Tuesday, May 6, 2025
முகப்புசெய்திமோடிக்காக கல்லூரிகள் மூடல் - எதிர்த்துக் கேட்ட மாணவர்கள் கைது !

மோடிக்காக கல்லூரிகள் மூடல் – எதிர்த்துக் கேட்ட மாணவர்கள் கைது !

-

26.9.2013 அன்று திருச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி ஜமால் முகமது கல்லூரி மற்றும் ஈ.வெ.ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவரது வருகையின் மூலம் திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களை கிரிமினல்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்து கல்லூரிகளை செயல்பட விடாமல் முடக்குவது மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிப்பதாகும் என கருதுகிறோம்.

தமிழகத்திற்கு நாட்டின் பிரதமரும், திருச்சிக்கு தமிழக முதல்வரும் வந்த போதும் கூட கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதில்லை. ஆகவே கல்லூரிகளை மூடும் நடவடிக்கையை ரத்து செய்து கல்லூரிகள் செயல்பட உத்தரவிடுமாறு திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலருமான சாருவாகன் தலைமையில் இன்று மதியம் 12.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

ஆட்சியரை சந்திக்க வேண்டுமென கோரிய போது அவர் இங்கு இல்லை என்ற அலுவலக ஊழியர்கள் கூறியதால், அங்கேயே அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த பத்திரிகையாளர்களிடம் ஒருங்கிணைப்பாளர் சாருவாகன் பேட்டி அளித்தார்.

பின்னர் A C கணேசன் தலைமையில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், நீங்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பதால் உங்களை கைது செய்கிறோம் என்றார். அதற்கு மாணவர்கள், “நாங்கள் எங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் கூறுவதற்குத்தான் வந்திருக்கிறோம். அவர் இல்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் வந்து பேசட்டும், நீங்கள் எதற்காக உள்ளே வந்து தடுக்கிறீர்கள்” என்று கேட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த போலீசார், “உங்களாலதாண்டா, எங்களுக்கு பெரிய தலைவலியே, ஏறுங்கடா” என்று ஒருமையில் பேசியும், மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் வேனில் குண்டு கட்டாக தூக்கி ஏற்றினர். ஏற மறுத்த சட்டக் கல்லூரி மாணவிகள் உட்பட பிற மாணவர்களைத் தாக்கி வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர்.

இதனைக் கண்டித்து முழக்கமிட்டபடியே மாணவர்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டனர். அடுத்தக் கட்ட போராட்டத்தை தடுப்பதற்காக மாணவர்களை ரிமாண்ட் செய்யப் போவதாக போலீசார் கூறி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு,
திருச்சி