கோவை கணுவாய் அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் இண்டியா பிரைவேட் என்னும் ஆயத்தஆடை தயாரிக்கும் நிறுவனம் 16 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்றது. இந்த நிறுவனத்தில் சிஐடியு, பிஎம்எஸ் என்ற இரண்டு தொழிற் சங்கங்கள் இருந்து வந்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு வந்தன. அதனால் அதிருப்தி அடைந்த 69 தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கத்தை துவங்கினார்கள்.
இதனை சகித்துக் கொள்ளாத நிர்வாகம் தொழிலாளர்களை அடக்குவதற்காக சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு வழங்கியது. இதை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கத் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை நிர்வாகம் மறுத்தது.
- அனைவருக்கும் வழங்கியது போல் எங்களுக்கும் 1000 ருபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
- பிரதி மாதம் ஊதியம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்கவேண்டும்.
என்ற இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து சங்க முன்னணியாளர்கள் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் அதை மறுத்த நிர்வாகம் தொழிலாளர்களை போராட்ட நிலைக்கு தள்ளியது.
அதன் காரணமாக தொழிலாளர்கள் 10.08.2010 தேதியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். நிர்வாகம் தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் மேலும் அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது. கோவை நீதி மன்றத்தில் தொழிலாளருக்கு ஜாமீன் கொடுக்க கூடா து என்று நிர்வாகம் எதிர் மனு செய்தது. இதன்காரணமாக கோவை நீதி மன்றத்தில் ஜாமீன் கிடைக்காமல் சென்னை உயர் நீதி மன்றத்தின் மூலம் ஜாமீன் கிடைக்க 27 நாட்கள் ஆகிவிட்டது.
மீண்டும் தொழிலாளர்கள் ஆலைக்கு செல்லும் போது நிர்வாகம் பணி வழங்க மறுத்து பகுதி கதவடைப்பு செய்ததாக கூறிவிட்டது.
அதன்பின்பு தொழிலாளர்கள் எங்களுக்கு வேலை வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள் சிறைக்கு சென்றுவந்தவர்கள் , உங்கள் மீது குற்ற வழக்கு உள்ளது ஆகையால் உள் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி விசாரணையை துவக்கியது நிர்வாகம். இரண்டு வழக்குரைஞர்களை வைத்து உள் விசாரணையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது நிர்வாகம்.
அதற்கிடையில் தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று கோவை நீதிமன்றம் 29.09.2011 தேதியில் தீர்ப்பு வழங்கியது. அதை பொறுத்துக் கொள்ளாத நிர்வாகம் மீண்டும் கோவையில் வழக்கை மேல் முறையீடு செய்தது. அதிலும் தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று 13.03.2013 தேதியில் தீர்ப்பு வழங்கியது. அதையும் ஏற்காத நிர்வாகம் மீண்டும் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தொழிலாளர்கள் மீது , தொடர்ச்சியான நிர்வாகத்தின் அடக்கு முறையைக் கண்டித்து ஆலைவாயில் முன்பாக 17.08.2013 தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து வடவள்ளி காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி கோரியிருந்தோம். ஆனால் காவல்துறை ஆய்வாளர் 14.08.2013 தேதி இரவு சட்டஒழுங்கு சீர்குலையும் என்பதால் உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என்று கூறிவிட்டார்.
தொழிலாளர்கள் திட்டமிட்டபடி கைது செய்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்ற முனைப்புடன் 17.08.2013 தேதியில் மாலை 4.30 மணியளவில் தங்களது குடும்பத்தாருடன் தொழிற்சாலை நோக்கி செல்லும்போது காவல் துறையினர் அரை கிலோ மீட்டருக்கு முன்னதாக உள்ள காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தை காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடத்த ஆரம்பித்துவிட்டோம்.
தலைமை தாங்கிய டுகெதர் கிளை தலைவர் தோழர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். 69 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது செல்லாது. தொழிலாளர்கள் நிரபராதிகள் என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்று தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்து, வழக்குகளை திரும்பப்பெறு! தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்று பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர் தோழர் ஜெகநாதன் தனது உரைவீச்சில் கோவையில் தொழிலாளர்கள் படும் துன்பம் , ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை முதலாளிகளிடம் கேம்பஸ் கூலி , சுமங்கலி திட்டம் போன்றவற்றின் மூலமாக அடிமைப்படுத்துவதை பற்றி பேசினார் .
மாவட்ட இணைச் செயலாளர் தோழர் கோபிநாத் டூகதர் தொழிற்சாலையில் சங்கம் துவங்கிய தொழிலாளர்கள் நிர்வாகத்தின் அடக்கு முறையை தொடர்ந்து எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதையும் முதலாளித்துவம் நடந்து கொள்ளும் முறைகளையும், அவற்றை எப்படி எதிர் கொள்ளுவது என்பதையும் பற்றி பேசினார்.
கிளை துணைச்செயலாளர் தோழர் வேல்முருகன் பேசும்போது பொது மேலாளர் ரவிசெட்டியின் தொழிலாளர் விரோதப்போக்கை பற்றி பேசினார்.
மாவட்ட செயலாளர் தோழர் விளைவை ராமசாமி முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றியும் தனியார்மயம் , தாராளமயம் , உலகமயம் கொள்கையினால் தொழிலாளர்கள் வேலை இழப்பு பொருளாதார பின்னடைவு போன்றவற்றின் மூலம் உழைக்கும் வர்கத்தை எப்படி பாதிக்கின்றது என்பதைப் பற்றியும் பேசினார்.
டுகெதர் தொழிலாளர்களின் போராட்டத்தில் மற்ற கிளை பு.ஜ.தொ.மு சங்கங்களான SRI , NTC ,CRI ,CPC , போன்றவற்றில் இருந்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்
நன்றி உரை ஆற்றிய கிளை துணைத் தலைவர் தோழர் நடராஜன் புஜதொமு மற்ற ஆலை தோழர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 240 தொழிலாளர்கள் பங்கேற்றனர் .
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.]
தகவல் :புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை