privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மகஇக தீவிரவாதிகளை கைது செய் - பாஜக காமடி வீடியோ

மகஇக தீவிரவாதிகளை கைது செய் – பாஜக காமடி வீடியோ

-

நீங்கள் காண்பது 23 செப்டம்பர், திங்கள் காலை அரங்கேறிய காமெடி மறியல் காட்சி. ஞாயிறன்று நடைபெற்ற ம.க.இ.க வின் பொதுக்கூட்டத்திற்குத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் பா.ஜ.க வினருக்கு ஒரு புறம் கிலியைக் கிளப்பியது. இன்னொரு புறம், தமிழக பா.ஜ.க வின் பல்வேறு கோஷ்டிகளும் தத்தம் வெயிட்டை காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.

நேற்று முன்தினம் ராத்திரியோடு ராத்திரியாக ரூம் போட்டு யோசித்து, மோடியின் மூஞ்சிக்கு அதிக சேதம் ஏற்படாத வண்ணம் அவர்களே டிஜிட்டல் பானர்களை கிழித்திருக்கின்றனர். பிறகு திங்கள் காலை சுமார் 20 பேர் அடங்கிய ஒரு கோஷ்டி, வீடியோ காமெரா, ஸ்டில் காமெரா, பத்திரிகையாளர்கள் போன்ற முழு செட்டப்புடன் “ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு” வந்து இறங்கினர்.

பாஜக டிராமா
மற்ற கோஷ்டியினர், அடுத்த சில நிமிட இடைவெளியில் வரிசையாக 2,3 கார்களில் வந்து இறங்கினர்.

“ஆக் ஷன்” என்று சிக்னல் வந்தவுடனே முந்திக்கொண்டு ஒருவர் ரோட்டில் படுத்து காமெராவின் கவனத்தை ஈர்த்தார். அப்புறம் சாப்பாட்டு பந்தியில் உட்கார்வது போல வரிசையாக எல்லோரும் சாலைக்கு குறுக்கே சிறிது நேரம் உட்கார்ந்தனர். அப்புறம் போலீசு வந்தது. “பானர் கிழிக்கிறதெல்லாம் சின்ன விசயம். இதப்போய் ஏன் பெரிசு படுத்துறீங்க? என்று கொட்டாவி விட்டபடியே சொன்னார் போலீசு அதிகாரி.

அப்டீன்னா “ம.க.இ.க வினரை கைது செய்யவேண்டும்” என்று கோரினார்கள். “சரி, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எழுந்திருங்கள்” என்று போலீசு சொன்ன மறுகணமே மறியலைக் கைவிட்டு சாலை ஓரமாக நின்று கொண்டனர்.

போட்டி கோஷ்டியினர் முந்திக் கொண்டதை அறியாத மற்ற கோஷ்டியினர், அடுத்த சில நிமிட இடைவெளியில் வரிசையாக 2,3 கார்களில் வந்து இறங்கினர். எழவு வீட்டுக்கு வந்து இறங்கி எப்படி துக்கம் கேட்பது என்று தெரியாமல் விழிப்பவனைப் போல கொஞ்ச நேரம் நடு ரோட்டில் நின்று கொண்டு விழித்தனர். ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியுடன் பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக சுமார் 50 பேர் அளவுக்கு கூட்டம் சேர்ந்து விடவே, கைது செய்து ஏற்றுவதற்கான வேனை போலீசு கொண்டு வந்து நிறுத்தியது. உடனே தலைவர்கள் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி செல்போனை எடுத்து காதில் வைத்த படியே காரை கிளப்பச் சொன்னார்கள். எல்லா கார்களும் உடனே கிளம்பின. தலைவர்கள் “எஸ்” ஆவதற்குள் தொண்டர்களும் “எஸ்” ஆகிவிட்டனர். பக்கத்தில் நரேந்திர மோடி கூட்டத்துக்கு பதிவு செய்வதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் அவர்கள் ஒதுங்கி விட்டனர்.

20 பேர் பங்கேற்ற இந்த பிரம்மாண்டமான போராட்டம் திங்களன்று மாலைப் பத்திரிகைகளில் முதல் பக்க செய்தி. மறுநாள் காலைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தி.

பல்லாயிரம் பேர் திரண்ட ம.க.இ.க வின் மோடி எதிர்ப்பு பொதுக் கூட்டம் பற்றியோ ஒரு வரி செய்தி கூட எந்தப் பத்திரிகையிலும் கிடையாது. வரலாற்றில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன?