Saturday, May 10, 2025
முகப்புசெய்திசி.ஆர்.ஐ பம்ப் தொழிலாளர்கள் 102 பேர் கைது !

சி.ஆர்.ஐ பம்ப் தொழிலாளர்கள் 102 பேர் கைது !

-

கோவை சின்னவேடம்பட்டி , அத்திபாளையம் சாலையில் இயங்கி வரும் உலகப் புகழ் பெற்ற முன்னணி நிறுவனமான சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனம் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி , கிரணத்தம், குறும்ப பாளையம் , ஒரைக்கால்பாளையம்  போன்ற இடங்களில் பல கிளைகளாக இயங்கிவருகிறது.

சி.ஆர்.ஐ பம்ப் உற்பத்தியில் உலகாளாவிய சந்தையில் உயர்ந்து நிற்கிறது. அனால் அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மட்டும் உயரவில்லை!

சின்னவேடம்பட்டியில் உள்ள கிளை நிறுவனத்தில் ஒரே சங்கமாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கம் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. இங்கு பணிபுரியும் 140 தொழிலாளர்களும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சங்கம் துவங்கிய காரணத்தால் நிர்வாகம் முதல் நடவடிக்கையாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கொடுத்து வந்த கல்வி தொகையை நிறுத்தியது.

சங்கத்தை விட்டு விட்டு விலகினால் கல்வித் தொகை வழங்குவோம் எனக் கூறிவிட்டனர். இதர யூனிட் தொழிலாளர்களுக்கு 30% போனஸ் வழங்கி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கம் செயல்படும் சின்னவேடம்பட்டி கிளைக்கு 8.33% மட்டும் கொடுக்கமுடியும் என 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

ACL முன் தொழிற்தாவா எழுப்பினால் ஒரு வாய்தா வருவது, ஒன்பது வாய்தா வராமல் ஏமாற்றி வருகின்றனர். இதனைக் கண்டித்து சின்னவேடம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகேட்டால் சரவணம்பட்டி காவல் துறை தரமறுத்தது. இன்று (30.10.2013) சுமார் 102 தொழிலாளர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

மாவட்ட செயலாளர் விளவை இராமசாமி , மாவட்ட இணைச்செயலாளர் கோபி , கிளை செயலாளர் A.G குமரவேல் ஆகியோர் தலைமை தங்கினர்.

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை