privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதில்லைக் கோயிலை மீட்க கோரி சிதம்பரத்தில் மறியல்

தில்லைக் கோயிலை மீட்க கோரி சிதம்பரத்தில் மறியல்

-

தில்லை நடராசன் கோவிலில் நடக்கும் தீட்சிதர்களின் கொட்டத்தை எதிர்த்து கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டத்தை அறிவீர்கள். இன்று காலை பத்து மணிக்கு உச்ச நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கும் ’உச்சிக்குடுமி’ மன்றத்தில் நீதிபதிகள் சவுகான், காப்டே அடங்கிய அமர்வு சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதப் பார்ப்பன கும்பலிடம் ஒப்படைத்து பார்ப்பனிய விசத்தை கக்கியது.

இந்த தீர்ப்பு வெளியான உடன் ஆயிரம் ஆண்டுகளாக கோவிலை தனது சொந்த சொத்து போல பாவித்து கொண்டு கொள்ளையடித்து வந்த தீட்சிதர் பார்ப்பன கூட்டம் கோவில் பிரகாரத்துக்குள் அதிர் வேட்டு போட்டு சரவெடி வெடித்து கொண்டாடியது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்ததை போல மாமிகளும், அம்பிகளும் ஆளுக்கு ஒரு தொலைபேசியுடன் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். சாதி- தீண்டாமை கொடுமைகளை சட்டப்படியே இனி நடத்தலாம், கோவிலை தமது இஷ்டம் போல கொள்ளை கூடாரமாக நடத்தலாம் என்றப் பார்ப்பன ஆதிக்க திமிருடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்கள்

பார்ப்பன கும்பலின் ஆதிக்கத்தையும், சாதி-தீண்டாமை கொடுமைகளையும் எதிர் கொண்டு உழைக்கும் மக்களை திரட்டி போராட்டத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பு.ஜ.தொ.மு, விவிமு., புமாஇமு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகில் திரண்டு

  • கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து கைப்பற்ற தனி சட்டம் இயற்ற வேண்டும்.
  • நந்தன் நுழைந்த தெற்கு வாசலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமை சுவரை தகர்த்து எறிய வேண்டும்.
  • நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும.

என்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தினர்.

முழக்கங்கள் :

அவமானம் இது அவமானம்!
தமிழர்களுக்கே அவமானம்!
தமிழன் கட்டிய கோவிலில்
கருநாகம் போல புகுந்து கொண்ட
தீட்சித பார்ப்பன கும்பலிடம்
கோவில் போனது அவமானம்!

அனுமதியோம்! அனுமதியோம்!
பெரியாரும்- அம்பேத்கரும்
மார்க்சிய- லெனினிய புரட்சியாளரும்
எதிர்த்து போராடி ஒழித்துக் கட்டிய
பார்ப்பனிய நச்சுப்பாம்பை
தலையெடுக்க அனுமதியோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
கோவில் சொத்தை கொள்ளையடித்த
தீட்சித பார்ப்பன கூட்டத்தின்
அராஜகத்தை- வெறியாட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!’

என்று முழக்கங்களை எழுப்பினர்.

போலிசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. உடனே அங்கு வந்த போலீசு பட்டாளம் தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து உள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.