Saturday, August 20, 2022
முகப்பு வாழ்க்கை அனுபவம் சொத்துக்காக திருமணம் - ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் !

சொத்துக்காக திருமணம் – ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் !

-

ள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்ட ஒரு 17 வயது மாணவிக்கு, திடீரென்று ஒரே வாரத்துக்குள் கல்யாணம் செய்து வைத்தால் அவளால் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? கிராமம், கிராமத்தில் உள்ள பள்ளியில் படிப்பு, ஆடு, மாடு, வயல் என்றும், அம்மா, அப்பா, தம்பி, தங்கை, உறவினர்கள் என்றும் ஒரு வட்டத்துக்குள் சுற்றி வந்தவள் பட்டணத்து கல்லூரியை கண்டு எப்படி சந்தோசப்பட்டிருப்பாள். படிப்புதான் முக்கியம் என்று தோன்றினாலும், எதையும் தைரியமாக சொல்லவோ, முடிவெடுக்கவோ உரிமை இல்லாத கிராமத்து குடும்பப் பெண் எப்படி மறுத்து பேசுவாள்? எனக்கு இந்த திருமணம் வேண்டாம், என்னை படிக்க வையுங்கள், நான் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று எதிர்த்து போராடத்தான் முடியுமா? படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு குழந்தைக்கு கல்யாணம் செய்கிறோமே என்ற எண்ணமோ, அறிவோ இல்லாத பிற்போக்கான குடும்பம், அந்த குழந்தையின் மனதில் உள்ள ஆசையை, ஏக்கத்தைப் புரிந்துக் கொள்ளத்தான் நினைப்பார்களா?

பெண் அடிமைத்தனம்தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் நடந்த்துள்ளது இந்த திருமணம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த 17 வயதே ஆன அந்த மாணவியை 35 வயதுக்கு மேலே உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். “சொந்தக்கார மாப்பிள்ளை, அதுவும் பணக்கார மாப்பிள்ளை, படிச்சுருக்காரு இதவிட நல்ல மாப்பிள்ளை கிடைக்காது” என்பதுதான் மாப்பிள்ளைக்கு தகுதி. குடும்பத்தில் மூத்த பெண்தான் இந்த கல்யாணப் பெண். ஆண் வாரிசு ஆசையில் இவளுக்கு கீழே வரிசையாக இன்னும் மூன்று பெண்களும், அதற்கு பிறகுதான் ஒரு ஆண்பிள்ளையும் உள்ளது. இந்த குடும்பத்தினர் அந்த ஊரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பணக்காரர்கள். இருந்தாலும் சொத்தின் அளவுக் குறையாமல் நான்கு பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதுவும் இவர்கள் அளவுக்கு குறையாத, பணக்காரர்களாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கல்யாண வயது ஆகி விட்டதா, ஆண் பெண்ணுக்கு பொருத்தமானவரா என்பதெல்லாம் முக்கியமில்லை. பணம் பணத்தோடு சேர வேண்டும். முக்கியமாக இனத்தோடும் சேர வேண்டும். இதை தாண்டி பெண்ணின் திருமணத்தில் இவர்களுக்கு எதுவும் முக்கியமானதாக படவில்லை.

இரண்டு குடும்பத்தார்களிடையே உள்ள சொத்து பிரச்சனையில் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. “பொண்ணைக் கொடு இல்லையேல் சொத்தை பற்றிய விவகாரத்தை தீர்த்துக் கொள்வோம்” என்பதுதான் பிரச்சனை. பணக்காரர்களின் விவகாரம் என்பதால் யார் சொத்து யாரிடம் இருக்கு என்பது வெளியில் தெரியவில்லை. இந்த சொத்துக் கணக்கு வழக்கை முடித்துக் கொள்ளத் தான் இந்த அவசர திருமணம். சொத்து பத்து அதிகம் உள்ள மாப்பிள்ளை, பெண்ணுக்கு வயது ஆகலையேன்னு விட்டுட்டா நாம தேடுறப்ப பணக்கார மாப்பிள்ளை கிடைப்பானா. அதுவும் தவிர சொத்தும் நமக்குள்ளேயே ஒன்னுக்குள் ஒன்னாக இருக்கும் என்ற அடிப்படையில் நடந்து முடிந்துவிட்டது இந்த திருமணம்.

இதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெண்ணை இது போலவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி பதினாறு வயதிலேயே, அதிக வயசு வித்தியாசம் உள்ள தாய் மாமாவுக்கு சொத்துக்காக திருமணம் செய்து வைத்தார்கள். நல்லாப் படிக்கக் கூடிய அந்த பெண் படிப்பில் அதிகம் ஆர்வமுடன் இருந்தால். திருமணம் முடிந்தாலும் பரவாயில்லை நான் படிக்கிறேன் என்றாள். அதை மறுத்து அந்தப் பெண்ணை இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்படி குடும்பத்தார் வழியுறுத்தினர். தனியாக வீடு பார்த்து இருவரும் சேர்ந்திருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினர். கொஞ்சமும் விருப்பம் இல்லாத அந்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டு பிரமைப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள். அவள் வாய் திறந்து பேசும் சொற்பமான பேச்சும் படிப்பை பற்றியே இருக்கும். திருமண வாழ்க்கையால் மன உளைச்சலில் இருந்தவள் இப்போது மன நோயாளியாகவே ஆகிவிட்டாள். இருந்தும் மீண்டும் அதே குடும்பத்தை சேர்ந்த இன்னும் ஒரு பெண்ணை கொஞ்சமும் பயம் இல்லாமல் சொத்துக்காக துணிந்து கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள்.

அதிகாலை நான்கு மணிக்கு வெளியூரில் உள்ள கோவிலில் வைத்து இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் சில பேர் காவல் துறையில் உள்ளவர்கள். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த திருமணத்தில் சொந்தக்காரராக முன்னிருந்து அனைத்து வேலைகளையும் பொறுப்பாக கவனித்துள்ளார்கள். சட்டப்படி தடுக்கவில்லை என்றாலும் உறவினராக இருந்து பெண்ணின் பெற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி தடுத்திருக்கலாம். அனைவரும் சேர்ந்தே இந்த சின்னப் பெண்ணுக்கு கல்யாணம் எனும் விலங்கை பூட்டிவிட்டார்கள். இனி அவள் ஒரு ஆயுள் கைதியாக இருக்க வேண்டியதுதான்.

படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? எதுக்கு கல்லூரிக்கு படிக்க அனுப்பினார்கள்? நல்லா படிக்க வைத்து பெண்ணின் லட்சியத்தை நிறைவேற்ற அல்ல. படித்த மாப்பிள்ளை வந்தால் கல்யாணச் சந்தையில் விலைபேசத் தோதுவாக இருக்கும் என்பதற்காக ஒரு டிகிரி படிப்பு அவ்வளவுதான். பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்பிய பிறகு காதல், கீதல் வந்துவிடும் என்றப் பயத்திலேயே பெற்றவர்கள் இருப்பார்கள். இது போல் மாப்பிள்ளை வந்தால் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, பெண்ணின் எதிர்காலம் குறித்து சிறிதளவும் சிந்திக்காமல் கல்யாணப் புதைகுழிக்குள் தள்ளிவிடுவார்கள்.

செங்கல், ஜல்லி, மணல் வியாபாரம் செய்றவர் ஒருவர் சொன்னார். “எனக்கு இரண்டு பொண்ணு பாத்துருக்காங்க. ஒரு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு, ஆனா எந்த லாபமும் இல்ல. இன்னொரு பொண்ணைக் கொஞ்சமா புடிச்சுருக்கு. ஆனா நல்ல லாபம், அவங்க வீட்டுல தருசு நிலம் இருக்கு செங்கல் காளவா போட்டுக்கலாம், பொண்ணோட தம்பி சிவில் இஞ்சினீயர் முடிக்கப் போறான், பணமும் கைவசம் வச்சுருக்காங்க, வியாபாரத்துல நெருக்கடின்னா உதவுவாங்க, அதனால இந்த பொண்ண புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்.” மனது ஒத்துப் போகுதா என்பதெல்லாம் பாக்காம, இந்த திருமணத்தில் என்னென்ன லாபம் இருக்கு அப்படிங்கறதத்தான் பாக்றாங்க.

லெனின்கிராமத்துலப் புருசன் வீட்டில் வாழப்போற பொண்ணுக்கு நல்லது, கெட்டது சொல்லியனுப்புவாங்க. ‘’வீட்டுல உனக்குக் கீழ இன்னும் பொண்ணுங்க இருக்காங்க, அத மனசுல வச்சுகிட்டு மாப்பிள்ளை வீட்டுலப் பாத்து நடந்துக்கணும். எடுத்ததுக்கெல்லாம் கோபப்படக் கூடாது. மாப்பிள்ளக் கை நீட்டற அளவுக்கு நீ நடந்துக்கக் கூடாது. ஆன்னா, ஊன்னா, பொசுக்கு பொசுக்குன்னு அம்மா வீட்டுக்கு வந்துறக் கூடாது. எது நடந்தாலும் அனுசரிச்சுப் போகணும்.” இந்த வார்த்தைகளைப் புத்திமதிங்கற பேர்ல சொல்லி, புருசன் வீட்டுக்குப் போற பெண்கள அடிமைகளாக இருக்கணுங்கறதத் தான் வலியுறுத்துறாங்க. பிறகென்ன சுயமரியாதையை விட்டுட்டு, சம்பளம் இல்லாத வேலக்காரியா இருக்க வேண்டியதுதான்.

இந்த அறிவுரை எனும் பயமுறுத்தலான வார்த்தைகள் எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு வடிவில் பெண்களை பின்தொடர்ந்தே வரும். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சொல்லத் தயக்கமாக இருக்கும். நமக்குள்ளேயே மறைக்க தோணும். சந்தோசம் இல்லையென்றாலும் இருப்பது போல் நடித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் வாழப் பழகிடும். நம்மால் பெற்றவர்கள் குடும்பம் நிம்மதி இல்லாமல் போய்விடும் என்ற பயத்தால சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழவேண்டிவரும்.

ஆயிரம் ஆசையுடனும், கனவுகளுடனும் மனதார விருப்பப்பட்டு ஒருவரை திருமணம் செய்து கொள்ளத்தான் ஒரு பெண் ஆசைப்படுவாள். ஆனால் ஆசை ஆசையாகத்தான் இருக்குமே தவிர நடைமுறை வேறாகத்தான் அமையும். அதுவும் கிராமத்து பெண் என்றால் விருப்பு வெருப்பு எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவள். உயிர் உள்ள எந்திரம் போல இருக்க வேண்டியதுதான். அவளைப் பற்றிய எந்த ஒரு முடிவானாலும் ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்களை பொருத்த வரையில் பெண் என்பவள் மனுசி அல்ல. எஜமானன் சொல்லுக்குக் கட்டுப்படும் ஆடு, மாடுகளைப் போல் அவளும் ஒரு விலங்கு.

என்று மாறும் இந்த அவல நிலை?

– சரசம்மா

  1. “இதவிட நல்ல மாப்பிள்ளை…..”

    “நல்ல” என்பதற்கான இலக்கணத்தை வகுக்கப் போனால் நாட்டில் ஒருவரும் தேறமாட்டார்கள் என்கிற அளவுக்கு இன்று சமூகம் சீரழிந்துள்ள நிலையில் இருக்கும் போது நல்லவனை எங்கே தேடுவது? யாரும் தேறமாட்டார்கள் என்பதால்தான் தங்களுக்கு தேவையானதை மட்டுமே வைத்து நல்லவனை தீர்மானித்துக் கொள்கிறார்கள். அப்பட்டமான தன்னலம் சார்ந்ததே “நல்ல” என்பதற்கான இலக்கணம்.

  2. //நசரிக்கும்வீட்டு வேலையிலிருந்து பெண் விடுதலை பெறாமல் மனித குலம் விடுதலை அடைய முடியாது-lenin //

    முதுலாளித்துவம் தான் பிரிட்ஜ் , வாசிங் மெசிண்,டிஷ் வாஷற் , மிக்ஷி ,கிரைந்டர் , ரோபோ தளம் துடைப்பான் என்று பல வழிகளிலும் பெண்களின் நேரத்தை விடுதலை செய்தது

  3. இது சமுக அவலம்தான். சுட்டி காட்ட வேன்டியதுதான். இருந்தாலும் எந்த ஆதிக்க சாதி என்று போட ஏன் தயக்கம் ? என்ன் பயம் ? நான் ஏற்கனவே மறுமொழி இட்டது போல , இவர்கள் தமிழ் இனம் அல்லாமால் வேறு மொழியா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க