privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் - 150 பேர் கைது

வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது

-

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டு பல லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதுடன், மீன் வளம் அழிவு, கடல் அரிப்பு, புற்றுநோய் என மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் பொது அமைதி சீர்குலைக்கப்பட்டு , வெடிகுண்டு கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தனை குற்றங்களுக்கும் காரணமான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், துணை போன அரசு அதிகாரிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

தாது மணல் கொள்ளையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த விவரங்களை வெளியிட மறுப்பதுடன், குற்றவாளிகளையும் பாதுகாக்கிறது தமிழக அரசு. பொதுக்கூட்டம் நடத்தக் கூட தடை விதிக்கிறது. எனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு போல உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் . இதற்கு வைகுண்டராஜன் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப் பட வேண்டும் .

தாது மணல் கொள்ளைக்கு எதிரான கடலோர மீனவ மக்களின் போராட்டத்தை அனைத்து மக்களும் ஆதரிக்க வேண்டும். மத்திய அரசின் தனியார்மயம்- தாராளமயம்- உலகமயக் கொள்கை தான் மாபெரும் ஊழல்களுக்கு மூலம் என்ற நிலையில் இக்கொள்கைகள் கைவிடப்பட வேண்டும்.

மதுரையில் நடந்த கிரானைட் கொள்ளையில் வழக்குகள் போடப்பட்டு பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர், கைது செய்யப்பட்ட நிலையில், தாது மணல் கொள்ளையில் வைகுண்டராஜன் கைது செய்யப்படாதது, தமிழக அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது . குளத்தூர் வி.ஏ.ஓ. புகாரில் கூட வழக்கு பதியப்படவில்லை.

தாதுமணல் கொள்ளை குறித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரின் அறிக்கை வெளியான உடனே ம.உ.பா.மை சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு 10 நாட்கள் ஆய்வு நடத்தி உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12/10/2013ல் பேரணி பொதுக் கூட்டம் நடத்த தீர்மானித்து ம.உ.பா.மையமும் அதன் தோழமை அமைப்புகளை சேர்ந்த 100 பேர் மற்றும் மைய கலைக் குழுவினர் கடந்த 12 நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, பெருமணல், குமரி மாவட்டம் லீபுரம் வரை வீடு வீடாக பிரச்சாரம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை , கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், தென்காசி, சங்கரன்கோவில், நாகர்கோவில், சுரண்டையில் பேருந்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. நெல்லை முதல் மதுரை வரை ரயில் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

வி.வி.மு., பு.ஜ.தொ.மு. சார்பில் 37,000 துண்டறிக்கைகள் மக்கள் மத்தில் வினியோகிக்கப்பட்டது. ம.உ.பா.மை சார்பில் 9,000 துண்டறிக்கைகள் வினியோகிக்கப்பட்டது. ஏராளமான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது. பேரணி, பொதுக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்கிய காவல் துறை பின்னர் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதன் காரணமாக தடையை மீறி பேரணி, முற்றுகை நடத்த ம.உ.பா.மையம் முடிவு செய்தது .

  • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் !
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தடையை மீறி முற்றுகை பேரணி!

என்ற முழக்கங்களுடன் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனையும் , உடந்தையாக இருந்த அனைத்து துறை அதிகாரிகளையும்,ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலிருந்து பேரணியாக தொடங்கி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிடப்பட்டிருந்தது .

12/10/2013 காலை 10 மணியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு ம.உ.பா.மை. வழக்கறிஞர்கள் , உறுப்பினர்கள் , தோழமை அமைப்பினரான மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பின் தோழர்களும் உள்ளூர் மீனவ அமைப்பினர், பொதுமக்கள், இளைஞர்களும் திரளத் தொடங்கினர்.

ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜு தலைமையில் திரளான வழக்கறிஞர்கள் முன்னிலையில் 10.30 மணிக்கு தொடங்கிய பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள் முன்னணியில் நின்று முழக்கமிட்டார்கள். விண்ணதிர உணர்வு பொங்க முழக்கங்கள் எழுப்பப்பட சுற்றி இருந்த பொதுமக்கள் ஆர்வமாக சூழ்ந்து கொண்டனர்.

தூத்துக்குடி டி.எஸ்.பி. தலைமையில் வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் அதிரடிப் படை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். முழக்கத்தைத் தொடர்ந்து பேரணி நகரத் தொடங்கியது. பேரணியின் முன்பு தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என்ற முழக்கம் அடங்கிய வைகுண்டராஜன் உருவப் படம் போட்ட பேனர் பிடிக்கப் பட்டது. ஏராளமான முழக்க அட்டைகளும் இடம் பெற்றன.

பேரணி பாளையங்கோட்டை சாலையில் முழுமையாக அடைத்து மறியலாக மாற்றப்பட்டு நகர்ந்தது. முதலில் ஆர்ப்பாட்டத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என்ற காவல்துறை, போராட்டத்தின் ஆவேசத்தை கண்டு சிறிது பின் வாங்கி கைது செய்கிறோம் என்றது. பேரணியாக சென்றே தீருவோம் என போலீசை மீறி சென்ற போது தடுத்து வேகம் காட்டியது காவல்துறை.

தோழர்கள் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். இந்நிலையில் போலீசுடன் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. உடனே போராட்ட த்தின் வீரியம் கூடி முழக்கங்கள் வீச்சாக எழுப்பப்பட்டு காவல்துறையுடன் மோதத் தயாரான போது கைதுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என காவல்துறை கெஞ்சியது. ஒரு சிலரை இழுத்த காவல்துறையுடன் தோழர்கள் சண்டையிட, உயரதிகாரிகள் கீழ் நிலை அதிகாரிகளை சத்தம் போட்டு ஒத்துழைப்பு கோரினர். அதன் பின்னும் ஒத்துழைப்பு தரமுடியாது, என சொல்லிவிட்டு நடுரோட்டில் சுமார் ஒருமணி நேரம் மறியல் நடைபெற்றது. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

அதன் பின் காவல்துறை ம.உ.பா.மைய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் , தோழமை அமைப்பினர், பொதுமக்கள் உட்பட 150 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட மண்டபத்தில் கூட்டம் நடத்தப் பட்டது.

மண்டபத்திற்கு கீழ வைப்பாறு கிராமத்திலிருந்து கிராம மக்கள் அந்தோணி, சார்லஸ் ஆகியோர் தலைமையில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் . தூத்துக்குடி மாவட்ட மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேவியர் வாஸ், ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ராஜ், மீனவர் ஐக்கிய முன்னணி பொருளாளர் ஜாய் காஸ்டிரோ ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தியும் ஆதரவு தெரிவித்தும் சென்றனர். உள்ளூர் வழக்கறிஞர்கள். நேரிலும், தொலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் கூறினர்.

மணல் மாபியா வைகுண்டராஜனின் வெடிவெடிகுண்டு சாம்ராஜ்ஜியத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நிலையை இன்று ம.உ.பா.மையமும் புரட்சிகர தோழமை அமைப்புகளும் உடைத்து எறிந்து வரலாறு படைத்தனர். இது கடலோர மாவட்டங்களில் வி.வியை எதிர்து போராடிவரும் மக்களிடையே புதிய நம்பிக்கை ஒளியையும் போராட்டத் தீயையும் தொடங்கி வைத்துள்ளது.

முழக்கங்கள்

கைது செய் ! கைது செய் !

தாது மணல் கொள்ளையன்
வைகுண்டராஜனை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
கைது செய் ! சிறையிலடை

தமிழக அரசே ! காவல் துறையே !
தாது மணல் கொள்ளையன்
வைகுண்டராஜனை,
துணை போன அதிகாரிகளை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
கைது செய் ! சிறையிலடை

ஸ்பெக்ட்ரம் ஊழலில்
மத்திய மந்திரி ராசாவும்
துணைபோன அதிகாரிகளும்
கைதுசெய்து விசாரணை !
மாட்டுத் தீவன ஊழலில்
ஈடுபட்ட லல்லுவுக்கு
கைது-தண்டனை !
கிரானைட் ஊழலில்
பி.ஆர்.பி.யும் கைது !
தயக்கம் ஏன்? தாமதம் ஏன்?
தாது மணல் ஊழலில்
வைகுண்டராஜனை
கைது செய்ய தயக்கம் ஏன் ?

தாது மணல் கொள்ளையால்
மீன் வளம் அழியுது
கடலரிப்பு நடக்குது
கல்லடைப்பு- புற்றுநோய்
நோய்களெல்லாம் தாக்குது!
கடலோர கிராமமெல்லாம் அமைதியின்றி தவிக்குது!

ஊருக்கு ஊர் கலவரம்
மக்களுக்குள்ளே மோதல்
வெடிகுண்டு தாக்குதல்
கடலோர கிராமங்களில்
பொது அமைதியை சீர்குலைத்த
தாது மணல் கிரிமினல்
குண்டர் படை தளபதி
வைகுண்டராஜனை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில்
உடனடியாக கைது செய் !

பறிமுதல் செய்! பறிமுதல் செய் !
தாது மணல் கொள்ளையர்களின்
சொத்துக்களை பறிமுதல் செய் !
தமிழக அரசே பறிமுதல் செய்!

கொள்ளையடா கொள்ளையடா
தாது மணல் கொள்ளையடா
10 லட்சம் கோடிவரை
மாபெரும் கொள்ளையடா
தாது மணல் மாபியாக்கள்
அனைத்து துறை அதிகாரிகள்
ஓட்டுக்கட்சி திருடர்கள்
சேர்ந்து நடத்திய கொள்ளையடா
கைது செய் கைது செய் !
கொள்ளையர்களை கைது செய்!

போராட்டம் போராட்டம்
தாது மணல் கொள்ளையன்
வைகுண்டராஜனை
கைது செய்யக் கோரி
போராட்டம் -முற்றுகை !
HRPC முற்றுகை
கலெக்டர் அலுவலகம் முற்றுகை !

இழுத்து மூடு! இழுத்து மூடு!
மக்கள் விரோத மணல் கம்பெனிகளை
உடனடியாக இழுத்து மூடு
தமிழக அரசே இழுத்து மூடு!

தடைசெய் தடை செய்!
தாது மணல் அள்ளுவதை
உடனடியாக தடை செய் !
தமிழக அரசே தடை செய் !
நிரந்திரமாக தடை செய் !

தடை ஏன் ? தடை ஏன் ?
ஜெயா அரசே தடை ஏன் ?
தாது மணல் கொள்ளையன்
வைகுண்டராஜனுக்கு எதிரான
HRPC கூட்டத்திற்கு
ஜெயா அரசே தடை ஏன் ?

துணை போகாதே துணை போகாதே
தாது மணல் கொள்ளைக்கு
குற்றவாளி வி.வி.க்கு
ஜெயா அரசே துணை போகாதே !

வெல்லட்டும்! வெல்லட்டும் !
தாது மணல் கொள்ளைக்கு
எதிரான போராட்டம்
மீனவ மக்கள் போராட்டம்
HRPC போராட்டம்
தமிழக மக்கள் போராட்டம்
வெல்லட்டும்! சிறக்கட்டும்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு

  1. வெகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையை தமிழக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இப்போராட்டம். வாழ்த்துகள்!

Leave a Reply to குருத்து பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க