Thursday, April 15, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் - மு கோபி சரபோஜி

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – மு கோபி சரபோஜி

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 10 – கோபி சரபோஜி

ப்பொழுது தான் ப்ரீ கேஜி, எல் கேஜி, யு கேஜி என்று வரிசை இருக்கிறது. அப்பொழுது அப்படி இல்லை. “காதைத் தொடு…..கை எட்டுச்சா பள்ளியில் சேர்ந்து கொள்.” அவ்வளவு தான்.

முதன் முதலில் வீட்டை விட்டு பள்ளி என்ற புதிய இடத்திற்கு வரும் குழந்தைக்கு பயம் என்பது இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து வர விரும்பும் என்ற முக்கியத்துவத்தை அறிந்திருந்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை செளந்தரவள்ளி அவர்கள். இத்தனை வயதிற்கு பின்னும் அந்த வயதின் சில நினைவுகளையும், சந்தோசங்களையும் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு காரணம் அவர்கள் தான். ’பேசாதே’ என்று ஒரு போதும் அவர்கள் வகுப்பறையில் சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஒரு கதையை சொல்லி விட்டு அதை மறுநாள் எங்களை அவர் பக்கத்தில் நிறுத்தி கையால் அணைத்துக் கொண்டு சொல்லச் சொல்வார். ஒரு டீச்சர் என்ற பயமே இல்லாமல் அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்வோம், சில நாள் எங்களையே சொல்லச் சொல்வார். வகுப்பறைக்குள் ஒரு வட்டம் போட்டு ஐந்தைந்து பேராக பிரித்து உட்கார வைத்து விளையாடச் சொல்வார். மதிப்பெண்கள் தருவார். சின்ன பொம்மைகள் பரிசாக கிடைக்கும். வகுப்பறையே விளையாடும் இடமாக தான் எங்களுக்கு இருந்தது. நண்பர்களோடு விளையாடுவதற்காகவே பள்ளிக்கு வருவோம். விளையாடும் போது கீழே விழுந்து விட்டால் அவரே கிணற்றடிக்கு அழைத்து சென்று கழுவி விட்டு அன்று முழுவதும் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் விளையாடும் போது நான் கீழே விழுந்து சில்லு மூக்கை உடைத்துக் கொண்ட போது என் சட்டையை கழற்றி, அவரே அலசி பாடவேளை முழுவதும் கால் சட்டையோடு வகுப்பறையில் இருக்க அனுமதித்தவர். (அப்போது நான் போட்டிருந்த சட்டையின் நிறமும், டிஸைனும் கூட இன்றும் என் நினைவில் இருக்கிறது).

அடுத்து என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் முனியாண்டி. எனக்கு வீட்டில் தந்தையாய், பள்ளியில் ஆசிரியராய் இருந்தவர். அவர் பணிபுரிந்த பள்ளியில் படித்ததாலும், மற்ற ஆசிரியர்களுக்கு அவர் சீனியர் என்பதாலும் என்னை எல்லோரும் ”அண்ணன் மகன்” என்றே அழைப்பார்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் செல்லப் பிள்ளையாக வலம் வந்த போது என் தவறுகளை அடித்துத் திருத்திய முதல் மற்றும் கடைசி ஆசிரியர்! வகுப்பறையில் எல்லோரையும் போல நானும் அவருக்கு ஒரு மாணவன் மட்டுமே. புத்தகங்களில் கீறுவது, நோட்டில் பேப்பரை கிழித்து எழுதுவது என்ற இரண்டு விசயங்களும் அவருக்கு பிடிக்காது. வாராவாரம் வகுப்பில் உள்ள எல்லோருடைய நோட்டு புத்தகங்களையும் பார்வையிடுவார். அப்படி பட்ட பார்வைகளில் பலநேரம் சிக்கி சின்னாபின்னமாகி விடுவோம். ஆனால் அன்று அவர் கற்று தந்த அந்த பழக்கம் இன்றும் நூல்களை வாசிக்கும் போது படித்த பக்கங்களை அடையாளம் அறிந்து கொள்ள அதன் மூலையை மடக்காமல் சிறு அட்டையை பயன் படுத்தும் பழக்கத்தை எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பேசவும், எழுதவும் கட்டுரைகள் தயாரித்து கொடுப்பார். பேச்சுப்  போட்டி எனக்கு சரியாக வராது என நான் ஒதுங்கி நின்ற போது கட்டுரை போட்டிக்கு வா என அழைத்து என்னை பங்கெடுக்க வைத்தவர். அன்று அவர் கொடுத்த நம்பிக்கை தான் என்னை இன்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராக்கி உள்ளது. என்னையும், என்னைப் போல மாணவர்கள் பலரையும் பேச்சு, கட்டுரை போட்டிகளுக்காக மேடை ஏற்றியவர்.

சேதுபதி அரசு கலைக்கல்லூரி

அடுத்து என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஜெகதீசன். நூலகம் என்ற ஒன்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்து கொடுத்து இவைகளையும் படியுங்கள் என அறிவுறுத்தியவர். மாதம் ஒருமுறை நீதி போதனை வகுப்பில் படித்த நூலில் இருந்து விசயங்களை பேசச் சொல்லி எல்லோரையும் கேட்க வைப்பார். “அடுத்தவர் எழுதி தருவதை பேசாதே, எழுதாதே. நீயே தயார் செய்து கொண்டு வா. நான் திருத்தி சரி செய்து தருகிறேன்” என்பார். என் கட்டுரைப் போட்டிகளுக்கான கட்டுரைகளை நீயே தயார் செய் என சொல்லி அதற்கான நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுப்பார். அப்படி எழுதி கொடுக்கும் கட்டுரைகளை திருத்தம் செய்து தருவார். போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கெல்லாம் அவர் தான் ஆதர்ச குரு.

என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு மட்டுமல்ல எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பிடித்த டீச்சர் ஜெமிலா. அறிவியல் பாடம் சொல்லித்தந்தவரிடம் கணக்கு பாடத்திற்கு நானும், என் நண்பர்களும் டியூசன் போனோம். அவர் கணவர் பெயர் சாகுல் ஹமீது. வேறோரு பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியராய் இருந்ததால் அவரிடம் டியூசனுக்கு சென்ற என் அண்ணனோடு நானும் சென்றேன். என்னை போலவே என் வகுப்பு நண்பர்களும் வந்தனர். காரணம், எங்கள் கணக்கு வாத்தியார் இராமசாமி. அவர் தான் பள்ளியின் தலைமை ஆசிரியர். இரண்டாம் வாய்ப்பாட்டை எட்டாம் வகுப்பில் மனனம் செய்தவன் நானாகதான் இருப்பேன். கணக்கு வாத்தியாருக்கு பயந்து கணக்கு படிக்க ஜெமிலா டீச்சர் வீட்டிற்கு போன என்னை தன் குழந்தையைப் போல அருகில் அமர்த்தி தலை கோதி, மடி சாய்த்து வார்த்தெடுத்தவர். என்னை மிரள வைத்து கொண்டிருந்த கணிதத்தை கனிவாய் கற்றுத் தர தன் கணவரிடம் சிபாரிசு செய்வெதோடு தானும் கணித பாடம் நடத்துவார். பத்தாம் வாய்ப்பாடு வரை சரளமாக அந்த வருடமே என்னால் சொல்ல முடிந்தது கண்டு கணித ஆசிரியரே அசந்து போனார். எனக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்கும் கணித பயத்தை போக்கியவர்.

அதுவரை தனியார் பள்ளியில் படித்து விட்டு முதன் முதலாக அரசு பள்ளிக்கு பத்தாம் வகுப்பிற்கு மாறி வந்த போது என் பள்ளி சேர்க்கைக்காக வாதடிய மங்களநாதன் ஆசிரியர் என் வாழ்வில் என்றும் நினைவில் நிற்பவர். சொந்த ஊரில் குடிவந்ததால் அவ்வூரில் இருக்கும் ஒரே அரசுப் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம். “பொதுத் தேர்வு என்பதால் பத்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியாது. அதுவும் தனியார் பள்ளியிலிருந்து வருபவனை சேர்க்க முடியாது” என்று அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மறுத்து விட்டார். துணை தலைமை ஆசிரியராக இருந்த மங்களநாதன் சார் என் சூழ்நிலை, ஒன்பதாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மதிப்பெண்கள், நன்னடத்தை சான்றிதழ் ஆகியவைகளின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம் என எனக்காக வாதாடி தன் வகுப்பிலேயே சேர்த்துக் கொண்டார். எப்படி பாடங்களை படிக்க வேண்டும், அதை தேர்வில் எப்படி எழுத வேண்டும் என்ற சூட்சுமங்களை எங்களுக்கு போதித்தவர். பொதுத் தேர்வை மிக எளிமையாக அணுக வைத்தவர். ”உன்னை சேர்க்க மறுத்தவர் அப்படி செய்ததற்காக வருந்த வேண்டுமானால் நீ இந்த பள்ளியில் முதல் மாணவனாக வரவேண்டும்” என பார்க்கும் நேரமெல்லாம் அறிவுறுத்தி அந்த இலக்கை அடையவும் வைத்தவர். அந்த வருட பொதுத் தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாய் வந்து என்னை சேர்க்க மறுத்தவரிடமே பாராட்டு பத்திரம் பெறும் அளவுக்கு எனக்கு ஊக்கமளித்தவர். வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய சிறப்பு வகுப்புகளை நடத்துவார். டியூசன் என்பதே கிடையாது. என்னையும் என்னோடு படித்த இன்னொரு பெண்ணையும் 400 மதிப்பெண்களுக்கு மிக அருகில் வர வைத்தவர். அவரின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கினோம். இன்று அப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக மலர்ந்துள்ளது.

எனக்கு வகுப்பாசிரியர்களாக இருந்த இவர்களைத் தவிர தனி பாடங்கள் எடுக்க வந்த ஆசிரியர்களும் என்னை நெறிப்படுத்தி, நேர்படுத்தினார்கள். என் ஏழாம் வகுப்பு கணித ஆசிரியர் நெய்னா முகம்மது. உரத்த குரலில் மேடையில் பேச என்னை பழக்கியவர். என் முதல், கன்னிப் பேச்சுக்கு மேடை தந்தவர். என் எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை அலிஸ். இன்றும் என் எழுத்துக்களின் அழகை எவரேனும் பாராட்டினால் அதற்கு முதல் காரணமாக இருந்தவர். எழுத்து அழகாய் இருப்பதாய் மற்ற ஆசிரியர்கள் பாராட்டிய போது பிசிறின்றி இன்னும் அழகாய் கோடு இல்லாத பேப்பரில் எப்படி எழுத வேண்டும் என்று பயிற்சி தந்தவர். என் பத்தாம் வகுப்பு தழிழாசிரியர் இராமன். தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லாத சில தமிழ் சொற்கள் எனக்கு தெரிகிறதென்றால் அதற்கு காரணமானவர். பாடங்களை நடத்தும் போது ஒரு வார்த்தையோடு மட்டும் நிறுத்த மாட்டார். அதற்கு பதில் புழக்கத்தில் உள்ள வேறு பல வார்த்தைகள், அவைகள் தரும் அர்த்தங்கள் பற்றியும் சொல்வார். இன்னொருவர் என் பத்தாம் வகுப்பு வரலாற்று ஆசிரியர் செந்தூர் பாண்டியன். என்னை பள்ளியில் முதலில் சேர்க்க மறுத்த தலைமையாசிரியர். வரலாறு என்பது பாடநூல்களுக்கு வெளியே சுவராசியமானது என சொல்லிக் கொடுத்தவர். உலக நாடுகளைப் பற்றிய தனித் தொகுப்புகளை அப்பொழுதே வாசிக்கத் தந்தவர். பல தலைவர்களின் வரலாற்று நூல்களை கொடுத்து வாசிக்கச் சொன்னவர்.

அடுத்து முகைதின் அப்துல்காதர் என்ற என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர். விலங்கியல் பாடம் எடுத்தவர். எங்கள் பைகளில் விலங்கியல் பாட புத்தகம் இல்லாமல் போனதற்கு முதல் காரணமானவர். மொட்டை மனப்பாடம் செய்யும் பழக்கத்தை எங்களிடமிருந்து வெட்டி எடுத்தவர். எனக்குத் தெரிந்து அன்று நடத்த வேண்டிய பாடத்தை முதல் நாளே குறிப்பெடுத்துக் கொண்டு வந்து பாடம் நடத்திய ஆசிரியர். கையில் ஒரு சிறு குறிப்பு கொண்டு வருவார். பாடத்திற்கான படத்தை போர்டில் வரைவார். அதை பார்த்து விளக்கம் சொல்வார். பின்னர் ஒரு மாணவனை எழுப்பி சொல்லச் சொல்வார். அதன் பின் நோட்டில் அவரவர் புரிந்து கொண்டதை எழுதிக் கொள்ளுங்கள் என்பார். வார இறுதியில் அந்த பாடத்தில் தேர்வு வைத்து தவறுகளை சுட்டிக் காட்டுவார். விலங்கியல் பாடத்தை விளங்கும் வகையில் நடத்தியவர் என்றே சொல்லலாம். வீட்டில் போய் படிக்க வேண்டிய அவசியமே இருக்காது. பிற்காலத்தில் கல்லூரியில் விருப்பப் பாடமாக விலங்கியலை எந்த யோசனையுமின்றி தேர்வு செய்தேன் என்றால் அதற்கு காரணம் முகைதின் அப்துல்காதர் சார் தான்!

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு வந்தேன். நான் படித்த காலத்தில் இப்பொழுது போல் நிறைய கல்லூரிகள் எங்கள் ஊரில் இல்லை. ஒரே ஒரு அரசு கல்லூரி மட்டும் தான். தனியார் கலைக்கல்லூரி என்றால் மதுரைக்கு தான் போக வேண்டும். நான் படித்த அரசு கல்லூரியில் என்னைக் கவர்ந்தவர் என் துறைத் தலைவர் (தாவரவியல்) பேராசிரியர் சந்திர சேகரன். “பஞ்சுமிட்டாய்” என்ற பட்டப்பெயருடன் கல்லூரி முழுக்க வலம் வந்தவர். என் சீனியர்களில் பலரும் அவரை ”அப்பா” என்று தான் அழைப்பார்கள். எல்லா துறை மாணவர்களிடமும் சகஜமாக பழகுவார். மேல்நிலைக்கல்வி வரை தமிழில் படித்து விட்டு கல்லூரியில் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் எடுத்து விட்டு படிக்க சிரமப்பட்ட என்னைப் போன்ற பலருக்கும் தமிழ் வழியில் படித்தும் பட்டம் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தவர். ஆங்கிலத்தில் வகுப்பெடுப்பார். வகுப்பறையில் வெறும் குறிப்புகளை மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதிப்பார். அதன் பின் ஆங்கிலம், தமிழில் அது சார்ந்து கல்லூரி நூலகத்தில் இருக்கும் நூல்களை பட்டியலிட்டு அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக்கொள்ள சொல்வார். சில சமயங்களில் சில பாடங்களுக்கு தமிழ் வழி நூல்கள் இல்லை என்றால் அவரே கைப்பட தமிழில் எழுதி பிரதி எடுத்து வந்து தமிழ் வழி மாணவர்களுக்கு தருவார். ஆறுமாதம் காலையிலும், அடுத்த ஆறுமாதம் மாலையிலும் கல்லூரி நடைபெறும். அதனால் பாடங்களை முடிக்க முடியாமல் பேராசிரியர்கள் சிரமப்படுவார்கள். அதிலும் இவர் பாடத்தில் முடிக்கப்படாதவைகள் எக்கச்சக்கமாய் இருக்கும். அப்படி முடிக்காத பாடங்களை சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிப்பார். அச்சமயங்களில் சாப்பாடு, டீ, பலகாரங்களை அவருடைய கணக்கில் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடையில் வாங்கி கொள்ளச் சொல்வார். சில மாணவர்களுக்கு சிகரெட்டும் உண்டு. ”வழி காட்டுவது மட்டுமே என் பணி. பயணிக்க வேண்டியவன் நீ”. இந்த ஒற்றை வாக்கியத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருப்பார். பகுதி நேரமாய் நடத்தப்பட்ட அரசுக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்து அறுபது சதவிகிதத்திற்கும் மேல் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தந்து கொண்டே இருந்தவர். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவரின் பல மாணவர்கள் இன்று ஆசிரியப் பணியில் உள்ளனர்.

எங்கள் மொழிப்பாட பேராசிரியர்களில் நாங்கள் உயர்வாய் மதித்து போற்றிய பேராசிரியர் ஆங்கில வகுப்பு எடுத்த முருகேசன். வகுப்பறையில் பாடங்களை நடத்தும் நேரத்தை விட வாழ்க்கைக்கான விசயங்களை பேசுவதற்கு தான் அதிக நேரம் செலவழிப்பார். வெறுமனே வகுப்புகளை கடத்தி விடுவதற்கும், பாடப் புத்தகங்களை மனனம் செய்ய வைப்பதற்கும் நான் தேவையில்லை. தேடலும், அதைக் கண்டடைவதற்கான வழிகளையும் வகுத்து தருவதற்கே நான் உங்களை நோக்கி வர விரும்புகிறேன். வகுப்பறையை தேடலின் தீவிர களமாக மாற்றித்தராமல் வெறும் தேர்வுகளின் மேய்ச்சல் களமாக வைத்திருக்க நான் விரும்பவில்லை. வெற்று ஆசிரியர்களிடம் நீங்கள் பாடம் படிப்பதற்கு பதில் பாடபுத்தகங்களோடு வகுப்பறையை விட்டு வெளியேறி விடுங்கள். அது குறைந்த பட்சம் உங்களை இந்த நிலையிலேயே இருத்தாமல் கொஞ்சம் நகர்ந்து போக வைக்கும். இப்படி வெளிப்படையாக மாணவர்களாக இருந்த எங்களிடம் சொன்னவர். பாட புத்தக அறிவு என்பது ஒரு இடத்தில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு மட்டுமே. அதை மட்டும் வைத்துக் கொண்டு உங்களின் இறுப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாது என அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருப்பார். அவரைப் போன்ற ஆசிரியர்கள் மிகவும் அபூர்வம்.

இவர்களால் வார்த்தெடுக்கப்பட்டதால் தானோ என்னவோ என் கல்லூரி படிப்பை முடித்து பத்து ஆண்டுகளுக்கு பின்பும் ஆசிரியப் பணியின் மீது கொண்ட காதலால் மீண்டும் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன். இவர்கள் எங்களிடம் பள்ளி, கல்லூரிகளில் காட்டிய ஆர்வம், அக்கறை, ஊக்குவிப்புகள் இன்றைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் “சங்கே முழங்கு – நல்லாசிரியருக்கான டிப்ஸ்” என்ற நூலை தொகுத்து வெளியிட்டு என் ஆசிரிய நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன்.

”ஏணிப்படி
ஏன்இப்படி?”

என்று சில ஆசிரியர்களின் தரமற்ற நடத்தைகளை பார்த்து கவிஞன் ஒருவன் கேட்டானே அது போல் இல்லாமல் சில நச்சு ஆசிரியர்களுக்கு மத்தியில் நல்ல ஆசிரியராய் நான் நானாக ஏணியாய், தோனியாய் இருந்து உதவிய என் ஆசிரியர்களை இப்படி கெளரவப்படுத்துவதிலும், நினைவு கொள்வதிலும் பெருமிதம் மட்டுமல்ல கொஞ்சம் திமிரும் கொள்கிறேன்.

இவர்களில் வயது மூப்பினால் சில ஆசிரியர்கள் காலமாகி விட்டனர். சிலர் பணி மாறுதல்களால் வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள். சிலர் இன்றும் என் அருகில், தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களால் நெறிபடுத்தப்பட்டு வார்த்தெடுக்கப்பட்ட என் போன்ற அவர்களுடைய மாணவர்களால் அவர்களின் தன்னலமற்ற சேவைகள் சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது என்ற பிரமிளின் கவிதையைப் போல எங்கள் வாழ்நாள் முழுக்க நினைவு கூறப்பட்ட படியே இருக்கும்.

– மு.கோபி சரபோஜி
இராமநாதபுரம்.

  1. நம்மை செதுக்கிய வழிகாட்டிகள் பள்ளி ஆசிரியர்களாகத்தான் இருக்கனும்னு இல்லையே எங்கயாவது நாம் கண்ட நம்மை கண்டுபிடித்த ஏதாவது தோழர்களாகவும் இருக்கலாமல்லவா…? அவர்கள் குறித்தும் எழுதலாமா..?

Leave a Reply to feroz பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க