privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்கா2023-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் ரியாலிட்டி ஷோ !

2023-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் ரியாலிட்டி ஷோ !

-

ரு வழிப் பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்க இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

1961-ல் சோவியத் யூனியன் முதன்முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது. 1969-ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில் நிலவுக்கு மனிதனை அனுப்பியது. இவை தொடங்கி பல விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆயினும் செவ்வாய் போன்ற வேறு கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பம் இன்றுவரை நடைமுறையில் இல்லாததால் நாசா நிறுவனமே 2030-க்கு முன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லையென அறிவித்துள்ளது.

சூரியக் குடும்பம்
சூரியன், பூமி, செவ்வாய் (மாதிரி படம்)

மனிதர்களை 2023-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் திட்டத்தை ”முதல் செவ்வாய் (Mars One)” என்ற டச்சு நிறுவனம் அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் செவ்வாய்க்கு போகலாம், கட்டணம் 5 டாலர் வரை குறைவு என்று விளம்பரப்படுத்தியதில் கடந்த 5 மாதத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து செவ்வாய் கிரகம் செல்வதற்காக 2 லட்சத்து 2,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் தோஷத்தின் அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பாரத தேசம் இரண்டாவது இடத்தில் இருப்பதுதான் நகைமுரண். அறிவியலில் ஆர்வமும், சாதனை செய்யும் மனத்துடிப்பும், மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்ல தமது பங்களிப்பை செலுத்த விரும்புவதாலும் செவ்வாய்க்கு செல்ல விரும்புவதாக விண்ணப்பித்திருபவர்கள் சொல்கிறார்கள். அல்லது இந்த புண்ணிய தேசத்தில் வாழப்பிடிக்காமல் கிட்டத்தட்ட தற்கொலை செய்வது போன்ற முடிவாகக்கூட இந்த செவ்வாய் பயணத்தை அவர்கள் விரும்பியிருக்கலாம்.

செவ்வாய் சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இதை செந்நிறமாகக் காட்டுவதால் செவ்வாய் எனப்படுகிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோளான செவ்வாய்க் கிரகத்திற்கு பூமியின் துணைக்கோளான நிலவைப் போல் இரண்டு துணைக்கோள்கள் உள்ளன.

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகள் மற்ற விண்வெளி ஆய்வுகளோடு, அதாவது பிரபஞ்சம் உருவானது எப்படி, அதன் இயங்கு விதிகள் என்ன? வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ சூழ்நிலைகள் இருக்கின்றனவா? உயிரினங்கள் வாழ்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ளும் மனித குலத்தின் அறிவுத் தேடலோடு இணைந்ததும் நீண்டகால பின்னணியை கொண்டதுமாகும்.

முதன் முதலில் 1960-ல் சோவியத் யூனியனின், மார்ஸ்நிக்-1, 2 என்ற இரு விண்கலங்களை ஏவி செவ்வாய்க்கு அருகாமையில் பறந்து ஆய்வு செய்யும் திட்டம் விண்ணுக்கு ஏவும்போது தோல்வியில் முடிந்தது. பின்னர் 1962-ல் ஸ்புட்நிக்-22, மார்ஸ்-1, இரு விண்கலங்களை செவ்வாயின் அருகாமையில் பறக்கவும் ஸ்புட்நிக்-24 என்ற விண்கலத்தை செவ்வாயில் தரையிறக்கவும் முயற்சித்து அவையும் தோல்வியில் முடிந்தன. பின்னர் அமெரிக்காவின் நாசா மாரினர் 3, 4 என்ற இரு திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாரினர்-4 முதல்முறையாக செவ்வாயின் அருகாமையில் பறந்து படங்களையும், தகவல்களையும் அனுப்பியது.

சோவியத் யூனியனின் மார்ஸ்-3 கலம் முதல் முறையாக வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. தொடர்ந்து 1973-ல் மார்ஸ்-4, 5, 6, 7 நான்கு கலங்களை செவ்வாய்க்கு அனுப்பியதில் தரையிறக்கியதில் இருகலங்கள் வெற்றிகரமாக தரையிறங்கின. 1975ல் நாசா வைக்கிங்-1, வைக்கிங்-2 என்ற இருகலங்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவும் விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டது. இதிலிருந்தே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு வெட்டி பந்தாவுக்காக நடத்தப்படுகிறது என்று தெரிகிறது. 1996-ல் பாத்ஃபைண்டர், 2003-ல் ஸ்பிரிட், ஆப்பர்சூனிடி, போன்ற தானியங்கி சுற்றித் திரியும் கலங்களை நாசா செவ்வாய்க்கு அனுப்பியது. சமீபத்தில் 2011-ல் குரியாசிடி என்ற தானியங்கி குட்டி சுற்றித்திரியும் ஆய்வகத்தை நாசா அனுப்பியுள்ளது. இவையனைத்தும் செவ்வாயை பற்றிய அரிய தகவல்களை பூமிக்கு அனுப்பிவருகின்றன.

தற்போது பல நாடுகளும், தனியார் நிறுவனங்களும் தங்களது செவ்வாய் ஆய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோவும் தனது திட்டத்தை அறிவித்துள்ளது. செவ்வாய்க்கு மனிதர்கள் பயணம் செய்யும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இஸ்ரோவில் கஸ்தூரி ரங்கன் இந்த செவ்வாய்க்கான திட்டத்தால் நாட்டு மக்களின் பணம் விரயமாவதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பூமி, செவ்வாய், நிலா - ஒப்பீடு
பூமி, செவ்வாய், நிலா – ஒப்பீடு

செவ்வாய் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பூமியிலிருந்தான அதன் தொலைவு சராசரியாக 20 கோடி கிலோமீட்டர் ஆக உள்ளது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை 5.7 கோடி கிலோமீட்டர்கள் தூரத்தில் நெருங்கிவரும். இதுவே பூமியிலிருந்து நிலவின் தூரமான 3.84 லட்சம் கிலோமீட்டரை விட 150 மடங்கு அதிகமாகும்.

புவியின் விட்டம், கொள்ளளவுடன் ஒப்பிட்டால், நமது பூமியில் செவ்வாயை போலுள்ள ஆறு கிரகங்களை உள்ளடக்கிவிட முடியும். புவியின் நிறையில் பத்தில் ஒரு பங்கையே தனது நிறையாக கொண்டுள்ள செவ்வாயின் ஈர்ப்புவிசை புவியைவிட 62% குறைவு. அதாவது, பூமியில் 100 கிலோ எடையுள்ள மனிதர் செவ்வாயில் 38 கிலோ எடை மட்டுமே கொண்டிருப்பார். சந்திரனின் ஈர்ப்புவிசையை விட இரண்டுமடங்கிற்கும் சற்று அதிகமான ஈர்ப்புவிசையை கொண்டுள்ளது. பூமியின் வளிமண்டல அழுத்தத்துடன் ஒப்பிடும் போது செவ்வாயின் வளி அழுத்தம் 1%-த்திற்கும் குறைவு தான்.

செவ்வாயின் நிலப்பரப்பு சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்களை உள்ளடக்கிய தாதுக்கள் மற்றும் பாறைகளை உருவாக்கும் தனிமங்களையும் கொண்டதாகவும் மேற்பரப்பு அதிகமான புழுதி படலத்தை கொண்டதாகவும் உள்ளது. துருவப்பகுதி பூமியைப் போலவே பனி சூழ்ந்திருந்தாலும், அப்பனி பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்சைடை கொண்டதாக உள்ளது. செவ்வாயில் சராசரி வெப்பநிலை −55°C, அதன் நிலநடுக்கோட்டு பகுதியில் கோடைக்கால மதியத்தில் அதிகபட்சமாக 20°C வெப்பநிலை ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கோள் பரப்பு
செவ்வாய் கோள் பரப்பு

செவ்வாயின் உள்மையப்பகுதி புவியின் மையப்பகுதியை போல் பாறைக் குழம்பாக இல்லை. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே குளிர்ந்து விட்டதால் செவ்வாயில் காந்தப்புலம் இல்லை. அதனால் சூரியக்கதிர்வீச்சு, விண்கதிர்வீச்சின் அளவு அதிகம். அதிக கதிர்வீச்சும், குறை ஈர்ப்பு விசையும், செவ்வாயின் குறை ஈர்ப்புவிசை மனித உடற்கூறில் மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.

மனிதர்கள் செவ்வாய்க்கு செல்ல வேண்டுமானால், இவ்வளவு தூரம் செல்வதற்கும் திரும்பி வருவதற்கான எரிபொருள், அவர்களுக்கான ஆக்சிஜன், உணவு, உடை இவற்றுடன் பாதுகாப்பு சாதனங்கள் என அதிக எடையை கொண்டு செல்லும் பெரிய விண்கலம் தேவை. மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப 30 டன் எடையை சுமந்து செல்ல வேண்டியிருக்கும் என்கிறது நாசாவின் மதிப்பீடு. குறைந்த காற்றழுத்தம், மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக செவ்வாயில் அதிக எடை கொண்ட விண்கலத்தை தரையிறக்குவது கடினம்.

விண்கலங்கள் சாதாரண விமானம் போல் மேலெழும்பி விண்ணுக்கு சென்று விடாது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட அவை வேகமாக ஒரு நொடிக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தை எட்ட வேண்டும். இதற்கு ராக்கெட்டுகள் தேவைப்ப்டுகின்றன. இதற்கான ராக்கெட்டை தயாரிக்க நம் புவியிலேயே குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கும் மேலாகும். செவ்வாயிலிருந்து திரும்புவதற்கு அதன் விடுபடும் வேகம் ஒரு வினாடிக்கு 5 கிலோமீட்டர் அளவில் உள்ளது. இதனால் செவ்வாயிலிருந்து விண்கலம் கிளம்ப அங்கும் ஒரு ராக்கெட் தேவைப்படும்.

ஒரு வழிப் பயணமாக திட்டமிடுவதன் மூலம் கொண்டு செல்லும் எரிபொருளை குறைக்கலாம் என்றும் மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்வதற்கு முன்னரே தங்குவதற்கான குடில்கள் “ஆளில்லா விண்கலங்கள்’ மூலம் அனுப்பப்பட்டு தானியங்கி முறையில் நிர்மாணிக்கப்படுமென்றும் அதன் மூலம் செவ்வாய் பயண வின்கலத்தின் எடை 9 டன்களுக்குள் வைக்கப்படுமென்றும் மார்ஸ் ஒன் தனது திட்ட வரைவில் முன் வைத்துள்ளது. இத்திட்ட வரைவு நடைமுறை சாத்தியங்களை கொண்டு மட்டுமே திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

செவ்வாய் குடியேற்றம்
செவ்வாயில் குடியேற்றம் (ஒரு கற்பனை படம்)

செவ்வாயில் மனிதர்கள் தங்க நிர்மாணிக்கப்ப்டும் குடில்களில் தங்குமிடம், பயிரிடும் பகுதி, உடற்பயிற்சிக்கான பகுதியுடன் பிரத்யோக ஆய்வகமும் இருக்கும் என்றும் இக்குடில்கள் மனிதர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுப்பதோடு, சூரிய கதிர்கள், விண்கதிர்கள், புழுதிப்படலம், நுண்கிருமி தொற்று, தட்பவெப்பம் ஆகிய அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் என்றும் மார்ஸ் ஒன் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாயின் குறைவான ஈர்ப்பு விசையை சமாளிக்க விண் வெளியாளர்களுக்கு பிரத்யோக உடையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எல்லா பிரச்சனைகளையும் தொழில்நுட்ப ரீதியாக தீர்க்கமுடியுமென குறிப்பிட்டுள்ள மார்ஸ் ஒன் மனித குலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சில சவால்களை, அபாயங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமென்றும் கூறியுள்ளது.

கோள்களுக்குடையிலான பயணத்திற்கு தேவையான, பிற கோள்களின் சூழலிருந்து மனிதர்களை காக்கும் சாதனங்கள் என பல்வேறு பிரிவுகளில் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் சாதனங்களை வடிவமைத்து வருகின்றன. அந்நிறுவனங்கள் மார்ஸ் ஒன்னுடன் கூட்டு ஒப்பந்தத்தை போட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின் அவர்களுக்கு உலகெங்கிலும் பிராந்திய வாரியாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் 20-லிருந்து 40 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் மார்ஸ் ஒன்னின் நிரந்தர விண்வெளியாளர்களாக பணியமர்த்தப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு 2015 முதல் சுமார் 7 ஆண்டு காலம் பயிற்சிக்கு பின்னர் 2022-ம் ஆண்டு முதல் குழு செவ்வாய்க்கு அனுப்பப்படும். முதல் குழு சென்ற இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழு அனுப்பப்படும். இவ்விதம் ஆறு குழுக்கள் அடுத்தடுத்து அனுப்பப்படும். ஒரு குழு செவ்வாய்க்கு சென்று இறங்க பயண காலம் சுமார் 7 மாதங்களிலிருந்து 9 மாதங்கள் வரை ஆகும்.

விண்வெளி பயணம்
விண்வெளி பயணம் – ரியாலிட்டி ஷோவாக

வடிவமைக்கப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் சோதித்தறிந்து நடைமுறைக்கு வருவதற்குமுன்னரே மார்ஸ் ஒன் போன்ற நிறுவனங்கள் செவ்வாய் கிரக ஆய்வை விளம்பரப்படுத்தும் நோக்கம் என்ன? இந்த திட்டத்திற்கு மொத்தம் 6 பில்லியன் டாலர்கள் வரை (36 ஆயிரம் கோடி ரூபாய் வரை) செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. லாபநோக்கற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ள மார்ஸ் ஒன் இத்திட்டத்திற்கான செலவை தரப்போவதில்லை, விண்ணப்பித்தோரும் தரப்போவதில்லை. எனில் இத்திட்டத்திற்கு பணம் எப்படி கிடைக்கும்?

கோள்களுக்கிடையிலான ஊடக குழுமம் (Interplanetary Media Group) என்ற லாபநோக்கம் கொண்ட ஊடக நிறுவனத்தை மார்ஸ் ஒன் ஆரம்பித்துள்ளது. இந்த ஊடக நிறுவனத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தங்களின் மூலமும், டி.வி. விளம்பர ஒப்பந்தங்கள் மூலமும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் திரட்டப்படும் என்று மார்ஸ் ஒன்-னின் நிறுவனர் பஸ் லான்ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார்.

அதாவது நம்மூர் சூப்பர் சிங்கர், மானாட மயிலாட ரியாலிடி ஷோக்களை போன்று போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், அது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படும். போட்டி மட்டுமின்றி, 7 ஆண்டு பயிற்சியை நேரடியாக ஒளிபரப்புவது, செவ்வாய்க்குச் செல்பவர்களின் பேட்டி, அவர்களது குடும்பத்தினரின் பேட்டி, செவ்வாய் பயணத்தை டி.வி.யில் காட்டுவது, செவ்வாயில் இறங்குவதைக் காட்டுவது, தவிர இறுதி 24 பேர் விளபரங்களில் நடிக்கும் வருமானம் எனப் பல வகைகளில் பணம் ஈட்டப்படுமாம். சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார். இது வரை இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இவ்வூடக நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு முதலீடு செய்திருக்கின்றன.

முதலாளித்துவ அரசுகள் அறிவியல், தொழில் நுட்ப பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக வெட்டிக் குறைத்து, அவற்றை தனியார் ‘முனைவுக்கு’ விட்டிருக்கும் சூழலில் அறிவியல் ஆய்வுகளுக்கும், வளர்ச்சிக்கும் ரியாலிடி ஷோ, விளம்பரங்கள் என்று சந்தைப்படுத்திதான் காசு பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க படங்களில் தனித் தீவுகளில் கிரிமினல்களை இறக்கி மோதவிட்டு கொலை செய்ய வைத்து அவற்றை நேரடியாக ஒளிபரப்பும் கதைகள் உண்டு. செவ்வாய் பயணமும் அப்படித்தான்.

மார்ஸ் ஒன் 2023ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுபினாலும், அனுப்பாவிட்டாலும் கூட, அது நடத்தும் ரியாலிட்டி ஷோ 2015ல் ஆரம்பித்து 2022 வரை நடக்கும். ஒரு ரியாலிடி ஷோவில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள் என்பதற்கு இந்த செவ்வாய் கூத்து ஒரு சான்று.

– மார்ட்டின்.

மேலும் படிக்க

  1. ………மார்ஸ் ஒன் 2023ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுபினாலும், அனுப்பாவிட்டாலும் கூட, அது நடத்தும் ரியாலிட்டி ஷோ 2015ல் ஆரம்பித்து 2012 வரை நடக்கும்……..
    ———————————————————————————————-
    2015ல் ஆரம்பித்து 2022 வரை என திருத்தவும்.

  2. ஹும்ம்ம்ம்…. விபரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சில மலைக்கவும் வைக்கின்றன.
    நல்ல கட்டுரை.

    பின்வரும் பிழைகளை மட்டும் சரிசெய்து விடுங்கள்.

    //வாழ்க்கையை பயணம் வைக்கிறார்கள்// பணயம்?

    //ரியாலிட்டி ஷோ 2015ல் ஆரம்பித்து 2012 வரை நடக்கும். // 2022 வரை?

  3. // சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவும் விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டது. இதிலிருந்தே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு வெட்டி பந்தாவுக்காக நடத்தப்படுகிறது என்று தெரிகிறது. //

    என்ன ஒய்! சந்தடி சாக்குல அமெரிக்காவை மண்டைல ஒரு கொட்டு வைக்கிறீர்! சோவியத் யூனியன் சுருண்டதுக்கு முன்னால வாயேஜர், மெகல்லன், கலீலியோ அனுப்பினா. அதுக்கு அப்புறம் அனுப்பின கசினி எடுத்த டைடன் போட்டோ எல்லாம் மறந்து போச்சா? மார்ஸ் ரோவர்ஸ் பத்தி நீரே சொல்லிட்டீர். சீரஸ் பத்தி ஆராய அனுப்பின டான் இப்போ வெஸ்டாவை சுத்திண்டு இருக்கு. ப்ளூடோ எக்ஸ்பிரஸ் பட்ஜெட் ப்ராப்ளம் வந்து ஊத்தி மூடினாலும், நியூ ஹரைசன்ஸ் ப்ளுடோவை ஆராய போயிண்டு இருக்கு, யுரேனஸை தாண்டியாச்சு. ஹப்பிள், காம்ப்டன், சந்த்ரா, ஸ்பிட்சர் னு எலெக்ட்ரோ மக்னெடிக் ஸ்பெட்ரதுல வகைக்கு ஒண்ணுன்னு ஸ்பேஸ் டெலஸ்கோப் நாலு அனுப்பினா. இதெல்லாம் ஒரு சாம்பிள் தான். நாசா பட்ஜெட் குறையரதுன்னு சொல்றது சரிதான்னாலும், வெட்டி பந்தான்னு சொல்றது நியாயம் இல்ல. பகுத்தறிவாள் டீக்கடையில ஒக்காந்து பிக் பேங் தியரி பேசறேள். ஆண்ட்ரமேடா ஒரு தனி கேலக்சின்னு நிரூபிச்சு காஸ்மாலஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது அமேரிக்கா தான்றத மனசுல வையும்.

    பரம வைரியா இருந்தாலும் அடுத்தவன் சாதனைய பாராட்டனும் ஒய். நீர் செய்யலேன்னா என்ன. நான் செய்யறேன். அமேரிக்கா மாதா கீ ஜெய்!

    • வினவுக்கு அமெரிக்கான்னாலே துரியோதனைனைப் பெற்ற காந்தாரியப் போல வயித்துலயும் வாயிலயும் அடிச்சுக்கும்.. ம்ம்ம்.. என்ன பண்றது வினவு.. உம் புள்ள ரசியாவத்தான் மண்ல பொதச்சு மாமாங்கம் ஆயிடுச்சு.. அப்பறம் உமக்கு வேற புள்ள பொறக்கல.. அதுக்காக அடுத்தவன் புள்ளைய கரிச்சு கொட்டிறியே..

  4. இவை அனைத்தும் மெயில் ஆர்டர் பிஸ்னஸ் (mob) என்னும் வகையில் கட்டியமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் உலகின் நூதன வகை மோசடிகள்…

Leave a Reply to தமிழ்மொழி.வலை பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க