Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் !

வாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் !

-

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியைச் சேர்ந்தது பாப்பாங்குளம் கிராமம். இக்கிராமத்தில் தலித் மக்கள் நூற்றி பத்து குடும்பங்கள் இருக்கின்றனர். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பசுமை வீடுகள், இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் தலித் மக்கள் சிறு சிறு வீடுகளை கட்டியுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தி.மு.க வைச் சேர்ந்த ராணி சோனைமுத்துவும், அ.தி.மு.க வைச் சேர்ந்த அம்சவள்ளி தங்கராசும் தான் எப்போதும் போட்டியிடுவார்கள். பல ஆண்டுகளாக இந்த இரண்டு தரப்பும் தான் மாறி மாறி பதவிக்கு வந்து கொண்டிருக்கின்றன. எந்த கும்பல் வெற்றி பெற்றாலும் பதவியேற்றவுடன் தனக்கு வாக்களிக்காதவர்களை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு வஞ்சம் தீர்ப்பதை தான் முதல் வேலையாக செய்கின்றனர்.

இடிக்கப்பட்ட வீடுஇந்த முறை பதவிக்கு வந்தவர் அம்சவள்ளி தங்கராசு. இவர் தேவர் சாதியைச் சேர்ந்தவர். தேர்தலில் தலித் மக்கள் இவருக்கு பெரிய அளவுக்கு வாக்களிக்கவில்லை. எனவே பதவிக்கு வந்ததும் தலித் மக்கள் குடியிருக்கும் நிலம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூறி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராசுவும் அவருடைய அடியாட்களும் ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து (சுதந்திர தினத்தன்று) தொடர்ந்து மூன்று நாட்கள் தலித் மக்களின் வீடுகளை புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இடிக்கும் போது ஓட்டு போட்டவர்களின் வீடுகளை விட்டு விட்டு போடாதவர்களின் 25 வீடுகளை மட்டும் குறி வைத்து இடித்துள்ளனர்.

மாறி மாறி பதவிக்கு வரும் இந்த இரண்டு ஊராட்சிமன்றத் தலைவர்கள் மீதும் சுற்றியுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை அந்த கோப்புகளை தூசு கூட தட்டுவதில்லை. பழைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காதது போலவே, தற்போது தலித் மக்களின் வீடுகளை இடித்த போது குற்றவாளிகளுக்கு போலீசே காவல் காத்திருக்கிறது. காவல்துறையினர் வீடுகளை இடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதோடு தட்டிக் கேட்ட சுந்தரபாண்டியன் என்பவரை தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர். வீடுகள் இடிப்புக்கு பொறுப்பான மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை உட்பட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்மாவின் தயவால் இனியும் எடுக்கப்படாது என்று நம்புவோம்.

மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கொட்டும் மழையில் குழந்தைகளுடன் வெட்ட வெளியில் பரிதவிக்கின்றனர். தமது பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லக் கூட மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த தாக்குதலில் அழிக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ 1 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இரண்டு ஊராட்சி மன்றத்தலைவர்களுமே ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் என்று ஊரை அடித்து உலையில் போடும் சமூக விரோதிகள் தான் என்பதை அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதி மக்களே சொல்லி காறித் துப்புகின்றனர். தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவருக்கு மானாமதுரையில் ஒரு நகைக்கடையும் சுற்றுவட்டாரங்களில் ஏராளமான சொத்தும் இருக்கிறது. அதே போல தான் எதிர்தரப்புக்கும். இவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தும் மக்களை கொள்ளையடித்து சேர்த்தது.

பொறுக்கித் தின்பதற்காகத்தான் இவர்களைப் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தலித் மக்களின் வீடுகளை இடித்திருக்கும் இந்த ஓட்டுப்பொறுக்கிகள் தலித் மக்களுக்கு மட்டுமல்ல ஆதிக்கசாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்கள் தான் என்பதை உணர்ந்து பிற பிரிவு மக்களும் தலித் மக்களுடன் இணைந்து இவர்களை எதிர்த்து முறியடிக்கா விட்டால், நாளை ஓட்டுப் போடாததற்காக சொந்த சாதி மக்களின் வீட்டையும் இடித்து விடுவார்கள்.

மேலும் படிக்க