”நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம், குடும்பம் ஒன்றுக்கு தலா 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்குவோம்”. இவை ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமானவை. ஏனெனில், ஆம் ஆத்மி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளிலேயே இவையிரண்டும் தான் மக்களின் கவனத்தை பெருவாரியாக அவர்கள் பக்கம் திருப்பின.

இதில் குறிப்பாக மின்சாரம் குறித்த வாக்குறுதியை மக்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பினர். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப் பட்டிருந்த மின் இணைப்புகளை தன் தொண்டர்கள் மற்றும் பத்திரிகை புகைபடக்காரர்கள் சகிதம் சென்ற கேஜ்ரிவால் அவற்றை மீண்டும் இணைப்பது போல் புகைப்படம் எடுத்து அச்சு மற்றும் மின் ஊடகங்களில் புழுதியைக் கிளப்பியிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஆதரவு கோரல்களும் அக்கப்போர்களும் முடிந்து பதவிப் பிரமாணம் எடுத்ததும் கேஜ்ரிவால் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
”ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து மின் கட்டணங்கள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். 400 யூனிட்டுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். அதற்கு மேல் பயன்படுத்துவோர் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்” என்றும் “மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களின் 10 மாத நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படும்” என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைப் படித்து கொண்டாட்டத்தில் திளைத்த தில்லி வாழ் பெருங்குடி மக்கள், தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்ட போது இதன் முதல் வாக்கியம் மட்டுமே அழுத்தம் கொடுத்து சொல்லப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது என்பதை மறந்தே போனார்கள்.
அது ஒரு பக்கம் இருக்க, தற்போது அறிவிப்பின் சூடு குறைவதற்கு முன்பாகவே ”நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யும் முடிவு பரிசீலனையில் தான் இருக்கிறது” என்று சுதியைக் குறைத்துக் கொண்டுள்ளார், கேஜ்ரிவால். மேலும் மின் கட்டணக் குறைப்பு தொடர்பான அவரது அறிவிப்பின் முந்தைய பகுதியின் சாத்தியப்பாடுகள் குறித்தும் வேறு விதமான செய்திகள் வரத் துவங்கியுள்ளன. அதற்கு முன் சில அடிப்படை விவரங்களைப் பார்த்து விடுவோம்.

2000–01 ஆண்டில் 1,259 யூனிட்டுகளாக இருந்த தில்லியின் தனிநபர் மின் நுகர்வு 2007 – 08 ஆண்டில் 1,615 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. தில்லியின் புறநகர்ப் பகுதியில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 5.30 உறுப்பினர்களும் மாநகரப் பகுதியில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 4.51 உறுப்பினர்களும் உள்ளனர். (புள்ளி விவரங்களுக்கான இணைப்பு கட்டுரையின் இறுதியில்).
ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், 2008-ம் ஆண்டுக் கணக்குப் படியே சராசரியாக ஒரு குடும்பத்திற்கான மாத மின் நுகர்வு 538 யூனிட்டுகள். இந்திய மாநிலங்களிலேயே தில்லியில் தான் மின் நுகர்வு அதிகம். இந்தக் கணக்கீடும் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய நுகர்வு அளவை அடிப்படையாக கொண்டது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வோம். மின்னணு சாதனங்களின் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நுகர்வு நிச்சயமாக இதை விட அதிகமாகவே இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
மின் கட்டண அடுக்குகளுக்குள் வரும் சராசரி இணைப்புகளின் விவரங்கள் கீழே
Slabs | % of households |
0-200 Units |
40% |
201-400 units |
27% |
Above 400 units |
33% |
குறிப்பு : இது 2005 – 2006 காலகட்டத்திற்கான புள்ளிவிவரம்
அதாவது, சுமார் 67 சதவீத வீடுகளுக்கான மின் கட்டணத்தில் 50 சதவீத அளவுக்கு குறைக்கப் படவுள்ளது.
“மின்கட்டணம் அதிகரித்திருப்பதற்கு ஊழல், மாஃபியாக்கள், நிர்வாகத் திறமையின்மை தான் காரணம்” என்றும் “இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தைக் குறைக்கப் போவதாகவும்” அறிவித்துள்ளது ஆம் ஆத்மி. “இதை எவ்வாறு சாதிக்கப் போகிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “மின் வினியோக நிறுவனங்களை மத்திய கணக்குத் தணிக்கை அலுவலரைக் கொண்டு தணிக்கை செய்யப் போகிறோம்” என்றும், “அவர்களின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து ‘ஊழலை’ கண்டு பிடித்து சரி செய்யப் போகிறோம்” என்றும் “அதன் மூலம் மின் கட்டணங்களை இதற்குக் கீழும் கூட குறைத்து விட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த வியாக்கியானங்களைச் சொல்வதற்கு முன்பாகவே மின் விநியோக நிறுவனங்கள் தங்கள் அதிர்ச்சி வைத்தியத்தை துவங்கி விட்டன.

தில்லியின் பல்வேறு பகுதிகளில் – குறிப்பாக மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடுமையான மின்வெட்டு டிசம்பர் இறுதியிலிருந்து துவங்கியிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் சுமார் 8 மணி நேரம் வரை மின் வெட்டு நிலவி வருகிறது.
தில்லியின் மின் விநியோகம் அனில் அம்பானிக்குச் சொந்தமான பி.இ.சி.எஸ் யமுனா, பி.இ.சி.எஸ் ராஜ்தானி ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமும் டாடா பவர் நிறுனத்தின் மூலமும் நடைபெறுகிறது. 2002-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணங்கள் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், மின் உற்பத்தியாளரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகிக்கும் செலவு 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக இந்நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
தில்லி மின் துறைச் செயலாளர் புனித் கோயலுக்கு கடந்த 6-ம் தேதியன்று அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் ரிலையன்ஸ் நிறுவனம், “கட்டணக் குறைப்பு தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளால் தங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் தயங்குகின்றன” என்றும், “ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் தமது நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியே செயல்பட்டு வரும் நிலையில் இது போன்ற அறிவிப்புகள் தில்லியில் மின் வெட்டை அதிகரித்து விடும்” என்று நேரடியாகவும், “தில்லி அரசு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்று ஒன்று இருப்பதை மறந்து விடக்கூடாது” என்று மறைமுகமாகவும் மிரட்டியுள்ளது.
“மின்கட்டண உயர்வு ஏன் ஏற்பட்டது, மின் உற்பத்தி ஏன் குறைந்தது” என்பதற்கு கேஜ்ரிவால் சொல்லும் காரணங்கள் ஊழல், நிர்வாக திறமையின்மை மற்றும் மாஃபியாக்கள். இதில் மாஃபியாக்கள் யார், எங்கிருந்து நுழைந்தார்கள் என்பதை அவர் சொல்லாத நிலையில் நம்மாலும் ஊகிக்க முடியவில்லை. மற்ற இரண்டு காரணங்களும் அதற்காக வைக்கப்படும் தீர்வுகளும் பூமியின் மேல் ஆகாயத்தின் கீழ் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஆம் ஆத்மியினர் சொல்லும் சர்வரோக நிவாரணிகள் தான.
உண்மையில் மின் கட்டண உயர்வு எதனால் ஏற்படுகிறது? அதற்குக் காரணங்கள் என்ன?

மின் கட்டணங்களை உயர்த்துவதோ குறைப்பதோ தொடர்பான அதிகாரங்கள், மாநில அரசின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. மின் கட்டணங்கள் நிர்ணய அதிகாரம், உற்பத்தி உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை அரசாங்கத்தின் கரங்களிலிருந்து பறிக்கப்பட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குமுறை ஆணையம் என்பது உலக வங்கியின் உத்தரவுக்கேற்ப ஏற்படுத்தப்பட்டது. இதற்கான சட்டம் 1998-ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு விட்டது. மின்சாரம் மட்டுமின்றி அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகள் இது போல் துறைவாரியான ஒழுங்குமுறை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகள் என்பவற்றின் அடிப்படை மக்கள் நலன் என்பதாக அல்லாமல், பண ரீதியிலான மதிப்பின் அடிப்படையில் வர்த்தக ரீதியாக அமைய வேண்டும் என்பதும், இந்த சேவைத் துறைகள் படிப்படியாக தனியார்மயமாக்கப் பட வேண்டும் என்பதுமே இவை போன்ற ஆணையங்களின் நோக்கம்.
மின்சாரத் துறையைப் பொறுத்தவரை தனியார்மய நடவடிக்கைகளை மேலும் உந்தித்தள்ள 2003- பாஜக ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, மின் உற்பத்தி, கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல், நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியதோடு, மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம் உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தனர்.
மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியதோடு. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது

இவ்வாறு மின் கட்டணக் கொள்ளை என்பது சட்டபூர்வமானதாக மாற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தில்லி அரசை மிரட்டும் திமிரை பெற்றுள்ளது. “மத்திய கணக்குத் தணிக்கை அலுவலத்தை வைத்து மின் வினியோக நிறுவனங்களை (Discoms) ஆய்வு செய்யும் நடவடிக்கையும் அதன் அடிப்படையில் அவர்களின் கொள்ளையை நிறுத்த முடியும் என்கிற கேஜ்ரிவாலின் வாக்குறுதியுமே நடைமுறையில் சாத்தியமற்றது” என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்த முதலாளித்துவ வல்லுனர்கள்.
ஏனெனில், மின் வினியோக நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்பதாலும், அவற்றுக்கும் அரசுக்கும் லாப பங்கீடு ஒப்பந்தங்கள் ஏதுமில்லை என்பதாலும், அவைகளின் நிர்வாக விஷயங்களில் அரசு தலையீடு இருக்க கூடாது என்று ஒப்பந்தம் இருக்கும் நிலையிலும், இது போன்ற நிறுவனங்களில் கணக்குத் தணிக்கை அலுவலகம் செய்யும் ஆய்வு சட்டரீதியாகவே நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை கொண்டிருக்க முடியாது என்கிறார்கள். மத்திய கணக்குத் தணிக்கை அலுவலர் கோரும் ஆவணங்களை தனியார் மின் விநியோக நிறுவனங்கள் ஆய்வுக்காக கொடுக்க வேண்டும் என்று சட்டரீதியான எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்களாக மனமுவந்து எந்த ஆவணத்தைக் கொடுக்கிறார்களோ அதை மட்டுமே வைத்து ஆய்வு செய்ய முடியும் எனும் நிலையில் இந்த் ஆய்வு என்பதே கேலிக்கூத்தாகிறது; எனில், இதனடிப்படையில் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள கட்டனக் குறைப்பின் லட்சணம் எவ்வாறு இருக்கும்?
மொத்தத்தில் கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு அரசே மானியங்களைக் கொடுப்பது என்பது தான். அதாவது, மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதாகும். ஏற்கனவே 1,200 கோடி ரூபாய்கள் பற்றாக்குறையில் இருக்கும் தில்லி அரசு, இந்த செலவுகளை சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் இன்றி எதிர்கொள்ளவியலாது. ஆக, மக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்துவதற்கு பதில் மறைமுகமாக செலுத்த வைப்பது தான் இந்த மின் கட்டணக் குறைப்பு நடவடிக்கையின் உண்மையான பொருள்.
தில்லி மின்வாரியத்தை (Delhi Vidyut Board) லாப வெறிகொண்ட தனியார்களிடம் ஒப்படைக்கும் வேலை 2002 மார்ச் 31-ம் தேதி நடந்தேறியது. அதே ஆண்டு ஜூன் மாதம், தில்லி மின்வாரியம் ஆறு சிறு நிறுவனங்களாக உடைக்கப்பட்டது. அதன் பங்குகளும் 18,000 ஊழியர்களும், மின் உற்பத்தி மற்றும் விநியோக கட்டுமானங்களும், அலுவலக கட்டிடங்கள் மற்றும் அவற்றிலிருந்து உபகரணங்கள் முதலாக அப்படியே மொத்தமாக கூறுகட்டி தனியார் நிறுவனங்களிடம் சல்லிசான விலைக்கு ஒப்படைக்கப்பட்டன. தில்லியின் மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கான உரிமத்தை ஏலத்தில் எடுத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஊழியர்கள், கட்டிடங்கள், பல ஆண்டுகளாக அரசால் போடப்பட்ட கம்பி வழித் தடங்கள், ட்ரான்ஸ்பார்ம்கள், இதர உட்கட்டுமான வசதிகள் ஆகிவையோடு லாபம் சம்பாதிக்கும் உரிமையையும் சேர்த்து 291 கோடி ரூபாய்க்கு வாங்கியது. வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்கான உரிமையை டாடா நிறுவனம் 187 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த ஏற்பாடுகளின் படி, மின் உற்பத்தி நிறுவனங்கள், கம்பி வழி கடத்தும் நிறுவனத்திற்கு (Transco) உற்பத்திச் செலவோடு லாபத்தையும் சேர்த்தே விற்க வேண்டும். கம்பி வழி கடத்தும் நிறுவனம் தனது கொள்முதல் விலையோடு லாபத்தையும் சேர்த்து விநியோக நிறுவனத்திடம் (Discom) விற்க வேண்டும். விநியோக நிறுவனங்கள் தமது கொள்முதல் விலையோடு லாபத்தையும் சேர்த்து நுகர்வோருக்கு விற்க வேண்டும். மின்சாரம் உற்பத்தியாகி நுகர்வோரை வந்தடையும் இடைவெளியில் இவ்வாறு மூன்று புதிய தனியார் கார்ப்பரேட் இடைத்தரகர்களை புகுத்துவது தான் தனியார்மய கொள்கையின் அடிப்படையில் முந்தைய ஷீலா தீட்சித் அரசு போட்ட அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். மின் கொள்முதல் விலை 2002 காலகட்டத்திலிருந்து இன்று வரை 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக விநியோக நிறுவனங்கள் நீலிக்கண்ணீரின் பின் உள்ள உண்மைகள் இவை.
மேலும், மின்சார உற்பத்தியிலிருந்து மத்திய அரசு மெல்ல மெல்ல விலகி அதையும் தனியாரிடமே ஒப்படைத்து வருகிறது. மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (1990 – 91) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (2001 – 02) வீழ்ச்சி அடைந்தது. அரசு மின்வாரியங்கள், தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை அநியாய விலைக்கு வாங்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டன. இன்னொரு புறம் நிலக்கரி வயல்களைப் பெருவாரியாக தனியார்களுக்கு அள்ளிக் கொடுத்ததன் மூலம், ஏற்கனவே இயங்கி வந்த அரசு மின் உற்பத்தி நிறுவனங்களும் கச்சாப் பொருட்கள் வாங்க தனியார் கார்ப்பரேட்டுகளிடம் அதிக விலை கொடுக்க வேண்டி வந்தது. இவையனைத்தும் சேர்ந்து இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின. இதையே காரணம் காட்டி மின் வாரியங்களை தனியாருக்கு விற்கும் வேலையைத் துரிதமாக்கினர்.
கட்டணக் குறைப்பு பற்றி வாயால் வடை சுடும் கேஜ்ரிவால், அதன் உண்மையான காரணத்தைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில், விலை உயர்வுக்கு நேரடிக் காரணமான தனியார்மய நடவடிக்கைகளை தூக்கியெறிய வேண்டும். அதற்கான திட்டமோ உளப்பூர்வமான விருப்பமோ இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களின் மூலம் அந்தச் சுமையை மக்களின் தலைமேலேயே சுமத்துகிறார். தனியார் மயத்தை எதிர்க்காமல் மின் கட்டணக் குறைப்பு என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை. அவ்வகையில் ஆம் ஆத்மி கட்சியும் தனியார் மயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கின்றது.
இதை மறைப்பதற்காகத்தான் அவர்கள் ஊழல், ஊழல் எதிர்ப்பு, கணக்கு ஆய்வு என்று அடித்து விடுகிறார்கள். ஊழலே கூட தனியார் மயத்தின் விளைவாக முதலாளிகள் வளர்த்து விட்ட நோய் என்பதை இவர்கள் ஏற்பதில்லை, பேசுவதில்லை. ஆம் ஆத்மி வாயால் வடை சுட்ட கதையை இன்னும் நீங்கள் நம்பப் போகிறீர்களா?
– தமிழரசன்.
மேலும் படிக்க
- New Delhi Kejriwal orders 50% cut in power tariffs for lower slabs
- Arvind Kejriwal’s New Year gift to Delhiites – power rates cut by 50% in lower slabs
- Understanding Arvind Kejriwal
- Report on implementing time-of-day tariffs for residential consumers in Delhi
- AAP’s power populism is bad news for consumers
- Why cutting Delhi electricity tariff by 50% is impossible
- Shocking truths about power tariffs
- Why Aam Adami Party’s Subsidy Model is Bad For Economy?
- Kejriwal must remember his mandate is for change, not a repeat of UPA’s subsidy raj
- A challenging phase
- Dark days ahead? Delhi discoms warn of payment crisis if rates aren’t hiked