privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!

P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!

-

ஈக்கள் பல்கிப் பெருகி கிராமங்களின் சுகாதாரத்தை சீர்குலைக்கும்
P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு!

உண்ணாவிரதப் போராட்டம்!

ருமபுரி மாவட்டம் (நாய்க்கன் கொட்டாய் அருகே) அரியகுளம் அருகில் உள்ள வன்னியகுளம், ஏ முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் ஆகிய 3 பஞ்சாயத்துக்களின் 9 கிராம மக்கள்  P.K.P. பௌல்ட்ரி பார்ம் என்ற கோழிப்பண்ணையின் கழிவுகளிலிருந்து தோன்றும் ஈக்களால் தவித்துக்  கொண்டிருக்கிறார்கள். பல்வேறு நோய்களை சந்தித்துக்கொண்டு கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இக்கொடுமைக்கு முடிவு கட்டக் கூடிய அமைப்பு விவசாயிகள்விடுதலை முன்னணிதான் என்ற அறிந்து வி.வி.மு.வை அழைத்தனர்.

கடந்த 7.10.2013 அன்று நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட பகுதி மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அப்போது வி.வி.மு. தோழர் ஆம்பள்ளி முனிராஜ் மாவட்ட ஆட்சியரிடம், பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்; மருத்துவ முகாம் நடத்த வேண்டும்; P.K.P கோழிப் பண்ணையை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். மாவட்ட ஆட்சியரும், “பண்ணை அதிபர் கோழிப் பண்ணையை முறையான அனுமதி இன்றி நடத்துகிறார். எனவே 2 நாளில்பண்ணையை மூடி விடலாம்” என்றுகூறியவர், மருத்துவர்கள், அதிகாரிகளை கிராமப் பகுதிக்கு அனுப்பினார். ஆனால், ஒரு வாரம் ஆகியும் கோழிப் பண்ணையை மூடவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, போராடும் மக்கள் மீது வழக்கு போடவும், கோழிப் பண்ணையை மக்களின் பார்வைக்கு அனுமதித்து அமைதிப்படுத்தவும், சில நாடகங்களை மாவட்ட நிர்வாகம் செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பகுதி மக்களைத் திரட்டி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு இறங்கியது வி.வி.மு.

மூன்று பஞ்சாயத்து முன்னணியாளர்களை அழைத்து பேசி மேலும் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமையை வி.வி.மு. தோழர் ஆம்பள்ளி முனிராஜும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தருமபுரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஜானகி ராமனும் வலியுறுத்தி பேசினர். சட்டரீதியாக வழக்கு தொடுப்பது பற்றியும் பேசி விளக்கினார். இதனை ஏற்றுக் கொண்ட முக்கியஸ்தர்கள் உண்ணாவிரதமப் போராட்டத்திற்கு ஒலிபெருக்கி அனுமதி பெற கிருஷ்ணாபுரம் சென்றனர். அவர்களை போலிஸ் மிரட்டியும், வேறு கட்சியினர்களை பார்க்க ஆலோசனை கூறியும் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்க முயற்சித்தனர்.

போலீசின் மிரட்டலையும், சதியையும் பொருட்படுத்தாது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நம்பிக்கையூட்டி பேசினர் வி.வி.மு.வின் தோழர்கள். அதனை ஏற்றுக் கொண்ட மக்கள்  திட்டமிட்டபடி 15.10.2013 அன்று செவ்வாய் காலை 10 மணிக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் 144 அமலில் உள்ளது பற்றி கவலைப்படாமல் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலுக்கு அணிதிரண்டு வந்தனர். தோழர்கள் PKP கோழிப்பண்ணை முதலாளியையும், அரசின் சதியையும், மிரட்டலையும் அம்பலப்படுத்தி முழக்கமிட்டனர். மக்கள் பின் தொடர்ந்து முழக்கமிட்டது அரசின் செவிட்டுக் காதில் அறையும்படி இருந்தது.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து RDO (கோட்டாட்சியர்) BDO (வட்டார வளர்ச்சி அலுவலர்), வட்டாட்சியர், ADSP (கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர்) மற்றும் சில அதிகாரிகள் என்ற அரசு அதிகாரிகள் பட்டாளமே ஒரு படையுடன் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலுக்கு முன் வந்திறங்கினர். அதனைக் கண்ட மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டு கொண்டே இருந்தனர்.

அதிகாரிகள், மக்கள் முன்பு வந்து நடவடிக்கை எடுப்பதாக பேசத் துவங்கினர். “நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, படிப்படியாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்; உடனே இழுத்து மூட முடியாது; அப்படி மூடினால் அவரால் அரசிடம் பெற்ற கடனை கட்ட முடியாது,அதனால் நான்கு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று PKP கோழிப்பண்ணை முதலாளி மீது இரக்கப்பட்டு பேசினார்.

“இந்த ஒரு ஆள் பிரச்சனைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா? என்று தோழர்கள் வாதிட்டனர். 4 நாளில் நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகளிடம் அதனை எழுத்துப் பூர்வமாக எழுதித் தருமாறு கேட்டதற்கு உறுதியாக தேதி குறிப்பிட்டு எழுதித் தர முடியாது என்ற நழுவிக் கொண்டனர். மக்களை பாதிப்புக்குள்ளாக்குகிற ஒரு சிறு உள்ளூர் முதலாளி மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லாமல் மாவட்ட நிர்வாகம் உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் நலன் பாதுகாப்பு என்பதை விட அரசின் பணம், முதலாளியின் லாபம்தான் அதிகாரிகளுக்கு பெரிதாக உள்ளது.

கோழிப்பண்ணை முதலாளிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, சுற்றுச் சூழல் பராமரிப்புத் துறை என மூன்று துறைகள் மூலமாக நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 144 மாவட்டம் முழுவதும் அமலில் உள்ளால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அதிகாரிகள் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வாக்குவாதத்தின் ஈடுபட்டனர். பின்னர் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதில் வி.வி.மு. தோழர் கோபிநாத் கலந்து கொண்டு பேசினார்.

“பண்ணைக் கோழி கழிவுகளை அப்புறப்படுத்த 10 நாளாகும்.  1 நாளைக்கு 12 லட்சம் செலவாகும் என்று ஆர்டிஓ பேசியதற்கு தோழர் நாள் ஒன்றுக்கு இந்த பண்ணையில் 40 லட்சம் வருமானம் வருகிறது. அப்படியிருக்க ஏன் கோழிக் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாது என்று வாதிட்டதற்கு பதில் கூறாமல் நழுவிக் கொண்டார்.  4 நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

சிம்பிள் ஈக்கள்  பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், மக்கள் போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியதைக் கண்ட பொதுமக்கள் வி.வி.மு.வின் வழிகாட்டுதலில் போராட்டம் முன்னேறி வருவதை உணர்ந்து பாராட்டினர். 144 உள்ளிட்டு எத்தனைத் தடை வந்தாலும் மக்களைப் பாதிக்கும் கோழிப் பண்ணையை இழுத்து மூடும் வரை வி.வி.மு.வின் போராட்டம் அப்பகுதி மக்களின் துணையோடு தொடரும் என உறுதியாக உள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
செய்தியாளர், புதிய ஜனநாயகம், தருமபுரி.