Monday, October 26, 2020
முகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன்

நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன்

-

னது சொந்த வாழ்க்கையின் சொகுசுகளை ஒரு துளிகூட காய்ந்துவிடாமல் ருசிப்பவர்களும், தனது எதிர் காலத்திற்கும் தனது பெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கான்கிரீட் அடித்தளம் அமைத்து உறுதி செய்து கொண்டவர்களும் “என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?” என்ற கேள்வியை ரொம்பவும் ஆக்ரோசமாகக் கேட்கிறார்கள்.

தாதா அமீர் ஐதர் கான்
தாதா அமீர் ஐதர் கான்

ஆனால் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்திற்காக, மக்கள் விடுதலைக்காகத் தனது சொந்த வாழ்வையும், உயிரையும் இழக்கத் தயாராகவிருந்த தொண்டர்கள் எந்த இயக்கத்தில் நிறைந்திருந்தார்கள் என்ற கேள்வியுடன் நவீன கால வரலாற்றைப் புரட்டினால், உலகெங்கும் அது கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறாக, போராட்ட வரலாறாகவே இருக்கக் காணலாம். இந்தியாவிலும் இது அப்படித்தான்.

ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.

தோழர் அமீர் ஐதர் கானின் ‘’தென்னிந்தியாவைக் கண்டேன்’’ எனும் தன் வரலாற்று நூல் அத்தகையதோர் வரலாற்றுச் சான்று.

தாதா அமீர் ஐதர் கான்
பஞ்சாபில் முஸ்லீம் மதக் குடும்பத்தில் பிறந்து, தென்னிந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய தாதா அமீர் ஐதர் கான்.

எளிய பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான கான், சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக ரசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னைக்குக் கிளம்பினார் கான்.

மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. புனை பெயரோ சங்கர். தமிழோ அறவே தெரியாது.

பஞ்சாபி முஸ்லீமாகப் பிறந்து புனைபெயரை இந்துப் பெயராக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் இந்து சாதிய சம்பிராதயங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் மொழியும் தெரியாமல் சென்னையில் வந்து இறங்கினார். அறிமுகத்திற்காக சொல்லப்பட்ட ஒரேயொரு நபரும் எதுவும் செய்ய இயலாதெனக் கைவிரித்து விட்டார். சென்னை இப்படித்தான் அவரை வரவேற்றது.

அறிமுகத்துக்கு நண்பர்கள், கைச்செலவுக்கு போதிய பணம், அவசரத் தொடர்புக்குத் தொலைபேசி வசதி, இன்னும் பல முன்னேற்பாடுகளுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களின் கணக்கின்படி அடுத்த நாளே கான் பஞ்சாபிற்கு மீண்டும் ரயிலேறியிருக்க வேண்டும்.

ஆனால் தன்னந் தனியானாய் விடப்பட்ட போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.

இத்தகையதோர் நிலைமையில், தான் பட்ட துன்பங்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் ஆகியவை குறித்தும், தான் வாழ நேர்ந்த சூழல் குறித்தும் விலாவாரியாக சுவைபட எழுதுவார் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாறத்தான் செய்வோம். வாழ்ந்த போது மட்டுமல்ல, பின்னாளில் வரலாறு எழுதும்போதும் தனது சொந்த சூழ்நிலைகளைக் காட்டிலும், அன்று நிலவிய அரசியல் சூழ்நிலைகளே அவருக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகத் தோன்றுகின்றது. எனவே அதை விவரிக்கிறார்.

‘’காந்தி – இர்வின் ஒப்பந்த காலம் அது. ஒப்பந்தம் என்னுள்ளத்தில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்திற்று. காந்திஜியை விமரிசிப்பதில் நான் தயவு தாட்சண்யம் காட்டவில்லை. காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் காய்ச்சிய மக்கள் நாளடைவில் சலிப்படைந்தார்கள். சிலர் கள் இறக்கும் பனை, தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். சிலர் சட்டத்தை மீறி நடக்கலானார்கள். பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. ஷோலாப்பூரில் மக்கள் நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். காந்தி – இர்வின் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை மக்கள் இயக்கம் ஏற்படுத்தியது.’’

‘’கல்லூரிகளையும், பள்ளிகளையும் விட்டு வெளியேறிய மாணவ – மாணவியரும் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை. இந்த ஒப்பந்தம் தேசீய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்று பேசியவர், எழுதியவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள் நம் தோழர்கள்…

ஒப்பந்தத்தின் சாரத்துக்கு நான் தந்த விளக்கமும், விளக்க முறையும் அரசியல் அறிந்த தென்னிந்தியர் பலருக்குப் புதியவையாகத் தோன்றின. நம் இளம் தோழர்களை ஊக்குவித்தன.

ஆங்கில சுயசரிதை
அமீர் ஐதர் கானின் ஆங்கில சுயசரிதை (செயின்ஸ் டு லூஸ்).

1930-32 மாணவர்களிடம் கம்யூனிச அரசியல் தீப்போல பற்றிக் கொண்டகாலம். கான் இதற்கு முக்கியக் காரணகர்த்தா. அவர்களை நகருக்கு வெளியே இருந்த பி அண்டு சி பஞ்சாலைக்கு அழைத்துப் போனார் கான். தொழிலாளர்களுடன் அவர்கள் மொழியில் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவது எவ்வாறு என்று சொல்லிக் கொடுத்தேன். இத்தகைய செயல்முறைப் பயிற்சியால் அவர்கள் மார்க்சியக் கொள்கையை அறியலானார்கள்.

மத்திய தர வர்க்கத்துக்குள் கீழ்த்தட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு அந்த நாள்களில் நாள்தோறும் சிற்றுண்டிக்காக ஆறணா தரப்படுவது வழக்கம். இளம் தோழிலாளர் சங்கத்துக்கு அந்தத் தொகையை வழங்கி விடுவார்கள். இந்த உதவியினால் சிறு வெளியீடுகளையும் பத்திரிக்கையும் கொண்டு வர முடிந்தது…’’

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் தற்செயலாக ராஜவடிவேலு(முதலியார்)வைச் சந்தித்தார் கான். ‘’அவர் நீதிக்கட்சியின் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சி சென்னை மாகாண அமைச்சரவை அமைந்த பிறகு அவர் எதிர் பார்த்தது போல் சாதி அமைப்பு, ஏற்றத் தாழ்வுகள், சமூகத்திமை இழிவுகள் அறவே ஒழிய வில்லை; மாறாக, பிரிட்டிஷாரோடு செர்ந்து கொண்டு அவர்கள் சுரண்டல் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள்.

இதனால் அவர் நீதிக் கட்சி நபர்களுக்கு எதிராக எழுதத் துவங்கினார்; நீதிக்கட்சி ஆசிரியர் பதவியிலிருந்து அவரை விலக்கியது. அவரும் ‘ஜனமித்திரன்’ என்றொரு ஏடு தொடங்கி தானே அச்சிட்டு பறையர், துப்புரவு செய்வோர் சேரிக்கு எடுத்துச் சென்று விற்றார்.’’

“ராஜ வடிவேலுவை மூன்று நாட்களாகப் பல மணி நேரம் வாழ்க்கை, நாட்டு அரசியல் நிலைமை ஆகியவை பற்றிக் கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தேன். தென்னிந்தியச் சாதி அமைப்பு, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட எல்லா அநீதிகளையும் எதிர்த்து எழும் அஞ்சாநெஞ்சம் படைத்த போராளி – ஆனால் ஒரு பிரச்சனையைப் பற்றியோ, அல்லது அநீதி என்று அவருக்குத் தோன்றியதை எதிர்த்துப் போராடும் வழிமுறை பற்றியோ காரண காரணிகளைக் கண்டறிந்து செயல்படுவது என்பது அவருடைய இயல்பில்லை என்பதைக் கண்டேன்.

தம் திறமையை பற்றி உணர்வு இல்லாது அமைப்பில் திரளாமல் இருக்கும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வாடும் மக்களை அமைப்பு முறையில் திரட்டுவது வர்க்க உணர்வு பெற்றோர் அனைவரது கடமை…’’

ராஜவடிவேலு கானின் தர்க்கத்தை ஒப்புக் கொண்ட கணத்திலேயே ‘ஜனமித்திரன்’ ‘முன்னேற்றம்’ என்ற பெயரோடு இரு வார ஏடாகப் புதிய வடிவெடுத்தது. அவரே ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் எல்லாம். கானோடு ராஜவடிவேலு, கம்மம்பாடி சத்திய நாராயணா இருவர் முழுநேர ஊழியர்களாக இருந்து 30 பேர் கொண்ட ‘இளைய தொழிலாளர் சங்கம்’ அமைத்தார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டதால் செய்து கொள்ளப்பட்ட புது ஏற்பாடு. ‘முன்னேற்றம்’ பத்திரிக்கை கைகளால் 500 படிகள் அச்சிடப்பட்டது. பணவசதி இல்லை; அனைத்துமே தொழிலாளர் – மாணவர் உழைப்பில் தான் நிறைவேறியது.

‘’நரம்புகளைக் கொடுமையான சோதனைக்குள்ளாக்கும் இக்கடும் பணியில் எப்பொழுதாவது நான் தோழர் இராஜவடிவேலுக்கு உதவி செய்வேன்! வேலை முடிந்து இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். இன்முகத்துடன் அவர் மனைவி உணவு பிரமாறுவார்.

இவ்வாறு கடும் உழைப்பின் பின் வெளிவரும் இதழ்களை விநியோகிக்க ‘இளைய தொழிலாளர் சங்க’ உறுப்பினர் ஒவ்வருவரும் முயன்று உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் விற்பனைக்காகப் பங்கு பிரித்துக் கொள்வோம். தொழிலாளர்களை அவரவர் இல்லங்களில் சந்திப்போம்; ஒவ்வொரு கட்டுரையும் சொல்வதென்ன, கொண்ட கருத்தென்ன என்பது பற்றித் தெளிவாக விளக்குவோம். விவாதிப்போம். சுருக்கமாக ’31-32 ஆம் ஆண்டுகளில் போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கத்துக்குள் பிரச்சார ஏடாக ‘முன்னேற்றம்’ செயல்பட்டது’’என்று கம்மம்பாடி சத்தியநாராயணா கூறும் குறிப்பு அவர்களது கடுமையான உழைப்பை விளக்குகிறது.

அமீர்கான் சென்னை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சம்பவம் அவரது அளவற்ற துணிச்சலைக் காட்டுகிறது. ‘’சென்னை மாகாண மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட்டுக்கு மட்டும் இருபுறமும் மின்விசிறிகள்.. அது கோடை. உள்ளே புழுங்கிற்று. நாங்கள் இருந்த பக்கம் விசிறிகள் ஓடவில்லை. ‘எங்களைத் துன்புறுத்திப் பொருளாதாரச் சிக்கனம் செய்வது தவறு, விசிறி வேண்டும்’ என்று உரக்கக் கத்தினேன்.

அச்சமயத்தில் அரசு தரப்பில் எவரோ ஒருவர் ‘உமது வழக்குரைஞர்தான் உமக்கு விசிறி வைக்க வேண்டும்’ என்றார். உடனே கோபாவேசத்தில் அவர்கள் மேல் எறிய நாற்காலியைத் தூக்கினேன்… அரசுக் குற்றச் சாட்டைக் கண்டு நான் அஞ்சவும் இல்லை, நீதி மன்றத்தின் கண்ணியம் பற்றிக் கவலைப்படவுமில்லை என்று காட்டவே இவ்வாறு செய்தேன்…’’

சிறைவாசம் 2 ஆண்டுகள். சென்னை, சேலம், கோவை, ராஜமகேந்திரபுரம் என்று 4 இடங்களில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார் கான். சிறையிலும் அவரது போராட்டம் நிற்கவில்லை.

இராஜமகேந்திரபுரம் சிறை மேலாளர் இச்சென்(HICHEN)கானைப் பணியவைக்க தந்திரம் ஒன்று தீட்டினார். இயக்கத்துக்குத் தலைமுழுகி விட்டுச் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறி விடுவதாக உறுதிமொழி அளித்தால் விடுதலை செய்து விடுவதாக ஆசை காட்டினார்.

‘’வாழ்க்கை வெளியில் வாழ்வதற்காகவே. சிறையிலன்று. சிறைவாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?’’ என்றார். நான் அவரை வெளியே போய்விடச் சொன்னேன். ஒரு நாளில் இவ்வாறு எழுதினேன்: ‘’பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு… ஆகவே, என் உயிருள்ள வரை சிறையில் வைத்திருக்கலாம். எந்த நிபந்தனையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…’’

47-க்குப்பின் அவரது சொந்த ஊரான ராவல்பிண்டி (பாகிஸ்தான்) சென்றார் கான்; தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட கானுக்கு ‘சுதந்திர’ பாகிஸ்தான் கொடுத்த பரிசு 14 ஆண்டு சிறைவாசம்.

கட்சி கட்டுவதைப் பற்றி கான் சொன்ன வார்த்தைகள். ஆழமான பொருள் உள்ளவை:

‘’இதயங்களைக் கனிவித்தலும் கனிவித்த இதயங்களைக் காத்தலும் மனிதத் திறமையில் பயன் மிகுந்தவை’’.

– புதூர். இராசவேல்
_______________________________________
புதிய கலாச்சாரம் நவம்பர் 1997
_______________________________________

‘தென்னிந்தியாவைக் கண்டேன்’ – அமீர் ஹைதர் கான் (விலை ரூ. 160)

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

Leave a Reply to K.Senthil kumaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க