privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅசுரர் தினம் கொண்டாடிய மாணவர் போராட்டம் வெல்லட்டும் !

அசுரர் தினம் கொண்டாடிய மாணவர் போராட்டம் வெல்லட்டும் !

-

ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசுரர் வாரம்உஸ்மானியாவில் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம் 1958-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் தலித், பழங்குடி, பகுஜன், மற்றும் சிறுபான்மையினர் மாணவர் அமைப்பு போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மாணவர் அமைப்பினர் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அசுரர்கள் என்பவர்கள் பேய்கள் அல்ல, அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்ற கண்ணோட்ட்த்தை உருவாக்குவதற்காகவும், தாங்கள் திராவிட இனத்தின் வழித் தோன்றல்களே, ஆரியத்திற்கு அல்ல என்பதை எடுத்துரைப்பதற்காகவும்,  திராவிட, தலித் கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும் அசுரர்கள் வாரம் நடத்தப்படுவதாக இதை ஏற்பாடு செய்திருக்கும் மாணவர்கள் கூறுகிறார்கள். பெரியார், அம்பேத்கர், பூலே ஆகியோரின் தத்துவார்த்த பின்புலத்தோடு இதைக் கொண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படும் மாட்டுக்கறி திருவிழா, நரகாசுரன் திருவிழா போன்றவற்றின் தொடர்ச்சியாகவே இந்த அசுரர்கள் வாரம் திருவிழா நடத்தப்பட்டது.

அசுரர் வாரம்செப்டம்பர் இரண்டாம் வாரம் நடைபெற்ற இந்த கலாச்சார விழாவில் “இந்திய வரலாற்றை மறுவாசிப்பு செய்தல் : பல்கலைக் கழக வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுரை அமர்வையும், “ஆதிக்கத்தை எதிர்த்தல்  : கலாச்சார ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு விவாத அமர்வையும், “இராவணன்” என்ற தலைப்பில் முக ஓவியங்கள் வரையும் போட்டியையும்,  “ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வு” என்ற தலைப்பில் கேன்வாஸ் ஓவியக் காட்சியையும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்களை “இந்து” என்று அழைத்துக் கொண்ட சில மாணவர்கள் இந்த விழா தங்கள் மன உணர்வை புண்படுத்துவதாக கூறியுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் கொண்ட குழு அங்கு வந்து விழாவை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் விசாரணை செய்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தொடர்புடைய மாணவர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உஸ்மானியா காவல் நிலையத்தில் பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்கள் மீது  புகார் கொடுத்தது. அதன் அடிப்படையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஆறு மாணவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி போன்ற அடிப்படைகளில் குழுக்களிடையே பகைமையை தூண்டுவது என்ற கடும் குற்றப் பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசுரர் வாரம்“பல்கலைக்கழகம் இந்துத்துவத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. பல்கலைக்கழக வாயிலில் ஓம் என்று எழுதப்பட்டு விநாயகர் சிலை வைக்கப்ப்பட்டுள்ளது, புதியதாக கட்டும் கட்டிடங்களுக்கு பூமி பூஜை நடத்தப்படுகிறது, நூலகத்தின் முகப்பில் சரஸ்வதி சிலை வைக்கப்பட்டுள்ளது, விடுதியில் மாணவர்க்ள் சாதி அடிப்படையில் பிரித்து தங்க வைக்கப்படுகிறார்கள், விடுதியில் சாதி வன் கொடுமைகளும் பதிவாகியுள்ளன” என்கிறார் அந்த பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஜார்ஜ் மேத்தியூ.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி இந்த ஆண்டு நிர்வாகத்தின் அதிகாரபூர்வ ஆதரவோடு விநாயக சதுர்த்தி விழா கொண்டாடியுள்ளது. கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது தலித், பழங்குடி மாணவர்களிடம் ஏபிவிபி அடாவடியாக நடந்துகொண்டுள்ளது. ஆயினும் அது குறித்து கண்டு கொள்ளாமல் இந்த முறையும் கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.

பெரியார் மண்ணான தமிழகத்தில் சிலர் திராவிட்த்தை எதிர்க்கிறோம் பேர்வழி என கூறிக் கொண்டு பெரியாரை கொச்சைப்படுத்தி வரும் சூழலில், இந்திய அளவில் மோடியை கதாநாயகனாக கொண்டு பார்ப்பனிய நச்சு வளர்ந்து வரும் சூழலில் இத்தகைய அசுர தினத்தை கொண்டாடும் உஸ்மானியா மாணவர்கள் பாராட்டிற்குரியவர்கள். ஆனால் பாடை கட்ட வேண்டிய பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வேலையை நாட்டின் அதிகார வர்க்கமும், போலீசும் செய்து வருகின்றன. இதனால்தான் இந்துத்துவத்தின் நச்சு வேர்கள் நாடெங்கலும் தமது கொடுங்கரங்களை நீட்டி வருகின்றன.

வெட்டுவோம்!

மேலும் படிக்க