Thursday, May 8, 2025
முகப்புசெய்திகாசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !

காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார்மயமாக்கும் சதி !

-

தொற்று நோய்களுள் மிகக் கொடியதும் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லையென்றால் ஆளையே கொல்லக்கூடியதுமாகும் காசநோய். தற்சமயம் நமது நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15 இலட்சமென்றும், காசநோயினால் ஆண்டுதோறும் 55,000 பேர் இறந்து போகிறார்களென்றும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காச நோய் மருந்து
அரசு மருத்துவமனைகளில் காச நோய்க்கு மருந்து வழங்குவதில் உருவாக்கப்பட்டுள்ள தட்டுப்பாட்டைக் கண்டித்து டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.

காசநோயைக் குணமாக்குவதற்குக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் சில நாட்களுக்கு மருந்து எடுக்காமல் விட்டுவிட்டால் அதனின் விளைவுகள் உயிரையே பறித்துவிடும் அளவிற்கு, எந்த மருந்துக்கும் கட்டுப்படாததாக (Drug resistant TB) நோய் முற்றிவிடும். இப்படி நோய் முற்றிய நிலையில் ஏறத்தாழ ஒரு இலட்சம் நோயாளிகள் இந்தியாவெங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரசியா போன்ற மேலைநாடுகளில் காசநோய் முற்றிப் போன நோயாளிகளைத் தனிமைப்படுத்தி அடைத்து வைத்து சிகிச்சை தருகிறார்கள் என்பதிலிருந்தே, இத்தொற்று நோய் ஆட்கொல்லி எட்ஸைவிட அபாயகரமானது என்பதையும் இந்நோய்க்கு ஒருநாள்கூடத் தவறாது மருத்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இந்நோய்க்குச் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகள் தமது அறியாமையின் காரணமாக மருந்தை இடையிலேயே நிறுத்திவிடுவதால், நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதோடு, அவர்கள் மருந்தைச் சரியாக உட்கொள்கிறார்களா என்பதை நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று கண்காணிப்பது என்பதையெல்லாம் உள்ளடக்கி டாட்ஸ் (DOTS) என்ற திட்டத்தை மைய அரசு பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி, மைய அரசின் நிதியுதவியோடு நாடெங்கும் 13,000 சிறப்பு மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டன. இந்நோய்க்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகளைக் கொள்முதல் செய்வது, அவற்றை விநியோகம் செய்வது ஆகியவற்றுக்கும் மைய அரசே பொறுப்பேற்றுக் கொண்டது.

இப்படிபட்ட நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இம்மையங்களில் காசநோய்க்கு வழங்கப்படும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறதென்றும்; ஆந்திரா, பீகார், நாகலாந்து, மகாராஷ்டிரா உள்ளிட்டுப் பல மாநிலங்களில் இத்தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பெரியவர்களுக்கு வழங்க வேண்டிய மருந்து நிறுத்தப்பட்டு, அவை குழந்தைகளுக்குத் தரப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இன்னும் இரண்டொரு மாதங்களில் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துபோய்விடுமென்றும் கூறப்படுகிறது.

மைய அரசு கடந்த மூன்றாண்டுகளாக காசநோய்க்கான மருந்தைக் கொள்முதல் செய்யாமல் விட்டதன் மூலம் செயற்கையான முறையில் இத்தட்டுப்பாட்டை உருவாக்கியிருக்கிறது. நோயாளிகளுக்குத் தங்குதடையின்றி மருந்து வழங்க வேண்டும்; இல்லையென்றால் நோய் முற்றி அவர்கள் இறந்துவிடக் கூடும் என்பது தெரிந்திருந்தும் கொள்முதலை நிறுத்தியிருப்பது கொலைக் குற்றத்திற்குச் சமமானது.

அரசு மருத்துவமனைகளில் மருந்தில்லையென்றால், அதை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. காசநோய்க்கான சிகிச்சையைக் கொல்லைப்புற வழியில் தனியார்மயமாக்கும் சதி இது.

“அரசு மருத்துவமனைகளில் தரப்படுவது போன்ற மருந்துகள் வெளிச்சந்தையில் உடனடியாகக் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியே கிடைத்தாலும் அதற்கு மாதமொன்றுக்கு 1,000 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும்” என்கிறார்கள் மருத்துவர்கள். இவ்வளவு பெரிய தொகையைச் செலவழிக்க முடியாத நோயாளிகள், கொஞ்ச நாளைக்கு மருந்தை நிறுத்தி வைப்போம் என்ற முடிவுக்கு வருவார்கள். இது நோய் முற்றுவதற்கும் அதனால் மரணத்தைத் தாமே வரவழைத்து வைத்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.

ஏதோ சில இலட்சம் ஏழை நோயாளிகளை மட்டுமே இத்தனியார்மயம் பாதிக்கக் கூடும் எனச் சாதாரணமாக மதிப்பிட்டுவிட முடியாது. மாறாக, இத்தொற்று நோய் விரைவாகப் பரவுவதற்கும், அதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கொள்ளை நோயாக காசநோய் உருவெடுப்பதற்குமான வாசலைத் திறந்துவிடும் சதியே இத்தனியார்மயம்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க