privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி - செங்கொடி

இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி – செங்கொடி

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 5 – செங்கொடி

திர்பார்ப்பும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றிணைவதே இல்லை. ஒரு பள்ளிக்கூட மாணவனின் பார்வையிலிருந்து ஆசிரியரை நோக்கினாலும், ஒரு மனிதனாக இருந்து ஆசிரியப் பணியின் விழுமியங்களை சீர்தூக்கினாலும் எதிர்பார்ப்பும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றிணைவதே இல்லை. ஆனாலும் எல்லா மாணவர்களின் வாழ்விலும் ஆசியர்கள் விட்டுச் செல்லும் தாக்கம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அவ்வாறு என் மீது தாக்கம் செலுத்திய, செலுத்திக் கொண்டிருக்கும் என் பள்ளிக் காலத்து ஆசிரியர்கள் குறித்து விளம்ப வந்திருக்கிறேன்.

மாணவன்என் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த ஆசிரியர், என் பாதையை அப்படியே 90 டிகிரிக்கு மாற்றிய ஆசிரியர் என்றெல்லாம் என்னால் யாரையும் குறிப்பிட முடியாது. எல்லா ஆசிரியர்களையும் போலவே நான் குறிப்பிடப் போகும் ஆசிரியர்களும் எளிதாக கடந்து செல்லும்படியான திறனுள்ளவர்களே. ஆனாலும் அவர்களின் யதார்த்த நடவடிக்கைகள் என்னுள் நேர்மறையான சலனங்களை நிகழ்த்தி இருக்கின்றன. வினவு தோழர்கள் தந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை இந்த மெய்நிகர் உலகில் பதிவு செய்வது மெய்யாகவே எனக்கு மகிழ்வளிப்பதாய் இருக்கிறது.

என் பள்ளி வகுப்புகளில் (எண்பதுகளின் தொடக்கத்தில்) படிப்பில் நான் ஊட்டமான மாணவன் தான் என்றாலும் தயக்கமும் கூச்சமும் காலில் கட்டிய விலங்குடனும் மெலிந்த உடலுடனும் இருப்பேன். உடன் படித்த `மேத்தன்` சாஹுல் ஹமீது, `கானாத்தி` அப்துல் காதர் போன்றவர்கள் தடித்தடியாக துருதுருப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையில் ரூல்தடிகளுக்கு மத்தியில் பென்சிலைப் போல உட்கார்ந்திருப்பேன். வகுப்பில் ஒரு ஆசிரியர் எப்போதும் பாடம் நடத்தி முடிந்ததும் பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட எதையாவது பேசிக் கொண்டிருப்பார். அப்படித்தான் அன்று அவர் கேட்ட கேள்வி திடீரெனெ தீ பற்றி எரிந்தால் என்ன செய்வீர்கள்? என்பது. என்னுடைய முறை வரும் போது சொல்ல வேண்டும் என்று பதில்களை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் நான் சொல்வதற்குள் அந்தப் பதில்களை எனக்கு முன்னாலுள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள். என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே எனும் பதட்டத்தில் தீ பிடித்து விட்டது என்று தெருவில் நின்று கத்துவேன் என்று கூறி விட்டேன். வகுப்பறையே பெரும் சத்தத்தில் சிரித்தது.

அப்போது தான் அந்த ஆசிரியர். போன் செய்வேன் என்று சொன்ன மாணவனை எழுப்பி உனக்கு எங்கு போன் இருக்கிறது என்று தெரியுமா? எப்படி டயல் செய்ய வேண்டும் என்று தெரியுமா? நம்பர் என்ன என்று தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் சொன்ன அத்தனை பதில்களையும்விட சிறப்பான சரியான பதில் இந்த `பயந்தாரி` (என்னுடைய பட்டப் பெயர்) சொன்னது தான். எந்தக் காரியத்திலும் தேவைப்படும் போது பிறருடைய உதவியை கேட்டுப் பெறுவது தான் அதை சரி செய்வதற்கான முதல்படி என்று பேசி அன்று என்னை நாயகனாக்கி விட்டார். அதன் பிறகு பாடத்திட்டத்திற்கு வெளியே என்ன சந்தேகம் என்றாலும் நான் தேடிப் போவது அந்த ஆசிரியரைத்தான். ஊரின் பெயர்க் காரணம் என்ன? என்பதில் தொடங்கி திருநெல்வேலி மேம்பாலத்தைப் போல அடுக்குப் பாலம் உலகில் வேறெங்கும் இல்லையாமே? என்பது வரை பல விசயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம். ஆசிரியர் மாணவர் என்பதைத் தாண்டி எங்கள் உறவு இருக்கிறது. இன்றும் கூட வாய்ப்பு கிடைக்கும் போது குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவரை சந்தித்து விடுவேன். அந்த ஆசிரியர் புலங்கார் ஹாஜா.

அடுத்து நான் குறிப்பிட விரும்பும் ஆசிரியர் தமிழாசிரியர் நாகூர்மீறான். அன்றைய நாட்களில் எங்கள் பள்ளியில் வியாழன் மதியமும், வெள்ளியும் தான் விடுமுறை நாட்கள். மாதத்தின் கடைசி வியாழனில் மாதிரி நாடாளுமன்றம் நடக்கும். தலைமை ஆசிரியர் தான் பிரதமர். ஆசிரியர்கள் அனைவரும் அமைச்சர்கள். அவர்களுக்கு துறைகளும் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் மாணவர்கள் அனைவரும் உறுப்பினர்கள். ஏனைய அனைவரும் பார்வையாளர்கள். அன்று நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள் உப்புச் சப்பற்றதாகவும், கூறப்படும் பதில்கள் சடங்குத் தனமாகவும் இருக்கும். ஆனால் அன்று நான் கேட்ட கேள்வி அந்த நாடாளுமன்றத்தையே கலக்கியது.

எப்போதும் தன் ஒன்றரை வயது பையனுடன் வகுப்புக்கு வருவார் ஒரு ஆசிரியர். வகுப்பறையில் அந்தச் சிறுவன் கழிக்கும் சிறுநீரை கரும்பலகை அழிக்கப் பயன்படும் டஸ்டரைக் கொண்டு துடைத்து விடுவார். இது எப்படி சரி? இதை முறைப்படுத்த வேண்டும் என்று தான் அன்று நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஆசிரியரிடம் கேள்வியாக எழுப்பினேன். இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். கூச்ச சுபாவமுள்ள மாணவனான என்னை இப்படி தைரியமாக கேள்வி கேட்க வைத்தவர் தமிழாசிரியர் நாகூர்மீறான் தான். இரு ஆசிரியர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அன்று அதை செய்ய வைத்தார். இதன் பிறகு அந்த நாடாளுமன்றம் சடங்காக இல்லாமல் ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பும் மன்றமாக மாறிப்போனது.

இதுமட்டுமின்றி 1,2,3 எனும் எண்கள் ஆங்கில எண்கள் என தெரிந்த போது அதைப் பயன்படுத்த மனமில்லாமல் அ, ஆ, இ என பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இதை மாற்றி தமிழ் இலக்கங்களை கற்றுத் தந்தவர். தமிழின் மீது பற்றார்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் தமிழாசிரியர் நாகூர்மீறான். இன்று நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். ஒருமுறை வீட்டுக்கு சென்று சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மூன்றாவதாக நான் குறிப்பிட விரும்புவது கலீஃபா ஹஜரத். கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பேர் போனவர். தவறு என்று தெரிந்து விட்டால் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார். கடுமையாக தண்டிப்பார். என்னையொத்த பையன்களுக்கு கலீஃபா ஹஜரத் வருகிறார் என்றாலே பயம் தான். ஓடி ஒழிந்து கொள்வோம். பள்ளி வகுப்பு ஒன்பது மணிக்கு தொடங்கும் என்றால் காலை ஆறரையிலிருந்து எட்டு மணி வரை இவர் ராஜ்ஜியம் தான். அரபி வகுப்புகள் எடுப்பார். ஒவ்வொரு மாணவனையும் அரபு மொழியில் புலமை பெற வைத்து விடவேண்டும், குரான் படி ஒழுக வைத்துவிட வேண்டும் எனும் அக்கறையில் ஒவ்வொரு மாணவன் மீதும் தனிக்கவனம் எடுத்துக் கொள்வார். ஆனால், நான் நாத்திகன் ஆன போது எங்கள் தெருவில் என்னை முதலில் அங்கீகரித்தவர் கலீஃபா ஹஜரத் தான். அவர் வீட்டுப் பாயில் எப்போதும் எனக்கு இடமிருக்கும். என்னுடைய வாதங்கள் எல்லாம் அவரிடம் சோதித்துப் பார்த்தவை தான். அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் என்மீது பரிவைப் பொழிந்தார். என் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கூட கலங்காத நான் கடந்த ஆண்டு கலீஃபா ஹஜரத் மறைந்த செய்தி கேட்டு கலங்கிப் போனேன். என்னிடம் இன்று இருக்கும் சில நல்ல பழக்கங்களை என்னுள் விதைத்தவர் அவர் தான், அல்லது அவரின் தாக்கம் இன்னும் என்னுள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரின் மரணச் செய்தியில் நான் இப்படி எழுதியிருந்தேன். நிச்சயமாய் அது உயர்வு நவிற்சியல்ல.

என்னை செதுக்கிய முதல் உளியே,

காதை திருகியே நேர்மையை.
செவியேற்கச் செய்த தகமையே,

ஆசான்கள் அறிமுகமாகும் முன்பே.
ஆசிரியராய்,போதகராய்
நல்லவை உண்ணத் தந்த ஆளுமையே,

நீங்கள் கிள்ளித் தருமுன் சர்க்கரையை.
அள்ளித் தின்றதற்காய்
நீங்கள் அடித்த அடி.
இன்றுவரை வலிக்கிறது கையில்.

உலகில் இனி நீங்கள் இல்லை எனும் வலி.
இனி என்றென்றும் வலிக்கும் என் மெய்யில்.

இவர்கள் தவிர என்னுள் சலனங்களை ஏற்படுத்தியவர்கள் என்றால் பழபழப்பான சோவியத்நாடு பத்திரிக்கையை தொடர்ந்து வாசிகத்தந்த பக்கத்து வீட்டு சிபிஐ அக்பர் மாமா, பொது நூலகத்தில் இரட்டை உறுப்பினராய் என்னை சேர்த்து விட்ட வாப்பாவின் நண்பரான கனி மாமா என வேறு சிலரையும் சொல்லலாம். அதேநேரம் என்னுடைய கல்விக்கே குறுக்கே நின்ற ஆசிரியர்கள் குறித்து `ஒரு மாணவனின் தோல்வி` எனும் பதிவில் லேசாக குறிப்பிட்டிருக்கிறேன்.

பள்ளியில் ஆசிரியர்கள் என்மீது செலுத்திய பரிவினால் நானும் ஒரு ஆசிரியராக வேண்டும் எனும் கனவு என்னில் இருந்ததுண்டு. ஆனால் இன்றைய தனியார்மய சூழலில் கல்வி என்பதே கடைச்சரக்காய் ஆகிவிட்ட பிறகு ஆசிரியப் பணி மட்டும் எப்படி தளிர்களை உருவாக்கும் கவனத்துடனும், கண்னியத்துடனும் இருக்கும்? ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மாணவர்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தகுதியாக இருக்கிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நுகர்வுக் கலாச்சார வெறியில் சமூகப் பொறுப்பற்று திரிகிறார்கள் என்றாலும் சிறு தூண்டுதல் செய்தாலும் அதைப் பற்றிக் கொண்டு பற்றிஎரிய மாணவர்கள் என்றும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தூண்டுதலை செய்யும் சுடர்களைத்தான் தனியார்மயம் தணித்து விட்டது.

பொதுவாக கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை தூண்ட வேண்டும். ஆனால் மெக்காலே கல்வி முறையும், கல்வி தனியார்மயமும் சேர்ந்து மாணவர்களை ரப்பர் ஸ்டாம்புகளாக தயாரித்துத் தள்ளுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் கற்கும் அனுபவத்தை விட்டே வெருண்டோட வைக்கிறது. அதனால் தான் மாணவப் பருவத்திலிருந்து மனிதனாக பதவி உயர்வு பெறுவோர் தேடல் எனும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். எல்லா மாணவர்களுக்குமே தேடல் அனுபவம் தூண்டப்பட வேண்டும் என்றால் அது வெறுமனே கல்வியையும் ஆசியர்களையும் மட்டுமே சார்ந்ததல்ல. சமூகச் சூழலையும் முக்கியமாக உள்ளடக்கியது. ரஷ்யக் கல்வி முறைக்கும் இந்தியக் கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசமாக ஒன்றைச் சுட்டிக் காட்டுவார்கள். நூலில் இருக்கும் யானையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால் இந்தியக் குழந்தை யானை என்று சொல்லும், ரஷ்யக் குழந்தை யானையின் படம் என்று சொல்லும். இந்த நுணுக்கமான வேறுபாடு கற்பிக்கும் முறையிலிருந்து ஏற்படுவதில்லை. மாறாக சமூக அக்கரையுடன் கல்வி மாறும் போது ஏற்படுவது. அத்தகைய சமூக மாற்றத்துக்காக நாம் உழைக்க முன்வரும் போது மாணவர்களும் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பார்கள்.

– செங்கொடி