privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைசச்சினின் 'சீக்ரெட் ஆஃப் எனர்ஜி' !

சச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ !

-

ச்சின்
உங்கள் சாதனையைக் கண்டு
நாங்களும் வியக்கிறோம்.

டெண்டுல்கர் தேசபக்தி

இருபத்திநான்கு ஆண்டுகள்
எந்தச் சூழலிலும்,
சாதாரண இந்தியனின்
எந்தப் பாதிப்பிலும்
கவனம் திரும்பாமல்,
தனது ஆட்டத்திலேயே
குறியாயிருந்து
முன்னேறிய
தங்கள் ‘திறமை’
எங்களை திகைக்க வைக்கிறது!

தாயுடனான, மனைவியுடனான,
குழந்தைகளுடனான… பொழுதுகளை
நிறைய இழந்ததாய்
நிறைவுப்போட்டியின் இறுதியில்
நீங்கள் சொன்னபோது வருந்தினோம்,
குடும்பத்தை இழந்து ஷார்ஜாவிலும்
குவலயத்தின் ஏதாவதொரு தெருக்கோடியிலும்
தேசத்தையே இழந்து நாங்கள்
உங்கள் பின்னால் திரண்டபோதும்,
தன்னையே இழந்த
எங்களது இழப்பில்
நீங்கள் தடுமாறாமல்
ஆடிய அழகில் வியந்தோம்!

சிவசேனையால் கொல்லப்பட்ட
இசுலாமிய மக்களின் இல்லங்களில்
அழுகுரல் ஓயாத நிலையிலும்
உங்கள் திருமணத்திற்கு
வந்த சிலரில்
பால்தாக்கரேவும் உண்டு.
இறுதி ஓய்விற்காக
நீங்கள் அளித்த விருந்தில்
ராஜ் தாக்கரேவும் உண்டு.
கொலைகாரனையும்
உபசரிக்கும்
உங்கள் விருந்தோம்பல் சாதனையில்
நாங்கள் கிளீன் போல்டு!

தங்கள் சொந்த மாநிலமான
மகாராஷ்ட்ராவின்,
விதர்பா விவசாயிகள் தற்கொலை,
குரூரமாக கொளுத்தப்பட்ட
கயர்லாஞ்சியின் தலித்துக்கள்,
குஜராத்தில்
ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட
இசுலாமியர்கள்,
எந்த விசயத்தையும்
கண்டு கொள்ளாமல்
எச்சரிக்கையாய்,
எதைப் பற்றியும் வாய் நழுவாமல்
குவிக்கப்படும்
சொந்த ரன்களின் நலன்களிலேயே…
இப்படி ஒரு மனிதன்
இருக்க முடியுமா? என
வாழ்வை அர்ப்பணித்த
உங்கள் கிரிக்கெட் ‘வெறியில்’
நாங்களும் உறைந்தோம்!

பெப்சி சச்சின்
பெப்சியில் “சீக்ரெட் ஆஃப் எனர்ஜி”

விளையாட்டைத் தவிர
வேறெதிலும் செலவிடமுடியாத
தங்களது லட்சியத்தின் துடிப்பு,
பெப்சி, எம்.ஆர்.எஃப்,
பூஸ்ட்… போன்றவற்றில்
”சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக”
செயல்பட்டதைப் பார்த்து சிலிர்த்தோம்!

பாரத ரத்னா பற்றி
வேறு ஏதோ நினைத்திருந்தோம்,
உங்களுக்கு
வழங்கப்பட்ட பிறகுதான் புரிந்தது,
அது,
தன்னலம் தவிர
உலகம் மரத்துப்போன
மனிதர்களுக்கான குரூரம் என்று.
களத்துக்கு வெளியே
நீங்கள் கவனமாக ஆடிய
கார்ப்பொரேட் உணர்ச்சிகளுக்கான
நுட்பத்தை
உங்களைத் தவிர
உள்ளுக்குள் யார் ஆட முடியும்?

உலகமயம் சூடுபிடித்த
ஆடுகளத்தில்
ஒட்டு இடமுமின்றி
உடலெங்கும் பன்னாட்டுக் கம்பெனிகள்
விளம்பரம் தரித்து,
தேசபக்தியோடு நீங்கள் அடித்த
சிக்சரிலும், ஃபோரிலும்
இந்தியாவின் ஸ்கோர் மட்டுமா
எகிறியது?
அன்னிய மூலதனத்தின் அளவையும்
எகிறவைக்க ஆடிய நாயகன் நீங்கள்!

எவன் செத்தாலும்
யார் என்ன சொன்னாலும்!
சுற்றிலும் அழுத்தும்
மனித உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல்
தனது இலக்கில் மட்டுமே
வாயை மூடிக்கொண்டு
குறியாய் இருக்கும்
மன்மோகன்சிங் கிரிக்கெட் ஆடினால்
நிச்சயம் அவர்பெயர் டெண்டுல்கர்தான்!

– துரை.சண்முகம்