Tuesday, May 6, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி : பெற்றோருக்கு அடி உதை, பொய் வழக்கு !

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி : பெற்றோருக்கு அடி உதை, பொய் வழக்கு !

-

தமிழக அரசே !

  • சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியில், கட்டணத்திற்காக மாணவன் துன்புறுத்தல் ! பெற்றோருக்கு அடி உதை, பொய் வழக்கு !
  • தகுதியற்ற தாளாளர் லட்சுமி காந்தன், அடியாட்களான ஆசிரியர்களை பணி நீக்கம் செய் ! கைது செய் !

என்ற முழக்கங்களுடன் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு 12-09-2013 வியாழக்கிழமை அன்று காலை 10.00 க்கு மணிமுற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின்ரை, பெற்றோர்களை போலீசார் கைது செய்தனர்.

நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், தொடங்கிய நாள் முதல் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, பள்ளி தாளாளர்களின் சர்வாதிகார அடாவடித்தனத்திற்கு எதிராக என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இதனால் பல பள்ளிகளின் தாளாளர்கள் தங்கள் கொள்ளையிடும் உரிமை பறிபோனதால் நம் மீது கொலை வெறியில் உள்ளனர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அரசு அதிகாரிகள் சரியாக நடந்து கொண்டிருந்தால் பெற்றோர் சங்கம் அவர்களுக்கு எதிரியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

கடந்த 27-08-13 அன்று மாலை 6.30 மணியளவில் நமது பெற்றோர் சங்கத்தின் முன்னணியாளர் திரு. நடராசன் அவர்களை காமராஜ் பள்ளித் தாளாளர் லட்சுமி காந்தன், “உன்னாலதான் எங்க பிழைப்பே போச்சு” எனச் சொல்லி கெட்ட வார்த்தையால் திட்டி, அடிக்கவும் செய்துள்ளார். ஆசிரியர்களையும் “அடி” என ஏவியுள்ளார்.

அதன்படி சுரேஷ், மணிகண்டன் மற்றும் இரு ஆசிரியர்கள் சேர்ந்து நடராசனை அடித்ததுடன், வயிற்றில் எட்டி உதைத்தும் உள்ளனர். “குடித்து விட்டு அத்துமீறி பள்ளியின் முதல்வர் அலுவலகத்தில் நுழைந்து பெண்களிடம் முறைகேடாக நடந்தார்” எனப் போலீசில் முதல்வர் சக்தி அவர்கள் பொய்ப் புகார் கொடுத்து, நடராசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் நமது சங்க நிர்வாகிகளின் உறுதியான தொடர் போராட்டங்களால் தாளாளர் லட்சுமி காந்தன் மற்றும் நான்கு ஆசிரியர்கள் மீது நடராசனை திட்டி அடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நடராசன் குடித்திருக்கவில்லை என மருத்துவர்கள் சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். கடுமையாக வயிற்றில் தாக்கப்பட்டதால் நடராசன் 6 நாட்கள் சிதம்பரம் அரசு மருத்துவனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடராசன் பள்ளி முதல்வர் அலுவலகத்தில் அத்துமீறி முறைகேடாக நடந்தார் என்றால் சிசிடி கேமரா பதிவை பள்ளிக்கு சாதகமாக உள்ள ஊடக நண்பர்களுக்கு கொடுத்து வெளியிடலாமே. அப்படி நிரூபிக்கப்பட்டால் நாமே நடராசனை போலீசில் ஒப்படைப்போம்.

நடராசன் செய்தது என்ன? அவரது மகன் டேவிட் ராஜா காமராஜ் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார். இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நடராசன் அதுவரை செலுத்த இயலவில்லை. அன்றைய தினம் அவரது மகனை மாதத் தேர்வு எழுத விடாமல் வகுப்பறைக்கு வெளியில் நீண்ட நேரம் நிற்க வைத்திருக்கிறார்கள். “கட்டணத்தை ஓரிரு மாதங்களில் செலுத்தி விடுகிறேன். தொடர்ந்து நடக்கும் தேர்வுகளை எழுத என் மகனை அனுமதியுங்கள்” என அனுமதி கேட்கவே முதல்வரை சந்தித்துப் பேச முற்படுகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த தாளாளர், “இந்த நாயை ஏன் உட்கார வைத்து பேசுகிறீர்கள். வெளியே அனுப்புங்கள்” என்று கூறியதுடன், “உன் பையன் பெயரை ரோல் நம்பரில் இருந்து எடுத்தாச்சு. உன்னால ஆனதப் பாரு ! போ வெளியே !” எனச் சொல்லி நடராசனை நெட்டித் தள்ளியுள்ளார். இச்சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் நடராசனது தந்தை காலமானார். கடுமையான சர்க்கரை வியாதி காரணமாக நடராசன் தொடர்ந்து அதிகளவு மருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்.

பள்ளிக் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரமும் முதல்வருக்கு மட்டுமே உள்ளது. நடராசனிடம் பேச வேண்டிய, சந்திக்க வேண்டிய அவசியம் தாளாளர் லட்சுமி காந்தனுக்கு இல்லை. காமராஜ் பள்ளியில் இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சுமார் 2500 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. பெற்றோர்கள் சகித்துக் கொண்டு “தொலையுது போ” எனக் கட்டுவதால், பெரிதாக கேள்வியோ, போராட்டமோ இங்கு எழுவில்லை. முந்தைய ஆண்டு நமது சங்கம் போராடியதால் ஸ்மார்ட் கிளாசுக்கு ரூபாய் 600 மட்டும்தான் வசூலிக்க வேண்டும் என நீதியரசர் சிங்காரவேலு உத்திரவு போட்டார். நமது சங்க உறுப்பினர்கள் அந்த தொகையை மட்டும் ஸ்மார்ட் கிளாசுக்கு கட்டினோம். முன்னரே ஏனைய பெற்றோர்களிடம் சுமார் 10,000 ரூபாய் வரை அதற்கு வசூலிக்கப்பட்டிருந்தது. அந்த தொகையை ஆயிரக்கணக்கான பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். தாளாளர் லட்சுமி காந்தன் ஏன் திருப்பிக் கொடுக்கவில்லை ?

“கட்டணம் செலுத்தாத மாணவனைத் துன்புறுத்தக் கூடாது, பள்ளியிலிருந்து நீக்க முடியாது” என்பது நன்கு சட்டம் தெரிந்த தாளாளர் லட்சுமி காந்தனுக்கு தெரியாததல்ல. பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி கேட்காமல் அடிபணிந்து போவதால், தாளாளர் தான் வைத்தது தான் சட்டம் எனச் செயல்படுகிறார். பெற்றோர்களை அடிக்கிறார், அடியாட்களை வைத்து பெற்றோர்களை மிரட்டிப் பார்க்கிறார். நாம் போராடினால் தான், தமிழக அரசு இதில் ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

நடராசனைத் தாக்கிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தாளாளர் லட்சுமி காந்தனை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். காவல்துறை அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேணடும். “கட்டணக் கொள்ளையை பெற்றோர்கள் எதிர்த்தால் இதுதான் கதி” என பள்ளி தாளாளர் தனது முடிவை தெளிவாக சொல்லி விட்டார். பெற்றோர்கள் மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பதை அதிகாரிகள் அவர்களுக்கு சொல்ல வேண்டாமா? நாம் இப்போது போராடத் தவறினால் இன்று நடராசனுக்கு ஏற்பட்டது தான் நாளைக்கு ஏனைய பெற்றோர்களுக்கும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக்  செய்யவும்]

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சிதம்பரம்
தொடர்புக்கு – 97904 04031

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க