விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், செய்தி வாசிப்பாளருமான இசைப்பிரியா சிங்கள் இராணுவத்தினரால் இழுத்து செல்லப்படும் வீடியோ ஆதாரத்தை சானல் 4 வெளியிட்டுள்ளது. நான்கு நிமிடம் ஓடும் இந்த புதிய வீடியோ ஆதாரத்தின் மூலம் இசைப்பிரியா போரில் கொல்லப்பட்டார் என்ற இலங்கை அரசின் கூற்று பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இசைப்பிரியாவின் முகத்தில் உள்ள ஆழமான காயங்கள் அவர் சிங்கள இராணுவத்தால் பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக உள்ளது.

நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் இசைப்பிரியா அரை நிர்வாணமாக சகதியில் கிடக்கிறார். சிங்களப் படையினர் இவரை பிரபாகரனின் மகள் என்று கூறி இழுத்துச் செல்கின்றனர். அதை இசைப்பிரியா மறுக்கிறார். முகத்தில் பலமான காயங்களுடன் கைகள் கட்டப்பட்டு பாலியல் வன் கொடுமைக்கான அறிகுறிகளுடன் இசைப்பிரியா இறந்து கிடக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 2011-ல் வெளியான “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படத்தில் இசைப்பிரியா அரை நிர்வாணமாக, கடுமையான காயங்களுடன் இறந்து கிடக்கும் காட்சி வெளியானது. பாலியல் வன் கொடுமைக்கான ஆதாரங்கள் இதில் இருப்பதாக வைக்கப்பட்ட குற்றச் சாட்டை நிராகரித்த இலங்கை அரசு “சிங்களப் படையின் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமையிலான 53-வது டிவிசனுடன் நடந்த சண்டையில், மே 18 2009-ல் இசைப்பிரியா கொல்லப்பட்டார்” என அறிவித்தது. தற்போது கிடைத்திருக்கும் ஆதாரத்தின் மூலம் இசைப்பிரியா போரில் கொல்லப்படவில்லை, சிங்கள இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சானல் 4 இதுவரை மூன்று ஆவணப் படங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. இவை இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள் சிலவற்றை வெளிச்சமிட்டு காட்டின. புலிகளுக்கு எதிரான போர் என்று அழைத்துக் கொண்டு இலங்கை அரசு செய்த இனப்படுகொலை என்ற பனிப்பாறையின் நுனிதான் இவை எல்லாம். மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இந்த இன அழிப்புப் போரில் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பயங்கரமானது. பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தி அங்கு மக்களை வரவழைத்து, பின் அங்கு குண்டு வீசியது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் தொடுத்து காயமடைந்த மக்களை கொன்றது, கடைசி நாட்களில் கொத்து கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே அடியாக கொல்லப்பட்ட்து, சரணடைந்த புலித் தலைவர்களை கொன்றது என்ற அநீதியான போரின் சில நிகழ்வுகள் மட்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கை அரசின், சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் லசந்தா விக்கிரமசிங்கே போன்ற பத்திரிகையாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலங்கையில் சுதந்திரமான பத்திரிகைகள் தாக்கப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 23 பத்திரிகையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். 9 பத்திரிகையாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிங்கள பத்திரிகையாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இன அழிப்புப் போரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, வழிகாட்டி வேண்டிய உதவிகளை செய்த இந்திய அரசு தற்போது இந்த ஆவணப் பட இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்தியா வர விசா மறுத்துள்ளது.

இந்தக் காணொளி நமக்கு வாச்சாத்தியையும்,குஜராத்தையும், காஷ்மீரையும், மணிப்பூரையும் நினைவுபடுத்துகிறது. நம்மைச் சுற்றி இசைப்பிரியாக்கள் நிறைந்திருக்கிறார்கள். ஈழத்து இசைப்பிரியாவுக்காகவும், குஜராத்தின் இசைப்பிரியாகளுக்காகவும் நீதி பெற நாம் போராட வேண்டியுள்ளது.
கொன்ற இராஜபக்சேக்கள் (ஈழம், இந்தியா இரண்டிலும்) தங்களை புனிதப்படுத்தி கொள்ள வளர்ச்சி என்ற முகமூடியுடன் பாசிசத்தை ஆயுதமாக தரித்து வருகிறார்கள். இராஜபக்சேக்களுக்கு ஆதரவாக டக்ளஸ்களும், கருணாக்களும், தமிழருவி மணியன்களும், நெடுமாறன்களும் களம் இறங்கியிருக்கிறார்கள்.
இசைப்பிரியாகளின் அழுகுரல் உங்களுக்கு கேட்கிறதா? இந்த இராஜபக்சேக்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
ஆவணப் படம்