privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்லஷ்மண்பூர் - பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !

லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை !

-

பீகாரிலுள்ள லஷ்மண்பூர்-பதே கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் 58 பேரை ரன்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் குண்டர் படையினர் படுகொலை செய்த வழக்கில், அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 26 ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதிகளை பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உற்றார் – உறவினர்களது சாட்சியங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்று கூறி கடந்த அக்டோபர் 9-ஆம் நாளன்று மனுநீதியையே இந்நீதிமன்றம் தனது தீர்ப்பாக நிலைநாட்டியுள்ளது.

லஷ்மண்பூர் பதே கொலைவெறியாட்டம்
லஷ்மண்பூர் – பதே கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் 58 பேரை படுகொலை செய்து ரன்வீர் சேனா நடத்திய பயங்கர வெறியாட்டம் (கோப்பு படம்).

பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவில், ஜெகனாபாத் மாவட்டத்தின் சோனே ஆற்றின் கரையிலுள்ள கிராமம்தான் லஷ்மண்பூர்-பதே. ராஜபுத்திரர்கள், பூமிகார் ஆகிய ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களையும், மல்லா, பஸ்வான் முதலான தாழ்த்தப்பட்ட சாதியினரான  கூலி விவசாயிகளையும் கொண்ட கிராமம் இது. வழக்கமாகத் தமக்கு வழங்கப்படும் கூலியான ஒன்றரை கிலோ உணவு தானியத்தை அறுவடைக் காலத்தில் 3 கிலோவாக உயர்த்தித் தருமாறு கோரி, வேலைக்கு வராமல் இக்கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் இ.பொ.க. (மா-லெ) லிபரேஷன் கட்சியின் தலைமையில் திரண்டு போராடினர். நக்சல்பாரிகள் இயக்கம் இப்பகுதியில் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவும், தம்மை எதிர்க்கத் துணிந்து விட்ட  தாழ்த்தப்பட்டோரை அச்சுறுத்திப் பணிய வைக்கவும் 1997 டிசம்பர் முதல் நாளன்று நள்ளிரவில் இக்கிராமத்தின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பைச் சுற்றிவளைத்து பூமிகார் நிலப்பிரபுக்களின் ஆதிக்க சாதிவெறி குண்டர் படையான ரன்வீர் சேனா கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

போஜ்பூரிலிருந்து சோனே ஆற்றைக் கடந்து ஆயுதங்களுடன் படகில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா குண்டர்கள், உள்ளூர் பூமிகார் நிலப்பிரபுக்கள் வழிகாட்ட, தாழ்த்தப்பட்டோரை வீடுகளிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு சுற்றிவளைத்துக் கொண்டு தாக்கிக் கொன்றனர். தப்பியோடியவர்களை டார்ச் லைட் மூலம் வீடுவீடாகத் தேடி விரட்டிக் கொன்றனர். இக்கொலைவெறியாட்டத்தில் 27 பெண்கள், 16 குழந்தைகள் உள்ளிட்டு 58 தாழ்த்தப்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டனர். நொறுங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்டோரது வீடுகளின் சுவர்களிலும் தரையிலும் மட்டுமின்றி, சோனே ஆற்றங்கரைலும், கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகிலும் கூட  இரத்தம் தெறித்திருந்தது. கொல்லப்பட்ட 27 பெண்களில் 8 பேர் கர்ப்பிணிகள். இக்கொலைவெறியாட்டம் நடந்த போது தானிய மூட்டைகளுக்குப் பின்னே பதுங்கிக் கொண்டு உயிர் பிழைத்தார் கர்ப்பிணியான ராஷ்மி தேவி. இக்கோரத்தைக் கண்ணெதிரே பார்த்த பீதியில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ”நாங்கள் தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளைக் கொல்வதற்குக் காரணம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு நக்சல்பாரிகளாகி விடுவார்கள் என்பதால்தான். நாங்கள் பெண்களைக் கொல்வதற்குக் காரணம், அவர்கள் நக்சல்பாரிகளைப் பெற்றெடுத்து விடுவார்கள் என்பதால்தான்” என்று ரன்வீர் சேனா பகிரங்கமாகவே கொக்கரித்தது.

நம்பிக்கையிழந்த தாழ்த்தப்பட்ட மூதாட்டி
”தீர்ப்புக்குப் பின்னர் சாதிவெறியர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எங்களைப் பிடித்தாட்டுகிறது. நாங்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிற்கிறோம்” என்று கூறும் தாழ்த்தப்பட்ட மூதாட்டி.

தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு, அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டங்களால் நக்சல்பாரி இயக்கம் பீகாரில் பற்றிப் பரவத் தொடங்கியதும், ஒவ்வொரு ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களும் தனிவகை குண்டர் படைகளைக் கட்டியமைத்துக் கொண்டு உழைக்கும் மக்கள் மீது தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர். குர்மிகளின் பூமி சேனா, யாதவர்களின் லோரிக் சேனா, பூமிகார்களின் ரன்வீர் சேனா, ராஜபுத்திரர்களின் சன்லைட் சேனா முதலான குண்டர் படைகள் மட்டுமின்றி, பிரம்ம ரிஷி சேனா, குயேர் சேனா, கங்கா சேனா முதலான வட்டார அளவிலான குண்டர் படைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றில், 1994-இல் கட்டியமைக்கப்பட்ட பூமிகார்களின் ரன்வீர் சேனாதான் வலுவானதும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதுமாகும். அதன் தலைவன்தான் பிரம்மேஷ்வர் சிங். அவன் முன்னின்று வழிநடத்தியதுதான் லஷ்மண்பூர்-பதே கொலை வெறியாட்டம்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களால் நடத்தப்பட்ட இப்படுகொலை பற்றிய வழக்கில் 11 ஆண்டுகளான பின்னரும் நீதிமன்ற விசாரணை தொடங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரே 2008-இல்தான் விசாரணையே தொடங்கியது. படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பாட்னா அமர்வு நீதிமன்ற நீதிபதியான விஜய் பிரகாஷ் மிஸ்ரா, குற்றம் சாட்டப்பட்ட சாதிவெறியர்களில் 16 பேருக்கு மரண தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி, எஞ்சிய 9 பேரை விடுதலை செய்து 7.10.2010 அன்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து சாதிவெறியர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செதனர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு கொலைகார சாதிவெறியர்களை உயர் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்துள்ளது. ”பீதி நிறைந்த அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைக்கத் தப்பியோடியிருப்பார்களே அன்றி, படுகொலை நடந்த இடத்தில் இருந்திருக்க மாட்டார்கள்; குற்றவாளிகளை இருட்டில் அடையாளம் கண்டிருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை” என்று தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம். இந்தப் படுகொலைக்கான காரணம் மட்டுமல்ல, குற்றவாளிகளை விடுவிப்பதற்கு நீதிமன்றம் கூறியிருக்கும் காரணமும் அப்படியே கீழ் வெண்மணியை ஒத்திருக்கிறது.

ஆனால் முகத்தை மறைத்துக் கொண்டு வந்த அவர்களின் தோற்றத்தை வைத்தும், அவர்களின் குரலை வைத்தும் அவர்கள் யார் என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்கள் அடையாளம் காட்டி சாட்சியமளித்த போதிலும், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்திருக்கிறது. தீர்ப்பளித்த நீதிபதிகள் கொலைகாரர்களை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, அதற்கேற்ப கிரிமினல்களைப் போலச் சிந்தித்துத் தீர்ப்பெழுதியிருக்கின்றனர். மேல் முறையீட்டில் சாதிவெறியர்கள் விடுதலையாகும் விதத்திலும், உயர்நீதி மன்றம் சட்டப்படி குற்றவாளிகளை விடுவிப்பதற்கு ஏதுவாகவும், போதுமான ஓட்டைகளுடன் குற்றப்பத்திரிகையை போலீசு தயாரித்திருக்கும்.

”இத்தீர்ப்பையடுத்து ஆதிக்க சாதிவெறியர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து ஆனந்தக் கூத்தாடுகின்றனர். ‘உங்கள் வீட்டைக் கொளுத்தினாலும், உங்களைக் கொன்றாலும் எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது பார்த்தீர்களா’ என்று எங்களிடம் எகத்தாளம் செய்கின்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர்கள் எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எங்களைப் பிடித்தாட்டுகிறது. நாங்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிற்கிறோம்” என்கிறார் லஷ்மண்பூர்-பதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட மூதாட்டி.

ரண்வீர் சேனா
பூமிகார் நிலபிரபுக்களின் ஆதிக்கசாதி கொலைகார குண்டர் படையான ரண்வீர் சேனா.

”இவ்வளவு கொடிய சாதிவெறிப் படுகொலையில் குற்றவாளிகள் தப்பிக்கிறார்களே, அது எப்படி சாத்தியம்? ஏனெனில், நீதிமன்றங்கள் அவர்களுக்கானது; அரசாங்கம் அவர்களுக்கானது; போலீசு அதிகாரம் அவர்களுடையது. ஏழைகளுக்கு எதுவுமில்லை. இதுதான் இன்றைய நீதி!” என்று தனது சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறார், தனது குடும்பத்தில் ஏழு பேரை இப்படுகொலையில் பறிகொடுத்த லஷ்மண்பூர்-பதே கிராமத்தைச் சேர்ந்த பவுத் பஸ்வான் என்ற தாழ்த்தப்பட்ட கூலி விவசாயி.

பீகாரில் சாதிவெறி பயங்கரவாதிகள் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவது இப்போது முதன்முறையாக நடப்பதல்ல. ஏற்கெனவே பதானிதோலாவில் தாழ்த்தப்பட்டோரைக் கொன்ற குற்றவாளிகள் 2012 ஜூலையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் நக்ரி பஜார் பகுதியில் சாதிவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலையின் குற்றவாளிகள் 2013 மார்ச்சில் விடுவிக்கப்பட்டனர். இவை தவிர மியான்பூர், நாராயண்பூர், காக்தி பிகா முதலான இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்ட வழக்குகளில் அமர்வு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட  சாதிவெறியர்கள் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லஷ்மண்பூர்-பதே படுகொலையை அன்றைய அரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்த பின்னரே, லல்லு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவியின் ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம் ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமிர்தாஸ் தலைமையிலான ஒரு ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னரே ராப்ரி தேவி அரசாங்கம் கவிழ்ந்தது. பின்னர் 2006-இல் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள – பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக்  கலைத்து, அதன் விசாரணை அறிக்கையை முடக்கி வைத்தது. இருப்பினும், சில சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இந்த அறிக்கை அம்பலமானது. காங்கிரசு, பா.ஜ.க., சமதா முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் மட்டுமின்றி, ‘சமூக நீதி’ பேசும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் முதலான ஓட்டுக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் பிரமுகர்களும் ரன்வீர் சேனாவின் கூட்டாளிகளாகவும் புரவலர்களாகவும் இருந்துள்ள விவகாரம் இந்த அறிக்கையின் மூலம் வெளிவந்தது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியே பூமிகார் சாதிவெறி நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருப்பதால், கொலைகாரன் பிரம்மேஷ்வர் சிங்கின் பெயர் ரன்வீர் சேனா நடத்திய படுகொலைகள் தொடர்பான எந்த முதல் தகவல் அறிக்கையிலும் சேர்க்கப்படவில்லை. அவன் பிணையில் வெளிவர மனுச் செய்த போது, அதை நிதிஷ் அரசாங்கம் எதிர்க்கவுமில்லை. பின்னர், குற்றங்கள் நிரூபணமாகவில்லை என்று 2011-இல் அவன் விடுதலை செய்யப்பட்டான். அதன் பிறகு அவன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும், இச்சாதிவெறி பயங்கரவாதிக்கு பா.ஜ.க.வும் ஐக்கிய ஜனதா தளமும்  கண்ணீர் அஞ்சலி செலுத்தின.

பிரம்மேஷ்வர் சிங்
லஷ்மண் பூர் – பதே கொலைவெறியாட்டத்தை வழிநடத்திய ரண்வீர் சேனா குண்டர் படையின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் (கோப்பு படம்).

இவையனைத்தும், இன்றைய அரசியலமைப்பு முறையே தாழ்த்தப்பட்டோருக்கும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் எதிரானதாக இருப்பதையும், பெயரளவிலான ஜனநாயகத்தையும் சட்டப்படியான மனித உரிமைகளையும் கூட செயல்படுத்த வக்கற்று தோல்வியடைந்து கிடப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. ஏற்கெனவே சமூக ரீதியில் ஒரு ஆதிக்க சாதி என்ற முறையில் பெற்றிருக்கும் அதிகாரத்துடன், அரசியல் கட்சி, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை போன்றவற்றிலும் இந்த இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர், இத்தகைய இடைநிலைச் சாதிகளில் தோன்றியிருக்கும் புதியவகை தரகு வர்க்கங்கள் இன்று சாதிக் கட்சிகளின் புரவலராக இருந்து, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியலுக்கு வழியமைத்துக் கொடுப்பதோடு, தீண்டாமையைத் தங்களது பிறப்புரிமையாக அறிவிக்கும் அளவுக்குக் கொட்டமடிக்கின்றன. தமிழகத்தில் ராமதாசு உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதிகளின் கூட்டணி இத்தகையது தான்.

சாதி-தீண்டாமையை ஒழிப்பதற்கு முன்வைக்கப்படும் சீர்திருத்தவாதத் தீர்வுகளும் நாடாளுமன்ற அரசியல் வழிமுறைகளும் தோல்வியைத் தழுவி விட்டன என்பது மட்டுமல்ல, அவை சாதியை மேலிருந்து உறுதிப்படுத்துவதற்கும், தீண்டாமைக் கொடுமைகளை தீவிரப்படுத்துவதற்குமே பயன்படுகின்றன. சாதி அரசியலுக்கும், சாதியைப் புனிதப்படுத்தும் பார்ப்பனியத்துக்கும், பிழைப்புவாத நாடாளுமன்ற அரசியலுக்கும் எதிராக ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதுதான் அவசரக் கடமையாக இருக்கிறது.

-குமார்
_____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________________