privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்

கடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்

-

டலூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியான பெரியார் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களை அமைப்பாக்குவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்காக கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கையும் நடந்துள்ளது. இவ்வாறு உறுப்பினரான மாணவர்கள் ஆதிதிராவிட நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை விடுதிகள் எனவும், வாடகைக்கு ரூம் எடுத்தும் பிரிந்து தங்கியுள்ளனர்.

விருத்தாச்சலம் விடுதி
விருத்தாச்சலத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதி ஒன்று.

ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் உள்ள நமது உறுப்பினர்களும் வேறுசில மாணவர்களும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக விடுதியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து 41 அம்சங்களை பட்டியலிட்டுள்ளனர். அவை பின்வருமாறு:

  • நூலக வசதி இருந்தும் செயல்படவில்லை.
  • இதுவரையிலும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.
  • விடுதியையும் விடுதியை சுற்றியுள்ள இடத்தை பராமரிக்க தேவையான உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை
  • மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஒவ்வொரு அறைகளிலும் ஏற்படுத்தி தரவில்லை.
  • குடிநீர் தொட்டியில் அடிக்கடி பல்லி, கரப்பான் பூச்சி போன்ற சிறு பூச்சிகள் நீரில் விழுந்து விடுகின்றன.
  • கழிவறைகள் இருந்தும் விரைவாக நீர் வராமல் இருப்பதால் கழிவறைகள் உபயோகம் இல்லாமல் இருக்கின்றன.
  • சமைத்து கொடுக்கும் பாத்திரங்கள் பழைய பாத்திரங்களாக உள்ளன.
  • சமையல் செய்யும் அறைகள் ஆங்காங்கே தூய்மையாக இல்லை.
  • சமையலுக்கு தேவையான பொருட்கள் வைத்திருக்கும் அறை தூய்மை இல்லாத நிலையில் அங்குள்ள பொருட்களை எலிகள் சாப்பிடுகின்றன.
  • சாப்பிடும் அறை பயன்படுத்தும் நிலையில் இல்லை.
  • விடுதி காப்பாளர் 4 நாட்கள் மட்டும் விடுதிக்கு வந்து செல்கிறார். மாணவர் நிறை, குறை விசாரிப்பது இல்லை. இரவில் தங்குவதில்லை.
  • விடுதி காவலர் இன்று வரையிலும் நியமிக்கப்படாமலேயே இருக்கின்றனர்.
  • அரசாங்கம் வழங்கும் அனைத்து வகையான சலுகைகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்காமல் சிலவற்றை மட்டும் வழங்குகிறார்.
  • மாதந்தோறும் வழங்கப்படும் அரசு உதவித்தொகை சரியான முறையில் வழங்கப்படவில்லை.
  • உணவு பட்டியலில் இருப்பது போல் உணவு வழங்கப்படுவதில்லை.
  • தேநீர் அல்லது சுக்கு காப்பி வழங்கப்படுவதில்லை.
  • கீரை வகைகள் ஒருநாள் கூட சமைப்பதில்லை.
  • தினமும் சில வகையிலான காய்கறிகள் கோஸ், கேரட், மாங்காய், உருளைகிழங்கு, தக்காளி இவைகளை மட்டும் சமைத்து கொடுக்கின்றனர். ஒவ்வொரு முறையிலும் ஒரேமாதிரியான பொரியல் மட்டும் தயார்படுத்தி கொடுக்கின்றனர்.
  • உணவு பட்டியலில் உள்ள பொங்கல், கிச்சடி, தோசை, ரவை, சூப் இதுவரையிலும் வழங்கப்படவில்லை.
  • உணவு ஆரோக்கியமற்ற உணவாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலேயே உணவினையே கொடுக்கின்றனர்.
  • போதுமான மளிகை பொருட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் உணவினை தயார் செய்கின்றனர். எண்ணெய் மிகவும் குறைந்த அளவிலேயே உபயோகின்றனர். குழம்பில் அதிகளவில் தண்ணீர் கலந்து தயார் செய்கின்றனர்.
  • இட்லி மிகவும் கடினமாக இருந்தாலும் குறைந்த அளவு உளுந்து சேர்க்கின்றனர். வரும் சாப்பாடு அரிசி தரமான அரிசியாக இல்லை.
  • விடுதியில் உள்ள மாணவர்கள் மொத்தம் 88 பேர் இருப்பின் இவற்றில் அதிகபட்சம் 60 மாணவர்களுக்கு மட்டும் சாப்பிடும் அளவில் உணவு தயார் செய்கின்றனர்.
  • தயிர் இரண்டரை லிட்டர் மட்டும் இன்று வரையிலும் வழங்கப்படுகின்றது.
  • சிக்கன் சரியான எடையில் வழங்கப்படவில்லை.
  • வாரத்திற்கு 3 நாள் மட்டும் முட்டை வழங்குகின்றனர்.
  • வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் வழங்கப்படும் சுண்டல் 88 மாணவர்களுக்கு ஒன்றரை கிலோ அளவு மட்டுமே வழங்கப்படுகின்றது.
  • இதனால் உணவு பற்றாக்குறையினால் சில மாணவர்கள் கடையில் சாப்பிடுகின்றனர்.
  • விடுதியையும் விடுதியை சுற்றியுள்ள பகுதியையும் சரியான மின் விளக்கு வசதிகள் இல்லை.
  • அனைத்து அறைகளிலும் உள்ள ஸ்விட்ச் போர்டு பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை விரைவில் சரிசெய்யும் விடுதி காப்பாளரிடம் அனைத்து மாணவர்களும் புகார் செய்தனர். அவற்றை இன்று வரை சரிசெய்யவில்லை.
  • விடுதியை சுற்றி நீர் தேங்கிய நிலையில் உள்ள நிலையில் அக்கம் பக்கம் உள்ள மாடுகள், பன்றி போன்றவைகள் அவ்விடத்தை நாசம் செய்கின்றன. இவற்றை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நாள் வரை செய்யப்படவில்லை.
  • விடுதி சுற்றியும் மழைநீர் தேங்கியிருப்பதால் விடுதி சுற்றியும் சிமெண்;ட ரோடு போட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • இன்று வரை விடுதி மாணவர்களுக்கு போர்வை வழங்கப்படவில்லை.
  • பாய், போர்வை, பக்கெட் இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.
  • அரசு தொலைக்காட்சி இருந்தும் இன்றுவரை பயன்படுத்தவில்லை.

கடந்த 19.9.2013 அன்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுப்பது என்று முடிவெடுத்தனர். இம்முடிவின் அடிப்படையில் காலை 9 மணி முதல் பிரச்சாரம் செய்து கொண்டே ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களுடன் இணைந்து கொண்ட நமது தோழர்களும் பிரச்சனைகளை, கோரிக்கைகளை முழக்கமாக வடித்து முழங்கிக் கொண்டு வந்தனர். (முழக்கம்)

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியவுடன் போலிசு தனது வழக்கமான புத்தியை காட்டியது. மாணவர்களையும், பு.மா.இ.மு செயலர் தோழர் கருணாமூர்த்தியையும் பிரிக்க முயற்சித்தது. இந்த முயற்சிகளுக்கு மாணவர்கள் அடிபணியவில்லை.

இரண்டு குழுவாக பிரிந்து, முழக்கமிடுவதற்கு ஒரு குழுவும், பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவும் சென்றது. இந்த இரண்டு குழுவிலும் நமது தோழர்கள் பிரிந்து சென்றோம். அதில் பேச்சுவார்த்தைக்கு போன இடத்தில் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று பு.மா.இ.மு தோழரை பார்த்து கேட்டனர். அதற்கு தோழர் நாங்கள் மாணவர் அமைப்பு அதனடிப்படையில் வந்துள்ளோம் என்றோம். ஓன்றும் பேசமுடியாமல் அந்த அதிகாரி மாணவர்களின் போராட்டத்தை காயடிக்கும் வகையில் நைச்சியமாக பேசிக் கொண்டிருந்தார்.

“இவ்வளவு நாள் பொறுத்து கொண்டீர்கள் இன்னும் இரண்டு நாள் அவகாசம் தாருங்கள்” என்றார்.

அதற்கு மாணவர்கள், “ரொம்ப நன்றி இருப்பினும் எங்கள் மனுவை ஆட்சியரை நேரில் பார்த்து தர வேண்டும்” என்றனர்.

மூக்குடைந்து போன அதிகாரி கலெக்டர் பி.ஏ. வை நேர்முக உதவியாளரிடம் அனுப்பி வைத்தார். அவர் வார்டனை கூப்பிட்டு கண்டிப்பது போல் கண்டித்தார்.

அவரும், “இரண்டு நாளில் செய்து தருகிறோம்” என்றார்.

அவரிடமும் மாணவர்கள், “நன்றி, நாங்கள் கலெக்டரை நேரில் பார்த்து மனு கொடுக்கணும்” என்றனர்.

“நீங்கள் நினைத்தவுடன் பார்க்க முடியாது” என்றார்.

“நாங்கள் எத்தனை மணி நேரம் ஆனாலும் காத்திருந்து பார்க்கிறோம்” என்றதும் கடுப்பாகிப் போனார் நேர்முக உதவியாளர். பிறகு காத்திருக்க கூறினார்கள்.

இதற்கிடையே வெளியில் வெயிலில் முழக்கமிட்டுக் கொண்டிருந்த மாணவர்களில் ஒருவர் மயங்கி விழுந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். பேச்சுவார்த்தைக்கு சென்ற மாணவர்களில் ஒருவரும் மயங்கி விழவே 108 வரவழைத்து அவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுடைய உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணம் வெயிலில் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அங்கு வந்த நகர காவல்துறை ஆய்வாளர் பு.மா.இ.மு வினருடன் இருப்பதைக் கண்டு நெருங்கி வராமல் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார். காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் வந்து கூட்டத்தை கலைக்கும் சதி செயலில் இறங்கினார்.

முதலில் பு.மா.இ.மு செயலரை, “நீங்கள் ஏன் மாணவர்களோடு அமர்ந்துள்ளீர்கள். வெளியே போ” என்றார்.

அதற்கு நாம், “மாணவர் அமைப்பு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றோம்.

“எங்களிடம் அனுமதி வாங்கினீர்களா” என்றார்.

“மைக்செட் போடத்தான் உங்களிடம் அனுமதி வாங்கணும். நாங்கள் உரிமை கேட்கிறோம்” என்றதும்,

“உங்களை தூக்கி ஜெயிலில் போட்டு விடுவோம்” என மிரட்டலாக பேசினார்.

“உங்கள் கோரிக்கை இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும்” என்று கலெக்டர் உத்தரவாதம் தரவே போராட்டம் கைவிடப்பட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக அன்று இரவே மெனு பட்டியலில் உள்ள உணவு தயார்செய்து தரப்பட்டது. மறுநாள் விடுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. 41 அம்ச கோரிக்கையில் 5 மட்டுமே நிறைவேறியுள்ளது.

மாணவர்களுடன் பு.மா.இ.மு வினரின் இணைந்த போராட்டம் நீடிக்கும்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.