Friday, May 2, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தாதுமணல் அள்ளிச் சென்ற லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு !

தாதுமணல் அள்ளிச் சென்ற லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு !

-

28.8.2013 அன்று காலை 8.45 மணிக்கு விவி மினரல்ஸ் 41 பெரிய பைகளில் 41 டன் தாது மணலை வெள்ளாளன் விளை என்கிற கடற்கரை பகுதியில் இருந்து அள்ளிச் சென்ற TN74AF 2846 என்ற டாடா டாரஸ் லாரியை பெரியதாழை ஊர் பொதுமக்கள் சாலையில் மறித்து பின்னர் ஊருக்குள் உள்ள தேவாலயத்தின் முன்பு நிறுத்தியுள்ளார்கள்.

அதன் பின்னர் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 1 மணியளவில் பெரியதாழைக்கு சென்றார்கள். ஊர் கமிட்டியில் உள்ளவர்களுடன் வருவாய்துறை ஆர்டிஓ, தாசில்தார், காவல் துறையினர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஊர்மக்கள் “பசுமைதீர்ப்பாயம் எங்கும் மணல் அள்ளகூடாது என்று கூறியுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் மணல் அள்ளி செல்லக் கூடாது என ஆய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த நிலையில் மேற்படி நிறுவனத்தினர் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளி எங்கள் வாழ்வாதாரத்தினை சிதைத்து விட்டார்கள். அதனால் மாலை 5 மணிக்கு எங்கள் சமுதாய தலைவர்கள் கூட்டம் உள்ளது. அதில் பேசி முடிவு செய்து பின்னர் அறிவிக்கிறோம்” என கூறியதனால் அதிகாரிகள் சென்றுவிட்டார்கள்.

திட்டமிட்டபடி மாலை 5 மணிக்கு பெரியதாழை தேவாலய வளாகத்தில் சமுதாய தலைவர்கள் கூட்டம் கூடியது. இதில் தூத்துக்குடி மீனவர் கூட்டமைப்பு தலைவர், திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தலைவர், உவரி, புன்னக் காயல், மணப்பாடு, கூடுதாழை போன்ற கடற்கரை கிராம கமிட்டி தலைவர்கள் நிர்வாகிகள் சுமார் 80 பேர் கலந்து கொண்டார்கள். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.

அதில் பெரியதாழை ஊரானது தூத்துக்குடி, திருநெல்வேலி இரண்டு மாவட்டத்திலும் உள்ளது. அதனால் இரண்டு மாவட்ட ஆட்சியரும் கடற்கரை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதுவரையில் லாரியை விடுவிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரையில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் உடனிருந்தார்கள்.

29.8.13 அன்று மாலை 4 மணியளவில் டிஎஸ்பி, ஆர்டிஓ உட்பட்ட அதிகாரிகள் பெரியதாழை ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது ஊர் மக்கள் நாங்கள் தருகின்ற புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கோரியபோது முதல் தகவல் அறிக்கை போட முடியாது என கூறியுள்ளர்கள். மேலும் 31.8.13 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம் என கூறி சென்றுவிட்டார்கள்.

இந்நிலையில் பெரியதாழைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் தனியார் தண்ணீர் லாரிகள் மிரட்டப்படுகின்றன. மேலும் பெரியதாழையில் இரண்டு புறமும் அதிக அளவில் போலிசார் குவிக்கப்பட்டு பதட்டமான சூழ்நிலையை போலிசார் உருவாக்கி ஊர்மக்களை மிரட்டி வருகிறார்கள். ஊரில் முக்கியமான நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடும் முயற்சி நடந்துவருகிறது. இந்த சூழ்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரியின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. 30.8.13 காலையில் மக்கள் பார்த்த போதுதான் இது தெரியவந்தது.

போலிசார், வருவாய் துறையினர் VV மினரலுக்கு ஆதரவாக பெரியதாழை ஊர்மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் மற்றும் பொய் வழக்குகள் போட தயாராகிவிட்டார்கள். எது செய்தேனும் லாரியை மீட்க போலிசு தயாராகி விட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு