Monday, May 5, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்பாவ் நகர் - மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?

பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?

-

குஜராத் மாநிலம் பாவ் நகர் மாவட்டத்திலுள்ள மிதி விர்தி கிராமத்தில் ”வெஸ்டிங் ஹவுஸ் கார்ப்பரேசன்” என்ற அமெரிக்க நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 6600 மெகா வாட் மின்னுற்பத்தித் திறனுள்ள அணு உலைகளைக் கட்டவிருக்கிறது. இப்பேரழிவுத் திட்டத்தை எதிர்த்து  அப்பகுதியிலுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அணுஉலைக்கெதிரான பாவ்நகர் மக்கள் போராட்டம்
குஜராத்தில் நிறுவப்படவுள்ள அணு உலைத் திட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணு உலையைக் கட்டியமைத்த நிறுவனம் மிகமிகக் குறைவான தொகையை நட்டஈடாகக் கொடுத்தால் போதும் என்றவாறு அணுசக்தி கடப்பாடு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அற்பமான நட்ட ஈடு கொடுக்கும் விதியும் கூட  இருக்கக் கூடாதென்று வெஸ்டிங் ஹவுஸ் கார்ப்பரேசன் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவிற்குச் சென்ற மன்மோகன் சிங், இந்நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துவிட்டு வந்துள்ளார். மன்மோகனின் இச்செயலைக் கண்டித்தும், மிதி விர்தி அணு உலைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும், கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஊர்வலமாகத் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் காங்கிரசுக் கூட்டணியின் மைய அரசும், குஜராத்தை ஆளும் பா.ஜ.க.வும் விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தி விட்டு, அணு உலைகளைக் கட்டியமைப்பதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அணுசக்தி கடப்பாடு மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரசு கூட்டணி அரசுக்குப் பக்கபலமாக இருந்து உதவிய பா.ஜ.க., இப்போது தங்களது ஆட்சியிலுள்ள குஜராத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அணு உலையைக் கட்டும் அமெரிக்க நிறுவனத்திற்கு விசுவாசமாக நின்று, தங்களுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

____________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013

____________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க