privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !

கொரியாவை கதற வைத்த அணு மின்நிலைய ஊழல் !

-

தென் கொரியாவில் இயங்கும் அணு உலைகளில் தரமற்ற பாகங்களை அனுமதிக்க அந்நாட்டு அணு சக்தி கழக அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது அம்பலமாகி உள்ளது. தரமற்ற பாகங்கள் பொருத்தப்பட்ட 3 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன, இன்னும் பல மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் நாடு என முதலாளிகளால் உச்சி முகரப்படும் சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு தென் கொரியா. அங்கு பன்னாட்டு முதலாளிகளின் மின்சார தேவையை மலிவாக பூர்த்தி செய்ய உருவாக்கிய அணு உலைகளில் தான் இந்த ஊழல் நடந்துள்ளது.

கொரியா அணு உலை
படம் : நன்றி நியூயார்க் டைம்ஸ்

அணு உலைக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்கும் தனியார் நிறுவனங்கள், தரமற்ற பாகங்களுக்கு போலியான சோதனை முடிவுகளை தாக்கல் செய்து, அந்த பாகங்கள் தரமானவை என ஏமாற்றி உள்ளன. அவை போலியான சோதனை முடிவுகள் என்று தெரிந்தும், அணு உலை திட்டக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த பாகங்களை அணு உலைகளில் பொருத்த அனுமதி அளித்துள்ளனர். அவை கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் கருவிகள் போன்ற அணு உலையின் மிக முக்கிய பாகங்களாகும்.

தென் கொரியாவில் மொத்தம் 23 அணு உலைகள் இயங்குகின்றன. அவற்றில் 14 அணு உலைகளில் தரமற்ற பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. 3 அணு உலைகள் இயங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் மேலும் அணு உலைகள் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி கருத்து தெரிவித்த சியோல் பல்கலைகழகத்தின் அணுப் பொறியியல் பிரிவு பேராசிரியர் குன் ஷூ “இப்பொழுது வெளியாகி இருக்கும் ஊழல் ஒரு சிறிய பகுதி மட்டும் தான், இன்னும் பல முக்கிய உண்மைகள் மறைந்திருக்கின்றன” என கவலை தெரிவிக்கிறார். அணு உலை பாகங்கள் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 1.2 லட்சம் சான்றிதழ்களை ஆய்வு செய்து அவற்றில் போலிகளை கண்டு பிடிக்க வேண்டுமாம்.

விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டதில் தான் உள்ளது. அதற்குள் பெரிய ஊழல்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. விசாரணை முழுமை பெறும் போது இன்னும் நிறைய அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரிய வரும் என நம்பப்படுகிறது.

உதாரணமாக, இந்த ஊழல் பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக கொரியா ஹைட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவரின் வீட்டில் சோதனை செய்த போது பல லட்சம் டாலர்கள் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்த போது ஹூயுண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பணம் போலி ஆய்வு சான்றிதழ்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் ஹூயுண்டால் ஹெவிக்கு ஒப்பந்தங்களை வழங்க கொடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து அனாமதேய தகவல் ஒன்றை வைத்து விசாரித்ததில் இந்த கிரிமினல் ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. அணு உலை விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், அரசு உதவி பெறும் அணு உலை நிறுவனங்கள், அணு உலை பாகம் தயாரிக்கும் தனியார் நிறுனங்கள், அவற்றை சோதனை செய்யும் நிறுவனங்கள் என அனைத்தும் தம்முள் ஒரு வலைப் பின்னால் அமைத்துக் கொண்டு ஊழல் புரிந்துள்ளன. தென் கொரியாவின் மிக முக்கிய மாஃபியா வலைப்பின்னல் என அந்நாட்டின் பிரதமரே கருதும் அளவு அது சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.

சியோல் நகர ஊழியர்கள்
சியோல் நகரத்தில் விசிறிகளை பயன்படுத்தி சூட்டை தணித்துக் கொள்ளும் ஊழியர்கள். (படம் : நன்றி நியூயார்க் டைம்ஸ்)

அணு உலைகள் இயக்கம் நிறுத்தப்பட்டதும் பெரும் மின்சார பற்றக்குறையை அந்நாடு சந்தித்து வருகிறது. தென் கொரியா தன் மொத்த மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை அணு உலைகளிலிருந்தே பெறுகிறது, மாற்று திட்டத்தை பற்றி அவர்கள் யோசித்தது கூட இல்லை. பல அணு உலைகளில் உற்பத்தி முடக்கி வைக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் பொருளாதாரத்தையும், வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கும் என அரசு அஞ்சுகிறது.

அணு உலைகள் செயலிழந்து இருப்பதால் அந்நாட்டின் பிரதமர் மக்களை மின் சக்தியை சேமிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கல்லூரிகள், நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் குளிரூட்டிகளை அணைத்து விட்டனர். கடந்த மாதம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பேர்கிற்கு அளித்த சிறப்பு விருந்தில் பிரதமரே குளிரூட்டும் வசதிகளை நிறுத்த வேண்டி இருந்தது.

இதைத் தொடர்ந்து பன்னாட்டு முதலாளிகளின் நெற்றியில் வழியும் வியர்வை தென் கொரிய அரசை கிலி பிடிக்கச் செய்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின், தான் ஆக்கிரமித்திருந்த கொரிய பகுதிகளை ரஷியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தவும், கிழக்கு ஆசியாவில் பலமாக காலுன்றவும் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. இதனால் கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதி அமெரிக்காவின் வேட்டைக்கான தளங்களில் ஒன்றானது. அமெரிக்க உதவியுடன் தென் கொரியா தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் அடிவருடிகள் அங்கு பிரதமராக்கப்பட்டார்கள். 1960-ல் ராணுவ கலகம் மூலம் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராணுவ ஜெனரல்களின் இரும்புப் பிடியில் முதலாளித்துவ வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. உலகெங்கும் ‘ஜனநாயகத்தை’ப் பரப்பும் கடமையை வரித்துக் கொண்டுள்ள அமெரிக்கா அங்கு தன் ராணுவ தளங்களை அமைத்து உலக ‘சமாதானத்தை’ பராமரித்துக் கொண்டிருந்தது.

1980-களுக்குப் பிறகான ஓட்டுக் கட்சிகளின் ஜனநாயகத்தில் நிலையான அரசு அமையாதது, 1988 ஒலிம்பிக் போட்டிகள், 1996-ல் உலக முதலாளித்துவ நாடுகளின் கூட்டமைப்பில் (OECD) சேர்ந்தது இவை அனைத்தும் சேர்ந்து 1997 ஆசிய பொருளாதார நெருக்கடியில் தென் கொரியாவை நேரடியாக சிக்க வைத்தன. தென் கொரியாவின் பொருளாதாரம் சரிவிலிருந்து தற்காலிகமாக மீண்ட பிறகும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய அரசுகளுக்கு சேவை செய்யும் நாடாக தென் கொரியா தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தது.

பன்னாட்டு முதலாளிகளின் நேரடி முதலீடுகள் குவிந்தன, அவர்கள் உடல் நோகாமல், குறைந்த செலவில் உற்பத்தி பொருள் செய்து கொள்ள மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியிருந்தது. கூடவே, குறைந்த செலவில் அணு உலைகளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நடைமுறையாக்கினால், அணு உலைகளை வெளிநாடுகளுக்கு விற்று நிறைய சம்பாதிக்கலாம், பொருளாதாரத்தை பெருக்கலாம், விக்ரமன் படத்தில் வருவது போல் ஒரு பாட்டு முடிவதற்குள், தென் கொரியாவை வல்லரசு ஆக்கி விடலாம் என கனவு கண்டார்கள். மின்சார உற்பத்தி செய்ய உடனடி செலவு குறைவாக பிடிக்கும் அணு உலைகள் பெருமளவு அமைக்கப்பட்டன. அவற்றினால் ஏற்பட உள்ள நீண்ட கால செலவுகளைப் பற்றி முதலாளிகளுக்கோ, தென் கொரிய அரசுக்கோ கவலை இல்லை, தென் கொரிய மக்கள்தான் கவலைப்பட்டிருக்க வேண்டும்.

தென் கொரியாவில் அரசு நிறுவனமான கொரியா நீர் மற்றும் அணுசக்தி கழகம் அனைத்து அணு உலைகளை கட்டுப்படுத்துகிறது. அணு உலைகளின் கட்டுமானம் மற்றும் திட்ட வரைவுகளுக்கு கெப்கோ பொறியியல் மற்றும் கட்டுமான கழகம் உதவி புரிகிறது. அணு உலைகளுக்கு தேவையான பாகங்களை தயாரிக்கவும், அதை பரிசோதிக்கவும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

அரசு அணு சக்தி கழகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் ஏதேனும் ஒரு தனியார் அணு உலை பாகம் தயாரிப்பு நிறுவனத்திலோ, அல்லது பாகங்களை பரிசோதிக்கும் நிறுவனத்திலோ அதிக சம்பளத்துடன் மேலாளர் வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். சில அதிகாரிகள் கூட்டாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதை அரசு அணு சக்தி கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துவிடுவார்கள். அவ்வளவு தான். ஊழல் வலைப் பின்னல் தயார். அதிகாரிகள், மற்றும், தனியார் நிறுவன மேலாளர்களின் சொந்த ஊர், ஒரே கல்லூரி, பள்ளி நட்புகள் போன்றவை அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைக்க உதவியுள்ளன. இந்த நட்புக்கரம் இந்த வலைப்பின்னலை எளிதாக்கிவிட்டது. அது இல்லை என்றாலும் வலைப் பின்னல் கொஞ்சம் சிரமத்துடன் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஊழல் அம்பலமாகியுள்ளதை அடுத்து அரசு தன் வல்லரசு கனவில் மண் விழுந்திருப்பதை சோகமாக நினைத்து புலம்பி வருகிறது. ஹன்யாங் பலகலைக் கழகத்தின் பேராசிரிய கிம் யுன் சூங் இதை பற்றி கருத்து தெரிவிக்கையில் “இது தெரியாமல் நடந்த தவறல்ல, நாட்டை பாதுகாக்க வேண்டியவர்கள் திட்டமிட்டு புனைந்த கதை. இவர்களால் நமக்கு அணு சக்தி நிறுவனங்களின் மேல் இருந்த நம்பிக்கை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது” என்கிறார்.

இந்த ஊழலைப் பற்றி கருத்து தெரிவித்த தென் கொரியாவின் வணிகம் தொழிற்சாலை மற்றும் சக்தி துறையின் அமைச்சகம், “கடந்த 30 ஆண்டுகளாகவே தனது வெளிப்படையாக இல்லாமல் பாதுகாப்பு காரணங்களுகாக மறைமுகமாக இயங்கிவந்தது. இந்த மூடு திரை இப்பெரும் ஊழலுக்கு முக்கிய காரணமாகி விட்டது” என ஒப்புக்கொண்டுள்ளது. தென் கொரிய அணு சக்தி கழகம், தன் துறையில் புரையோடி போய் இருக்கும் ஊழல்களை களைந்து கொள்ளப் போவதாகவும், இனி இது போன்ற தவறுகள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளது.

தேசியப் பாதுகாப்பு என்ற ஒற்றை காரணத்தைக் காட்டி அணு சக்தி கழகத்தை யாருக்கும் பதில் சொல்ல கடமையற்றவர்களாக ஆக்கியது, எவ்வளவு பெரிய ஊழல் புரிய துணை புரிந்துள்ளது என்பதை தென் கொரிய அணு உலை ஊழல்கள் மிக துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளது.

பன்னாட்டு முதலாளிகளுக்கு அடி வருடுவது, மாற்று மின்சக்தி தேவைக்கான திட்டங்களை புறக்கணித்தது, அதிகாரிகளை கண்காணிக்க தவறியது, தனியார் முதலாளிகளை தாராளமாக அனுமதித்தது என்று ஒரு தவறு அதை பலமாக்க இன்னொரு தவறு என தொடர்ச்சியாக தவறுகள் செய்ததில் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் விட்ட தென் கொரியாவின் மக்கள் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அணு உலைகள் இழுத்து முடிவிட்டதால் அதன் ஆபத்து போய்விட போவதில்லை, அது தயரித்து வைத்திருக்கும் அணுக் கழிவுகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை துப்பப் போகின்றன, அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான பாகங்களும் ஊழல் கொள்ளைக்குட்படுத்தப்பட்ட தரமற்றவையாக இருக்கும் என்பது உறுதி. பணம் சம்பாதித்த பன்னாட்டு முதலாளிகளும், கொரிய முதலாளிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிப் போய் விட அதன் பாதகங்களை அனுபவிக்க போகிறவர்கள் தென் கொரியாவின் மக்கள் தான்.

கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன? கூடங்குளம் அணு மின்நிலையம் மின் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகிறது. ஊழல் செய்திகளோ, அழிவு செய்திகளோ என்று வரப்போகிறது என்று நாம் காத்திருக்க வேண்டுமா?

– ஆதவன்

மேலும் படிக்க