித்ரகுப்தன்

 1. தோழர் திப்புவின் கருத்துக்களுக்கு பொதுவாக உடன்படுகிறேன்! ஒன்றே ஒன்றில் மட்டும் வேறுபடுகிறேன்! தனித்தமிழ் என்று காலனஞ்சென்ற பாவலரேறு பெருஞ்சித்திறனார் பலர் முயன்றுகொண்டுதான் இருக்கிரார்கள்! ஆனால் பாமரர்க்கு கருத்தை புரியவைக்க, அவர்களின் அன்றாட வழக்கு மொழியில் அல்லாது பண்டித மொழியில் பகர்ந்தால் , ஆரியம்போலவே அன்னியப்பட்டுவிடுவோம்! குப்பாயமும், குவிய ஆடியும் நாம் தின்மும் பயன்படுத்தினாலும் அவை மேலங்கியும், கண்ணாடியும்தான் என்று எத்துனை பெருக்கு புரியும்! நமதுநோக்கம் கருத்துக்களை பதியமிடுவதே! மக்களைத்தேடி, அவர்களின் வட்டார மொழியிலேயே நாம் பிரச்சாரம் செய்யவேண்டும்! ஆனால் அறிவைத்தேட ஆங்கிலத்தையும் மற்ற முன்னேறியநாட்டு மொழியையும் கற்க வேண்டும்! பொதுவாக, மொழி எந்தக்காலத்திலும் முன்னேற்றத்திற்கு தடையாகலாகாது!

  • நானும் உங்களோடு உடன்படுகிறேன்.

   இந்த அரசு, மக்கள் கையில் அதாவது கம்யூனிஸ்டுகள் கையில் இருந்தால் அவரவர் தாய்மொழியை வளர்ப்பது மிக எளிதாகவும், அர்த்தமாகவம் இருக்கும். இப்பொழுதைய நோக்கம் அரசை கைபற்றுவது மட்டுமே முக்கியமாக இருக்க முடியும்.

   பிறகு வறுமையில் வாடும் ஒருவனுக்கு உணவுதான் முக்கியமாக இருக்குமே தவிர மொழியல்ல!

   • புரட்சி நடந்து பொதுவுடமையாளர்கள் ஆட்சியை கைப்பற்றும் வரை காத்திருக்க சொல்வது சரி அல்ல தோழரே.இயேசு வருகிறார் அதுவரை வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருங்கள் என்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு.ஒரு அநீதியை கண்டால் நிலவும் அமைப்பிலேயே அதை எதிர்த்து போராடுவதும் முடிந்தால் வெற்றி கொள்வதும்தானே ஒரு பொதுவுடமையாளருக்கு அழகு.புரட்சி நடக்கும்வரை இரட்டை குவளையையும் சிரட்டையையும் சகித்துக் கொள்ளமுடியாது.அதே போன்றுதான் அன்னைத்தமிழை அனாதையாக விட முடியாது.

    • தோழர் திப்பு அவர்களுக்கு வணக்கம். ம.க.இ.க தனி ஈழத்தை எப்போது எதிர்த்தது, எதிலிருந்து இந்த முடிவுக்கு வந்தீர்கள் ? பார்ப்பன ஜெயா ம்.. என்றாலே பம்மிப்பதுங்கும் தமிழ்தேசிய வீரர்கள் தான் இந்த பொய்யை பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். ஈழப்பிரச்சினையில் ம.க.இ.க வைப் பற்றி அவர்கள் எழுதுவதிலும் பேசுவதிலும் அவதூறுகளைத் தவிர வேறு எந்த மண்ணும் இல்லை.

     தனி ஈழத்தை ம.க.இ.க தமிழ்தேசியவாதிகளின் கண்ணோட்டத்தில் ஆதரிக்கவில்லை என்பது உண்மை தான், அதற்காக ஆதரிக்கவே இல்லை என்பது தவறு. தமிழ்தேசியவாதிகளைப் போல ம.க.இ.க ஈழத்திற்காக பாசிச ஜெயாவிடமோ, பாசிச பா.ஜ.க விடமோ போய் நிற்கவில்லை (எல்லாமே பாசிசம்)அதைவிட முக்கியமானது பிரபாகரனின் பாசிசத்தை கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருவது. இப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழக இளைஞர்களுக்கும் இவர்கள் காட்டும் தவறான வழிமுறைகளை விமர்சிப்பதும், ஜெயா போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளை ஈழ ஆதரவாளர்களாக சித்தரிப்பதையும், சந்தர்ப்பத்திற்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பதாவத்தையும் கடுமையாக அம்பலப்படுத்துவது தான் தமிழ்தேசியவாதிகளுக்கு குடைச்சலாக இருக்கிறது.

     ஈழப்பிரச்சினையில் மட்டுமல்ல பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலும் தமிழ்தேசியவாதிகளின் இனவாத நிலைப்பாடுகளிலிருந்து ம.க.இ.க மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் வர்க்க ரீதியாக வேறுபடுகிறது, வேறுபட்டு நிற்பதோடல்லாமல் தமிழ்தேசியத்தின் வீரத்தையும் அவ்வப்போது திரை விலக்கி காட்டிவிடுகிறது, அது தான் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெரிய மானப்பிரச்சினையாக இருக்கிறது என்றும் கூட சொல்லலாம்.

     தமிழ்தேசியவாதிகளின் கண்ணோட்டம் குட்டி முதலாளித்துவ கண்ணோட்டம், ம.க.இ.க வோ அனைத்து பிரச்சினைகளிலும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தை முன்னிறுத்துகிறது. அதைத் தான், அந்தக் கண்ணோட்டத்தை தான் இவர்கள் கொலைவெறியுடன் எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியான விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது ம.க.இ.க வை ஈழ எதிரி என்று அவதூறு செய்கிறார்கள்.

     ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையோ,அவர்கள் தனி தேசமாக பிரிந்து செல்வதையோ ம.க.இ.க எப்போதும் எதிர்த்ததில்லை, ஆதரித்தே வந்திருக்கிறது. இது தொடர்பாக இம்மாத பு.ஜ வில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை இவ்வாறு முடிகிறது.

     ”இத்தகைய புரிதலோடு தமிழீழத்தை ம.க.இ.க., புதிய ஜனநாயகம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. முதலிய அமைப்புகள் எப்போதும் சமரசமின்றி, உறுதியாக ஆதரித்து வந்திருக்கின்றன. தமிழீழத்தை ஒருபோதும் ஏற்காத போலிக் கம்யூனிஸ்டு, காங்கிரசு, பா.ஜ.க., போன்றவற்றின் தா.பாண்டியன், இல.கணேசன், குமரி அனந்தன் போன்ற உள்ளூர்த் தலைவர்களையும் கூட ஈழ ஆதரவாளர்களாகக் கொண்டு உறவாடும் தமிழின வாதிகளோ, இதை ஏற்க மறுத்து புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள்.”

     தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !
     http://www.vinavu.com/2013/07/26/eelam-answer-to-criticisms/

     கட்டுரையை வாசித்துப்பாருங்கள். என்னுடைய வருத்தம் என்னவெனில் முப்பதாண்டுகளாக ம.க.இ.க வின் பத்திரிகைகளை வாசித்து வரும் நீங்களே இந்த அவதூறுகளை நம்பி கேள்வி எழுப்புகிறீர்கள் என்றால், நீண்ட நாள் வாசகரான உங்களையே இந்த பொய்களும் அவதூறுகளும் அசைத்து பார்த்திருக்கின்றன என்றால் புதிய வாசகர்களை இவை என்னவெல்லாம் செய்யும்.

     • உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் அடக்குமுறைகளுக்கான போராட்டங்கள் அங்கு உள்ள அரசியல் சுழ்நிலைகளைப்போருத்தே அமைகிறது……….. பிரபாகரன் நிறுவ நினைத்த ஈழம் இன்று உள்ள உலக சூழ்நிலையை புரிந்துகொண்ட பொருளாதாரவாதியின் கருத்தாக இரு திருக்கிறது…. அதன் அடிப்படையில் அவர் ஈழத்தை “தமிழீழத்தின் பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே” என்று அறிவிக்க காரணமாயிற்று …………… “சோசலிசத் தமிழீழத்தை நோக்கி” என்று புத்தகம் வெளியிட்ட புலிகள், திறந்த பொருளாதார கொள்கைக்கு மாற காரணம் தற்கால உலக நிகழ்வுகளை பொருளாதார ரீதியில் புரிந்துகொண்டதன் விளைவே…….. மார்க்சின் சீடர்களான லெனின் மற்றும் ஸ்டாலின் கட்டமைத்த கம்யுனிச ரஷ்ய பொருளாதாரம் சரிந்ததையும் , மாவோ நிறுவிய சீனம் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு மாறியதைம், இன்று கம்யுனிசத்தை பின்பற்றும் கியூபா உள்பட பால நாடுகள் திவாலாகும் நிலைக்கு வந்திருப்பதை கண்டதன் விளைவாக இந்த கொள்கை மற்றம் ஏற்பட்டது என்றுதான் கருத வேண்டிஉள்ளது ………… மத அடிப்படைவாதிகளுக்கும் உங்களுக்கும் தங்கள் கொள்கைகளை பின்பற்றுவதில் வேறுபாடு தோன்றவில்லை…………. மாற்றம் என்பது மாறாதது…….. எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஷரியத் சட்டத்தை தற்கால நிகழ்வுகளுக்கு ஏற்ப மாற மறுக்கிறார்களோ அதே போல்தான் நீங்களும் கம்யுனிச அடிப்படைவாதிகளாகவே இருப்பதால்தான் ஈழத்தை ஏற்கும் நீங்கள் பிரபாகரன் கூறும் பொருளாதார கொள்கையின் காரணமாக அவரையும் பாசிஸ்ட் என்று கூறுகிறீர்கள்…….. உங்களைப்பொருத்தவரை ஈழம் ஒரு பிரச்சினை அல்ல அங்கு அமைக்க விரும்பிய பொருளாதார கொள்கை மட்டுமே முக்கியம்…..

      • நல்லுச்சாமி ரெங்கசாமி அவர்களின் தரமான கருத்துகளுக்கு நன்றியும் பாராட்டுகளும். பிரபாகரனை பாசிச வாதி எனக் களங்கப் படுத்துவதில் இலங்கை அரசுக்கும் அதன் நட்பு சக்திகளுக்கும் மிகப் பெரும் தேவை உள்ளது. அப்படிப் பேசுவதன் மூலமே ஈழத் தமிழரின் நியாயமான உரிமைகளையும் இறையாண்மையையும் கொச்சைப்படுத்தி அவர்களின் நியாயமான உரிமைகளை மறுதலிக்க முடியும்.

       அத்தகைய சிறந்த செயற்பாட்டில் வினவு மட்டும் அல்ல பல பிரபல இடதுசாரித் தத்தவவாதிகளும் ஈடுபட்டு இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தும் அநியாயம் நடக்கிறது என்பதே உல்மை. ஈழத் தமிழ் மக்களை இராணுவ அடக்குமுறையில் வைத்தபடியே பேரினவாத சிங்களமும் அதனிடம் நலன் நாடும் பிற நாடுகளும் தமக்கு விருப்பமான தீர்வை திணித்துவிட முயலுகின்றன.

       திரு ரெங்கசாமி போன்றோர் அந்த மக்களின் விடியலுக்காக உரக்கக் குரல் கொடுத்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வினவும் கொஞ்சமாவது மாற வேண்டும்.

       • மாற வேண்டியது வினவு அல்ல மனோ, இருட்டு அறையிலிருக்கும் தமிழ்தேசியவாதிகள் தான் வெளிச்சத்திற்கு வர வேண்டும், மாற வேண்டும். பிரபாகரன் பாசிஸ்ட் இல்லை என்று உங்களுக்கு நீங்களே எண்ணி சமாதானப்பட்டுக்கொண்டால் அது உண்மையாகிவிடுமா ? வரலாற்றை நன்றாக அறிவு கொண்டு வாசியுங்கள். பிணங்களை நன்றாக கண்களைத் திறந்து பாருங்கள்.

       • அத்தகைய சிறந்த செயற்பாட்டில் வினவு மட்டும் அல்ல பல பிரபல இடதுசாரித் தத்தவவாதிகளும் ஈடுபட்டு இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தும்////இதுக்கு உங்களால ஆதாரம் தர முடியுமா? யார் இனப்படுகொலைய நியாய படுத்தினா?

      • தமிழ்தேசியவாதிகள் எல்லாம் இப்படித்தானா ? பா.ம.க ராமதாசையும் ஆதரிக்கிறீங்க ஈழத்தையும் ஆதரிக்கிறீங்க.

      • பிரபாகரன் கூறும் பொருளாதார கொள்கையின் காரணமாக அவரையும் பாசிஸ்ட் என்று கூறுகிறீர்கள்///அதற்காக மட்டும்தான் பாசிஷ்ட்டுன்னு சொல்றோமா?

  • நண்பரே,ஆங்கிலமே கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் சொல்லவில்லை.தேவையுடையோர் அதனை மொழியாக கற்றுக் கொள்ளலாம்.அனைவர் மீதும் அதனை கட்டாயமாக்கி திணிப்பதையும் அதையே பயிற்று மொழியாக கொள்வதையும்,அன்றாட பேச்சு வழக்கில் கூட வாட்டர் பாக்கெட்,பேலன்ஸ் எய்ட் ருபீஸ் குடுங்க என்ற அலட்டலையும்தான் ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் இது பற்றி வினவில் எழுதிய பின்னூட்டம் ஒன்று.

   https://www.vinavu.com/2010/07/23/vijayan/#comment-26900

   படித்து பாருங்கள்.குறிப்பு.அப்போதெல்லாம் எனக்கு கணினியில் தமிழை தட்டச்சு செய்ய தெரியாது.அதனால் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்.

   எடுத்துக்காட்டுக்கு ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு தேறி தொழில் நுட்ப பயிற்சி நிலையத்தில் [ITI] சேர்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.கருவிகள்,தொழில் நுட்பங்கள் குறித்த ஆங்கில சொற்களை அங்கேயே கற்றுக் கொள்ள முடியும்.சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மூன்றாம் வகுப்பே படித்த சிறுவர்கள் நமக்கே நினைவு வைத்திருக்க கடினமான ஆங்கில தொழில் நுட்ப சொற்களை பயன்படுத்துவதை பார்க்கலாம்.உண்மை நிலைமை இப்படி இருக்க அந்த மாணவனை சேக்சுபியரை மனப்பாடம் பண்ணி ஒப்பிக்க சொல்வதும் அப்படி சொல்ல தவறினால் பத்தாம் வகுப்பில் தோல்வியுற செய்வதும் கிறுக்குத்தனம் இல்லையா.ஆங்கிலத்தை கடக்க முடியாமல் கல்லூரி படிப்பை எட்ட முடியாமல் போன பல மாணவர்களை நீங்கள் மெய் வாழ்வில் பார்க்க முடியும்.இது அநீதி இல்லையா.

   மக்களுக்கு புரியாது என்பதெல்லாம் நமது அக்கறையின்மைக்கும் அலட்சிய போக்குக்கும் நியாயம் கற்பிக்கும் நொண்டி சாக்குகள்.முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் அபேட்சகர்களும் அங்கத்தினர்களும் மந்திரிகளும் சபாநாயகர்களும் நடமாடிய சென்னை கோட்டையில் இப்போது வேட்பாளர்களும் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பேரவை தலைவரும் மாண்புற வீற்றிருக்கிறார்களே மக்களுக்கு புரியாமல் அது எப்படி வந்தது. சாதாரண உழைக்கும் மக்கள் தமிழை நடைமுறை படுத்துவதில் நம்மை விட மேம்பட்டிருக்கிறார்கள்.இது பற்றி முன்னர் வினவில் எழுதியது.

   https://www.vinavu.com/2012/02/27/an-appeal-to-foodies/#comment-57707

   அவ்வளவு ஏன்.சாதி வெறியர்களான பா.ம.க.வின் மக்கள் தொலைக்காட்சி தமிழை எவ்வளவு சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்கிறது.மக்களின் எதிரிகளுக்கே இப்படி தாய்மொழி பற்று இருக்கும்போது மக்களின் தோழர்களான வினவு தோழர்கள் பின்தங்கலாமா.

 2. திப்புவின் கருத்தை ஆதரிக்கிரேன்! எந்த கருத்தையும் மக்கள் மொழியில் சொன்னால் புரிந்துகொள்வார்கள், அந்த நோக்கில் தான் எழுதுகின்றனர்.வினவை அனைத்து ஜீவிகளும் படிப்பதால் அனைவருக்கும் புரிந்த மொழி வழக்கு மொழிதானே..நன்றி.

 3. //இளவரசன் மட்டும் வினவு போன்ற இணைய தளங்களை படிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருப்பாரேயானால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்க மாட்டார். இந்திய சமூகத்தை பீடித்திருக்கும் நோயான கேடு கெட்ட வர்ணாசிரம சாதிய கொடுங்கோன்மைதான் தனது காதல் வாழ்க்கையையும் காவு வாங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருந்திருப்பார். இது தனக்கு மட்டுமே நேர்ந்த துன்பம் என கழிவிரக்கம் கொண்டு, அடுத்த பிறவி என்ற பார்ப்பனிய மூடத்தனத்தை நம்பி அதில் தனது காதல் மனைவியையும் பெற்றோரையும் அடைந்து விடலாம் என அப்பாவித்தனமாக நம்பி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்//

  இந்த விவகாரத்தில் எல்லோராலும் ஏற்க கூடிய மிக வலுவான கருத்து இது…. தலித், பாமக, குறிப்பிட்ட நபர்கள் என்று குறை சொல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயக் காரணியை கை காட்டும் கருத்து இது… முதல் வரி மட்டும் சற்று வீங்கிய வரி…

  //இளவரசன் மட்டும் வினவு போன்ற இணைய தளங்களை படிக்கும் பழக்கம் உடையவராக இருந்திருப்பாரேயானால்//

  இளவரசனுக்கு வினவு தேவைப்பட்டிருக்கவில்லை… ஆனால் வினவுக்கு ஒரு சில வாரங்கள் தளத்தை நிரப்ப இளவரசன் தேவைப்படுகிறார்….

  • // இந்திய சமூகத்தை பீடித்திருக்கும் நோயான கேடு கெட்ட வர்ணாசிரம சாதிய கொடுங்கோன்மைதான் தனது காதல் வாழ்க்கையையும் காவு வாங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டிருந்திருப்பார். //

   இளவரசன் புரிந்து கொள்ளவேயில்லையா..?!

   // இது தனக்கு மட்டுமே நேர்ந்த துன்பம் என கழிவிரக்கம் கொண்டு, அடுத்த பிறவி என்ற பார்ப்பனிய மூடத்தனத்தை நம்பி அதில் தனது காதல் மனைவியையும் பெற்றோரையும் அடைந்து விடலாம் என அப்பாவித்தனமாக நம்பி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்//

   அடுத்த பிறவி மீதுள்ள நம்பிக்கையால்தான் தற்கொலை செய்து கொண்டாரா..?!

   அவர் எதைப் புரிந்து கொள்ளவில்லை, ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதையெல்லாம் நீங்கள் நன்கு புரிந்து கொண்டு பேசுவதாக எனக்குத் தெரியவில்லை..

   • எனக்கு புரியவில்லையா,அம்பிக்கு தமிழ் தெரியும்தானே.இளவரசனின் இறுதி கடிதத்தின் இந்த வரிகளுக்கு என்ன பொருள் என கொஞ்சம் விளக்குங்களேன்.

    ”இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.”

    ”அடுத்து ஜென்மத்துல நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கணும்.”

    • இதை இளவரசனே வந்து விளக்கினாலும் உங்களுக்கு புரியாது..

     சுவனத்தின் நீரோடைகள் நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருப்பவர்களால், இந்துக்கள் மறுபிறவியை நம்பியே வாழ்வை அவசரமாக முடித்துக்கொள்கிறார்கள் என்றுதானே புரிந்து கொள்ள முடியும்..?!

     • இளவரசன்தான் ஏற்கனவே விளக்கி இருக்கிறாரே.அதன்படிதான் அடுத்த பிறவியில் தன காதல் மனைவியையும் பெற்றோரை பிள்ளைகளாகவும் அடைந்து விட முடியும் என்று நம்பி தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று அவரது இறுதி கடிதத்தை ஆதாரமாக காட்டி நான் சொல்கிறேன்.அப்படி இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் எப்படி என்று விளக்குவதுதான் நேர்மையான வாதம்.அதை விடுத்து அதெல்லாம் உனக்கு புரியாது என மட்டையடியாக ஒரே போடாக போடுவது என்ன வகை வாதம்.

       • // கருணாநிதி போல் தமிழ் ஆற்றல் கொண்ட பேச்சாளர் இந்த கணம் தமிழ் நாட்டில் இல்லை.. // – மனிதன்

        // கலைஞர் அளவுக்கு உயரும் கனவு எல்லாம் எனக்கு இல்லை. // – திப்பு

        // அதெல்லாம் சூத்திரர்களுக்குப் புரியாது என்கிறாரோ? // – பகத்

        உடன்பிறப்புகள் மத்தியில் வந்து குதித்துவிட்டேனோ என ஒரு ஐயம் வருகிறது..!!!

 4. //நிலைப்பாட்டில் இருந்து எழுதும் வினவு அண்மைகாலமாக ஈழப்பிரச்னையில் சற்று தடுமாறுகிறது. ஈழத்தமிழர்களின் தன்னுரிமையை ஏற்கும் அதே சமயம் தனி ஈழம்தான் தீர்வு என்பதை அந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறீர்கள்//

  I think Vinavu is clear. Creating boundaries between humans in name of religion,language is not supported by Marx.

  You start creating the boundaries and there is no end to it.

 5. தமிழ் தமிழ்நாடு தமிழ் தேசம் – என்று குண்டு சட்டியில் குதிரை தான் ஓட்ட முடியும்…
  கருணாநிதி தமிழை கையில் எடுத்து பதவி பெற்றார், புகழ் பெற்றார் என்றால் அவருக்கு உண்மையிலேயே தமிழ் ஆர்வமும் அறிவும் இருந்தது… கருணாநிதி போல் தமிழ் ஆற்றல் கொண்ட பேச்சாளர் இந்த கணம் தமிழ் நாட்டில் இல்லை..

  அவரை பார்த்து சூடு போடும் பூனைகள்

  “பிரின்ஸ் கஜேந்திர பாபு” என்று பெயரை பன் மொழியில் வைத்து கொண்டு பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் சேர்த்து விட்டு தமிழ் தமிழ் என்று கூவுவது முத்துக்குமரனுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்… இக்காலத்துக்கு ஒவ்வாது…

  சமச்சீர் முத்து குமரன் சொல்கிறார் தமிழன் ஜெர்மனி போறான், பிரான்ஸ் போறான், போன ஒரு வருடத்திலே அந்த மொழியை கற்கிறான் என்று… ஆங்கில அறிவு மட்டும் இல்லை என்றால் அவன் அந்த மொழிகளை கற்க முடியாது என தெரியாமல்… ஆங்கில வழியில் கற்கும் அறிவியல் மட்டும் அல்ல பிற மொழிகளும் கூட எளிதாக கற்க முடிகிறது எனபது தான் எதார்த்தம்…

  பல இலட்ச கிராம புற மாணவர்கள் டிகிரி பாடங்களில் மதிப்பெண் குறைந்தமைக்கு ஆங்கில அறிவு இல்லாததே காரணம் என்று கூறுவதை எண்ணி பாருங்கள்…

  பழங்கதை பேசி சுட்டிகள் கொடுத்து தமிழ் புராணம் பாடாமல், மொழி என்ற அளவிலே உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் குரலையும் நேசிக்க கற்றுக்கொள்…

  • பழைய சுட்டிகள் கொடுப்பது அந்த வாதங்களை மீண்டும் நேரத்தை செலவிட்டு எழுத வேண்டியதில்லை என்பதால்தான்.மேலும் அவை பொருத்தமானவையாக இருப்பதாலும்தான்.அந்த விவாதங்களில் குட்டுப்பட்ட நினைவு உங்களுக்கு வருகிறது என்பதற்காக அவற்றை தவிர்க்க முடியாது.மற்றபடி கலைஞர் அளவுக்கு உயரும் கனவு எல்லாம் எனக்கு இல்லை.இப்படி அபாண்டமாக பேசியேனும் வாயடைக்க முயல்வது மலிவான உத்தி.

 6. நன்று மனிதன்! அய்ம்பது வருடங்களுக்கு முன்பே, வழங்கு தமிழ் மொழிநடையில் நல்ல அறிவியல் நூல்கள் மலிவு பதிப்பாக ஒரு ரூபா விலைக்கு கிடைத்தன. அதைப்போல அரசு வெளியீடாக நல்ல மொழி பெயெர்ப்பு அறிவியல்நூல்கள் இலவசமாக பள்ளிகளுக்கு அனுப்பலாம்! மக்களை படிக்க தூண்டுவதாகவும் , மறுபக்கம் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்க வேண்டும்! இப்போதுள்ள டீவி, செல் கலாச்சாரத்தில் புத்தகப்படிப்பிற்கு ஆர்வம் குறைவு! இன்டெர்னெட் பட்டி தொட்டியெஙகும் பரவி, ஆஙகில மொழி கலந்த வழக்கு மொழியே வட்டார மொழிகளை விழுங்கும் ! தமிங்கிலிஷ் தன்னம்பிக்கயை ஏற்படுத்துமா பார்க்கலாம்!

  • இணைய தளம் சீனாவிலும் சப்பானிலும் பிரான்சிலும் பட்டி தொட்டியெங்கும் பரவவில்லையா.அங்கெல்லாம் ஆங்கிலம் கலந்து அந்நாட்டு மொழிகள் பேசப்படவில்லை.அதே போல தமிலிங்கிசை ஒழித்துக் கட்டி தனித்தமிழை நாமும் கொண்டு வரவேண்டும்.நம்பிக்கை இழக்க வேண்டாம் நண்பரே.

 7. தமிழருக்கு தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்,மொழித்தூய்மை வேண்டும் என்று பேசினாலே ஆங்கிலமே கூடாது என சொல்வதாக கற்பனையான குற்றச்சாட்டு சொல்வது வழக்கமாகி விட்டது.இது சொல்லாத சொற்களை எம் வாயில் திணிக்கும் நேர்மையற்ற வாதம்.ஆங்கிலத்தை மொழியாக கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை,மாறாக அது அவசியமான ஒன்றுதான்.பயிற்று மொழியாக வைப்பதையும் தேவைபடாதோருக்கும் அதை கட்டாயமாக்குவதையும்தான் தடுக்க கோருகிறோம்.உலகின் முன்னேறிய நாடுகள் எதிலும் இல்லாத அயல் மொழியை பயிற்று மொழியாக கொள்ளும் பைத்தியக்காரத்தனத்தை, அதன் மூலம் சாமானிய மக்களுக்கு உயர்கல்வியை எட்டாக்கனியாக்கும் சதிகார சூழ்ச்சியைத்தான் தடுக்க கோருகிறோம்.

 8. //இணைய தளம் சீனாவிலும் சப்பானிலும் பிரான்சிலும் பட்டி தொட்டியெங்கும் பரவவில்லையா//

  இணைய தளங்கள் பிற நாட்டு மொழிகளில் தோன்றுவது வெறும் யுனிகோட் யுத்தி தானே தவிர அந்த மொழிகள் கணினி பயன்பாட்டு மொழியாக மாறிவிட்டன என்று பலரும் நினைக்கின்றனர்.. ஆயிரமாயிரம் மொழிகளில் தளங்களை காட்டினாலும் கணினி மற்றும் அனைத்து மின்னணு இயந்திரங்களின் இயக்க மொழியாக ஆணிகலம் மட்டுமே இருக்கிறது, இனியும் இருக்கும்…

  //அங்கெல்லாம் ஆங்கிலம் கலந்து அந்நாட்டு மொழிகள் பேசப்படவில்லை//

  நீங்கள் கூறும் பிரெஞ்சின் எழுத்து வடிவமே ஆங்கிலம்தான்….

  சீனாவில் ஆங்கிலத்தின் வளர்ச்சி
  In an effort to promote internationalism, China is learning English.
  In the next five years, all state employees younger than 40 will be required to master at least 1,000 English phrases, and all schools will begin teaching English in kindergarten. The government also is funding extensive teacher training programs to find new models for language learning and develop new textbooks…

  இன்னும் சீனவ பாரு , பிரான்சை பாரு, ஜப்பானை பாரு என்று சொல்லிக்கொண்டே இருப்போர்… சீனாவும் ஜப்பானும் ஏதோ இந்தியாவின் மாநிலங்கள் என்று நினைக்கிறார்களா தெரியவில்லை… மேலும் இந்த நாடுகளில் எல்லாம் ஆங்கிலம் படித்தவர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது… அரபு நாடுகள் கூட ஆங்கில சொல்லிதர ஆசிரியர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்….

  என் தாய்மொழி தேய்கிறது, அதை நான் வளர்க்க வேண்டும் என்று சொல்லும் ஒவ்வொருவரும் மொழிக்காக என்ன செய்துவிட்டோம் என என்னை பார்க்கவேண்டும்..

  மக்கள் டிவி தமிழை கையில் எடுத்திருக்கிறது ஆனால் ராமதாஸ் பெயர் மாற்றம் செய்தாரா ? அப்ப அன்பழகன் இராமதாசை விட சிறந்த தமிழ் பற்றுள்ளவர் என கொள்வோமா ? இதுதான் இன்றைய தமிழ் ஆர்வலர்களின் மொழிப்பற்று என்பதின் புரிதல்…. பல தமிழ் ஆர்வலர்களின் நிலை இது….

  முற்போக்காளர்களிடம் வந்து இனவாத தேசியத்துக்கு ஆதரவு தேடுவதை எப்படி சொல்வது… ஜனநாயகமோ, கம்யுநிசமோ மன்னராட்சியோ பாசிசமோ நாசிசமோ முதலாளித்துவமோ உழைக்கும் வர்க்கமோ அது எதுவாயினும் ஒரு நாட்டை மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் துண்டாடுவதை ஆதரித்ததில்லை…

  ஆங்கிலம் கலந்த தமிழ் தான் இன்றைய சூழலுக்கு உகந்தது….

  //காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
  கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
  காக்கைக்குக் கைக்கைகா கா!//

  இதை புரிவதை விட சேக்ஸ்பியரை புரிவது சுலபமாக இருக்கிறதே என்ன செய்ய….

  • \\இணைய தளங்கள் பிற நாட்டு மொழிகளில் தோன்றுவது வெறும் யுனிகோட் யுத்தி……இனியும் இருக்கும்//

   நான் என்ன எழுதியிருக்கிறேன்,நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்.இணையம் பரவுவதால் ஆங்கிலம் கலந்த தமிழ்தான் இனி இருக்கும் [இணையம் இல்லாமலே அப்படித்தான் இருக்கிறது] என்று சொன்னதற்கு அது ஒன்றும் கட்டாயமில்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.பிற மொழி சொற்களை கலந்து பேசும் வழக்கம் அந்த நாடுகளில் எல்லாம் வரவில்லை என்றுதான் சுட்டுகிறேன்.அறிவியல் வளர்ச்சி ஆங்கிலத்தில் இருப்பதற்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் க்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றுதான் சொல்கிறேன்.

   \\நீங்கள் கூறும் பிரெஞ்சின் எழுத்து வடிவமே ஆங்கிலம்தான்….//

   என்ன ஒரு அறிவு.அய்யா அறிவாளியே.அது ஆங்கில எழுத்து வடிவமல்ல.லத்தீன் எழுத்துக்கள்.பல ஐரோப்பிய மொழிகளும் அந்த எழுத்து வடிவத்தையே கொண்டிருக்கின்றன.

   \\சீனாவில் ஆங்கிலத்தின் வளர்ச்சி//

   மீண்டும் மீண்டும் சொல்வதற்கு அவலமாக உள்ளது.ஆங்கிலமே வேண்டாம் என்று சொல்லவில்லை.கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள சீனாவில் ஆங்கிலத்தை மொழியாக கற்கிறார்கள் என்கிறது.பயிற்று மொழியாக வைக்கவில்லையே.இங்கு ஆங்கிலத்தை பயிற்று மொழியாக வைக்கும் சதிகார சூழ்ச்சியை பிற நாடுகளில் ஏற்படும் ஆங்கில வளர்ச்சியை காட்டி நியாயப்படுத்த முடியாது,

   \\முற்போக்காளர்களிடம் வந்து இனவாத தேசியத்துக்கு ஆதரவு தேடுவதை எப்படி சொல்வது…//

   நல்லா இருக்குயா இந்த சாக்கு.நான் முற்போக்காளன் அதனால் நான் செய்வதெல்லாம் சரிதான் என்கிறீர்கள்.ஆமாம் தாய்மொழி மீது பற்று கொண்டாலே அது இனவாத தேசியம் ஆகிவிடுமா.

   \\இதை புரிவதை விட சேக்ஸ்பியரை புரிவது சுலபமாக இருக்கிறதே என்ன செய்ய//

   இது விதண்டாவாதம்.இப்படியா அன்றாட வாழ்வில் தமிழ் பேசுகிறோம்.எது எளிது என்பதை இவ்விரு மொழிகளிலும் இலக்கியம் பட்டப்படிப்பு படித்தோரிடம் போய் கேட்கலாம்.

   \\ஆங்கிலம் கலந்த தமிழ் தான் இன்றைய சூழலுக்கு உகந்தது//

   நல்லது.சகதி நிரம்பிய குட்டை எருமைகளுக்கு சொர்க்கமாகத்தான் தெரியும்.

   • லடின் அல்பபெட் என்றெல்லாம் யாரும் சொல்வதே இல்லை… ஜஸ்ட் அல்பபெட் அவ்வுளவுதான்…அல்பபெட் என்றால் ஆங்கிலத்தை ஒத்த ஒரு ஸ்கிரிப்ட்… லடினை தவிர 3 அல்பபெட் ஆங்கிலத்தில் சேர்க்கபட்டுள்ளது.. வேறு வித்தியாசம் இல்லை….

    \\சகதி நிரம்பிய குட்டை எருமைகளுக்கு சொர்க்கமாகத்தான் தெரியும்.\\
    சகதி நிரம்பிய குட்டையில் இருந்து சக்தியை நீக்கிவிட்டால் அது கடல் ஆகிவிடுமா என்ன? இல்லை எருமைகள் தான் யானைகள் ஆகிவிடுமா ?

    \\ஆங்கிலமே வேண்டாம் என்று சொல்லவில்லை.. இங்கு ஆங்கிலத்தை பயிற்று மொழியாக வைக்கும் சதிகார சூழ்ச்சியை பிற நாடுகளில் ஏற்படும் ஆங்கில வளர்ச்சியை காட்டி நியாயப்படுத்த முடியாது\\
    யாரும் தமிழே வேண்டாம் என்று சொல்லவில்லை. அறிவியல் தமிழ் தான் வேண்டாம் என்கிறேன்…நீங்கள் ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக வைத்து படிப்பதால் யாருக்கு என்ன இழப்பு என்று கூறுங்கள்…

    \\இது விதண்டாவாதம்.இப்படியா அன்றாட வாழ்வில் தமிழ் பேசுகிறோம்\\
    அன்றாட வாழ்வில் பேசும் பேச்சுதமிழும் அச்சுத்தமிழும் வேறு வேறாய் இருக்கும்போது, பயிற்று மொழியாய் இருக்கிற அச்சுத்தமிழ் அசலாக தோன்றும்… ஆங்கிலம் அச்சுதமிழை விட ஈசியாய் இருக்கிறது…

  • பக்கத்து மாநில மக்களோடு உரையாட இந்தியாவில் வாழும் மக்களுக்கு ஒரு பொது மொழி அவசியம். பல்வேறு வரலாற்று காரணங்களால் இந்தியை பொது மொழியாக ஏற்பதில் சிக்கல் உள்ளது. மக்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கும் ஆங்கிலம் அந்த தேவையை இட்டு நிரப்புகிறது. இதில் இருக்கின்ற ஒரு பிரச்சினை மத்தியதர மக்கள் தமிழை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது தான். செய்ன்ட் ஜான்ஸ், டி ஏ வி போன்ற பள்ளிகளில் தமிழ் மூன்றாவது மொழியாக ஜெர்மன், பிரஞ்சு போன்றவற்றுடன் மாணவர்கள் விரும்பினால் படித்துக் கொள்ளலாம் என்ற நிலைமையில் உள்ளது. கேவி யில் தமிழ் இல்லை. மூன்றாம் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் எழுத தெரியவில்லை.

   வடகிழக்கு மாநில மக்கள் அனைவரும் ஆங்கிலம் ஓரளவுக்கு பேசுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒரு பகுதியில் வாழும் மக்கள் பேசும் மொழி இன்னொரு மக்கள் பிரிவின் மொழியோடு வேறுபட்டிருப்பது தான். அவர்கள் தமிழர்களின் மாமி டாடி கலாச்சாரத்திற்கு பலியானவர்கள் அல்லர். அந்த மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தமது கலாச்சார பெயர்களையே வைத்துள்ளார்கள்.

   சமீபத்தில் நடந்த ‘நீயா நானா’ விவாதம் ரத்தக் கொதிப்பை எகிற வைத்த ஓன்று. தம் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை பார்த்து பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பத்திரிக்கையாளர் மீனா கந்தசாமி அந்த பெற்றோரிடம் உரையாடியது அவர்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரியவில்லை. அவர் சொல்லும் போது இந்த மாணவர்கள் பேசும் ஆங்கிலத்தில் புழங்கும் வார்த்தைகள் நூறு சொச்சம். ஒரு மொழியை இது முழுமையாக கற்பதாகாது என்றார்.

   ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் சுலபமானதல்ல; இன்றைய நோக்கில் அது verse drama வகையிலானது. பல வார்த்தைகளின் அர்த்தங்கள் இன்று மாறியுள்ளன. அடிக்குறிப்புகள் (foot notes) ஆங்கில ஜாம்பவான்களுக்கே தேவைப்படுகிறது. இப்படி தமிழை மட்டம் தட்டி ஆங்கிலத்தை உயர்த்துவது தான் அடிமை மனோபாவம். அதே நேரத்தில் இந்தோ–ஆங்கில மரபு ஓன்று நம்மிடையே உள்ளது. தலைசிறந்த படைப்புகள் அதில் உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் டோரு தட் முதற்கொண்டு அருந்ததிராய் வரை சிறப்பாக எழுதியவர்கள் ஏராளம். டோறு தட்டின் சவுக்கு மரம் (casuarina tree) வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதையோடு ஒப்பிடத்தக்கது என்கிறார்கள் விமரிசிகர்கள். ஒரு நீண்ட பாரம்பரியமும், இந்தியர்களின் ஆழ்மன உணர்வுகளை படம்பிடிப்பதிலும் வெற்றி கண்ட ஆங்கிலம் அந்நிய மொழி என்று உரைப்பதும் தவறான பார்வையே.

   • // இப்படி தமிழை மட்டம் தட்டி ஆங்கிலத்தை உயர்த்துவது தான் அடிமை மனோபாவம். //

    ஆங்கில அல்லது பிறமொழி இலக்கியங்கள்/ ஆக்கங்களை பின்னாளில் படித்து வியப்பவர்கள் மீண்டும் ஒரு முறை தமிழ் இலக்கியங்களுக்கு மீள் வாசிப்புக்கு போவதில்லை.. பள்ளியில் படித்து புரிந்து கொண்ட அளவில் தமிழ் மீது தாழ்வுணர்ச்சி கொள்கிறார்கள்.. தமிழால், தேவையான பொருத்தமான கலைச் சொற்களுடன், எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் / தொழில் நுட்பத்தையும் தெளிவாக, சுவையாக விளக்கமுடியும் என்பதை உணர முயலாததற்கு உள்நாட்டு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற பொருளாதார நலன்களும் காரணம்..

    தமிழார்வமிக்க பல்துறைகளையும் சார்ந்த வல்லுநர்கள் தங்கள் துறை சார்ந்த ஆக்கங்களை தமிழுக்கு கொண்டுவந்து தமிழை நவீன சூழலுக்கேற்ப வளப்படுத்துவதன் மூலம் வெகு விரைவில் தமிழ் அருமையான பயிற்று மொழியாக இயலும்.. இதற்கு தமிழர்கள் பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்று தங்கள் தொழில்,வணிக தொடர்பு மொழியாக தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது தமிழ் வளர்ச்சிக்கு மேலதிக ஊக்கம் தரும்..

    • நன்றி அம்பி.அழகாக சொன்னீர்கள்.

     \\ தமிழால், தேவையான பொருத்தமான கலைச் சொற்களுடன், எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் / தொழில் நுட்பத்தையும் தெளிவாக, சுவையாக விளக்கமுடியும் //

     70 களிலேயே யாழ் பல்கலை கழகத்தில் மருத்துவ கல்வி தமிழ் வழியே பயிற்றுவிக்கப்பட்டது.உண்மை நிலைமை அப்படியிருக்க தமிழால் முடியாது எனபது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

     \\தமிழர்கள் பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்று தங்கள் தொழில்,வணிக தொடர்பு மொழியாக தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது தமிழ் வளர்ச்சிக்கு மேலதிக ஊக்கம் தரும்..//

     சரிதான்.தமிழர் வாழ்வு செழிக்காமல் தமிழுக்கு உய்வில்லை.
     அதே போன்று தமிழ் செழிக்காமல் தமிழருக்கு உய்வில்லை.

 9. தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள்!
  – என்ற கட்டுரையின் பின்னூட்டபெட்டியை ஏன் மூடியே வைத்துள்ளீர்கள்?

  • \\”தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள்!
   – என்ற கட்டுரையின் பின்னூட்டபெட்டியை ஏன் மூடியே வைத்துள்ளீர்கள்?”//

   தற்போது பின்னூட்டப் பெட்டி திறந்துதான் உள்ளது கதிர் நிலவன். ஏதாவது நெட்வொர்க் பிரச்சினையாக இருந்திருக்கலாம்

 10. ஆங்கிலம் எவ்வாறு வளர்ந்தது. பல தேசங்களையும் வென்று, அமெரிக்க இந்திய, ஆஸ்திரேலியா என்று சூரியன் மறையா சாம்ராஜ்யம் அமைத்தது. அங்குள்ள வட்டார சொற்களை எல்லாம் தன மொழியில் ஏற்றுக்கொண்டு வளர்ந்தது. எல்லாவற்றையும் ஆங்கில படுத்தி கொண்டு இருக்கவில்லை.
  என்னை பொறுத்தவரை கல்வி தமிழ்வழியில் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தாய் மொழி துணை மொழிகளாக கற்க பட வேண்டும்.
  அப்பொழுதுதான் தமிழ் வளரும் பிற மொழியிலுள்ள சொற்களை தமிழ் படுத்திக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் ஏற்றுகொண்டு, நமது சக்திகளை புதிய விஞ்ஞான ஆக்கங்களுக்கு பயன்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தமிழை வளர்ப்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க