privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கலோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?

லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?

-

2011-ம் ஆண்டு டிசம்பரில் லோக்பால் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறினாலும்  மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. அங்கே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது ஒரு காரணம். தற்போது டில்லி சட்டமன்ற தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முக்கியமாக முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 2ஜி, நிலக்கரி, வெஸ்ட்லேண்ட், காமன்வெல்த், ஆதார் என்று அன்றாடம் அணிவகுக்கும் ஊழல் செய்திகள் நாட்டு மக்களிடம் வெறுப்பையும் தோற்றுவித்திருந்தன.

லோக்பால் மசோதா
லோக்பாலை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருக்குமே இருந்தது.

அதன் பொருட்டே அண்ணா ஹசாரே முதலான காந்தியக் கோமாளிகளின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வரவேற்பு இருந்தது. இதனால் லோக்பாலை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருக்குமே இருந்தது. அதனாலேயே அவர்களது முரண்பாடு இந்த விசயத்தில் அழிய வேண்டும் என்ற சூழல் உருவானது. இருப்பினும் இந்த உண்மையை அவர்கள் மசோதாவில் திருத்தங்கள் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக சமாதானப்படுத்திக் கொண்டார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.

எனினும் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா உண்மையில் இத்தகைய பெருச்சாளிகளின் ஊழல் அமைப்பு முறையை மாற்றி விடாது என்று அவர்களுக்குத் தெரியும். மசோதாவின் ஷரத்துக்களை கொஞ்சம் ஆய்வு செய்து பார்த்தாலே இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களை யார் தெரிவு செய்வார்கள்? தெரிவு செய்யும் தேர்வுக் கமிட்டியில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் 4 சட்ட உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதன்படி மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி நியமிக்கும் நால்வர் என காங்கிரசுக்கு ஐந்து இடங்களும், பாஜகவிற்கு ஓரிடமும், நீதிபதிக்கு ஓரிடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக ஏழில் ஐந்து காங்கிரசு பெருச்சாளிகள் அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் பாஜகவிற்கு ஐவர் என்றான பிறகு லோக்பால் அமைப்பு யாருக்காக செயல்படும்?

ஆக ஆளும் கட்சியால் தெரிவு செய்யப்படும் லோக்பால் அமைப்பிற்கு இருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் ஏற்கனவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அதிகார அமைப்புகளோடு பத்தோடு ஒன்றாக கூடுமே அன்றி இதில் மக்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைப்பது அபத்தம்.

ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் 12 பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் மராட்டிய முதல்வர் அசோக் சவாணும் ஒருவர். ஆனால் தன்னை விசாரிப்பதற்கு ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு போட்டு வெற்றி பெற்றார் சவாண். அதன்படி சிபிஐ ஆளுநரிடம் அனுமதி கேட்ட போது மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆதர்ஷ் வழக்கில் சவணை சேர்த்து விசாரிக்க சிபிஐக்கு உரிமை இல்லை. இவ்வளவிற்கும் வழக்கின் போது சவாண் முன்னாள் முதல்வர்தான். இதன்படி பார்த்தால் நாளைக்கு ஒரு வழக்கில் ஒருவரை விசாரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று லோக்பால் சொல்லும்பட்சத்தில் இதே அமைச்சர் பெருச்சாளிகள் தப்பிக்க மாட்டார்களா? ஏனெனில் ஆளுநர் மட்டுமல்ல, லோக்பால் அமைப்பில் இருப்போரும் ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் எனும் போது என்ன வேறுபாடு?

லோக்பால் அமைப்பில் 50% நீதித்துறையை சேர்ந்தவர்களும், மீதிப்பேர் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று இதற்கு ஒரு சமூக நீதி அலங்காரத்தையும் அளித்திருக்கிறார்கள். உண்மையில் ஆளும் கட்சியில் இத்தகைய சமூகப் பிரிவுகளோடு பொறுப்பில் இருக்கும் நபர்களே இங்கும் இடம் பெறப் போகிறார்கள். லோக்பால் அமைப்பில் இருக்கும் பெண்களுக்குரிய இடத்தை காங்கிரசே தீர்மானிக்கும் என்றால் அதில் ஜெயந்தி நடராஜனைப் போன்ற சீமாட்டிகளன்றி வேறு யார் இடம் பெறுவர்?

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி வி.எம்.வேலுமணி நேற்று புதன்கிழமை 18.12.13 அன்று ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றாராம். காரணம் கடந்த பத்தாண்டுகளில் அவர் அரசு வழக்குரைஞராக பணியாற்றியிருக்கிறார்.  ஜெயா ஆட்சிக்காலத்தில் அரசு வழக்குரைஞராவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

லோக்பால் அமைப்பு
லோக்பால் அமைப்பு கார்ப்பரேட் ஊழல் குறித்தும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளை விசாரித்து தண்டிப்பதற்கும் எந்த உரிமையையும் பெற்றிருக்கவில்லை.

மாநிலத்திலேயே இதுதான் கதி என்றால் மத்தியில் ஆளும் கட்சியினால் லோக்பாலில் நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதிகளின் நேர்மையும், நடுநிலைமையும் எப்படி இருக்கும்?

ஆக லோக்பால் அமைப்பில், தெரிவு செய்யப்படும் ஜனநாயகம் துளியும் இல்லை. நிலவுகின்ற அதிகார அமைப்புகளின், நபர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் நியமிக்கப்படும் இந்த உறுப்பினர்கள் எந்த ஊழலை என்னவென்று விசாரிப்பார்கள்?

பிரதமரையே விசாரிக்கும் அதிகாரம் படைத்தது லோக்பால் எனும் உண்மைக்கு பின்னே பிரதமர்தான் இந்த லோக்பாலை கட்டுப்படுத்துகிறார் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். எனினும் இந்த பூச்சாண்டி அம்சத்தைக் கூட ஜெயாவின் அதிமுகவும், முலாயமின் சமாஜ்வாதியும் ஏற்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு பெயரளவு விசாரணைக்குக் கூட முதல்வர்களும், பிரதமர்களும் உட்பட்டவர்கள் இல்லையாம். சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவி அந்த அளவுக்கு ஜெயாவை தொல்லைப்படுத்துகிறது. ஒரு வேளை லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன? லோக்பால் விசாரணைக்கு காலவரம்பு உண்டு என்று கூறினாலும் அந்த வரம்பை தள்ளிப் போடும் உரிமையும் அதற்கு உண்டு.

லோக்பால் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டிற்குள் மாநில அரசுகள் லோக் ஆயுக்தா அமைக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பட்டிருந்தாலும் அப்படி கொண்டு வரவில்லை என்றால் என்ன நடவடிக்கை என்பதற்கு பதில் இல்லை. இதுதான் ஜெயாவிற்கு பிடித்த உள்குத்தாக இருக்குமோ தெரியவில்லை.

சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் கண்காணிக்கவும், உத்திரவிடவும் லோக்பாலுக்கு உரிமை உள்ளதாம். இதனால் சிபிஐ உள்ளிட்ட போலிஸ் அமைப்புகளுக்கு இருக்கும் எஜமானர்களோடு வேறு புதிய எஜமானர்களும் சேர்ந்து கொள்ளுகிறார்கள். ஆனால் எஜமானனின் எண்ணிக்கை கூடினாலும் ஒரே ஆள்தான் மாறு வேடத்தில் மாறி மாறி வருகிறார் என்றாலும் ஆளுக்கு ஒரு பதில், கடிதம் என்ற வகையில் சிபிஐயில் உள்ளவர்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள். இதனால் ஊழல் வழக்குகளில் சிபிஐயின் குற்றப்பத்திரிகையை ஆளும் கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து தயாரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுதான் சிபிஐயின் இயக்குநரை பரிந்துரைக்குமாம். தற்போதும் இதுதானே அய்யா மறைமுகமாக நடந்து வருகிறது? அதற்கு ஒரு சட்ட வடிவம் கொடுத்து விட்டதாலேயே சிபிஐ எனும் ஆளும் கட்சியின் வேட்டை நாய் இனி நடுநிலைமை சைவ நாயாகி விடுமா என்ன?

லோக்பாலால் மத்தியில் ஆளும் கட்சிக்கு வேறு ஒரு ஆதாயம் இருக்கிறது. மத்தியில் மாநிலக் கட்சிகளின் தயவில்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்ற காலத்தில் அத்தகைய மாநிலக் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கும், பணிய வைப்பதற்குமான பேரங்களை நடத்த லோக்பால் பயன்படும். ஒரு வகையில் மாநில அரசுகளின் உரிமையில் இது தலையிடும் அதிகாரம் என்றும் சொல்லலாம். இதனால் மத்தியில் ஆளும் தேசியக் கட்சியோடு நட்பில் இல்லாத மாநில கட்சிகள் மற்றும் அரசுகளுக்கு லோக்பால் என்பது பூச்சாண்டி காட்டவும் பயன்படும்.

மிக மிக முக்கியமாக லோக்பால் அமைப்பு கார்ப்பரேட் ஊழல் குறித்தும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளை விசாரித்து தண்டிப்பதற்கும் எந்த உரிமையையும் பெற்றிருக்கவில்லை. ஊழல் என்றால் கலெக்டர் ஆபிஸ் பியூன் என்று பொது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் கருத்தோடு தற்போது அரசியல்வாதிகள், கொஞ்சம் அதிகாரிகள் சேர்ந்திருக்கிறார்களே அன்றி முதலாளிகள் யாரும் இந்த பட்டியலில் இல்லை. ஊடகங்களும், அறிஞர்களும், ஊழல் எதிர்ப்பு என்ஜிஓக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் முறைகளை திட்டமிட்டு மறைக்கின்றனர்.

தற்போது நாடு கண்ட ஊழல்கள் அனைத்திலும் மிக முக்கியமான பங்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடையதுதான் என்றான பிறகு லோக்பால் அமைப்பு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மட்டும் விசாரிக்கும் என்றால் இது யாரை ஏமாற்ற?

அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்
லோக்பாலை கொண்டு வந்து வரலாற்றில் இடப் பிடித்து விட்டதாக ராலேகான் சித்தியில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே தன்னுடைய ‘போராட்டத்தை’ முடித்திருக்கிறார்.

உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் லோக்பால் விசாரிக்கும் என்று யாராவது பேசினாலே பங்குச் சந்தையை விழ வைத்து பேசியவரது நாக்கை ப.சிதம்பரத்தை வைத்தே அறுத்து விடுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் சக்தி அத்தகையது.

இலட்சம் கோடிகளில் செய்தியாக வரும் ஊழல் வழக்குகள் குறித்து நாட்டு மக்கள் அரசியல், அதிகார அமைப்புகளின் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதால் அதை தணிப்பதற்கு மட்டுமே லோக்பால் பயன்படும்.

மேலும் ஊழலும், நாட்டு மக்களின் பொதுச் சொத்த்துக்களும், இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படுவது சட்டப்படியே நடக்கலாம் என்று மாறிவரும் காலத்தில் லோக்பால் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?

நிலைமை இப்படி இருக்க லோக்பாலை கொண்டு வந்து வரலாற்றில் இடப் பிடித்து விட்டதாக ராலேகான் சித்தியில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே தன்னுடைய ‘போராட்டத்தை’ முடித்திருக்கிறார். ஊடகங்களும், நடுத்தர வர்க்கமும் இனி வரும் நாட்களின் அண்ணாவின் சாதனை என்று அழுது தீர்க்கும். அப்போது நட்சத்திர விடுதிகளின் காக்டெயில் பார்ட்டிகளில் முதலாளிகள் நமட்டுச் சிரிப்புடன் அதை கேலி செய்வார்கள். ஊழல் பணமோ பாதுகாப்பாக சுவிசிலும், அட்லாண்டிக் கடலில் உள்ள் ஆளில்லா தீவுகளின் வரியற்ற சொர்க்கத்திலும் பாதுகாப்பாக இருக்கும்.

நம்மைப் பொறுத்தவரை லோக்பால் எனும் ஜோக்பால் மசோதாவை அண்ணா ஹசாரே எனும் ஜோக்கர் கொண்டு வந்தார் என்பதை மறுக்க வேண்டியதில்லையே?