privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி !

‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி !

-

கும்மிடிபூண்டி ‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மீண்டும் தொழிலாளிகள் பலி, படுகாயம்!

கும்மிடிபூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் துல்சியான் இரும்பு உருக்காலையில் கடந்த 23-09-13 அன்று மாலை 5 மணிக்கு எரிகலன் (BOILER) வெடித்துச் சிதறிய கோரவிபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்திற்கான குறிப்பான காரணத்தையோ, எவ்வளவு பேர் காயமடைந்தனர், எத்தனை பேர் உயிரிழந்தனர், எங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது போன்ற தகவல்களையோ வெளிவிடாமலும், எதுவுமே நடக்காதது போல தொடர்ந்து உற்பத்தியை நடத்தியும் இந்தக் கோர விபத்தை மூடி மறைக்கும் சதிவேலைகளை துல்சியான் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது போன்ற விபத்துகள், உயிரிழப்புகள் (குறிப்பாக 2008-ல் இது போன்ற விபத்து நடந்து 7 வட மாநில தொழிலாளர்கள் பலியானர்) இவ்வாலையில் நடப்பது தொடர்ந்து நடந்து வந்த போதிலும், வழக்கு பதிவு செய்யவோ, ஆலையினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவோ இதுவரை எந்த அரசு அதிகாரியும் வரவில்லை. ஆலை நிர்வாகமும் – அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்தே இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாடுள்ள ஆலையைத் தொடந்து இயக்கியும், தொழிலாளர்களைக் காவு வாங்கியும் வருகின்றனர் என தெளிவாகத் தெரிகிறது.

எனவே, இந்த விபத்திற்குக் காரணமான ஆலை நிர்வாகிகள் – அரசு அதிகாரிகளைக் கைது செய்து சிறையிலடைக்கக் கோரியும், தொடர்ந்து தொழிலாளர்களைக் கொன்று வரும் பாதுகாப்பற்ற ஆலையை மூடி சீல் வைக்கக் கோரியும், பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சையும், நிவாரணமும் அளிக்கக் கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆலையின் முன்பாக 24-09-13 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர். விகேந்தர் தலைமை தாங்கினார். கண்டன உரை ஆற்றிய மாவட்ட இணைசெயலாளர் தோழர் இராமஜெயம், ஆலையில் நிர்வாகத்தின் சட்ட விரோதப் போக்கினையும், அதனை கண்டு கொள்ளாத அரசுத் துறையினரை அம்பலபடுத்தியும் பேசினார்.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விண்ணதிரும் முழக்கத்துடன் முழக்கமிட்டனர். சாலையில் சென்ற பொதுமக்கள், தொழிலாளர்கள் நமது ஆர்ப்பாட்டத்தினை நின்று கவனித்தும் சிலர் கலந்து கொண்டு ஆதரவு தந்தனர்.

ஆலை வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காவல் துறையிடம் தகவல் கொடுத்தோம். ஆனால் நிகழ்ச்சி முடியும் வரையில் காவல் துறை எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆலை நிர்வாகிகள் சிலர் நம் ஆர்ப்பாட்டத்தினை ஓரமாக நின்றபடி கவனித்துக்கொண்டனர்.

இந்த ஆர்ப்பட்டத்தினை தொடர்ந்து பகுதியில் போஸ்டர் ஒட்டியுளோம். பகுதியில் மொழி, இனம் கடந்து நாம் தொழிலாளர் வர்க்கமாய் ஒன்று சேர வேண்டிய அவசியம் பதிய வைக்கப்பட்டுள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.