privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 12/11/2013

ஒரு வரிச் செய்திகள் – 12/11/2013

-

செய்தி: அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஈசுவரன் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார். பொழுதுபோக்குக்காக இதை செய்ததாக விசாரணையில் கூறியிருக்கிறார்.

நீதி: பாகிஸ்தான் ஹேக்கர்கள் செய்ததாக வெறுப்பைக் கிளப்பிய ஊடகங்களும் இந்து மதவெறியர்களும் எப்போது முடக்கப்படுவார்கள்?

______

செய்தி:  பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

நீதி: ஆன்மீகம், ஆபாசம் இரண்டும் வேறல்ல என்று இந்து ஞான மரபை நிரூபித்த ‘மகான்’.

______

செய்தி: கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது கிரிமினல் குற்றம் ஆகாது. இதை புலனாய்வு அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நீதி: நிலக்கரி ஊழலில் தன்னை விசாரிக்க கூடாது, அது ஒரு கொள்கை என கிரிமினல் குற்றத்திற்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குமாறு சிபிஐக்கு மறைமுகமாக உத்தரவிடுகிறார் பிரதமர்.

______

செய்தி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ஒன்றும் ‘கூண்டுக் கிளி’ அல்ல என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீதி: ஆமாம், காங்கிரஸ் வளாகத்தில் மட்டும் ‘சுதந்திரமாக’ பறக்கும் வளர்ப்புக் கிளி!

______

செய்தி: தமிழகத்தில் மக்கள்நலப் பணியாளர்களை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விடுத்த உத்தரவை திங்கள்கிழமை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

நீதி: இந்த உத்திரவினால் அதே திங்கட்கிழமை இரவு போயஸ் தோட்டத்தில் செருப்படி வாங்கியவர் எவரோ?

______

செய்தி: நரேந்திர மோடி, ராகுல் காந்தி தெரிவிக்கும் விமர்சனங்கள் நாராசமாக ஒலிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

நீதி: போயஸ் தோட்டத்திற்கும், கோபாலபுரம்-சிஐடி காலனிக்கும் காவடி தூக்கி பக்தி யாத்திரை செல்வது மட்டும் நாகரீகமா மிஸ்டர் எச்சூரி?

______

செய்தி: தமிழகம் மற்றும் கேரளத்துக்கு இடையே நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடந்து வரும் முல்லை பெரியாறு அணை வழக்கின் தீர்ப்பு தாமதமாகலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

நீதி: தீர்ப்பு மட்டுமல்ல நீதியும் தாமதமாகவே வந்தாலும், அதை அமல்படுத்தும்படி கேரளாவை உத்தரவிடுவதற்கு உரிய தைரியம் எந்த நீதிபதிக்கும் வரவே வராது.

______

செய்தி: தமது கட்சி நிதி தொடர்பான அரசின் விசாரணையை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இதேபோல் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிதி ஆதாரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதி: கட்சிகளுக்கு நிதி வழங்கும் முதலாளிகளின் நிதி ஆதாரத்தை விசாரிப்பதற்கு ஆம் ஆத்மிக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் உடன்பாடில்லை என்பதுதான் இந்த செய்தியின் மூலாதாரம்.

______

செய்தி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ரூ. 19 கோடி தேர்தல் நிதி வசூலாகியுள்ளது. ரிக்ஷா தொழிலாளி, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், சியாச்சின் பகுதியிலுள்ள இந்திய ராணுவ வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் டெல்லி தேர்தலை முன்னிட்டும் ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதற்காகவும் இத்தொகையை வழங்கியுள்ளனர்.

நீதி: இவர்களில் தொழிலதிபர்கள் யார், அவர்கள் என்ன தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள், முறையாக வரி கட்டுகிறார்களா, அரசு வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப கட்டுகிறார்களா என்பதையெல்லாம் ஆம் ஆத்மி கட்சி வெளியிடுமா?

______

செய்தி: கிரிக்கெட்டில் சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், விளையாட்டுத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கிரிக்கெட் நட்சத்திரம் ராகுல் திராவிட் கலந்து கொண்டு தனது கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

நீதி: உரைக்கான டிப்ஸுகளை மருமகன் குருநாத் மெய்யப்பனும், மாமா இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும் பிசிசிஐ சார்பில் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

______

செய்தி:  குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உயிருக்கு பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு கவலை தெரிவித்தார்.

நீதி: ‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ எனும் மோடிக்கு பிடித்த தத்துவப்படி கோத்ரா எரிப்புக்கு எதிர்வினையாக முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றால் அதற்கு எதிர்வினை இதுவாகத்தானே இருக்க முடியும் திருவாளர் வெறுப்பையா நாயுடு காரு?

______

செய்தி: மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

நீதி: இன்னமும் பேரம் படியவில்லையாம்.

______

செய்தி: காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது, இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

நீதி: நாடகத் திரையின் விரிசல் இந்திய – இலங்கை நாடுகளின் உறவில் விரிசலை எப்படி ஏற்படுத்தும்?

______

செய்தி: வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால் சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் சனிக்கிழமை கலவரம் வெடித்தது. இதில் சவூதியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 561 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதி: அல்லாவின் மண்ணில் அமெரிக்கனுக்கு இடமுண்டு, ஆசிய ஆப்பிரிக்க ஏழைகளுக்கு இடமில்லை!