privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்முதல் கோணல், முற்றும் கோணல் - சீனிவாசன்

முதல் கோணல், முற்றும் கோணல் – சீனிவாசன்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 8 – சீனிவாசன்

ள்ளி பருவத்தை மீண்டும் எண்ணி பார்க்கையில், பொதுவில் அனைவரும் மகிழ்ச்சி அடைவதே இயல்பு. ஆனால் எனக்கோ பள்ளிக்கால நினைவுகள் எல்லாம், நான் மறக்க நினைக்கும் ஒரு கொடுங்கனவாகவே இன்றும் இருக்கிறது. கல்வி என்பது அறிவு, நல்லொழுக்கம், நுட்பத் தகைமை என்பவற்றைக் கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும் என்கிறது விக்கிப்பீடியா. இந்த அடிப்படையில் ஆசிரியர்களால் கற்றலும் கற்பித்தலும் எனக்கு நிகழ்ந்திருக்கிறதா என கேள்வி எழுப்பினால், பள்ளிக் கல்வியில் தொடங்கி தொழில் நுட்பக் கல்வி வரை இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போலவே வீடு பள்ளியும் என்னை தொடக்க கல்வியிலிருந்தே வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. எப்படியாவது இந்த படிப்பிலிருந்தும் பள்ளியிலிருந்தும் தப்பித்து விட வேண்டும் என்பதே என்னுடைய அன்றைய எண்ணமாக இருந்தது. பள்ளி என்பது வெறும் புத்தகங்களும்,கட்டிடமும் மட்டுமில்லையே அதை உயிர் துடிப்பானதாக்குவது ஆசிரியர்கள் தானே! ஆனால் என் பள்ளி வாழ்வில் எந்த ஒரு ஆசிரியரும் பள்ளி செல்வதை இனிமையான அனுபவமாக்கியதில்லை.

முதல் கோணல், முற்றும் கோணல்

பிரம்படிமதுரையை ஒட்டியுள்ள ஒரு சிறுநகரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்துதான் எனது பள்ளிக் கல்வி ஆரம்பமாயிற்று. கண்டிப்பிற்கும் கட்டுபாட்டிற்கும் பேர் போன பள்ளி அது. சாக்கலேட் பேப்பரில் பொம்மை செய்ய தெரியாதது தொடங்கி, கூட்டல் கணக்கு கழித்தல் வரை நான் வீட்டிலும் பள்ளியிலும் வாங்கிய அடிகள் ஏராளம். “அப்படி அடிச்சதாலதான் நீ இன்னைக்கு இந்த நிலமைல இருக்குற” எனும் சமாதானம் இப்போதும் சிலர் சொல்லக் கூடும். ஆனால் பிரச்சனை அதுவல்ல…கற்கும் நிலையிலுள்ள குழந்தைக்கும் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தகவல் தொடர்பு ஒருவழிப்பாதையாக மாறுவது இங்கேதான். கற்பதில் எனக்குள்ள பிரச்சனை என்ன? என்பது அவர்களுக்கு தேவையில்லாத ஒன்று. குறிப்பிட்ட இலக்கை தரும் இயந்திரமாய் நான் மாற்றப்பட்டேன். அறிதலுக்கான ஆர்வம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு, வெற்றி தோல்வியும் அதன் பயனாய் விளையும் தண்டனை பயமும் நெஞ்சில் விதைக்கப்பட்டது. தமிழோ கணக்கோ மண்டைக்குள் நிரப்பிக்கொண்டு தேர்வுத் தாளில் கொட்டுவதே எனது பணியாயிற்று. நான் பார்த்த அனைத்து ஆசிரியரும் “மாணவர்களை இயந்திரமாக்கும்” இந்த வகையிலேயே அடங்குவர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

எனது தொடக்க கல்வியிலிருந்து திருத்தாமல் விடப்பட்டு இன்று வரை தொடர்ந்து வரும் சில பிழைகளை பார்க்கலாம். இன்றும் லகர, ழகர, ளகர த்திற்கு நாக்கு சரியாய் புரள்வதில்லை. இந்த பிழை ஒப்பீட்டளவில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ளோர்களிடமே அதிகம் காணப்படுகிறது. பல முறை தமிழ் தொடங்கி அனைத்து பாடங்களையும் சத்தம் போட்டு வகுப்பறையில் வாசித்திருந்தாலும், இந்த பிழையை என் வகுப்பாசிரியர்கள் யாரும் திருத்தியதில்லை என்பதை நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையை சேர்ந்த சில நண்பர்கள் இதை சுட்டிய காட்டிய பொழுது வெட்கமாக இருந்தது. இன்றும் “ழகர” ஒலிக்குறிப்புகள் வரும்பொழுது சற்று வெட்கத்துடனே பேச வேண்டியுள்ளது. இது பரவாயில்லை எனும் விதமாக இன்னொரு பிழையும் உள்ளது. “ர, ற, ந, ன, ண” விற்க்கு வெவ்வேறு ஒலிக்குறிப்புகள் இருப்பதே எனக்கு கல்லூரி படிப்பு முடித்து சில வருடங்கள் ஆன பிறகும் தெரியாது. எதேச்சையாக ஏதோ ஒரு வார இதழை படிக்கும் பொழுது, தெரியவந்தது . இந்த சிறிய விசயம் கூட தெரியாமல் நம் பள்ளிக்கல்வியே முடிந்துவிட்டது என்று அதிர்ச்சியாக இருந்தது. வகுப்பறையில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்திற்க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழிற்கு கொடுக்கப்படுவதில்லை. தமிழின் நேரம் மற்ற ஆசிரியர்களால் எடுத்துக கொள்ளப்படுகிறது. தமிழின் நேரமெடுத்து கொண்ட மற்ற பாடங்களிலாவது அறிவு இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

சில நாட்களுக்கு முன்பு வட்டத்தின் சுற்றளவு தேவைப்பட்ட பொழுது கூகிளைத்தான் நாட வேண்டியிருந்தது, கணிதத்தில் நான் படித்த வடிவியல் சுத்தமாக நினைவில் இல்லை. இயந்திரவியலில் பட்டயம் பெற்ற எனது அறிவுதான் இப்படி உள்ளது என நினைத்தால், பட்டம் பெற்றவரின் அறிவும் அதே அளவுதான் உள்ளது. வெர்னியரும்,மைக்ரோ மீட்டரும் (அளவீட்டு கருவிகள்) பிடிக்கத் தெரியாமல் நான் பட்ட அவமானத்தை, கல்லூரியிலிருந்து புதிதாய் பட்டம் பெற்று வெளிவரும் இளைஞனும் படுகிறான். என்னுடன் பணிபுரியும் இன்னொரு பொறியாளருக்கு, தமிழும் ஆங்கிலமும் பிழையின்றி வாசிக்கவோ எழுதவோ தெரியாது. இவரும் இயந்திரவியலில் பட்டம் பெற்றவர். நீங்கள் எத்தனை மோசமானவராக இருந்தாலும், இந்த கல்விமுறையையே நீங்கள் ஏமாற்றி பொறியியல் பட்டம் பெற்று விடலாம் என்பதற்கு இவர் ஓரு சாட்சி. இவர் பல பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த விதத்தை சுவையான சிறு கதையாக எழுதலாம். பெரிய விசயங்களை விட்டுவிடலாம் சில அடிப்படையான விசயங்கள் மாணவர்களுக்கு தெரியாமல் இருந்தால் அதை அம்மாணவருக்கு வகுப்பெடுத்த அத்தனை ஆசிரியர்களின் தோல்வி என்றே கருத வேண்டியிருக்கும்.

குற்றமும் தண்டனையும்

என்னை பொருத்தளவில் ஆசிரியர் மூன்றே வகை. ஒன்று அதிகம் அடிப்பவர், இரண்டாமவர் நடுத்தரமாய் அடிப்பவர், மூன்றாமவர் அடிக்காதவர். ஆசிரியர்களை இந்த அளவில் எளிமைப்படுத்துவது சரியா? என சிலர் நினைக்கக் கூடும். நான்காவதிலிருந்து பத்தாவது வரை டியூசன் வழியாகவே அனைத்தையும் படித்ததின் விளைவாகவே இதை சொல்கிறேன். பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் எதையும் ஆழமாக நடத்துவதில்லை. அதையும் தாண்டிய தனிக்கவனம் மாணவனுக்கு தேவைப்படுகிறது. அந்த கவனம் சிலருக்கு படித்த பெற்றோர் வாயிலாய் கிடைத்தாலும் நிறைய மாணவர்களுக்கு டியூசன் வழியாகவே கிடைக்கிறது. என்னுடன் படித்த அத்தனை மாணவர்களும் (கிட்டத்தட்ட) ஏதேனும் ஒரு ஆசிரியரிடம் டியூசன் படித்தவர்கள்தான். இங்கும் புரிதலை தவிர்த்து மனப்பாட கல்விமுறையே கோலோச்சுகிறது என்பது தனிக்கதை. எனக்கு கிடைத்த அனுபவம் இவ்வாறிருக்க கற்பித்தலின் அடிப்படையில் நான் எப்படி பள்ளிஆசிரியர்களை வகைப்படுத்த முடியும்? தண்டனையின் அடிப்படையிலேயே அவர்களை வகைப்படுத்த முடியும். குச்சியால் அடிப்பது, கிள்ளுவது, விரல் இடுக்கில் பேனாவை வைத்து திருகுவது என தண்டனைகள் பலவிதம், நான் படித்த பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஒவ்வொரு தண்டனை முறையில் வல்லவர்கள்.

விடுதியில் தங்கிப்படித்த என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது தண்டனை முறையின் கொடூரத்தை அறிந்து கொள்ள உதவும். படிப்பதெற்க்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், பொழுது போகாமல் என் நண்பன் அவனது நோட்டு புத்தகத்தில் (Rough note ல் ஏதேனும் ஆவணத்தில் அல்ல) ஆசிரியர் ஒருவரின் கையெழுத்தை போட்டு பார்த்துள்ளான். அதை தற்செயலாய் கண்ட விடுதி காப்பாளர்(அவரும் ஆசிரியரே), அவனுக்கு நிபந்தனையுடன் அளித்த தண்டனைதான் கொடூரத்தின் உச்சம். பத்து அடிகள் பின்புறத்தில் விழும், அடிக்கும் பொழுது வலி தெரியாமல் இருக்க பின்புறத்தை தேய்க்க கூடாது இதுவே நிபந்தனை. நிபந்தனையை மீறி அப்படி தேய்த்தால், ஒவ்வொரு அடிக்கும் பத்து அடி கூடுதலாய் விழும். வலி தாங்க முடியாமல் என் நண்பன் பாதியிலேயே பின்புறத்தை தேய்க்க, அடி பல மடங்குகளாகியது. ஆசிரியரின் கை ஓய்ந்துபோகும் வரை அவனுக்கு அடி விழுந்து கொண்டே இருந்தது. ஆசிரியர் மனநிலை மோசமாக இருக்கும்பொழுது அற்பமான தவறுகள் நிகழ்வதே, பெரும்பாலும் தண்டனைகள் தீவிரமாவதற்கான காரணம்.

தண்டனைகள் ஒரு புறமென்றால் ஒழுக்க விதிகள் மறு புறம். நான் படித்த பள்ளி வளாகத்தினுள் ஆசிரியர்கள் மட்டுமே சைக்கிள் ஓட்ட முடியும். மாணவர்கள் இறங்கி சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். சில ஆசிரியர்களை முந்தி நடந்து செல்வது குற்றம், அவர்களுக்கு பின்னால் பொறுமையாக நடந்து செல்ல வேண்டும். அதிக மதிப்பெண் பெறுபவர்களே ஆசிரியர்களின் செல்லங்களாய் இருப்பதும் , குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் கடுமையான பாகுபாட்டுடன் நடத்தபடுவது இயல்பு. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவே இயல்பான நட்புறவு என்பது இல்லாது, ஆண்டான் அடிமை பாணியிலான உறவே இங்கு நிலைக்கிறது.  இவற்றையெல்லாம் தாண்டி என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்திய ஆசிரியர்கள் சிலர் உண்டு. ஆனால், அந்த அன்பு தன் குழந்தைகள் அனைவரிடம் சமமாய் தாய் அளிக்கும் பாரபட்சமற்ற அன்பை போன்றதல்ல என்பதுதான் வேதனை.

என்னதான் முடிவு?

இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்றைய தனியார் பள்ளிகளை போல சீரழிந்து போனது அல்ல என் பள்ளி. ஆசிரியரே பிட் அடிக்க உதவுவது, புளு பிரிண்ட் கொடுப்பது, பத்தாம் வகுப்பு பாடத்தை எட்டாம் வகுப்பிலே படிப்பது போன்ற பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை. நான் படித்த பள்ளியில் கல்வி வணிகமயமானது அல்ல. நான் ஆண்டு பள்ளிக்கட்டணமாய் அதிகபட்சம் கட்டியதே ஐம்பது ரூபாய்தான். கல்வி வியாபாரமாக மாறி வருவதே கல்வியில் பல புது பிரச்சனைகளை கொண்டுவருகிறது. பல தனியார் பள்ளிகளின் வணிகத்திற்க்கு ஆதாரமாய் இருப்பதே மாணவர்களின் மதிப்பெண்தான், மதிப்பெண்கள் அளிக்கும் விளம்பரத்தை வேறெதுவும் தனியார் பள்ளிக்கு அளிக்க முடியாது. இந்த மதிப்பெண்களுக்காக தனியார் பள்ளிகள் கல்வியில் எத்தகைய குறுக்கு வழிக்கும் செல்ல துணிவார்கள்.

வணிகர்களிடம் ஒருபோதும் சேவையை எதிர்பார்க்க முடியாது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கல்வி வணிகமல்லாத சூழலில் அரசின் கையில் இருக்கும் பொழுதே, கல்வியில் மேம்பாடு என்பது சாத்தியம். அனைத்து துறைகளிலும் தனது பொறுப்பை கைகழுவி கொண்டிருக்கும் தற்போதைய அரசு, கல்வியை மேம்படுத்தும் என்பது கானல் நீரே. கவரப்பட்டு, ராமம்பாளையம்  போல் மீட்பருக்கான வருகை எல்லா பள்ளிகளுக்கும் கிடைக்காது. நமக்கான மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசை நிறுவுவதே அத்தகைய நல்லாசிரியர்களை ஊரெங்கும் உருவாக்கும். கல்வியில் மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இதுவே தீர்வு…

– சீனிவாசன்