தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்வி பயிலும் அரசுப்பள்ளிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது நாம் அறிந்த விசயம் தான். அத்தகைய ஒரு சில பள்ளிகளைப் பற்றி சில அதிர்ச்சியூட்டக் கூடிய விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளில் 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை, என்றாலும் அவை இன்றும் இயங்கி வருகின்றன என்பது முதல் அதிர்ச்சி. இரண்டாவது, மேற்கூறிய 16 பள்ளிகளில் ஒன்று சென்னையிலும், மற்றொன்று கோவையிலும் உள்ளன. அடுத்ததாக, 2,253 பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டும் தான் இருக்கிறார். 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தேவையாக இருக்கின்றனர். மொத்தம் 21,193 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இன்று வரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 420 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் தர்மபுரி மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது. இது போன்ற பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியே கிடைக்காததால் உயர் கல்வியை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பெண்களின் அடிப்படை கல்வி இங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. முறையான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்தால் பள்ளிக்கு போவது, நினைத்தால் ஊர் சுற்றுவது என்று சிறு வயதிலேயே ஊதாரிகளாகவும், ஊர்சுற்றிகளாகவும் சீரழிகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 390 நடுநிலைப்பள்ளிகளும், 115 உயர்நிலைப்பள்ளிகளும், 119 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் காலியான பணியிடங்கள்.
தமிழ் ஆசிரியர் | 42 |
ஆங்கில ஆசிரியர் | 101 |
கணித ஆசிரியர்கள் | 16 |
அறிவியல் ஆசிரியர்கள் | 67 |
வரலாற்று ஆசிரியர்கள் | 187 |
மொத்தம் | 423 |
இவ்வளவு ஆசிரியர்கள் தேவை இருந்தும் பல ஆண்டுகளாக இந்த பணியிடங்கள் நிரப்படாமல் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் ஓரிரு ஆண்டுகளில் நகர்ப்புறங்களுக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். இந்த இடமாறுதலுக்கு பின்னால் மிகப்பெரிய பேரம் நடக்கிறது. அமைச்சர்களும், அவர்களின் புரோக்கர்களும் இதில் நிறைய காசு பார்க்கின்றனர். அத்துடன் சாதிப்பற்று, வேண்டப்பட்டவர்கள் என்கிற சிறப்புச் சலுகைகளும் உண்டு.
கோவை சிங்காநல்லூர் ஆணையங்காடு சாலையில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி 1967-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 1974 இல் 1.5 ஏக்கர் பரப்பளவில் மேலும் விரிவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியாக செயல்பட்டு வந்தது. சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளியில், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது வெறும் 100 மாணவர்களே படிக்கின்றனர். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகள் இருந்தும், ஆய்வுக்கூடமும், நூலகமும் இல்லாததால் அந்த நடைமுறை பயிற்சி வகுப்புகள் நடப்பதில்லை. இதை தவிர பள்ளியில் உள்ள கழிப்பறை அபாயகரமான நோய்களை பரப்பும் ஆபத்தான இடமாக இருப்பதால் மாணவர்கள் அதை பயன்படுத்தாமல் அருகில் உள்ள முட்புதர்களையே பயன்படுத்துகின்றனர்.
விளையாட்டு மைதானத்தில் ஒரு ஆழமான கிணறு எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஆபத்தான முறையில் வாயைத் திறந்து கொண்டிருக்கிறது. மைதானத்தை ஒட்டியபடியே ரயில் பாதையும் அமைந்துள்ளது. குழந்தைகளை பாதுகாக்க சுற்று சுவர்களோ முள்வேலிகளோ இல்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் குழந்தைகளை ‘பாதுகாப்பாக’ கூண்டிற்குள் அடைத்து வைத்திருப்பதை போல அல்லாமல், அரசுப்பள்ளியில் பயிலும் ஏழைப் பிள்ளைகள் இத்தனை ஆபத்துகளையும் அருகில் வைத்துக் கொண்டு தான் கல்வியையும் கற்கின்றனர். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தேர்ச்சி விகிதத்தில் மட்டும் குறை இல்லை. ஆசிரியர்களின் முன்முயற்சியால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 88 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டு 94 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இதற்கு தனியார் பள்ளிகள் வைத்துக் கொள்வதைப் போல எந்த விளம்பர பிளக்ஸ் பேனரும் வைத்துக்கொள்ளவில்லை.
சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 50 வருடங்கள் பழமை வாய்ந்த, 2016 மாணவர்கள் படிக்கும் அரசுப்பள்ளியாகும். இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு கார்ப்பரேஷன் கக்கூசே பரவாயில்லை என்கிற அளவுக்கு இது மிகக் கேவலமாக இருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக அப்பகுதி மக்கள் உள்ளே சென்ற போது தான் இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது. ஆனால் வேறு எங்கே போவது, 2000 மாணவர்களும் சாலையிலா மலம் ஜலம் கழிக்க முடியும், எனவே வேறு வழி இல்லாமல் பெரும்பாலான மாணவர்கள் குடிப்பதற்காக கொண்டு வரும் தண்ணீரை கழிவறைக்கு பயன்படுத்தி மூச்சையடைத்துக் கொண்டு செல்கின்றனர். பாதாளச் சாக்கடை போடப்பட்ட பிறகும் இந்த பள்ளிக்கு இணைப்பு தரப்படவில்லை. இந்தப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஒருவர், இந்த நிலைமை இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளின் நிலைமை இது தான் என்கிறார்.
கல்வி தரும் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு ஆயிரக்கணக்கில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறது அரசு. கோவில் யானைகளை கூட சொகுசாக பராமரிக்க உத்தரவிடும் அரசு, பள்ளிகளின் கழிப்பறைகளை ஏன் மோசமாக வைத்திருக்கிறது ? ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வியை முழுமையாக தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிற கொள்கை தான் இதற்கு காரணம். அந்த கல்விக் கொள்கையை விரைவாக அமுல்படுத்தத்தான் அரசே அரசுப் பள்ளிகளின் கழுத்தை நெறித்துக் கொல்கிறது. குரல்வளையை நெரிக்கும் அந்தக் கையை உடைக்காவிட்டால் ஏழைகள் கல்வி எனும் உரிமையை பெற முடியாது.
மேலும் படிக்க