privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி

இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி

-

“நரேந்திர மோடியை ஏன் நிராகரிக்க வேண்டும்?” – இது விடை கூற முடியாத கடினமான கேள்வி அல்ல. 2002-ம் ஆண்டில், குஜராத்தில் மோடி நடத்திய கொலை வெறியாட்டமும், அதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் எதுவுமே நடக்காதது போல நரேந்திர மோடி மறுபடியும் அரசியல் அரங்கில் தோன்றி, கார்ப்பரேட் ஊடகங்கள் மற்றும் சங்க பரிவாரங்களால் இன்று கதாநாயகனாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.

ஞாநி
ஞாநி

இந்த ஆபத்தான இந்து மத வெறியனை பிரதமர் வேட்பாளராக பொருத்தமாகத்தான் அறிவித்திருக்கிறது, இந்துமதவெறி பாசிசத்தை சித்தாந்தமாக கொண்ட பாரதிய ஜனதா கட்சி. ஒருவேளை மோடி என்ற ஆபத்தான மதவெறியன், இந்த நாட்டின் பிரதமரானால் நாடு என்னவாகும்? இந்த அச்சத்தில் இருந்துதான் நரேந்திர மோடிக்கான எதிர்ப்புகள் பிறக்கின்றன. நரேந்திர மோடியை நிராகரிக்கக் கோருவோரின் குரல்களும் இந்த பின்னணியில் இருந்தே ஒலிக்கின்றன.

ஆனால் பத்திரிகையாளர் ஞாநி இதில் இருந்து மாறுபடுகிறார். அவரும் மோடியை நிராகரிக்கத்தான் சொல்கிறார். ஆனால் பலவீனமான குரலில். “தி இந்து” தமிழ் நாளிதழில் “பிரதமர் வேட்பாளர் என்று உண்டா? என்ற தலைப்பில் பத்தி எழுதியிருக்கிறார் ஞாநி. அதில் அவர் சொல்வது… “இந்திய ஜனநாயகத்தின்படி பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. மக்கள், கட்சி அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யவே வாக்களிக்கின்றனர். அப்படி, அதிக உறுப்பினர்களை பெறும் கட்சி, தங்களுக்குள் ஒருவரை பிரதமராக முன்னிருத்தும். அவரை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பார். இதில் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க சட்டத்தில் இடமில்லை” என்கிறார் ஞாநி. ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சி வாஜ்பேயி, அத்வானி, நரேந்திர மோடி ஆகியோரை பிரதமர் வேட்பாளர்களாக முன்கூட்டியே அறிவித்து வருகிறது என்றும், இது கட்சியல்லாமல் தனி நபரை முன்னிருத்தி வாக்குக் கோரும் அமெரிக்காவின் ஆபத்தான முன்மாதிரி என்றும் எச்சரிக்கிறார் ஞாநி.

படிப்பதற்கு வேடிக்கையான இந்த கருத்தை மிகவும் தீவிரத் தன்மையுடன் அவர் எழுதுகிறார். முக்கியமாக, கட்டுரை முழுக்க, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் தொனி தீவிரமாக வெளிப்படுகிறது. “ஓ” போட்டு ஓட்டு போட்டால் எல்லாம் ஓ.கே.வாகிவிடும் என்று சொல்பவர் அல்லவா? அந்த மரபின் தொடர்ச்சி இது. என்றாலும், இது ஓர் அறிவார்ந்த வாதம் போல் முன்வைக்கப்படுவதால் இதை உடைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கட்சிகள், தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே மக்களுக்குத் அறியத் தருவது இது முதல் முறையல்ல. அது நேரு காலத்தில் இருந்தும் அண்ணா காலத்தில் இருந்துமே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரதமராவார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் மக்களுக்குப் புரியுமா?

“நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக” என்று கருணாநிதி சொன்னதை எந்த வகையில் சேர்ப்பது? எம்.ஜி.ஆர். தலைமையேற்று எதிர்கொள்ளும் தேர்தலில் எஸ்.டி.எஸ்ஸையா முதலமைச்சர் ஆக்குவார்? வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவர்தான் முதலமைச்சர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போல சென்ற சட்டசபை தேர்தலில்ல “நான் வெற்றி பெற்று முதலமைச்சராக ஆனால் ஈழம் தருவேன், லேப்டாப் தருவேன்” என்றெல்லாம் ஜெயலலிதா முழங்கிய போதெல்லாம் ஞாநி என்ன செய்து கொண்டிருந்தார்?

இந்திராகாந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா
அறிவிக்கப்படாத பிரதமர்/முதல்வர் வேட்பாளர்கள்

ஒருவேளை யார் பிரதமர்/முதல்வர் என்பது தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். மன்மோகன்சிங் முதல் முறை பிரதமராக வரும்வரையிலும் அவர் பிரதமராக வரப்போவது மக்களுக்குத் தெரியாதுதான். ஆனால் தன் கடையின் கல்லாவில் யாரை உட்கார வைப்பது என்று உலக வங்கியும், அமெரிக்காவும் முன்பே முடிவு செய்ததுதானே?!  தேவைப்படுவது எல்லாம் அது “ஜனநாயகப்பூர்வமாக” நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான சடங்குகள் மட்டுமே. இதில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது மக்களுக்குத் தேர்தலுக்கு முன்பு தெரிந்தால் என்ன, பின்பு தெரிந்தால் என்ன? கழுதை விட்டையில் முன், பின் விட்டைகளுக்கு என்ன முக்கியத்துவம்?

“யார் நடிக்கும் படம் என்று தெரியாமல் எப்படி டிக்கெட் வாங்குவது?” என்று ஞாநி கட்டுரையின் பின்னூட்டத்தில் பலர் கேட்டுள்ளனர். அவர்களின் ஆதங்கம் நடுத்தர வர்க்கத்தின் அப்துல் கலாம் வகையாக வெளிப்படும் ‘ஜனநாயகம்’ பற்றிய பாமரத்தனமான கருத்து. ஆனால் அவர்களுக்குப் புரிய வேண்டிய உண்மை என்னவெனில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திரையரங்கின் உள்ளே ஒரே ஹீரோவின் படம்தான் ஓடப்போகிறது. தலைகள் மாறலாம்; அங்க அடையாளங்கள் மாறலாம். அடிமையின் உடல்மொழியும், எட்டப்பனின் குயுக்தியும், இன்னபிற எஜமான விசுவாசங்களும் அப்படியேதான் இருக்கப்போகின்றன. ஆகவே அவர்களின் ஆவல் நியாயம் போலத் தோன்றினாலும் அது பொருளற்றது.

தேர்தலில் வாக்கு கேட்கும்போது ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். அப்போது “ஜெயலலிதாதான் முதலமைச்சர்” என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். இப்படி மக்கள் நினைத்து வாக்களிக்க முடியாது என்று வாதாட முடியுமா? இந்த உரிமையை யாரும் சட்டப்படியே தடுத்து விட முடியாது. ஆனால் வெற்றி பெற்று வந்ததும் சொத்துக் குவிப்பு நீதிமன்றத் தீர்ப்பினால் முதல்வர் பதவி பறிக்கப்படுகிறது. உடனே ஓ.பி.எஸ். என்ற டக்ளஸை முதலமைச்சராக்குகிறார் ஜெயலலிதா.

“நாங்கள் ஜெயலலிதாவுக்குதான் ஓட்டுப் போட்டோம். ஓ.பி.எஸ்ஸை எங்களுக்குப் பிடிக்கவில்லை” என்று மக்கள் கேட்க முடியுமா? இதையும் சட்டப்படி பார்த்தால் அந்தக் கருத்தை சொல்லவேனும் மக்களுக்கு உரிமை உண்டா? கிடையாது. ஏன் கிடையாது என்றால் இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம். சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை தெரிவு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் முதலமைச்சராகவோ இல்லை பிரதமராகவோ வரலாம். சட்டம் கோருவது இதை மட்டுமே. மாறாக மக்கள் நினைப்பது, நினைத்து வாக்களிப்பது இவையெல்லாம் சட்ட மொழியிலும் சரி, ஜனநாயக முறையிலும் சரி வெறும் பரபரப்பு மட்டுமே. இங்கு மக்கள் ஓட்டு போடலாம்; ‘ஓ’ போடலாம்; உரிமையை எல்லாம் கேட்க முடியாது.

மோடி
“மோடியை எங்கள் நாட்டுக்குள் விடமாட்டோம்”

“மோடியை எங்கள் நாட்டுக்குள் விடமாட்டோம்” என்று கறாராக அவருக்கான விசாவை தொடர்ந்து மறுத்து வருகிறது அமெரிக்கா. “நீயே உலகம் முழுக்க படுகொலைகளைப் புரிகிறாய். ஈராக், வியட்நாம், ஆப்கானிஸ்தான், சிரியா என உலகம் எல்லாம் இனப் படுக்கொலைகளை செய்யும் நீ, ‘வெறும் 3,000 முஸ்லிம்களை’ கொலை செய்த எங்கள் மோடியைப் பார்த்து படுகொலையாளன் என்று எப்படிச் சொல்லலாம்?” என்று ‘தார்மீக உரிமை’யுடன் இந்துத்துவ வாதிகள் கோபப்படவில்லை. ‘‘நீயும் முஸ்லிம்களை கொல்கிறாய்… எங்கள் மோடியும் அதைத்தான் செய்தார். அதனால் நாம் இருவரும் ஒன்று’’ என்று ‘உரிமை’யுடனும் கேட்கவில்லை. மாறாக, ‘என் வீட்டுக்குள் வராதே’ என்று விரட்டி அடிக்கும் அமெரிக்காவின் வாசல் படியில் வீழ்ந்து, ‘எப்படியாவது உள்ளே விடுங்கள்’ என்று மன்றாடுகிறார்கள்.

தன்மானம் என்பது சிறிதும் இல்லாத இந்த அமெரிக்க அடிமைகள் நரேந்திர மோடியை வீரத்தின் அடையாளமாக முன்னிருத்துவது எவ்வளவுப் பெரிய நகைமுரண்? இந்த கொலைகார மோடியை ஞாநியின் தொழில்நுட்பக் காரணங்களுக்காக நிராகரிப்பதன் மூலம், மோடி இழைத்த குற்றத்தின் அடர்த்தி குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஒருவகையில் இது மோடிக்கே நன்மையாக முடிகிறது. இத்தகைய பொருத்தமற்றதும், பலவீனமானதுமான எதிர்ப்புகள் பொதுவெளியில் உலா வருவதை இந்துத்துவ கும்பல் நிச்சயம் ஆதரிக்கவே செய்யும். இந்த வகையில் ஞாநி, மோடிக்கு உதவுகிறார்.

இந்தியாவில், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. அத்தகைய சூழலில், குறிப்பிட்ட பிரச்னையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டி அந்த கொள்கை முடிவுக்கு தடை கோரலாம். அதாவது கொள்கையை எதிர்க்க முடியாது. அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை எதிர்க்கலாம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இத்தகையதுதான்.

தற்போது மோடியை கொள்கைப் பூர்வமாக எதிர்த்து நிராகரிப்பதில் ஞாநிக்கு எந்த மனத் தடையும் இருக்கப்போவதில்லை. ஆனாலும் அவர் “பிரதமர் வேட்பாளர் என்று உண்டா?” என்று ஜனநாயகத்தின் இண்டு இடுக்குகளில் உள்ள தொழில் நுட்பக் கோளாறுகளை முன்வைத்து மோடியை நிராகரிக்கிறார். ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஏனெனில் ஞாநி போன்ற தன்னைத்தானே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடப்பாடு உள்ளவர்களாக நியமித்துக் கொண்டு வாழும் அறிவுஜீவிகளால் ஒரு பிரச்னைக்கான அரசியல் தீர்வுகளை, நடைமுறையின் பொருத்தப்பாட்டுடன் முன்வைக்க முடியாது. அவர்களின் சிந்தனை வரம்பே இவ்வளவுதான்.

மோடி
இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எந்தக்காலத்திலும் ஜனநாயகம், நீதி மன்றம், சட்டசபை, பாராளுமன்றம், அரசியல் சட்டம் போன்ற புனிதப் பசுக்களை மதிப்பதில்லை.

மேலும் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எந்தக்காலத்திலும் ஜனநாயகம், நீதி மன்றம், சட்டசபை, பாராளுமன்றம், அரசியல் சட்டம் போன்ற புனிதப் பசுக்களை மதிப்பதில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள். மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு, மும்பை – குஜராத் கலவரங்கள் மூலம் அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள். இந்த புனிதப்பசுக்கள் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து வந்தால் ஓகே. இல்லையென்றால் சம்ஹாரம்தான். எனில் இத்தகைய மதவெறி பாசிஸ்ட்டுகளை எதிர்த்த போராட்டம் தெருவிலும், மக்கள் களங்களிலும் சித்தாந்த ரீதியிலும், போர்க் குணமிக்க முறையிலும் நடக்க வேண்டும். இதன்றி இவர்களை வேரறுக்க வேறு வழியில்லை. அப்படி இருப்பதாக ஞாநி போன்றவர்கள் காட்டும் ‘ஜனநாயக’ நம்பிக்கைதான் அபாயகரமானது.

இந்துமதவெறியர்களை சட்டபூர்வமாக எதிர்த்து வீழ்த்துவதாகத்தான் போலிக் கம்யூனிஸ்டுகள் முந்தைய ஆட்சிக்காலத்தில் காங்கிரசு கூட்டணி அரசை ஆதரித்தார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சங்க பரிவாரங்கள் வளர்ந்து இன்று மோடியை முன்னிறுத்தி இறந்து போன ஆவிகளை உயிர்க்கச் செய்ததுதான் மிச்சம். காங்கிரசே ஒரு மிதவாத இந்துத்துவாக் கட்சி எனும் போது, சட்ட, நீதிமன்ற, அதிகாரத்துவ அமைப்புகளெல்லாம் அவாளின் அஜெண்டாவிற்கு அடிபணியும் போது நாம் உழைக்கும் மக்களை போர்க்குணமிக்க முறையில் அணிதிரட்டி அவர்களுடன் சண்டை போடவேண்டும். அதை விடுத்து மரபு, ஜனநாயகம் என்ற பெயரில் சிண்டை இழந்து விடுவது அறிவீனம்.

ஏதோ இந்திய ஜனநாயகம் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது போலவும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன்னே சொல்வதா பின்னே சொல்வதா என்பதில் மட்டும்தான் சிக்கல் வந்துவிட்டதைப் போலவும் ஞாநி எழுதுகிறார். இந்த ஜனநாயகம் என்பது, அனைத்து அம்சங்களிலும் உடைந்து நொறுங்கி விட்டக் குட்டிச்சுவர். இந்த ஜனநாயகம்தான் நாட்டை சேரி என்றும், ஊர் என்றும் பிரித்து வைத்திருக்கிறது. இந்த ஜனநாயகம்தான் ‘அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உண்டு’ என்று சட்டம் இயற்றிவிட்டு, கோயிலுக்குள் நுழையும் தலித்துகளை ‘பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததாக’ கைது செய்கிறது. இந்த ஜனநாயகம்தான், கல்விக்கடன் பெற்ற மாணவனின் புகைப்படத்தை வங்கி நுழைவுவாயிலில் ஒட்டிவைத்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிக்கு மானியம் வழங்குகிறது.

இந்த ஜனநாயகம்தான் இசுலாமிய மக்களை போலி என்கவுண்டர்களில் கொன்று நியாயப்படுத்துகிறது. செய்தவர்களை பிரதமராகவே முன்னிறுத்துகிறது. ஆகவே இதன் மீது நம்பிக்கை வைப்பதற்கு இனிமேலும் எதுவும் இல்லை. அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்! அந்த நம்பிக்கையை தும்பிக்கையாகக் கொண்டு, மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டது மரபிற்கு விரோதம் என்று மெனக்கெட்டு வாதிடுகிறார். நமக்கு மோடியும் வேண்டாம், இந்த மரபும் வேண்டாம்.

– வளவன்