privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஎன்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – நீங்களும் எழுதலாம்

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – நீங்களும் எழுதலாம்

-

ணரூழ்த்து நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

–    குறள் 650

ஆசிரியர்இந்தக் குறளுக்கு மு.வ உரையின் படி,

தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

– என்பது பொருளாகும்.

பல வண்ணங்களில் தோட்டம் தோட்டமாக மலர்ந்திருந்தாலும் இன்றைய ஆசிரியர்களிடம் இத்தகைய மணம் கமழும் இயல்பு வெகு அரிது. தூரத்தே கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தாலும் அருகாமையில் கூட மணம் பரப்பாத இந்தப் பூக்களால் என்ன பயன்?

கல்வி என்பது வேலை வாய்ப்பாகவும், வாழ்க்கையின் பொருளாதார ஓட்டத்திற்கு தேவைப்படும் பந்தயக் குதிரை தயாரிப்பாகவும் அருகி விட்ட சூழ்நிலையில் அறிவு மட்டுமல்ல, அறிவை செதுக்கும் ஆசிரியக் கலை அறிந்த ஆசிரியர்களும் வெறுமனே ரிங் மாஸ்டர்களாக மட்டும் மிரட்டுகிறார்கள்.

அறிவுப் பெருவெளியில் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, எழுந்து, அன்னமாகவும், சிறுத்தையாகவும் ஓட வேண்டிய நாம் கூண்டில் அடைபட்ட விலங்குககளாய் சலிப்பூட்டும் விதத்தில் ஆடுகிறோம்.

ஆசிரியர்

இயற்கை, மனித சமூகம், சிந்தனை மூன்றின் இயக்கத்தையும், வரலாற்றையும், போராட்டத்தையும் உள்வாங்கி அந்தப் பாதையில் பயின்று பங்களிக்கும் போது மட்டுமே அறிவும், நடைமுறையும், வரலாறும் ஒன்றுக்கொன்று தோழனாய் பிரபஞ்சப் பெருவெளியில் வெற்றிகரமாய் பயணத்தை தொடரும்.

ஆனால்?

மறுகாலனியாக்க சூழலில் கல்வியை தனியார்மயம் கவ்வியிருக்கும் நிலையில் அறிவும் ஆசிரியர்களும் சந்தையின் விதிகளைக் கற்றுத்தரும் தனிநபர்வாதத்தை மட்டும் கற்றுத் தருகின்றனர்.

சந்தையின் புதிய காரை தொலைவிலேயே அடையாளம் காணும் சிறுவனுக்கு தாமிரபரணி ஆறு தெரியாது. ராக்கியையும், அண்டர்டேக்கரையும் விடாது துரத்தும் மாணவர்களுக்கு வெள்ளையனை துரத்த முயன்ற திப்புசுல்தானின் வீரமரணம் தெரியாது. ராகு கேது கதைகளோடு விரதமிருக்கும் பெண்களுக்கு கிரகணம் குறித்த அறிவியல் உண்மை போய்ச் சேருவதில்லை. லாஸ் வேகாசின் தெருக்களை வீடியோ கேமினால் அறியும் இளைஞனுக்கு மாஞ்சோலையின் அமைவிடம் தெரியாது. அழகு நிலையங்களிலும், நிலைக்கண்ணாடியிலும் அழகைத் தேடும் மாணவிகளுக்கு சமூகக் களத்தில் உருவாகும் பேரழகு குறித்து கிஞ்சித்தும் தெரியாது.

பேராசிரியர்

ஜன்மாஷ்டமியில் உண்ணியப்பத்தை ருசிக்கும் பக்தர்களுக்கு வருணாசிரமத்தை போதித்த கீதைக்கும் முந்தைய குறளின் “பிறப்பொக்க எல்லா உயிர்க்கும்” வரிகளின் வரலாறு தெரியாது. பங்குச் சந்தையின் சூதாட்டத்தை பயலும் வணிகவியல் மாணவர்களுக்கு பல பத்தாண்டுகளில் விலைவாசி உயராத சோவியத் சமூகத்தின் வரலாறு தெரியாது.

இவையெல்லாம் கற்றுத்தருகின்ற கல்விக்கூடமும், ஆசிரியர்களும் எங்கே இருக்கின்றார்கள் என்றால் அதற்கு சோவியத் யூனியனையும், பொதுவுடமையை சீனாவையும் கூறலாம். இரண்டும் தற்போது இல்லை. ஒருவேளை இத்தகைய சமூக அமைப்பு இல்லையென்றாலும் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் ஏதோ ஒரு துறை சார்ந்த ஆர்வத்தையும், பரவசத்தையும் தமது தனிப்பட்ட ஆர்வத்தினால் கற்றுத்தந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தமது பணியை விரும்பி ஏற்றதோடு அதை ஒரு தொண்டாகவே செய்து வந்தார்கள், வருகிறார்கள். கல்வியை விருப்பமான அறிவாக, கலையாக மாணவர்களிடம் கற்பிக்க முனையும் இத்தகைய ஆசிரியர்களைப் பெற்ற மாணவர்கள் நிச்சயமாக அதிர்ஷடசாலிகள்தான். இதில் நாம் அறிவியலை விடுத்து அதிர்ஷ்டத்தை மட்டும் சார்ந்து நிற்பது ஒருவகையில் துரதிர்ஷடவசமானதுதான். ஆயினும் என்ன செய்வது?

ஆசிரியர்ஆரம்ப பாடசாலை முதல் உயர்மட்ட கல்வி வரை இவர்கள், உயிரெழுத்தையும், கணித வாய்ப்பாட்டையும், குவாண்டம் இயற்பியலையும், உழைக்கும் மக்களின் கதைகளையும், வரலாற்றின் வழியையும் சலிப்பில்லாமல் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

வினவில் வந்த கவரப்பட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் போல, தங்க மீன்களின் எவிட்டா மிஸ் போல ஊருக்கொன்றாய், காலத்திற்கொன்றாய் இவர்கள் இருக்கலாம். அவர்களைப்பற்றி நாம் நினைவு கூர்வதும், அந்த நினைவின் வழி நல்ல ஆசிரியர்களை உலகறியச் செய்வதும், அறிந்த உலகம் இனிவரும் ஆசிரியர்களை அப்படி ஒரு சிலரையாவது உருவாக்குவதற்கும்தான் இந்த முயற்சி.

ஆம். உங்கள் மாணவப் பருவத்தில் அத்தகைய ஆசிரியர்கள் இருந்திருப்பார்கள். அவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகளை எழுதி அனுப்புங்கள். அந்ந ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக மட்டும் இருக்க வேண்டியதில்லை, தனியார் பள்ளி ஆசிரியர்களாகவும், ஏன் வெளிநாட்டு முனைவர் பட்டத்தை வழிநடத்தும் ஆசிரியர்களாக கூட இருக்கலாம்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஹைபிரிட் குதிரைகளை வளர்க்கும் சுமையிலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருத்த சம்பளங்களை வாங்கிக் கொண்டு வட்டிக்கு விடும் தொழிலதிபர்களாகவும் இருக்கும் காலத்தில் நல்ல ஆசிரியர்களை நினைவு கூர்வோம்.

வாசகர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு அழைக்கிறோம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் நினைவுகளை எழுதி அனுப்புங்கள். தட்டச்சு தெரியாத நண்பர்கள் கூட கையெழுத்தில் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பலாம். வரும் நாட்களில் இந்த பதிவுகள் தொடராக வெளிவரும். இந்த தொடருக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள், வெளிச்சத்திற்கு வராத வேர்கள் போல இதைவிடச் சிறப்பான தலைப்புகளை நீங்களும் தெரிவிக்கலாம்.

– வினவு