privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணமே போராட்டம்!

கொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணமே போராட்டம்!

-

காலையில் கொத்தகொண்டப்பள்ளி மாணவர்கள் ஒசூர், அந்திவாடி பள்ளிகளுக்கு செல்ல இருப்பது ஒரே ஒரு பேருந்துதான். அந்தப் பேருந்தைப் பிடிக்க ஊரில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு புத்தகச் சுமையுடன் ஓடி ஓடி போக வேண்டும். அந்தப் பேருந்தை விட்டால் நடந்துதான் ஒசூர் போக வேண்டும். பேருந்து வராத பொழுது அல்லது பேருந்து நிற்காமல் சென்று விடும் பொழுது இப்படி 7 கி.மீ. தொலைவிற்கு பல மாணவர்கள் நடந்து சென்றுள்ளனர். மாணவர்களைக் கண்டதும் பேருந்தின் ஓட்டுனர் வண்டியை தூரத்திலேயே நிறுத்தி விட்டு, வேகமாக எடுத்துச் சென்று விடுவார். இந்த நேரத்தில் ஓடி சென்று பேருந்தில் ஏறுவது பெரும் போராட்டம். அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவது, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுக் கொண்டு ஓடுவது, டிபன் பாக்ஸை கீழே போட்டு சோற்றை கொட்டி விடுவது, ஓடும் போது ஒரு செருப்பை கீழே விட்டு விடுவது, இத்து நைந்துபோன புத்தகப்பை அறுந்து விழுந்து புத்தகங்கள் கீழே சிதறி விடுவது என்று மாணவர்கள் பேருந்தைப் பிடிக்க நடத்தும் போராட்டம் என்பது ‘நாகரிக உலகின்’ கேடு கெட்ட வாழ்க்கை முறைக்கு ஒரு சாட்சி!

பேருந்துப் பயணம்
கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்களின் பேருந்துப் பயணம்.

பேருந்தில் ஏறும் போதே வண்டி முழுவதும் நிறைந்திருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களை தொல்லையாகக் கருதி திட்டுபவர்கள், முதியவர்கள் என்ற துன்பத்தை மாணவர்கள் சொல்லி அழுகின்றனர். சிலர் ஆபாசமாக திட்டுவது, இந்த சந்தடி சாக்கில் மாணவிகளிடம் சில பொறுக்கிகள் வக்கிரம் செய்வது போன்ற துன்பங்களை சொல்லி மாளாது.

இவ்வளவுக்குப் பிறகும் பேருந்தில் மாணவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியாது. யாராவது எழுந்து சீட் காலியானால் கூட, அருகில் நின்று கொண்டிருக்கும் மாணவர்கள் அங்கே உட்கார முடியாது. உரிமையாக அருகில் இருக்கும் ‘பெரியவர்கள்’ மாணவர்களைத் தள்ளி விட்டு உட்கார்வது அல்லது உட்கார முயற்சிக்கும் மாணவர்களை, உட்கார்ந்து விடுவாயா என்ற தோரணையில் ஒரு முறை முறைப்பது என்பதுதான் நடக்கிறது. வண்டியில்ஏறியது முதுகில் உள்ள மூட்டையை இறக்குஎன்று சிலர் சொல்வார்கள். சிலர் அரை குறை உயிருடன் ஊசலாடும் அந்த மூட்டையைப் பிடித்து இழுப்பார்கள்.

அதற்குள், இந்த நெரிசலில் தவித்துக் கொண்டிருக்கும் போதுதான் நடத்துனர் “பாசை எடுத்து வைங்கடா” என்று உத்தரவு போடுவார். பையை கீழே வைக்க இடமில்லாமல் உடலிலேயே ஏதாவது ஒரு கோணத்தில் சுமந்து கொண்டு, சிப்பைத் திறந்து பாசை எடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒற்றைக் காலில், ஒரு பக்கம் பையைத் தூக்கி வைத்துக் கொண்டு, நடத்துனர் பாசை பார்க்கும் வரை நெரிசலில் நீந்திக் கொண்டு நிற்க வேண்டும்.

பாஸ் இல்லை என்றால் அந்த மாணவன் வாங்கும் திட்டுக்கு அளவே கிடையாது. ஏதோ, நடத்துனரின் சொந்த வண்டியில் நாங்கள் ஓசி பயணம் செய்யும் வாழ்வதற்கே வக்கற்ற பிச்சைகாரர்களைவிடக் கேவலமாக திட்டுவார்கள். அந்தத் திட்டை வாங்கிக் கொண்டுதான் போக வேண்டும். பேருந்தில் உட்கார்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு சில விட்டேத்திகள், நடத்துனருடன் சேர்ந்து கொண்டு தன் பங்குக்கு எங்களை இரண்டு திட்டு திட்டுவார்கள். எங்களில் யாராவது இவர்களை முறைத்தால், “என்ன முறைக்கிற” என்று எங்களது தலையில் தட்டும் அந்தத் தறுதலைகள்.

இவ்வளவும் சகித்துக் கொண்டு ஒசூர் வரை சென்றுவிட்டால், பேருந்திலிருந்து இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இறங்குபவர்களுக்கு வழி விட மாட்டார்கள். பின்னால் இருக்கும் பெருசுகளிடம் திட்டு வாங்குவதும், நாம்தான், ஏதோ மாணவர்களாகிய நாங்கள் தான் சுறுசுறுப்பாக இல்லை என்று ஒரு ‘தத்துவ’ கண்டுப்பிடிப்பை அங்கேயே பலர் மத்தியில் பேசுவார்கள். இதற்கு சில ஆமாம் சாமிகள் அவர்கள் பங்கிற்கு எங்களைத் திட்டித் தீர்க்கும். 7 கி.மீ தொலைவை பேருந்து பயணம் என்ற பெயரில் 1/2 மணி நேரம் பயணம் செய்வதைவிடக் கொடுமை எதுவுமில்லை என்று தோன்றுகிறது.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, இந்த பேருந்து பயணத்தில் எல்லோரும் செய்யும் தவறுகளுக்கும் சம்மந்தமே இல்லாமல் திட்டு வாங்குவது, உதை வாங்குவதும் மாணவர்களாகிய நாங்கள் தான். அதே போல, பேருந்து வசதியின்மையினால் ஏற்படுகின்ற துன்பங்கள் பலவற்றையும் அதிகபட்சம் அனுபவிப்பவர்கள் மாணவர்களாகிய நாங்கள்தான்!

பேருந்து பயணத்தின் போது எங்களை யாராவது திட்டியதற்காகவும் பேசியதற்காகவும் பெற்றோரை அழைத்து சண்டை போட்டதெல்லாம் பழைய காலம். இப்போது நாங்கள் திட்டு வாங்குவதும் பேச்சு வாங்குவதும் பெற்றோருக்கும் பழகி விட்டது. ஆகையால், வீட்டில் போய் சொல்லி தீர்த்துக் கொள்ளும் பிரச்சனையாகவும் இவை இல்லை.

பேருந்து நிலையத்திலிருந்து இறங்கிய பின்னர் பள்ளிக்கு ஒசூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஒருநாள் காலையில் பேருந்தைப் பிடித்து பள்ளிக்குச் செல்வது என்பது, அவமானங்களும் ஆபத்துகளும் சாகசங்களும் நிறைந்த ஒரு அவலம். இவ்வளவையும் நினைத்து பார்க்கக் கூட நேரம் இருக்காது. பள்ளிக்குச் சென்றவுடன் அங்கு வேறு உலகம் இருக்கும். படித்ததெல்லாம் மறந்து போகும். படிக்கவில்லை என்பதற்காக வாங்கும் திட்டுகளும் அடிகளும் பேருந்தில் வாங்கிய அளவிற்கு துன்பமாக இருந்ததில்லை.

மாலை 4.30 மணிக்கு பள்ளி விட்டதும் ஒரு ஓட்டம் தொடங்கும். சாலையை அடைத்துக் கொண்டு மாணவர்கள் நாங்கள் தான் ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திற்கு வருவோம். மாலை 5.30 மணி பேருந்துக்கு பேருந்து நிலையத்தில் சென்று முண்டியடிக்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் பயணிக்கும் அந்த பேருந்தில் உள்ளே நுழைந்து விட்டாலே பெரும் வெற்றிதான். ஆனால், இந்த ஓட்டுனர் என்ன செய்வார் என்றால் மாணவர்களான எங்களை ‘ஓசி டிக்கெட்’ என்பதால் அத்திப்பள்ளிக்கு வேறு வழித் தடத்தில் பேருந்தை எடுத்துச் சென்று விடுவார். இந்த ஓட்டுனர்களில் சிலர் இதனை திட்டமிட்டு செய்வதாக மாணவர்கள் புரிந்து வைத்திருந்தோம். அதன் பின்னர், தோழர்கள் இதன் பின்னே இருக்கும் போக்குவரத்து துறையின் சதியை விளக்கினர்.

போக்குவரத்து துறையே திட்டமிட்டுதான் ஓட்டுனர்களுக்கு வழி காட்டுகிறது. குறிப்பாக, அத்திப்பள்ளி க்கு சிப்காட் வழியாக பேருந்தை மாலையில் இயக்குவதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஏறுவார்கள். மாணவர்கள் இந்தத் தடத்தில் பயணம் செய்வதில்லை. மாணவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, அவர்கள் வீட்டிற்கு சென்று சேரவில்லையென்றாலும் பரவாயில்லை என்ற திமிர்தான் இதற்கு அடிப்படை. ஓட்டுனர்களும் கலெக்சன் குறைந்து விடுதாக புரிந்து கொண்டு தங்களது அதிகாரிகளின் உத்தரவுக்கு அடிபணிந்து சென்று விடுகின்றனர். குறிப்பாக, மக்களுக்கு சேவை செய்யும் துறையாக போக்குவரத்துத் துறை இருப்பதை மாற்றியமைத்தால்தான், எதிர்காலத்தில் போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்க முடியும். அதற்காக மேற்கொள்ளப்படும் சதிதான் மாணவர்களுக்கு பேருந்து உரிமை மறுக்கப்படுவது என்று தோழர்கள் தெளிவுப்படுத்தினர்.

மாலை 5.30 மணிக்கு புறப்படும் பேருந்தை விட்டால் அடுத்து 7 மணிக்கு தான். இந்த பேருந்தில்தான் இரவு சிப்ட்க்கு வேலைக்கு போகும் தொழிலாளர்கள், ஒசூருக்கு வேலைக்கு வந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. இதனால், பலமுறை 5.30 மணி வண்டியை விட்டுவிட்டு இருட்டில், குளிரில் நடந்தே கொத்தகொண்ட பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை எங்களுக்கு. பல நேரங்களில் டி.வி. எஸ். ஆலைகளுக்கு உதிரி பாகங்களை ஏற்றி வரும் டெம்போக்களின் ஓட்டுனர்களின் உதவியால்தான் வீட்டுக்கு வந்து சேருகிறோம்.

இந்த பேருந்து பயணம் என்கிற இந்தக் கேடு கெட்ட அவலம் என்பது ஏதோ ஒரு நாள் கதையல்ல… தினமும் இதுதான் கொத்தகொண்டப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கை! கொத்தகொண்டபள்ளி கிராமங்களுக்கு அருகில் அரசு பேருந்து மட்டும்தான் குறைவாக வருகிறது. ஆனால், கொத்தகொண்டபள்ளி-ஒசூர் சாலை அதிகம் விபத்து நடக்கும் சாலை. காரணம் டி.வி. எஸ். குழுமத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவ்வாலை பேருந்தில் அழைத்து சென்றுவிடுவதற்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இந்த சாலையில் வேகமாக பறந்து செல்லும். அவ்வாலைக்கு பல மாநிலங்களிலிருந்து வருகின்ற ஆயிரக்கணக்கான நீளநீளமாக இருக்கும் சரக்கு வாகனங்கள் சாலையில் புழுதியைக் கிளப்பிச் செல்லும். உள்ளூரில் சப்காண்ட்ராக்ட் வாங்கியுள்ள சிறு முதலாளிகள் சிறிய டெம்போக்களில் தங்களது உற்பத்தி பொருட்களை இந்த ஆலைக்கு எடுத்துச் செல்வார்கள். இப்படி ஒளிரும் டி.வி. எஸ். தொழிற்சாலைக்கு அருகில் அவலமான சேரியைப் போல கொத்தக்கொண்டபள்ளி உள்ளது.

பேருந்துக்கான மாணவர்களின் போராட்டம்!

கொத்தகொண்டப் பள்ளி கிராமத்தில் இருந்து மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். இவர்கள் கணிசமானோர் கொத்தகொண்டப்பள்ளியிலிருந்து ஒசூர் வரும் வழியில் உள்ள அந்திவாடி உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். ஓரிரு மாணவர்களைத் தவிர இவர்கள் அனைவரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு படிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த மாணவர்களில் சிலர் பேருந்து வசதிக்காக ஊரில் முன்னணியாக நின்று நிதி திரட்டியுள்ளனர். உள்ளூரில் இந்த மாணவர்களின் ஊக்கமான செயல்பாட்டை கண்டு உள்ளூர் பெரியவர்களும் மாணவர்களை ஆதரித்து ஊரில் பேருந்து நிறுத்தத்திற்கான இடத்தை பல ஆயிரங்கள் செலவு செய்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான இடத்தை ஜே.சி.பி. வைத்து சுத்தம் செய்யும் போதும், 30 லோடு மண் அடித்து சமன்படுத்தும் போதும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 நாட்கள் இரவு பகல் பாராது வேலை செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட அனைவரும் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டுதல், ஆர்ப்பாட்டத்திற்கு வீடுவீடாக சென்று மாணவர்களையும் பெற்றோரையும் அணிதிரட்டுதல் என ஊக்கமாக இந்த மாணவர்கள் செயல்பட்டனர்.

மாணவர்களின் இந்த ஊக்கமான செயல்பாட்டினால் உள்ளூர் மக்கள் பெரிதும் ஆர்வமடைந்துள்ளனர். வீடுவீடாக பேருந்து வசதி கோரி மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பலரும் மாணவர்களுக்கு தாராளமாக நிதி கொடுத்து ஊக்கப்படுத்தினர். உள்ளூரில் ஒரு சில பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மாணவர்களின் ஊக்கமான இந்த செயல்பாட்டிற்கு பெற்றோர் யாரும் குறுக்கே நிற்கவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு விடுப்பு எடுத்து வந்து கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியது பேருந்துக்காக மக்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.

இந்த ஊரில் கையெழுத்து இயக்கம் எடுத்த போது ஒருசில பெரியவர்கள் கையெழுத்து போட மறுத்துள்ளனர். காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் தன்னை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டுவிடுவார்கள் என்று அச்சப்பட்டுள்ளனர். காரணம், மக்கள் தங்களது பிரச்சனைக்காக கையெழுத்து இயக்கம் நடத்துவது கூட இந்த ஊரில் சிலர் கேள்விப்பட்டதில்லை. கொத்தகொண்டப்பள்ளியில் மக்களின் சிந்தனை ஓட்டத்திற்கு இது ஒரு உதாரணம். ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரில் எந்த கட்சியினரையும் கொடியேற்ற அனுமதிப்பதில்லை.எந்தக் கட்சி கூட்டத்தையும் ஊரில் நடத்தக் கூடாது என்று கட்டுப்பாடு பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் இருந்து இந்த ஊரில் இருந்து மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு 30 பேர் கலந்து கொண்டதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கையிலிருந்து அரசியல் கோரிக்கைக்காக…

இந்த நிலையில் தூத்துக்குடியில் ம.உ.பா.மையம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் 7 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக, சரியாக தமிழ் பேசத் தெரியாத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதிலிருந்து தாது மணல் கொள்ளை குறித்தும் வைகுண்டராஜன் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நமது அமைப்பு போராடுவதையும் ஊக்கமாக கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் தொடர்கிறது பேருந்துக்கான போராட்டம்!

அரசு பிரச்சாரம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆணுறை விளம்பரங்கள் முதல் ஜெயலலிதாவின் ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் வரை இந்த அரசின் அறிவிக்கப்படாத பிரச்சாரகர்களாக மாணரவர்களைப் பயன்படுத்துகின்றனர்.

பேருந்து வசதிக்காக கையெழுத்து வாங்குவது, மனு கொடுப்பது, தூத்துக்குடிக்கு சென்று வந்தது, ஆர்ப்பாட்டம் செய்தது என அடுத்தடுத்த மாணவர்களின் செயல்பாட்டினால் உற்சாகமடைந்தவர்கள் ஒருபுறம் எனில், அதனைத் தடுக்க வேண்டும் என்று கருதியவர்களும் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுநாள் அந்திவாடி பள்ளிக்குச் சென்ற மாணவர்களை குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30-க்கும் அதிகமான மாணவர்களை அப்பள்ளியின் தலைமையை ஆசிரியை மரியசூசி மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக கண்டித்துள்ளனர். ஒரு மாணவரை அடித்துள்ளனர். மேலும், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தனர். மறுநாள் பெற்றோரை அழைத்து வந்தால்தான் பள்ளிக்குள் விடுவோம் என்று எச்சரித்துள்ளனர். குறிப்பாக, தூத்துக்குடி சென்று வந்த மாணவர்களிடம், “சோறு கொடுத்தால் எங்க வேணும்னாலும் போவியா” என்று கேட்டு திட்டியுள்ளனர்.

ஆசிரியர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயப்படாத மாணவர்கள் இந்தப் பிரச்சனையை தோழர்களிடம் தெரிவித்தனர். மாணவர்களின் சமூக நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்குவது, அவர்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதற்காக அவர்களைத் தண்டித்தது போன்றவை சட்டப்படி குற்றம். மற்றொருபுறம், எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆணுறை விளம்பரங்கள் முதல் ஜெயலலிதாவின் ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் வரை இந்த அரசின் அறிவிக்கப்படாத பிரச்சாரகர்களாக மாணவர்களைப் பயன்படுத்துகின்றனர் ஆசிரியர்கள். இதையெல்லாம் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று பேசுகின்றனர். நமது அமைப்பையும் கொத்தகொண்டப்பள்ளி மாணவர்களின் நியாயமான கோரிக்கையையும் புரிந்து கொள்ளாமல் மாணவர்களை தண்டித்ததற்காக, ஆசிரியர்களுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர்தான் ஆசிரியர்களும் இந்த பிரச்சனையில் நியாயத்தை, ‘உணர’த் தொடங்கியுள்ளனர்.

முக்கியமாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியாக இருந்தாலும், ஜெயலலிதா வருகைக்காக மேற்கொள்ளப்படும் பேரணியாக இருந்தாலும் மாணவர்கள் யாரும் உணர்வு பூர்வமாக பங்கேற்பதில்லை. எரிச்சலோடும் வெறுப்போடும் பலர் கலந்து கொள்கின்றனர். தங்களை பொம்மை போல பயன்படுத்துவதைப் பார்த்து பலருக்கு கோபம்தான் வருகிறது. இருந்தாலும் மாணவர்களை இவ்வாறு தங்களது ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை குற்ற உணர்வுடன் பல ஆசிரியர்கள் பார்ப்பதில்லை. ஆனால், தங்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்று மாணவர்கள் தன்மான உணர்வுடன் உரிமையுடன் போராடுவதை இந்த ஆசிரியர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதது எதார்த்தம். அதிகார வர்க்கத்திற்கு அடிமைகளாக இருக்கும் ஆசிரியர்களால், மாணவர்கள் ஜனநாயக உணர்வுடன் போராடுவதை சகித்துக் கொள்ள முடியாம என்ன?!

கூலி வேலைக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர் ஒரு நாள் விடுப்பு எடுத்து பள்ளிக்கு வருவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. உண்மையில், மாணவர்களின் கல்வியின் மீது அக்கறையிருந்தால் ஆசிரியர் அவரது இரு சக்கர வண்டியில் ஊரில் வந்து விசாரித்து விட்டு சென்றிருக்கலாம். இது எளிமையான வழிமுறையாக இருந்திருக்கும். ஆசிரியர்களின் இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் பெற்றோர் அமைப்பின் வழிகாட்டுதல் படி செயல்பட்டதால், ஆசிரியர்கள் பின்வாங்கினர். மாணவர்களின் கல்வியறிவின் மீது அக்கறை கொண்டவர்கள் போல காட்டிக் கொள்ள முயற்சித்ததை பெற்றோரே அம்பலப்படுத்தினர்.

மனு
சார் ஆட்சியரிடம் பேருந்துவசதிக் கோரி மனு அளிக்கப்படும் காட்சி

இதே பள்ளியில் இருந்து ஆர். எஸ்.எஸ்.நடத்தும் சாகாக்களுக்கு மாணவர்கள் சென்றுவருவதை இந்த பள்ளி ஆசிரியரால் ஏன் என்று கூட கேட்கமுடியாது என்பதையும் அதையெல்லாம் தடுக்க முடியாதவர்கள், ஏன் இதனை மட்டும் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் கேள்விஎழுப்பி ஆசிரியர்களுக்கு உணர்த்தினர். அமைப்பு சரியான வகையில் தலையிட்டதால் மாணவர்களை மிரட்டும் ஆசிரியர்களின் முயற்சி தவிடுபொடியானது.

அடுத்ததா என்ன செய்றது…?

“கலெக்டரிடம் மனு கொடுத்தாச்சு, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தாச்சு, இதற்கு மேலயும் பஸ்ஸு விடலன்னா என்ன செய்றது” என்று ஒரு மாணவர் கேட்க, அருகில் இருந்த ஆறாவது படிக்கும் மாணவன், “ஜெயலலிதாகிட்ட போயிஎங்க அப்பா, அம்மாவெல்லாம் ஓட்டு போட்டுதானே உங்களை முதலமைச்சர் ஆக்கினாங்க. அப்புறம் ஏன் பஸ்ஸு விடமாட்டீங்கிறீங்க என்று கேட்பேன்” என்று தெரிவித்தான். இவனது இந்த கேள்வியை பல மாணவர்கள் ஆமோதித்தனர். ஆனால், “ஜெயலலிதாவை நம்ம ஊருக்கு வரவச்சி கேட்கனும், அதுக்குஎன்ன செய்றது தோழரே” என்று கேள்விக் கேட்கத் தொடங்கினர். பேருந்து உரிமைக்காம மாணவர்கள் அடுத்தக் கட்ட போராட்டம் தயாராகிவிட்டனர்.

அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?

ஆர்ப்பாட்டத்தின் போது, சிறப்புரையாற்றிய தோழர் பரசுராமன், பேருந்து பிரச்சனை என்பது போக்குவரத்துத் துறை தனியார்மயத்துடன் தொடர்புடையது என்பதை விரிவாக ஒசூர் அனுபவங்களைக் கொண்டு விளக்கினார். மேலும், உள்ளூராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகார வர்க்கம் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இல்லை என்பதையும் விளக்கி பேசினார். பேருந்து தனியார்மயம் போல தான் கல்வி தனியார்மயமாகிவருகிறது என்பதை விரிவாக விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், மாணவர்களை ஊருக்கு வழியனுப்பி வைக்கும் போது, 5 வகுப்பு படிக்கும் ஒரு மாணவன்  “தோழரே, 5-வது படிக்கிறங்வங்களுக்கு மட்டும் பாதி முட்டை தான் கொடுக்குறாங்க. ஏன் முழு முட்டை தரமாட்டேங்குறாங்க? அந்த பாதி முட்டையையும் மொத்தமா பொரியல் மாதிரி செஞ்சி கையில தடவிடறாங்க. இந்த அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?”என்று கேட்டான்.

பு.ஜ.தொ.மு. தோழர்கள் மக்களிடம் ஐக்கியப்பட்டு அவர்களது உரிமைக்காக போராடத் தொடங்கிய பின்னர், மாணவர்கள் தங்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெறத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குஎதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர். வாருங்கள், அவர்களை வாழ்த்துங்கள்!

ஓசூர்-கொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

ராம் நகரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பிரசுரத்தின் உள்ளடக்கம் :

நமது நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2020-ல் செயற்கைகோள் அனுப்பி மக்களை குடியேற்றப் போகிறோம் என்று பேசுகிறார்கள், ஆனால் ஓசூர் அருகில் உள்ள கொத்தகொண்டப்பள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல மவுனமாக இருக்கிறது அரசு. இந்த பூமி கிரகத்திலேயே பேருந்து இயக்கமுடியாத அரசு செவ்வாய் கிரகத்தில் மக்களை வாழவைக்கப்போகிறதாம். கேட்கிறவன் கேனப்பையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பார்கள். அது இதுதான்.

ஓசூர் வட்டம், கொத்தகொண்டப்பள்ளி பஞ்சாயத்தில் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ள டி.வி.எஸ் ஆலையிலும், அதன் கிளை நிறுவனங்களில் 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். பள்ளி மாணவர்கள் 8 கிலோமீட்டர், தொலைவிலுள்ள ஓசூர் மற்றும் 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்திவாடிக்கும், தொழிலாளர்கள், ஓசூர் மற்றும் பெங்களூருக்கும் சென்றுவர வேண்டியுள்ளது, இவர்கள் மட்டுமின்றி வியாபாரிகள், பிற உழைக்கும் மக்கள் என அதிகாலையில் 1000-க்கும் அதிகமான மக்கள் பயணம் செய்ய தமிழக அரசு ஒதுக்கியிருப்பது ஓரிரு நகரப் பேருந்துகளைத்தான், இந்தப் பேருந்துகளில்தான் ஒரே நேரத்தில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். டெம்போக்களிலும் பயணம் செய்துவருகின்றனர். கொத்தக்கொண்டப்பள்ளி ஊரிலிருந்து மாணவர்கள் பலர் இரண்டு கிலோமீட்டருக்கும் மேல் நடந்து செல்கின்றனர். ஊருக்குள் பேருந்து வருவதில்லை.

அதனால், கூடுதல் பேருந்து இயக்க கோரி இரண்டு ஆண்டுகளாக சாராட்சியரிடமும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமும் மனுக்கொடுத்து வந்துள்ளனர். போக்குவரத்துத் துறையோ, ரோடு சரியாக இல்லை என்றது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளாக பேருந்து சென்றுவருவதற்கு ஏற்ப சாலையை அரசு சீரமைக்கவில்லை, இதனால் கொத்தகொண்டப்பள்ளி கிராம மக்கள் ஒன்றினைந்து சாலையை சீரமைத்தனர். சாலை சீரமைத்த பின்னர் பேருந்து விடக் கோரி சாராட்சியர் மற்றும் போக்குவரத்துக் கழகத்திடம் மனுக்கொடுத்தும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக, கொள்ளையடிக்க வசதியாக ரோடு போடுவது, பாலங்கள் கட்டுவது என கோடிக் கோடியாய் செலவழிக்கும் அரசு, உழைக்கும் மக்கள் அடிப்படை வசதி கோரினால் அதனை ஒரு மயிரளவிற்கும் மதிப்பதில்லை. பெட்ரோல், டீசல்களில் சாலைக்கென வரி, பேருந்துக் கட்டணத்தில் ஒரு பகுதி சாலைக்கென வரி உள்ளாராட்சி வரி, டோல்கேட் வரி என நாம் செலுத்துகின்ற பல மறைமுக வரிகளில் சாலை வசதி மேம்பாட்டிற்காக அரசு பணத்தை எடுத்துக் கொள்கிறது. இருப்பினும் முதலாளிகளுக்குத்தான் சேவை செய்கிறது.

சார் ஆட்சியரிடம் பேருந்துவசதிக் கோரி மனு அளிக்கப்படும் காட்சி

“கடமையை மட்டும் செய், உரிமையை கேட்காதே’’ என்கிறது அரசு. அதனால்தான் இந்த மக்கள் விரோத, போலிஜனநாயக அரசிடம் மனு போட்டு மண்டியிடுவதால் உரிமைகள் கிடைக்காது என்பதை உணர்ந்து வீதியில் இறங்கி போராட அறைகூவி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக 27.11.2013 மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினர். இறுதியாக, தோழர் அருண் நன்றியுரையாற்றினார்.

தமிழக அரசே!

  • கொத்தகொண்டப்பள்ளி, மாணவர்கள்- தொழிலாளர்களுக்கு கூடுதலாகள காலை- மாலை நேரங்களில் தலா இரண்டு பேருந்துகளை இயக்கு!
  • தளி, மதகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் போன்ற எல்லையோர கிராமங்கள் அனைத்திற்கும் கூடுதல் பேருந்த்துகளை இயக்கு! சாலையை சீரமைத்து கொடு!

உழைக்கும் மக்களே!

  • தளி, மதகொண்டப்பள்ளி, தேன்கணிக்கோட்டை, பாகலூர் போன்ற எல்லையோர கிராம மக்களே, பேருந்து வசதிக்காக எங்களுடன் போராட முன்வாருங்கள்!
  • பேருந்து வசதி நமது அடிப்படை உரிமை! இதனை பெற வீதியில் இறங்கி போராடுவோம்!
  • தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் அரசுப் போக்குவரத்தை தனியார் மயமாக்குவதை எதிர்ப்போம்!
  • போலிஜனநாயகத்தை வீழ்த்தி புதிய ஜனநாயக குடியரசமைப்போம்!

தமிழ் மற்றும் தெலுங்கு துண்டறிக்கைகள்

சுவரொட்டிகள் :

ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர். செல்- 9788011784.