Monday, May 5, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !

கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !

-

மிழகமெங்கும் கல்விக் கொள்ளைக்கு எதிராக போராடி வரும் மனித உரிமை பாதுகாப்பு மையம் கோவையிலும் பல்வேறு பள்ளிகளில் பெற்றோரை அணிதிரட்டி போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 28-07-2013 ஞாயிறு மாலை 5 மணிக்கு, கோவை கணபதி பகுதியை அடுத்த மனியக்காரம் பாளையத்தில் உள்ள கே.பி.ஆர் திருமண மண்டபத்தில்
“தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! இலவச கல்வி உரிமையை நிலை நாட்டுவோம்!”
எனும் தலைப்பில் அரங்கக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கோவை மாவட்ட அமைப்பாளர் வரவேற்புரையாற்றி பேசினார்.

கோவை கூட்டம்சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் மணிவண்ணன் – தனியார்மயம் உற்பத்தி செய்யும் பொது புத்தியையும் அதன் விளைவாக உருமாறி வரும் கல்வி முறையையும், புதிய கல்வி முறைக்கும் நகரங்களில் பெருகி வரும் முதியோர் இல்லங்களுக்கும் இடையே உள்ள மறைமுக உறவை எளிய முறையில் அனைவருக்கும் புரியும்படி விளக்கினார். மேலும் புரட்சிகர அமைப்புகளை ஆதரிக்கும் நபர்களிடம் கூட தனது பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் சேர்க்கணும் எனும் மனநிலையும் அதற்காக அவர்கள் செய்து கொள்ளும் சுயநலமான சமாதான சொல்லாடலான “நாளைக்கு என் பையனோ பொண்ணோ வளர்ந்து வந்து ஏன் என்னை நல்ல பள்ளியில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினால் என்ன பண்ணுவது” எனும் பசப்பலில் ஒளிந்திருப்பது அவர்கள் தன்னை தற்காத்து கொள்ளும் வார்த்தைகள் மட்டுமே அல்ல. தனியார் மயம் தன் கொள்ளையை மட்டுமல்ல கொள்கையையும் எல்லா இடங்களிலும் பரப்புவதில் வெற்றி பெற்று இருக்கிறது எனும் இரகசியமுமே என்பதை அம்பலமாக்கினார். மேலும் அமைப்பாகி போராட வேண்டியதன் தேவையையும் மக்களிடம் விளக்கினார்

அடுத்து சிறப்புரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் ராஜூ -மக்களுக்கு பொதுவான, ஆறு, மலை,நதி,வளங்கள் என அனைத்தும் தனியாரிடம் தாரை வார்ப்பதன் தொடர்ச்சியே கல்வி தனியார்மயம் ஆவதும் என்பதன் வரலாற்று தொகுப்பை விளக்கி பேசினார்.

மேலும் பல பள்ளிகளில் அனுமதியின்றி மேல் வகுப்புகள் நடத்துவதும் அதை சி.இ.ஓ எனும் கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டால் தனக்கு அதிகாரம் இல்லை என ஒதுங்குவதும் பரவலாக நடைபெறுகிறது. இனி அது போல் அவர் ஒதுங்கி செல்ல அனுமதிக்காதீர். அவருக்கு அதிகாரம் இல்லைதான் எனினும் மாவட்ட ஆட்சியருக்கு எல்லா அதிகாரமும் இருக்கு. எனவே அவர் ஆட்சியருக்கு தகவல் சொல்ல கடமைப்பட்டவர். இனி பள்ளிகளில் எந்த பிரச்சனை என்றாலும் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகை இடுங்கள், அவர்களுக்கு மண்டை குடைச்சல் வந்தால்தான் வேலைக்கே இறங்குவார்கள்.

தனியார் பள்ளியில் சில முதலாளிகள் பள்ளியின் உள்ளே முதலாளியாக நடப்பதும் மாணவர்களை தொழிலாளியை தண்டிப்பது போல தண்டிப்பதும் அனுமதிக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் முதலாளி போல பள்ளியின் முதலாளி நினைச்சா லீவு விடுவது எல்லாம் செய்யக் கூடாத காரியம், காரணம் பள்ளி என்பது பொதுச் சொத்து. அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம். பெற்றோர் தனியாக போராடாமல் பொதுவாக இணைந்து போராடுவதன் அவசியத்தையும் விளக்கி வழி காட்டுதலையும் வழங்கினார்.

அரங்கத்தில் இதுவரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழிகாட்டுதலில் போராடி வெற்றி பெற்ற சுமார் பத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 150 பேர் வந்திருந்தனர் அவர்களும் மேடையில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்

இறுதியாக கோவை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் இராஜன் நன்றியுரையாற்றினார்.

தகவல்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் -தமிழ்நாடு
கோவை.

திருவண்ணாமலை

28.07.2013 மாலை 3.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்கவும், இதற்க்கு எதிராக போராட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் அமைக்கவும் அறைக்கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் தோழர் பொன். சுப்பிரமணியன் பேசினார். புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக கல்வி உட்பட அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு மக்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்றும், இதற்கு எதிராக சிதம்பரத்தில் PUSER அமைக்கப்பட்டு வீனஸ் பள்ளிக்கு எதிராக போராடி வெற்றி பெற்றதை விளக்கியும் நமது மாவட்டத்திலும் அதே போல PUSER அமைப்பை உருவாக்கி போராடலாம் என அறை கூவல் விடுத்து பேசினார்.

கூட்டத்திற்காக துண்டு பிரசுரங்கள் நகரிலுள்ள பள்ளிகளுக்கு எமது தோழர்கள் நேரில் சென்று விநியோகித்து பிரசாரம் செய்தனர்.

தகவல்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் -தமிழ்நாடு
திருவண்ணாமலை மாவட்டக் கிளை.