Friday, May 2, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஐஏஎஸ் ஐபிஎஸ் கூட்டத்திற்கு இலவச வெளிநாட்டு மருத்துவம் !

ஐஏஎஸ் ஐபிஎஸ் கூட்டத்திற்கு இலவச வெளிநாட்டு மருத்துவம் !

-

வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அரசு உயர் அதிகாரிகளின் மொத்த செலவுகளையும் அரசே கொடுத்து விடுவதாக மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல்பணி) ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவுப் பணி) ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் இரண்டு மாதங்கள் சிகிச்சைக்கான செலவை கொடுத்து விடுவதாக செப்டம்பர் 3-ம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

government-hospitalஇதுவரை நடைமுறையில் இருந்த 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளின்படி, வெளிநாட்டுக்குப் போகும் விமான பயணச் செலவு தரப்பட மாட்டாது. அகில அந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தனியார் பகுதியில் அதே சிகிச்சை பெறுவதற்கு ஆகும் அளவிலேயே மற்ற செலவுகளுக்கு பணம் தரப்படும்.

இப்போது மாற்றப்பட்டுள்ள விதிகளின்படி, வெளிநாட்டுக்குப் போகும் அதிகாரிக்கு மட்டுமின்றி உடன் செல்லும் ஒருவரது பயணச் செலவையும் அரசு கொடுத்து விடும். குறிப்பிட்ட அதிகாரிக்கு இணையான தரவரிசையில் வெளிநாட்டில் பணி புரியும் வெளியுறவுத் துறை அதிகாரிக்கு கொடுக்கப்படும் விமான பயணச் செலவு, மருத்துவமனை செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு பணம் தரப்படும்..

இந்தியாவில் இல்லாத நோய்களுக்கான சிகிச்சைக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்படும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இது வரை இருந்த விதிகளின் படி சிறுநீரக மாற்று சிகிச்சை, இரண்டாவது இருதய அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை, தீவிர கிட்டப் பார்வை கோளாற்றை சரி செய்வது போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைக்கான பண உதவி வழங்கப்பட்டு வந்தது. மாற்றப்பட்டுள்ள வழிகாட்டல்களின்படி, எந்த ஒரு “மிகவும் சிக்கலான நோய்”க்கும் வெளிநாட்டு சிகிச்சை அனுமதிக்கப்படும்.

newyork-hospitalஎது “மிகவும் சிக்கலான நோய்” என்பதையும் அதற்கான மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குப் போகலாமா என்பதையும் முடிவு செய்வதற்கு மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் ஏற்படுத்தப்படும். தமது சக அதிகாரியின் கோரிக்கையை பரிசீலித்து அந்தக் குழுவினர் அளிக்கும் பரிந்துரையின்படி அந்த அதிகாரியின் சிகிச்சைக்காக இரண்டு பேருக்கான விமான பயணச் செலவையும், வெளிநாட்டு மருத்துவமனையில் 2 மாதம் வரை தங்கி சிகிச்சை பெறுவதற்கான முழுச் செலவையும் அரசு, அதாவது இந்திய மக்களே கொடுத்து விட வேண்டும்.

அப்படி அதிகார வர்க்கத்தினரின் மருத்துவச் செலவை தாங்கிக் கொள்ளவிருக்கும் இந்திய மக்களின் பெரும்பகுதியினருக்கு ஒரு நாளைக்கு அத்தியாவசிய செலவாக, சென்ற ஆண்டு தனது அலுவலகத்தில் இரண்டு கழிவறைகளை புதுப்பிக்க ரூ 35 லட்சம் மக்கள் பணத்தை செலவிட்ட திட்ட கமிஷன் நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூ 33.40, கிராமப் புறத்தில் ரூ 27.20 என்ற வரையறுத்திருக்கிறது. அவர்களுக்கு இந்தியாவிலேயே சிகிச்சை கிடைக்கும் நோய் வந்தால் கூட, அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலோ, இடம் கிடைத்தாலும் மருந்து இல்லை, கருவி இல்லை, போதுமான மருத்துவர்கள் இல்லை என்றோ அல்லாட வேண்டும்.

வறுமைக் கோட்டை எப்படி புதுப் புது வழிகளில் குறைப்பது, அரசின் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவம், கல்வி, பொது வினியோகம், குடிநீர் போன்ற துறைகளில் அரசு சேவைகளை எப்படி ஒழித்துக் கட்டுவது, போராடும் மக்களை எப்படி அடித்து ஒடுக்குவது, ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவின் இறையாண்மையை எப்படி அடகு வைப்பது என்று வெளிநாடுகளில் மக்கள் செலவில் உடல் நலம் பேணித் திரும்பும் அரசு அதிகாரிகள் புதிய வேகத்துடன் திட்டம் தீட்டுவார்கள்.

மேலும் படிக்க