தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இச்சட்டத்தை தற்போதுள்ள வடிவில் நடைமுறைப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்றால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் இப்படியொரு சட்டத்தை எந்தவொரு வடிவிலும் கொண்டுவரக் கூடாதெனக் கூறி வருகின்றனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அன்று பங்குச்சந்தை சரிந்து விழுந்ததை, முதலீட்டாளர்களின் எதிர்ப்புக்கும் எரிச்சலுக்குமான அடையாளமாக முதலாளித்துவப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன.

ரேஷன் கடைகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட வேண்டும் எனக் கோரி வரும் கார்ப்பரேட் கும்பல், உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றல்ல. ஆனால், உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துவிதமான மானியங்களையும் படிப்படியாக ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ள மன்மோகன் சிங் அரசு, பட்டினியை ஒழிக்கும் நோக்கோடு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகக் கூறிவருவதுதான் வியப்பளிக்கிறது. காங்கிரசின் இந்தத் திடீர் கரிசனத்தின் பின்னே அதனின் நயவஞ்சகம் மறைந்திருக்கிறது என்பதே உண்மை.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டமோ இந்த அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின்படி, கிராமப்புறங்களில் வசிப்போரில் 75 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் வசிப்போரில் 50 சதவீதம் பேருக்கும்தான் இனி ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசியோ, கோதுமையோ வழங்கப்படும். இவர்களைத் தேர்ந்தெடுக்க இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அளவுகோலோ, ஏழைகளை இத்திட்டத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிடும் வண்ணம் தந்திரம் நிறைந்ததாக உள்ளது. அதனால்தான் இச்சட்டத்தை ஆதரிக்கும் ஜீன் ட்ரெஸ் (Jean Dreze) என்ற பொருளாதார நிபுணர் கூட, ”பயன் பெறுவோரைத் தேர்ந்தெடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகோலை அடியோடு மாற்ற வேண்டும்” என்கிறார்.
1990-களில் தனியார்மயம்-தாராளமயத்தைப் புகுத்திய கையோடு, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ரேஷன் பொருட்களை வழங்குவதில் வறுமைக் கோட்டுக்கு மேலே, கீழே என்ற பாகுபாட்டைப் புகுத்தியது, காங்கிரசு கட்சி. அந்தப் பாகுபாட்டை இச்சட்டத்தின் மூலம் நாடெங்கும் வலுக்கட்டாயமாகப் புகுத்தி நிரந்தரமாக்க முயலுகிறது, சோனியா-மன்மோகன் சிங் கும்பல். மேலும், ரேஷனின் மூலம் விநியோகிக்கப்படும் அரிசி, கோதுமை ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலையை மூன்றாண்டுகள் கழித்து உயர்த்த வேண்டும் என இச்சட்டம் முன்நிபந்தனை விதிக்கிறது. ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல் மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, பொருட்களுக்குப் பதிலாக பணமாக வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டுமெனவும் பரிந்துரைக்கிறது.
இதோ, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் ரேஷன் கடையையும், விவசாயிகளிடமிருந்து நெல் மற்றும் கோதுமையைக் கொள்முதல் செய்வதையும் ஒழிப்பதற்கு முன்வைத்து வரும் ஆலோசனையை, மன்மோகன் சிங் கும்பல் ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழலை ஒழித்து, அதனைச் சீர்படுத்தும் நடவடிக்கையாகப் பரிந்துரைக்கிறது. அவர்கள் கசப்பு மருந்தை நேரடியாகக் கொடுக்கச் சொல்லுகிறார்கள்; இவர்களோ மருந்தைத் தேனில் குழைத்து நாக்கில் தடவப் பார்க்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள வேறுபாடு. சுருக்கமாகச் சோன்னால், இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது தனியார்மயம்-தாராளமயத்திற்கு ஏற்றவாறு ரேஷன் பொருள் விநியோகத்தைக் காலப்போக்கில் மாற்றியமைப்பதற்கான ஏற்பாடே தவிர, இதில் ஏழைகளின் பட்டினியைப் போக்கும் கரிசனம் கொட்டிக் கிடக்கவில்லை.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 1,25,000 கோடி ரூபாய் உணவு மானியமாக ஒதுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இந்தச் செலவை ஊதிப்பெருக்கி, ”நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே அதிகமாக உள்ள வேளையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இது ஊதாரித்தனமான செலவு; இது மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டம்; உணவுப் பொருள் சந்தையில் தனியார் நுழையாதபடி செய்யும் சூழ்ச்சி; இந்தச் சட்டத்தால் முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கையிழந்து வருகிறார்கள்” என்றவாறெல்லாம் ஊடகங்களின் மூலம் இச்சட்டத்திற்கு எதிராகச் சாமியாடி வருகிறது.
ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியைப் பெற்றுவரும் தமிழக மக்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள் எனக் கூறுபவன் அடிமுட்டாளாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், வளர்ச்சி குறித்து கார்ப்பரேட் கும்பல் முன்வைக்கும் அளவுகோல் தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. தாங்கள் வளர்க்கும் நாய்க்கு பிஸ்கெட் வாங்கிப் போட ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்காத கார்ப்பரேட் கும்பல், பட்டினி போடுவதன் மூலம்தான் தொழிலாளர்களிடம் வேலை வாங்க முடியும் எனத் தெனாவட்டாகக் கூறுகிறது. இது, உழைக்கும் மக்களை மிருகத்தை விடக் கேவலமாகப் பார்க்கும் வக்கிரமும் வர்க்க வெறுப்பும் நிறைந்த திமிர்த்தனம் தவிர வேறில்லை.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 90,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 35,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியிருக்கும். ”இந்தக் கூடுதல் செலவு நாட்டின் வரவு-செலவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது” என்கிறார் ஜீன் ட்ரெஸ். இதுவொருபுறமிருக்க, விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும், பிறகு அவற்றை மானிய விலையில் மக்களுக்கு வழங்குவதற்கும்தான் இந்த 1,25,000 கோடி ரூபாயும் கொட்டி அளக்கப்படுவது போல கார்ப்பரேட் கும்பல் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.
விவசாயிகளிடமிருந்து மைய அரசு கொள்முதல் செய்யும் உணவுப் பொருட்கள் முழுவதையும் மக்களுக்கு வழங்குவதில்லை. அதிலொரு பெரும்பகுதியை எதிர்காலச் சேமிப்பாகப் பராமரித்து வருகிறது. ஆனால், இந்தச் சேமிப்பு எலிகளுக்குப் பயன்படும் அளவிற்குக் கூட மக்களுக்குப் பயன்படுவதில்லை. நாயிடம் சிக்கிய தேங்காயைப் போன்ற இந்தச் சேமிப்பிற்கு ஆகும் செலவுதான் உணவு மானியத்தில் பெரும் பகுதியைத் தின்று தீர்த்து விடுகிறது. மேலும், இந்தக் கையிருப்பு அடிக்கடி தனியார் வியாபாரிகளுக்கு மானிய விலையில் விற்கப்பட்டு, அவர்கள் மூலம் சர்வதேசச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உணவு மானியத்தை இந்தப் பெருவியாபாரிகள் தின்று கொழுப்பதை கார்ப்பரேட் கும்பல் திட்டமிட்டே மூடிமறைக்கிறது.
கடந்த ஆண்டில் (2012-13) மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,28,163 கோடி ரூபாய் வரிச் சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அக்கும்பலுக்குக் கொட்டி அளக்கப்பட்டுள்ள வரிச் சலுகை 31,11,169 கோடி ரூபாயாகும். இதே எட்டு ஆண்டுகளில் பணக்கார வர்க்கம் தங்க மற்றும் வைர நகைகளை வாங்கிக் குவிப்பதற்கு அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகை 3,14,456 கோடி ரூபாயாகும். இந்த வரிச் சலுகைகளோடு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத் தரப்படும் உணவு மானியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், அரசின் செலவில் வயிறு வளர்ப்பது யார் என்ற உண்மை மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணமும் விளங்கும்.
இந்தச் சட்டம் குறித்து திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில், ”இந்த உணவு மானியச் செலவை எப்படிச் சமாளிப்பீர்கள்?”என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அலுவாலியா கொஞ்சம்கூடத் தயங்காமல், ”மற்ற மானியங்களை வெட்ட வேண்டியிருக்கும்” எனப் பதில் அளித்தார். இந்தப் பதில், ஒரு கையால் கொடுப்பதைப் போலக் கொடுத்து இன்னொரு கையால் தட்டிப் பறித்துக் கொள்ளும் காங்கிரசின் நயவஞ்சகத்தைப் பளிச்சென புட்டு வைக்கவில்லையா?
– ரஹீம்
_________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_________________________________________