privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழ அகதிகளை சந்திக்க HRPC போராட்டம் - முற்றுகை !

ஈழ அகதிகளை சந்திக்க HRPC போராட்டம் – முற்றுகை !

-

திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழநேரு என்பவரை சந்திக்க HRPC வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுப்பு!

கொட்டப்பட்டு அகதிகள் முகாம் மண்டல தனித் துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

திருச்சி மத்தியச் சிறையின் அருகிலுள்ள சிறப்பு முகாமில் ஈழநேரு, இளையநாதன், செல்வராஜ் ஆகிய ஈழத் தமிழர்களை கொண்டு வந்து அடைத்துள்ளனர். அவர்களில் ஈழநேரு என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று கியூப் பிரிவு போலிசார் பொய் வழக்குப் போட்டுள்ளார்கள். அவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் தங்கள் சாயம் வெளுத்துவிடும் என்று பயந்த கியூப் பிரிவு போலிசார் அவ்வழக்கை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடத்தவில்லை. அவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென்று HRPC-ன் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வழக்கை நடத்துவதற்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக ஈழநேருவை சிறப்பு முகாமிற்கு சென்று சந்திக்க அனுமதி வேண்டுமென்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு HRPC-ன் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி அந்த சிறப்பு அகதிகள் முகாமிற்கு பொறுப்பாளரான மண்டல தனித் துணை ஆட்சியர் நடராஜனிடம் மனுக் கொடுத்திருந்தார். அரசிடம் அனுமதி பெற்று ஈழநேருவை சந்திக்க ஏற்பாடு செய்வதாக பலமுறை இழுக்கடித்த மேற்படி நடராஜனிடம் கடந்த வாரத்திலும் மீண்டும் சந்திக்க அனுமதிக் கேட்டு மனுக் கொடுக்கப்பட்டது. அப்போதும் ஈழநேருவை சந்திக்க அனுமதி தராமல் இழுக்கடித்தார்.

அதன் காரணமாக 30.08.2013-ம் தேதியன்று காலை 10 மணியளவில் அந்த மண்டல தனித் துணை ஆட்சியரிடம் HRPC திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி தலைமையில் தோழர்கள் சென்று, “கொலை உள்ளிட்ட கொடுமையான குற்றம் சாட்டப்பட்டவர்களையே வழக்கறிஞர்கள் சந்தித்து வழக்கு நடத்த தேவையான விபரங்களை பெறுவது சட்டப்படியான உரிமை, உங்களிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஈழநேருவை சந்திக்க அனுமதி கேட்டு மனுக் கொடுத்தோம். அப்பொழுது அரசிடம் அனுமதி பெற்று பின்னர் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினீர்கள். இதுவரை நீங்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. ஈழஅகதிகளை சந்திக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. இப்பொழுதும் அரசிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கண்களை மறைத்த பின்னர் கொக்கை பிடிக்கச் சொல்வது போன்றதாகும். உடனடியாக ஈழநேருவை வழக்கறிஞர்கள் சந்திக்க நீங்கள் அனுமதி கொடுங்கள். இல்லையென்றால் ஈழநேருவை சந்திக்க உங்களால் ஏன் அனுமதி தரமுடியாது என்று எழுதிக் கொடுங்கள்;”என்று கேட்டோம். அதற்கு அந்த சப்-கலெக்டர் நம்மிடம், “அப்படியெல்லாம் எழுதித் தரமுடியாது”,என்று சொன்னார்.

அதன் பின்னர் ஈழநேருவை சந்திக்க வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டுமென்றும் சிறப்பு அகதிகள் முகாமை மூட வேண்டுமென்றும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்றும் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் நோட்டீஸ் கொடுக்க ஆரம்பித்தோம். அங்கிருந்த பெண்கள் நம்மிடம்,“நாங்கள் நோட்டீஸ் தருகிறோம். நீங்கள் மற்ற வேலைகளைப் பாருங்கள்”,என்று நம்மிடமிருந்து மொத்தமாக நோட்டீஸை பெற்று அவர்களே எல்லோருக்கும் வழங்கினார்கள்.

பின்னர் நாம் அந்த சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

  • “அனுமதி வழங்கு! அனுமதி வழங்கு! ஈழநேருவை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கு!”
  • “நாடு கடத்ததே, நாடு கடத்தாதே, ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராஜன் உள்ளிட்ட, தமிழர்களை நாடு கடத்தாதே!”
  • “ ஈழநேரு, செந்தூரன், சவுந்தரராஜன் உள்ளிட்ட, தமிழர்களை கொலை செய்ய, இலங்கைக்கு நாடு கடத்த, ஜெயாவின் சதித்தனம்”
  • “முறியடிப்போம்! முறியடிப்போம்! தமிழக மக்களின் துணையோடு, மத்திய, மாநில அரசுகளின் சதித்தனத்தை முறியடிப்போம்!”

என்று நாம் போட்ட எழுச்சிமிக்க முழக்கங்களை கேட்ட நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் நம்மை சுற்றி கூடினார்கள். சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு போராட்டம் செய்த நம்மை காட்டினார்கள். ஒரு நபர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தன் திருமண வரவேற்பில் மைக்-செட் வைத்து தருவதாகவும் அதில் நம் கருத்துக்களை தெரிவிக்கும்படியும் மக்களை அணிதிரட்டும் படியும் நம்மிடம் கூறினார். பத்திரிக்கையாளர்களும் கூடினார்கள்.

தகவல் தரப்பட்டு போலீஸ் பட்டாளம் வந்தது. K.K நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், “அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டத்தை கைவிடுங்கள்”,என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். நாம், “ஈழநேருவை வழக்கறிஞர்கள் சந்திக்க சப்-கலெக்டரை அனுமதி கொடுக்க சொல்லுங்கள். அதன்பின்னர் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம்”, என்று சொல்லி விடாப்பிடியாக இருந்தோம். பலாத்காரமாக HRPC தோழர்களை போலிசார் பலவந்தமாக கைது செய்தனர். அதனைக் கண்ட ஈழத் தமிழர்கள், “தோழர்களை மரியாதையாக நடத்துங்கள். இல்லையென்றால். நடப்பதே வேறு”என்று எச்சரித்தவுடன் போலிசார் கடுமையாக நடந்து கொள்வதை குறைத்துக்கொண்டார்கள்.

தோழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து திருச்சி செசன்ஸ் நீதிபதி போட்டிருந்த தடையை மீறி நீதிமன்றத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதனை பார்த்த வழக்கறிஞர்கள் பலரும், “வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்களா? இதை சும்மா விடக்கூடாது. இந்தப் போராட்டத்திற்கு எங்களையும் ஏன் நீங்கள் அழைக்கவில்லை?”, என்று கேட்டார்கள்.

இப்போராட்டச் செய்தி தினமலர் தவிர அனைத்து நாளேடுகளிலும் வெளியானது. பெரும்பாலான தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. ராஜபக்க்ஷேவை போர்க் குற்றவாளி என்று தீர்மானம் போட்டு, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்று சாமியாடி, கிரிக்கெட் வீரர்களை திருப்பி அனுப்பி அலப்பரை செய்து நாடகமாடிய ஜெயலலிதா எப்படி ஈழத் தமிழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து, சித்திரவதை செய்து ராஜபக்ஷேயிடம் கொடுத்து, கொலை செய்ய முயற்சிக்கிறார் என்பதை இந்த போராட்டம் மக்களுக்கு அம்பலப்படுத்தியது.

சட்டம் ஒரு இருட்டறை. அதில் வழக்கறிஞர்கள் வாதம் ஒளி விளக்கு என்பார்கள். அகதிகளுக்கு சட்ட உதவி செய்ய வழக்கறிஞர்கள் கூட அனுமதிக்கப்படாமல் சிறப்பு முகாம் என்னும் கொட்டடி சிறையில் கால வரம்பின்றி ஈழ அகதிகள் அடைத்து கொடுமை செய்யப்படுகிறார்கள் என்ற இருண்ட வாழ்வை வெகுஜன மக்கள் அறியும் வகையில் ஒரு மின்னல் கீற்றாய் இப்போராட்டம் அமைந்தது.

இந்தப் போராட்டம் இனிவரும் காலங்களில் வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பற்றிப் பரவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு, திருச்சிக் கிளை