Sunday, October 1, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !

சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !

-

ன்றாடம் பத்திரிக்கைகளில், தொலைக் காட்சிகளில் எத்தனையோ லஞ்ச ஊழல் கைதுகளைப் பார்த்து வருகிறோம். வி.ஏ.ஓ, தாசில்தார், டாக்டர் என பலரும் கைதான செய்தி நாம் அறிந்ததுதான். ஆனால், பல்லாயிரம் பேரை சந்தோசப்பட வைத்த ஒரு கைது சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

சோம்புராஜன்
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சோம்புராஜன்.

நாம் எத்தனையோ ’வேலியே பயிரை மேய்ந்த கதை’களைக் கேட்டிருப்போம். ஊரையும் நாட்டையும் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு போலிசும் ராணுவமும் செய்துவரும் அட்டூழியங்களை நாடே அறியும். இது வேலியெனும் பெயரில் ஒரு கருங்காலிக் கூட்டம் ஒரு வர்க்கத்தையே நாசம் செய்துவரும் வேதனைக் கதை. ஆனால், சம்பந்தப்பட்ட தொழிலாளார்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாத, தொழிலாளர்களே கூட அறியாத துரோகம்தான் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை உண்மையாக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சோம்புராஜன் என்னும் நச்சுப்பாம்பு.

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் என்னும் உயர்பதவி, தனது கட்டுப்பாட்டில் 7 மாவட்டங்கள், தனக்குக் கீழ் 33 ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) என குறுநில மன்னன் போல அதிகாரம் செலுத்திய சோம்புராஜன், கேவலம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டது அவருக்கே கூட ’அசிங்கமாக’ இருந்திருக்கும். நியாயமாக, முதலாளிகளிடம் பெட்டி வாங்கும் போதுதான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை, தொழிற் சங்கத்தை மட்டும் கலைத்துவிட வேண்டுமெனத் துடிக்கும் முதலாளிக் கேடிகள் எவனும் காட்டிக் கொடுக்க முன் வரவில்லை. தொழிலாளிகளுக்குத் துரோகம் செய்து முதலாளிகளிடம் தாங்கள் பிச்சையெடுக்கும் பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லையே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்னும் கீழ்மட்ட அதிகாரிகளின் குமுறல்தான் சோம்புராஜனின் கைதுக்குக் காரணம்.

ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், அவ்வப்போது விழாக் காலச் சலுகைகள் தர வேண்டும் என சோம்புராஜன் கைதுக்குப் பிறகு வரும் செய்திகளே, தொழிலாளர் நலத்துறையின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கீழ்மட்ட அதிகாரிகளிடமே மாதந்தோறும் லட்சக்கணக்கில் வசூல் செய்யும் இந்த வசூல்ராஜா, ஆயிரமாயிரம் கோடி சொத்துள்ள முதலாளிகளிடம் எவ்வளவு கறந்திருப்பார். மடி நிறைய பாலுடன் உள்ள பசுவிடம், வைக்கோல் அடைத்த தோல் கன்றைக் காட்டிப் பால் கறப்பது போல தொழிலாளர்களின் வலிகளை, வேதனைகளை, குமுறலைக் காட்டி, முதலாளிகளிடம் பணம் கறந்த இந்த வர்க்க விரோதியைத் தூக்கில் போட்டாலும் தொழிலாளிகளின் ஆத்திரம் தீராது.

நமக்கு சோம்புராஜன் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. எனினும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் சட்டப்பூர்வப் பாதுகாப்பு கொடுத்து தொழிலாளிகளின் குடிகெடுத்து வரும் சகுனிகளான இவர்களை, தொழிலாளர்களை நேசிக்கும் நாம் வெறுக்காமல் இருக்க முடியுமா?

இந்தக் கைது குறித்த செய்தியைக் கேள்விப்பட்ட, சோம்புராஜனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தொழிலாளிகளும், சில நேர்மையான தொழிலாளர் நலத்துறை ஊழியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. “30 வருசமா இவன் தொல்லை தாங்க முடியல. எப்பவோ சிக்க வேண்டியவன், இன்னிக்கு மாட்டிருக்கான்” என்கின்றனர், சோம்புராஜனின் யோக்கியதை அறிந்தவர்கள்.

சோம்புவின் குள்ள நரித்தனத்துக்கும், குடிகெடுத்த வேலைக்கும் நடப்பு உதாரணமாக GSH தொழிலாளர்கள் உள்ளனர். இந்த வழக்கை விரிவாகப் பார்த்தாலே சோம்புவின் லட்சணம் தெரியும்.

ஹூண்டாயின் சப்ளையர் நிறுவனமான GSH எனும் தென்கொரிய நிறுவனத்தின் டோர் ஃப்ரேம் பிரிவில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள், தமது உரிமைகளைப் பெற பு.ஜ.தொ.மு தலைமையில் சங்கமாக அணி திரண்டனர். 15.5.2013 அன்று கிளைச் சங்கம் அறிவிக்கப்பட்டது. சங்கத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)- ACL-I முன்பு 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டது. முதற் சுற்றுப் பேச்சு வார்த்தை 5.6.2013 அன்று தொடங்கியது. முந்தைய தினமே கடிதம் கொடுத்த நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வராமல் ஓடி விட்டது.

இங்குதான் மேலதிகாரியான JCL சோம்புராஜன் சீனுக்கு வருகிறார். இந்த வழக்கைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு தன்னுடைய கீழ் அதிகாரியான ACL-I – க்கு சட்ட விரோதமாக வாய்மொழி உத்தரவிடுகிறார். பொதுவாக, 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டால் அது ACL அல்லது தொழிலாளர் அலுவலர் (L.O) முன்பாகத்தான் நடைபெறும். இவர்களால் பிரச்சனையைத் தீர்க்க முடியாத அளவுக்கு தீவிரமாக இருந்தாலோ, சமாளிக்க முடியா விட்டாலோ அல்லது தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தாலோதான் ACL, L.O ஆகியோரிடமிருந்து மேலதிகாரியான இணை ஆணையருக்கு (JCL) வழக்கு மாற்றப்படும். மேலும் JCL-க்கு மாற்றப்படும் முன்பு, கீழ்மட்ட அதிகாரிகள் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் முதல்முறை பேச்சுவார்த்தை நடந்த ஒரு வாரத்திலேயே, மேலதிகாரிக்கு மாற்றப்படுகிறது.

இங்கு வந்த பின்பும் நிர்வாகம் யாரையும் மதிக்காமல் வெளியேறுவது, சங்கத்தை ஏற்க முடியாது எனத் திமிராக சட்டத்தையும் JCL – யும் மதிக்காமல் நடப்பது போன்ற தொழிலாளர் விரோதப்போக்குகளைக் கையாண்டது. “இந்த சட்டவிரோதப் போக்கிற்கு எதிராக, உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள்” என்று கேட்டபோது, ”என்னிடம் இருப்பது தோட்டா இல்லாத டம்மி துப்பாக்கிதான். நிர்வாகத்தை அனுசரித்து தான் போக வேண்டும். தொழிற்சங்கத்தைக் கைவிட்டு, workers committee – யாக செயல்படும் வழியைப் பாருங்கள்” சங்கத்திற்கு அறிவுரை கூறினார்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, நிர்வாகம் கொத்துக் கொத்தாக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இது, வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது வேலை நீக்கம் செய்யக் கூடாது என்ற தொழிற் தகராறு சட்டம் 1947 பிரிவு 33 – ஐ மீறிய சட்ட விரோத செயல், எனவே நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரினோம். நடவடிக்கை எடுக்காமல், ”நிர்வாகம் என்றால் அப்படித்தான் இருப்பான், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என மீண்டும் நமக்கு அறிவுரை கூறினார்.

சோம்புராஜன், சட்ட விரோதமாக வழக்கைத் தனக்கு மாற்றிக்கொண்டது; நிர்வாகத்தின் சட்ட விரோத – தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தது; சங்கத்தைக் கலைத்து விட்டு, ஒர்க்கர்ஸ் கமிட்டியாக மாற அறிவுரை வழங்கியது ஆகியவற்றிற்குக் காரணம், தொழிலாளர்களின் புகார்க் கடிதங்கள், சோம்புவுக்கு பணங்காய்ச்சி மரமாக மாறியதுதான்.

சங்கத்தை ஒழித்தே தீருவது என சபதமெடுத்த நிர்வாகத்திற்கு, சோம்புராஜன் சர்வரோக நிவாரணியாகத் தெரிந்தார். அவருடைய உதவியுடன் அனைத்து தொழிலாளர் விரோதப் போக்குகளையும் சட்டப்பூர்வமாக நடத்தி முடித்தது.

வேலை நீக்கம் செய்யப்பட்ட 43 தொழிலாளர்கள் நிர்க்கதியாக விடப்பட்டனர். வேலைக்கு சென்றவர்களோ ஒடுக்கு முறையால் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். தொழிலாளர்கள், ஒவ்வொரு முறையும் தமது கஷ்டங்களை விளக்கிப் புகார்க் கடிதம் தரும்போதும், அது உடனடியாக சோம்புராஜனுக்கு பணக்கட்டுகளை வாரிவழங்கும் அற்புத விளக்காக மாறியது.

உரிமை கேட்டு சங்கம் வைத்ததையே குற்றமாகக் காட்டி, வேலை போனால் உனக்கு பெண் தர மாட்டார்கள்; வேலை போன செய்தி கேட்டால் உன் அப்பாவுக்கு 2-வது ஹார்ட் அட்டாக் வந்துவிடும்; இன்ன பிற நெருக்கடிகளைக் கொடுத்து தொழிலாளர்களை ஒடுக்கியது நிர்வாகம். சங்கத்தை விட்டு விலகவும் முடியாமல், நெருக்கடியையும் தாங்க முடியாமல் தவித்தனர், சிலர் குடிகாரர்களாக மாறினர். ஒவ்வொரு துளி ரத்தத்தையும் ஒரு பவுன் தங்ககாசாக மாற்றிக் கொண்டான் துரோகி சோம்புராஜன்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் துணிந்து இறங்கி, தொழிலாளர்களை வேலையை விட்டே துரத்தியது நிர்வாகம். நேற்றுவரை மெஷின் ஆப்ரேட்டராக இருந்த ஒரு தொழிலாளி, இன்று ஓட்டல் கடையில் டேபிள் கிளீன் பண்ணும் நிலைக்குத் தள்ளப்பட, சோம்புராஜனோ, பாவப்பணத்தில் தனது பிள்ளைகளை வசதியாக என்ஜினியரிங் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.

கடைசியாக 28.9.2013 அன்று நடந்த விசாரணையில், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கான அனைத்து ஆதாரங்களும் தொழிற்சங்கம் சார்பில் தரப்பட்டது. நிர்வாகத்தை சிறு எச்சரிக்கை கூட செய்யாத சோம்புராஜன், “சங்கத்தை விட்டு வாருங்கள், நிர்வாகத்திடம் பேசிஎதையாவது வாங்கித்தருகிறேன்” என, பச்சையாகப் புரோக்கராக மாறிப் பேசினார்.

இதுபோல, சங்கத்தைக் கலைப்பதையே தனது பிறவிக் கடமையாக நினைத்து முதலாளிகளுக்கு சேவை செய்து வருகிறார் சோம்பு. பல பன்னாட்டு நிறுவனங்களில் கலைத்தும் இருக்கிறார். இந்த புரோக்கர் வேலைக்கு சட்ட வடிவம் கொடுக்க, சோம்பு கையாளும் உத்திதான் ஒர்க்கர்ஸ் கமிட்டி. இவர் பதவியேற்ற நாள் முதல், பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் மூலமாகப் போடப்பட்டதை விட, ஒர்க்கர்ஸ் கமிட்டி மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்கள்தான் அதிகம்.

கடந்த 2012 – ஆம் ஆண்டு ஜெயா அரசு கொண்டுவந்த அரசாணை மூலம் ADDL.C.L (கூடுதல் ஆணையர்) பதவியுயர்வு பெற்ற சோம்புராஜன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிலையாணை மீது சான்றளிக்கும் அதிகாரம் பெற்றவர்.

தொழிலாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அவர்களை அடிமைகளாக்கும் ஆலையின் சட்ட திட்டம்தான் இந்த நிலையாணைகள். இவை தொழிலாளர் விரோதமாக இருப்பதாகக் கூறி, பல நிறுவன தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால், சோம்புராஜன் உதவியுடன் பெயரளவிலான ஒர்க்கர்ஸ் கமிட்டியை அமைத்து, அவர்களையே தொழிலாளர் பிரதிநிதிகளாக அறிவித்து, நிலையாணைகளுக்கு ஒப்புதல் பெற்றுள்ளன நிறுவனங்கள்.

சோம்புராஜன் மட்டுமில்லாமல், ஓசூர் கமாஸ் வெக்ட்ரா வழக்கில் கிருஷ்ணகிரி LO, ஆக்சில்ஸ் இந்தியா வழக்கில் வேலூர் LO, ஜீ டெக் வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் ACL – I, புதுவை LO – தொடந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்ட ஆய்வாளர்கள் என எல்லா இடங்களிலும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்ற பெயரில், தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் துரோகிகளாக செயல்படுவோர் பெருகி, புழுத்துக் கிடக்கின்றனர்.

தொகுப்பாக,

 • கீழ்மட்ட அதிகாரிகளிடம் மாதாந்திரக் கப்பம் வாங்குவது. அவர்களின் சட்டவிரோத / தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு பாதுகாப்பு தருவது.
 • கீழ்மட்ட நிலையில் நடைபெறுகின்ற பேச்சு வார்த்தைகளைத் தனக்கு மாற்றிக்கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து, நிறுவனங்களிடம் பணம் பறிப்பது. பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்வது.
 • சங்கங்களைக் கலைத்து விட்டு, ஒர்க்கர்ஸ் கமிட்டி வைத்துக் கொள்ளுமாறு தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துவது.
 • கீழ்மட்ட அதிகாரிகளை மிரட்டுவதோடு, பேச்சுவார்த்தையின் போது சங்க நிர்வாகிகளை அதட்டுவது.
 • மேலும், கீழ்மட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்கியதன் மூலம் அவர்களின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கும் சட்ட் அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

எனவே,

 • கடந்த 5 ஆண்டுகளில் சோம்புராஜனின் ஆளுகையின் கீழ் போடப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தங்கள், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் அனைத்தையும் சீராய்வு செய்ய வேண்டும். இதற்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
 • தமது தொழிலாளர் விரோதப் போக்குகளை சட்டப்படி நடத்த தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த முதலாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • முதலாளிகளின் ஏவலர்களாக செயல்படும் சோம்புராஜன் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக – தொழிலாளர் விரோதமாக சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

தொழிலாளர் வர்க்க விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து, தொழிலாளர்களின் வாழ்வை நாசம் செய்துவரும் இந்த நச்சுப்பாம்புகளை ஒழிக்க, சட்டத்திற்கு வெளியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு நடத்தும் போர்க்குண மிக்கப் போராட்டங்களே ஒரேவழி.

செய்தி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு

 1. அப்பாடா! உருப்படியான கட்டுரை. அஜித், விஜய், சூர்யா போன்ற காமெடியன்களின் சமூகப் பொறுப்பு பற்றிய விமர்சனங்கள், தேவை இல்லாத ஜாதிக் காழ்ப்புணர்வு ஆராய்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்து, தொழிலாளர் பிரச்சினைகளை அலசும் இதுபோன்ற கட்டுரைகளை அடிக்கடி வெளியிட்டால் வினவு இன்னும் சிறப்பாக இருக்கும். இன்னும் சிக்கிக்கொள்ளாத சோம்புராஜன்களைத் தோல் உரிப்பது மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பேரில் தொழிலாளர்கள் எந்தப் பாதுகாப்புமற்று கேள்விமுறையற்றுச் சுரண்டப்படும் அவலத்தைப்பற்றிய பதிவுகள் இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவை.

  • //அஜித், விஜய், சூர்யா போன்ற காமெடியன்கள்//

   //தேவை இல்லாத ஜாதிக் காழ்ப்புணர்வு ஆராய்ச்சிகள்//

   மேற்கூறிய கருத்துக்களை தமிழகத்திலுள்ள பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவர்களும் உங்களைப்போன்றே முற்போக்காக மாறும்போது அவை குறித்த கட்டுரைகள் தேவையற்றனவாகி விடுகின்றன. ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. நடிகர்கள் தலைவர்களாகவும், ஜாதிக்காழிப்புணர்வுகள் மக்களை வழிநடத்தும் நெறிமுறைகளாகவும் உள்ள சூழ்நிலையில் இவை தேவையில்லை என்று கூறுவது சரியல்ல. அவை தேவையற்றதாக காலம் வரும்வரை அவையும் அவசியம், நீங்கள் கூறும் கட்டுரைகளும் அவசியம்…

 2. ///தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் என்னும் உயர்பதவி, தனது கட்டுப்பாட்டில் 7 மாவட்டங்கள், தனக்குக் கீழ் 33 ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) என குறுநில மன்னன் போல அதிகாரம் செலுத்திய சோம்புராஜன், கேவலம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டது அவருக்கே கூட ’அசிங்கமாக’ இருந்திருக்கும்.///

  லஞ்சம் ஒரு ரூபாய் என்றாலும் தவறே.

  இதை வெறும் பதினைந்தாயிரம் என்று தவறாகக் கணக்குப் போட்டுவிட்டீர்கள். இது ஒரு இணை-பொருளாதாரத்தின் நுனி. அவ்வளவுதான்.நிதானமாக யோசித்துக் கணக்குப் போட்டுப் பாருங்கள். உண்மை விளங்கும்.

  33 ஆய்வாளர்கள், ஒவ்வொரு ஆய்வாளரும் மாதம் 15000 தரவேண்டும் என்றால், மாதம் 4,50,000 ஆகிறது. வருடம் 54,00,000 ஆகிறது. இப்படித்தான் ஒவ்வொரு அதிகாரியும் தமக்குக் கீழே வேலை செய்யும் துணை அதிகாரிகளிடம் மாதாந்திர வசூல் செய்து, வருவதில் பாதியைத் தனது மேலதிகாரிக்குத் தரவேண்டும். அவர் தனக்கு வருவதில் பாதியைத் தனக்கு மேலதிகாரியிடம் தருவார். மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் போல. இப்படியாகக் கோடிக் கணக்கில் பெருந்தொகையாக அரசுச் செயலரைச் சென்றடையும் பணம், அதில் பாதி அமைச்சரைச் சென்றடைகிறது.

  இது Parallel economy. What is found is tip of the iceberg.

  • சரி..அமைச்சர் தனக்கு
   கிடைப்பதில் யாருக்கு தருவார்?
   அம்மா தாயே…

 3. அதனால்தான் சொல்கிறேன்…சுண்ணாம்பு காளவாய் மிகவும் சிறந்தது-அதுவும் சூரிய
  உதயத்துக்கு முன்பு

 4. தொழிலாளர் இணை ஆணையர் சோம்ராஜ் விவகாரம் எல்லாம் சாதாரணம், அதைவிட கூடுதலாக அதே பதவியில் உள்ள மதுரை தொழிலாளர் இணை ஆணையர் திரு.ராஜா அவர்கள் தன் கீழ் வேலைசெய்யும் பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு இலாகா பூர்வமான விசாரணையில் நிறுபிக்கப்பட்டுள்ளது. தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண் அலுவலரை தாக்கப்பட்டு முதல் குற்றவாளி என குற்ற அறிக்கை நாகர்கோவில் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இவர்மீது இது சம்மந்தமாக உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது, அதுபோக மனித விடியல் மற்றும் குமுதம் ரிப்போர்டர் மாத இதழில் செய்தி வெளிவந்துள்ளது. மக்கள் செய்தி மையம் டாட்காம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது. ஆனால், அரசு இவர்மீது இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Leave a Reply to ஆனந்தம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க