எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியும் 140 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர் குடும்பத்தினர் கடந்த 25-ம் தேதி முதல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், வேலைக்கு செல்லும் போது கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகிலுள்ள கடற்கரை கிராமமான காட்டுப்பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எல்&டி நிறுவனம் ஒரு கப்பல் கட்டும் தளத்தை அமைத்தது. எண்ணூர் துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள இந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ 4,600 கோடி செலவிடப்பட்டது. தளத்தை அமைப்பதற்காக அங்கு குடியிருந்த மீனவர்களின் வீடுகள் அகற்றப்பட்ட வேண்டியிருந்தது. அரசு உதவியுடன் இடத்தை ஆக்கிரமித்த எல்&டி யை எதிர்த்த மக்களுக்கு ஒரு சில சலுகைகளை வழங்குவதாக கூறி போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தொழிற்சாலைக்கு இடமளித்த மக்களுக்கு மாற்று இடத்தில் குடியிருப்புகளும், 140 பேருக்கு வேலையும், 5 ஆண்டுகளில் வேலை நிரந்தரமும் செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்து எல்&டி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கப்பல் கட்டும் தளத்தை அமைத்தது.
அரசியல்வாதிகளைப் போல பொய் வாக்குறுதிகளை கொடுத்து மீனவர்களை ஏமாற்றி இடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட நிறுவனம் மீனவர்களின் சுதந்திரமான வாழ்வை அழித்து அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக்கி ஐந்தாண்டுகளாக சுரண்டி வருகிறது. இந்த துறைமுகம் அமைக்கப்பட்டதால் சுற்றியுள்ள மீனவ மக்கள் மீன் பிடிக்க முடியாததோடு மீன் வளமும் கணிசமாக குறைந்துள்ளதோடு, கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.
வாக்களித்தபடி நிரந்தரம் செய்யாத நிறுவனத்தின் சட்டவிரோத போக்கை தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் பல முறை எடுத்துச் சென்றுள்ளனர், ஆனால் எந்த பயனும் இல்லை. இறுதியாக முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவர்களை அனைத்து சோதனை சாவடிகளிலும் தனது அடியாட்களைப் போட்டு தடுத்து நிறுத்தினார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா. இவருக்கு எல்&டி யிலிருந்து ஒப்பந்தங்களின் மூலம் மட்டும் மாதம் 45 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
பிறகு அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறு மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் போராடிய போது அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது போலீசு. ஆனால் இன்று வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே மீண்டும் தொழிலாளர்கள் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த மே மாதம் பயிற்சி முடித்து பணிக்கு திரும்பிய 13 தொழிலாளர்களை தோட்ட வேலை செய்யச் சொன்ன நிர்வாகத்தை தொழிலாளிகள் எதிர்க்கவே கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 13 தொழிலாளர்களை தோட்டப் பணியும், தோட்டப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட 13 தொழிலாளிகளை கப்பல் கட்டும் பணியும் செய்யுமாறு கூறியது நிர்வாகம். இது கொந்தளிப்பிலிருந்த தொழிலாளிகளின் கோபத்தை மேலும் கிளறி விட்டது. எனவே ஆலைக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த 250 தொழிலாளர்களையும் இணைத்துக்கொண்டு பணி நிரந்தரம், எல்&டி நிறுவனத்தின் முத்திரையிட்ட அடையாள அட்டை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உடனே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை துளியும் சட்டை செய்யாத நிர்வாகம், சட்ட விரோதமாக போலீசுக்கு தகவல் கொடுத்தது. உள்ளிருப்பு போராட்டம் அன்று இரவும் மறுநாள் காலையிலும் தொடர்ந்தது. இதை இப்படியே வளர விட்டால் பிரச்சினை அதிகமாகும் என்பதை உணர்ந்த போலீஸ் தொழிலாளர்களை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் இடமில்லை என்று ஒரு பொய்யை கூறி அனைவரையும் வேலூர் சிறையில் அடைத்தது. தகவலறிந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் உடனடியாக மீனவ மக்களை சந்தித்து தொழிலாளிகளுக்கு ஆதரவாக நின்றனர். எல்.&டி நிர்வாகத்தையும், நிர்வாகத்திற்கு துணை போகும் அரசையும் கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில் மூன்றாம் கட்டமாக கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தமது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியதுடன், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வேலைக்குச் சென்று வருகின்றனர். அடுத்த பத்து நாட்களுக்குள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்று கூறியுள்ளனர்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, எனவே சட்டத்தை மதிக்க வேண்டும், ஜனநாயகப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உழைக்கும் மக்களுக்கு உபதேசிப்பவர்கள் எல்லாம் இது போன்ற சம்பவங்களையும் சற்று கவனிக்க வேண்டும். சட்டப்படியும், ஜனநாயகப்படியும் நடந்து கொண்டது யார், சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது யார் என்பதை எல்&டியில் மட்டுமல்ல, ஹூண்டாயில், மாருதியில், பிரிக்காலில் என்று நாடு முழுவதும் பார்க்கலாம். இதற்கு பெயர் தான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும், ஜனநாயக வழியில் நடக்கும் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும்.
மேலும் படிக்க