privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் !

கோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் !

-

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மளிகைக் கடைக்காரர் விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து தனது பஜாஜ் எம்-80 யில் கோயம்பேட்டுக்குப் போய் விடுவார். ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி வரும் போது வண்டியின் இருபக்கமும் காய்கறிகள், கீரை வகைகள், அந்தந்த பருவத்தில் வரும் பழங்கள், பண்டிகை நாட்களில் பூக்கள் என்று நிறைமாத கர்ப்பிணி போன்ற வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து சேருவார்.

கோயம்பேடு மார்க்கெட் என்ற பெரும் நீர்த்தேக்கம்.
கோயம்பேடு மார்க்கெட் என்ற பெரும் நீர்த்தேக்கம்.

அடுத்த 1 மணி நேரத்தில் அந்தப் பகுதியில் இருக்கும் பலர் காய் வாங்க வருவார்கள். பசுமையான காய்கறிகள் நியாயமான விலைக்கு கிடைப்பதாக பலருக்கும் அனுபவம். அந்த நேரத்தில் கடையே கலகலப்பாக இருக்கும்.

இத்தகைய காட்சிகள் சென்னை முழுவதிலும் ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகளில், அதிகாலையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சென்னை மாநகரத்திலும் புற நகர்ப் பகுதிகளிலும் வசிக்கும் கிட்டத்தட்ட 1 கோடி மக்களின் காய்கறி தேவைகள் தினமும் இப்படி நிறைவு அடைகின்றன.

பஜாஜ் எம்-80 களில் பறக்கும் மளிகைக் கடை அண்ணாச்சிகளோடு, காய்கறிகளோடு ஆட்களும் உட்கார்ந்து வரும் லோட் ஆட்டோக்கள், 407 வேன்கள், குடும்பத்துக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குத் தேவையான காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு வரும் நடுத்தர வர்க்க மக்கள் என்று ஆயிரக்கணக்கான சிறு கிளைகளுக்குள் காய்கறிகளை பாய்ச்சுகிறது கோயம்பேடு மார்க்கெட் என்ற பெரும் நீர்த்தேக்கம்.

அந்த சந்தை எப்படி இயங்குகிறது. இத்தனை ஆயிரம் டன் காய்களும், பழங்களும் எப்படி வந்து சேருகின்றன, தரம் பிரிக்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன இவற்றை அறிவதற்கு பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்பு  ஒரு நள்ளிரவு கோயம்பேடு போய் சேர்ந்தோம். 12.30-க்கு தொடங்கி காலை சுமார் 5.30 வரை சந்தைக்குள் நடந்து, பலருடன் பேசி இந்த சிறுநகரம் இயங்கும் விதத்தை புரிந்து கொள்ள முயற்சித்தோம்.

திருட்டு போலீஸ்
திருட்டு போலீஸ்

ஆம், இது ஒரு சிறுநகரம்தான். காலை 3 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் இந்த மார்க்கெட் கடை வீதிகளுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் வருகையை எதிர்பார்த்து 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது கோயம்பேடு மார்க்கெட்.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் வந்து போகும் இந்த இடத்த்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, சட்ட ஒழுங்கை பராமரிக்க போலீஸ்காரர்களும் அனுப்பப்படுகிறார்கள். ஆனால், அந்த வேலையை அவர்கள் செய்வதாக எங்கும் தென்படவில்லை. இருப்பினும், இந்த டூட்டிக்கு வருவதற்கு பலத்த போட்டியாம். பல லட்சம் லஞ்சம் கொடுத்து வருகிறார்கள் என்கிறார்கள். ஒரு காவலர் ஒவ்வொரு நாளும் ரூ 30,000 வரை லஞ்சமாக சம்பாதிக்கிறாராம். ஒரு டீக்கடைக்கு ரூ 200 என்று ஆரம்பித்து, சரக்கு இறக்கும் இடத்தில், கடைகளில், கூறு வைத்து விற்பவர்களிடம், வண்டிக்காரர்களிடம் என்று மாமூலாக வசூலித்து இந்த தொகையை சுருட்டுகிறார்கள்.

அதிகாலை 1 மணிக்கு கீரை இறக்கி கமிஷன் வியாபாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இடத்துக்கு இரண்டு பைக்குகள் வருகின்றன. வெள்ளை சட்டை, காக்கி பேன்டுடன் ஒரு போக்குவரத்துக் காவலர், காக்கி-காக்கியில் ஒரு சட்ட ஒழுங்கு காவலர். இருவரது பைக்கிலும் ஏற்கனவே பொங்கலுக்கான பச்சை மஞ்சள், கரும்புத் துண்டுகள், காய்கறிகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. கீரை பகுதிக்கு வந்து வண்டியை நிறுத்தியவர்கள், “ஆளுக்கு இரண்டு கட்டு கீரை கொடுங்கப்பா” என்று ‘செல்லமாக’  உத்தரவிட்டதும், கமிஷன் வியாபாரி இரண்டிரண்டு கட்டுகளை எடுத்து அவர்கள் பைகளில் சொருகுகிறார். “ரொம்ப தேங்க்ஸ்” என்று பண்புடன் சொல்லி விட்டு நகர்ந்து போகின்றன பைக்குகள்.

பொங்கலுக்கு மஞ்சள்
பொங்கலுக்கு மஞ்சள்

கீரைகள் இறங்கும் இடம் மார்க்கெட்டின் ஒரு கடைக்கோடி, இங்கிருந்து ஆரம்பித்து மேற்புறமாக நடக்க ஆரம்பிப்போம். முதலில் வருவது காய்கறி மார்க்கெட். லாரிகள் வரும் பாதையில் இன்னமும் நெருக்கடி ஆரம்பிக்கவில்லை. பொங்கல் சிறப்பாக மஞ்சள் டன் டன்னாக வந்து இறங்குகின்றது. 3 மணிக்கு மேல் லாரிகளின் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் சீக்கிரமாக வந்திருக்கிறார்கள். பெரும்பாலான கடைகளில் விளக்கு நிறுத்தப்பட்டு பல உருவங்கள் திண்ணைகளில் மூடிக் கொண்டு படுத்திருக்கின்றன. ஒரு சில கடைகளில் விளக்கு எரிகிறது.

இதைத் தாண்டி பழ மார்க்கெட்டுக்குள் நுழைந்தால் அங்கும் பொங்கல் சிறப்பாக செங்கரும்பு கட்டுகள் வந்து இறங்குகின்றன. அந்த நேரத்தில் கரும்பு வரவு குறைச்சலாம், ஒரு கரும்பு விலை கேட்ட கடை ஊழியர் ஒருவருக்கு ரூ 30-க்கு விற்றிருக்கிறார்கள். போகப் போக இன்னும் அதிகமாக வந்தால் விலை குறையலாம். இதைத் தவிர பழக்கடையும் இன்னும் விழித்திருக்கவில்லை. மேல் மார்பில் சட்டை இல்லாமல், கையில் மூட்டையை குத்தும் கொக்கியுடன் உருண்டு திரண்ட மார்பும்,  புஜங்களுமாக மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். சிலர் மூட்டைகளை தூக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர்.

பழ மார்க்கெட்டைக் கடந்து பூ மார்க்கெட்டுக்கு வருகிறோம். பூக்கள் இறங்கிக் கொண்டிருக்கின்றன. டீக்கடையில் டீக்கு சொல்லும் இருவரை அணுகி, பேச்சு கொடுக்கிறோம். தெலுங்கில் விபரம் சொல்கிறார்கள். கடப்பாவிலிருந்து வருகிறார்களாம். பூ விவசாயிகளாம். அந்தப் பகுதியில் 10-15 விவசாயிகள் சேர்ந்து தமது விளைச்சலை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு வருகிறார்கள். 300 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து வருகிறார்களாம். சாந்தினிப் பூ, பேப்பர் வெள்ளை, சாமந்திப் பூ மூட்டை மூட்டையாக இறங்குகின்றன. இங்கு பூக்களை கொடுத்து விட்டு புறப்பட்டு ஊருக்குத் திரும்புவார்களாம். அடுத்த லோடை எடுத்துக் கொண்டு திரும்ப வர வேண்டும்.

இறக்கப்படும் கரும்பு
இறக்கப்படும் கரும்பு

லாரிகளிலிருந்து இறக்குவதற்கு ஒரு டீம் மும்முரமாக இருக்கிறது. பூக்களை விலைக்கு வாங்கும் கமிஷன் முதலாளியின் கடை ஊழியர்களுக்கு இப்போதே பொழுது விடிந்து விட்டது. பூக்கள் கொண்டு வரப்படுவதை மேற்பார்வை பார்த்து கடைக்குள் வைத்து விற்பனை ஆரம்பிக்க வேண்டும்.

இந்தப் பூக்கள் கார்த்திகை முதல் பங்குனி வரை 5 மாதங்கள் வரைதான் வருகின்றன. அந்த சமயங்களில் வாரத்துக்கு ஒரு முறை பூப்பறித்து வந்து விடுகிறார்கள். சேலத்துக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஜெயதேவ் என்ற விவசாயியும் வந்திருக்கிறார். அவர் 4 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரில் நெல் போட்டு அதை வருடம் முழுவதும் குடும்பத்துக்கு சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு மீதி நிலத்தில் நிலக்கடலை, பூ பயிர் போடுகிறார். பூக்களை விற்று வரும் காசுதான் மற்ற செலவுகளுக்கு பயன்படுகிறது.

வானம் பார்த்த பூமிதான், போர்வெல் போட்டு தண்ணீர் இறைத்து பாசனம் செய்கிறார். உரம் போட்டு, பூச்சிக் கொல்லி அடித்து, கொத்தி, செடிகளை பராமரித்தால், ஆறு மாதம் பூக்கின்றன. வாரா வாரம் பூப்பறிக்க ஆட்கள் வைத்து (அரை நாள் கூலியென்றால் ரூ 130, முழு நாள் என்றால் ரூ 220, சாப்பாடு போட வேண்டும்) பூக்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வருகிறார்.

இங்கு வந்து போட்டு விட்டால், கமிஷன் கடைக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டால் விற்று 15% கமிஷன் எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். விலை நிர்ணயிப்பது சந்தையின் போக்கில்தான் நடக்கிறது. முந்தைய நாள் அனுபவத்தை வைத்து விலை வைத்து விற்றுப் பார்த்து விற்பனையைப் பொறுத்து குறைத்தோ, கூட்டியோ விற்கிறார்கள். ஒரு நாளைக்கு வந்து சேரும் பூவின் அளவும், தேவையும் விலையை தீர்மானிக்கின்றன.

பெங்களூர், ஒசூரிலிருந்து ரோஜாப் பூக்கள் வருகின்றன.

முதலுக்கேற்ற லாபம்
முதலுக்கேற்ற லாபம் வியாபாரிக்கு.

3 மணிக்குப் பிறகு சந்தை விழித்துக் கொண்டு விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்தைகளின் குறுகலான ‘தெருக்களில்’ நடமாடுகின்றனர். எதிரும் புதிருமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் “விலகு விலகு” என்று கத்திக் கொண்டே சுமை தூக்கும் தொழிலாளிகளின்  வளைந்து நெளிந்த ஓட்டம் நடக்கிறது. 110 கிலோ அல்லது 120 கிலோ மூட்டையை கொக்கியால் குத்தி சரித்து குனிந்து முதுகில் இருத்திக் கொள்கின்றனர். மறுமுனையை இன்னொரு கையால் பற்றிக் கொண்டு ஓட்டமாக சுமையை தூக்கிக் கொண்டு நகர்கின்றனர். மனித உடலில் சிவப்பணு ஆக்சிஜனை சுமந்து கொண்டு போய் உறுப்புகளை இயங்க வைப்பது போல, வந்து இறங்கும் காய்கறிகளை இறக்கி வைப்பது, அங்கிருந்து கடைகளுக்கு சுமந்து வருவது, வாங்கப்பட்ட காய்கறிகளை வண்டியில் கொண்டு ஏற்றுவது என்று மனித எறும்புகளாக சுற்றிச் சுழல்கின்றனர். வண்டியிலிருந்து இறக்குபவர்களுக்கு மூட்டைக்கு ரூ 1, சுமந்து கடைக்கு கொண்டு வருபவர்களுக்கு மூட்டைக்கு ரூ 20 என்று கூலி கொடுக்கப்படுகிறது.

“எத்தனை லட்சம் முதல் போடுறோமோ, அவ்வளவு வியாபாரம் செய்யலாம். கமிஷனுக்கும் வாங்குவோம், நேராகவும் வாங்கியும் விற்போம். எங்க கடைச் சரக்கை சுமந்து வருவதற்குன்னு சுமை தூக்கும் தொழிலாளர்களை வச்சிருக்கோம். அவங்களுக்கான கூலியை சரக்கு கொண்டு வருபவர்களிடமே அவங்க வாங்கிப்பாங்க. காலையில 3 மணிக்கு கடை திறந்தா மதியம் 4 மணி வரை விற்பனை முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவோம.. கடனுக்கு கொடுத்தவங்ககிட்ட வசூலிப்பதற்கு சாயங்காலம் அலைய வேண்டியிருக்கும்”. இது மார்க்கெட்டில் கடை வாங்கி கடந்த 15 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் ஒரு கமிஷன் வியாபாரியின் வாழ்க்கை.

அவரது தந்தை 55 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறாராம். மகன், 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயலில் உள்ள எஞ்சினியரிங் காலேஜூக்கு அட்மிஷனுக்கு போயிருந்தாராம். சில லட்சங்கள் கட்டணமாக கேட்டிருக்கிறார்கள், அவ்வளவு பணத்தைக் கொட்டி அதைப் படிப்பானேன் என்று வியாபாரத்தில் இறங்கி விட்டிருக்கிறார். “என்ன, ஒரு பண்டிகை, விசேஷம்னு வீட்டில இருக்க முடியாது. விசேஷ நாட்கள்ளதான் வியாபாரம் சுறுசுறுப்பா இருக்கும். அத குடும்பத்தில எல்லாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. நம்ம வியாபாரம் இப்படித்தான் ஓடுது” என்கிறார்.

விற்ற பிறகுதான் வீட்டுக்கு
விற்ற பிறகுதான் வீட்டுக்கு

49 வயதான செல்வம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள வண்டலச்சேரியிலிருந்து பச்சை மஞ்சள் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். ஆறு மாதப் பயிராம். பொங்கலுக்கு மட்டும்தான் விற்குமாம். அரை ஏக்கரில் விளைந்தது, உரம், உழைப்பு, போக்குவரத்து, சந்தைக் கட்டணம், சாலைக் கட்டணம் எல்லாம் சேர்த்து இது வரை ஆறு மாதங்களில் அவரது உழைப்பை சேர்க்காமல் ரூ 80,000 செலவாகியிருக்கிறது. விற்பனையில் ரூ 1 லட்சம் வரை சம்பாதித்தால் செய்த வேலைக்கு கூலி கிடைத்ததாக இருக்கும். அடுத்த 3 நாட்களும் விற்று தீர்ப்பது வரை இங்கேயே தங்கி, மஞ்சளுக்கு பக்கத்திலேயே படுத்து உறங்க வேண்டியதுதான்.

பேசிக் கொண்டிருக்கும் போதே கடந்து செல்லும் ஒரு வியாபாரி, “என்ன விலை?” என்று கேட்கிறார், “கிலோ ரூ 100-ன்னு கொடுக்கிறேன்” என்று பதில் சொல்ல, கடந்து போய் விடுகிறார். அடுத்து வருபவரும் விலை கேட்டு நகர்ந்து விடுகிறார். மூன்றாவதாக வருபவரிடம் ரூ 80 என்று சொல்லிப் பார்க்கிறார், அவரும் வாங்காமல் போகிறார். “இப்படியே கூட்டிக் குறைத்து விற்று முடித்து விட்டு போக வேண்டியதுதான்” என்று சிரிக்கிறார்.

“3-ம் கிளாஸ் வரைதான் படிச்சேன். அன்னையிலேர்ந்து 8 வயசு முதல் உழைக்கிறேன். விவசாயத்தில எந்த நேரத்தில என்ன ஒரம், போடணும், எந்தப் பயிர் எப்படி வளரும்னு எல்லா சுளுவும் தெரியும். விவசாயம் செஞ்சுதான் 3 பசங்களை படிக்க வெச்சேன். நானும் ஒரு ஆள் வேலை செய்வேன். ஒரு நாளைக்கு ரூ 500 சம்பளம் கொடுக்க வேண்டிய அளவு வேலை செய்வேன்.”

உழைப்பின் கொடுக்கலும் வாங்கலும்
உழைப்பின் கொடுக்கலும் வாங்கலும்

“வீட்டுக்காரம்மா காலையில 10 மணிக்கு மேலத்தான் ஏதாவது உதவி செய்ய வருவாங்க. நாம ஒரு மண்வெட்டிய கையில பிடிச்சிட்டு மண்ண வெட்டிட்டு போயிர்றோம், அவங்க பாவம் துணி துவைக்கணும், பாத்திரம் கழுவணும், வீடு துடைக்கணும், சமைக்கணும் அதனால அவங்களை தொந்தரவு செய்யறதில்லை” என்று மனைவியின் வீட்டு உழைப்பை அங்கீகரிக்கும் சக உழைப்பாளியாக பேசுகிறார்.

சந்தை விலை நிர்ணயிக்கும் முறையை, “பேரு மேரின்னு வச்சுக்கோங்களேன்” என்று சொன்ன நடுத்தர வயது பெண்ணின் வியாபாரத்திலும் பார்க்கிறோம். அவர் ஊர் பெரியபாளையத்துக்கு அருகில். மாலை 6 மணி பேருந்தைப் பிடித்து போய் வில்வ இலை பறித்துக் கொண்டு 8 மணிக்குத் பெரியபாளையம் வரலாம். அதை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு இரவு 1 மணிக்கு வேன் ஏறினால் அதிகாலை 3 மணிக்கு கோயம்பேடு. கோயம்பேடு சந்தையின் ஒரு விளிம்பில் உட்கார்ந்து கொண்டு வில்வ இலைகளை மாலைகளாக தொடுத்துக் கொண்டே விற்பனை செய்கிறார். பிரதோஷத்துக்கு சிவனுக்கு சார்த்த அதிகமாக விற்குமாம். மற்றபடி நகரெங்கும் உள்ள கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை நடக்க என்று தினமும் வியாபாரம் ஆகுமாம்.

காலை 8 மணி வரை விற்பனை பார்த்து விட்டு புறப்பட்டு விடுகிறார். எஞ்சியதை கமிஷன் கடையில் கொடுத்து விட்டு போகிறார். 10 மணிக்கு ஊருக்குப் போனால், வீட்டு வேலைகளை பார்த்து விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டு மாலையில் மறுபடியும் புறப்படலாம். சில பத்து ரூபாய்களை கொடுத்து வாங்கி ‘வில்வ இலையினால் சிவபெருமானை குளிர்விக்கும்’ உரிமையை சம்பாதித்து விடும் பக்திமான்களுக்கு இந்த வில்வ இலைகளின் பின் இருக்கும் மேரிக்களின் உழைப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் சிவனுக்கு வில்வ இலையை அனுப்புவது கர்த்தரின் ஆசிபெற்ற மேரிதான்.

அவரது கணவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவர் போய் இலை கொண்டு வந்து விட இவர் கோயம்பேடு வருவாராம். அப்போது இரண்டு பேருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ 500 வரை கிடைக்குமாம். இப்போது அவர் குடியால் உடல் பாழாகி படுக்கையாகி விட, இவர் 8 மணிக்குப் போய் இலை பறித்து வருபவர்களிடம் விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு ரூ 100-ரூ 150 கிடைத்தால் பெரிய விஷயம். நல்ல விற்பனை ஆனால் ரூ 200 வரை கிடக்கலாம். ஒரு மகள், மகன், இரண்டு பேரும் அத்தை வீட்டில் தங்கி பள்ளிக்கு போய் வருகிறார்கள்.

சிறு இளைப்பாறல்
காய்களுக்கு நடுவில் இளைப்பாறல்.

பேசும் போதே, ஒரு அம்மா  விலை விசாரிக்கிறார், “அம்பது ரூபா” என்று சொன்னதும், “நாப்பதுக்கு தர்றியா” என்று பேரம் பேசுகிறார். “அம்பதுக்குத்தான் விக்கிறோம். இலை வாங்கினது, கட்டுன கூலி எல்லாம் சேர்த்தா அதுக்கு கீழ கட்டுப்படியாகாது” என்கிறார் மேரி. “அப்பன்னா வேண்டாம்” என்று நகர்கிறார். “போணி பண்ணும்மா, வாங்கிக்கோ” என்று வற்புறுத்துகிறார். “ஆனா அம்பதுக்கு கொறையாது”. வாங்காமலேயே போய் விடுகிறார் வாடிக்கையாளர். முகத்தில் பொங்கிய ஆர்வம் வடிந்து ஏமாற்றம் படர கைகள் கட்டும் வேலையை தொடர்கின்றன.

குழந்தைகளை படிக்க வைக்கும் இன்னொரு தாய் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 27 ஆண்டுகளாக காய்கறி மார்கெட்டில் வியாபாரம் செய்கிறார். பக்கத்தில்தான் வசிக்கிறார். காய்கறிகளை ஏற்றி இறக்கும் போது, மூட்டை பிரித்து கொட்டும் போது சிதறும், காய்களை கோணியில் திரட்டிக் கொள்கிறார். கடைக்காரருக்கு குறைந்த விலை போட்டு ஒரு தொகை கொடுத்து விட வேண்டுமாம். அவற்றை மார்க்கெட்டுக்கு வெளியில் கொண்டு வந்து கொட்டி தரம் பிரித்து கூறுகளாக வைத்து விற்கிறார். காலையில் 1.30 மணிக்கு அலார்ம் வைத்து எழுந்து 2.30, 3.00 மணிக்கு வந்து விடுகிறார். கிடைத்த காய்கறிகளை எல்லாம் விற்று விட்டு வீட்டுக்குப் போக சில நாட்கள் இரவு 8 கூட ஆகி விடலாம். சில நாட்கள் ஓரிரு மணி நேரம் சீக்கிரம் போய் விடலாம்.

ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 200 கிடைக்கும். நல்ல விற்பனை ஆனால், கூட ரூ 100 கிடைக்கலாம். கணவர் மேஸ்திரியாக இருக்கிறார். மூத்த பையன் +2 வரைதான் படித்தான், அப்புறம் சிங்கப்பூருக்கு வேலை செய்ய போய் விட்டான். இரண்டாவது பையன் மரைன் படித்து கப்பல் வேலைக்குப் போகிறான். பெண் +2 படிக்கிறாள். மூன்றாவது பையனுக்கு எஞ்சினியரிங் ஃபீஸ் வருஷத்துக்கு ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய் கட்ட வேண்டுமாம். மூன்று தவணையாக கட்டுவதாக சொல்லியிருக்கிறாராம்.

உழைத்துத் தேய்ந்த வாழ்க்கைகள்
உழைத்துத் தேய்ந்த வாழ்க்கைகள்

முதல் தவணை கட்ட ரூ 30,000 கடன் வாங்கியிருக்கிறார். ரூ 3,000 கழித்து விட்டு கொடுத்தார்களாம், 3 மாதங்களில் முழுத் தொகையையும் கட்டி விட வேண்டும். “எங்களுக்கு வேறு யாருப்பா கடன் தருவாங்க” என்கிறார். இது போல ஆண்டுக்கு மூன்று தடவை கடன் வாங்கி மகனை படிக்க வைக்கப் போகிறார். இதுதான் ஏழைகள் படித்து முன்னேறுவதற்கு காட்டப்படும் வழி.

தனது வாழ்க்கைக்காகவும், குழந்தைகளின் வளர்ப்புக்காகவும் 27 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு சராசரியாக 15 மணி நேரம் உழைக்கிறார். அது போக வீட்டு வேலை, சமையல், குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் இதையெல்லாம் ஒரு நாளுக்குள் எப்படி அடக்குகிறார்? தலை சுற்றுகிறது. பொங்கலுக்கு பையன்கள் வந்திருக்காங்களாம். “நமக்கு எங்க பண்டிகையும், காட்சியும்” என்று சலிப்பாக சொல்கிறார். “தினமும் வேலை பார்த்தாத்தான் சோறு”.

“என் பேரைப் போட்டு எழுதிடாதீங்கப்பா, பிச்சைக்காரி போல வேலை செய்றான்னு ஊர் சனங்க நினைச்சிட போகுது.” என்று பெருமைப்படத்தக்க அவரது உழைப்பை அவமானப்படுத்தும் சமூகத்தை நினைத்து கூசுகிறார். “கஷ்டமாத்தான் இருக்கு, ஒவ்வொரு நாளும் 1.30 மணிக்கு அலார்ம் அடிச்சா எழுந்திருக்க வேண்டாமேன்னுதான் தோணும். ஆனா வேற வழி, வேலை செஞ்சாதான பொழைக்க முடியும்” என்கிறார். சனி, ஞாயிறு கிடையாது, ஆண்டு விடுமுறை கிடையாது, பண்டிகை, திருநாள் கிடையாது. 27 ஆண்டுகளாக நள்ளிரவு எழுந்து உழைத்து ஓடாகிப் போன ஒரு வாழ்க்கை.

பூ விற்கும் வாழ்க்கைக்கும் நறுமணம் இல்லை
பூ விற்கும் வாழ்க்கைக்கும் நறுமணம் இல்லை

இதற்குள் சந்தையின் உச்சசெயல்பாட்டு நேரம் வந்து விட்டிருக்கிறது. இன்னும் விடிந்திருக்கவில்லை. ஒவ்வொரு கடைத்தெருவிலும் உழைக்கும் மக்கள் கூட்டம் நெரிகிறது. கைகளில் பைகளோடு பூ, காய், விற்பனைக்கு பழம் வாங்க வந்திருக்கும் வயதான, நடுத்தர வயது பெண்கள், முதுகில் மூட்டைகளோடு சுமை தூக்கும் தொழிலாளிகள், கடை முகப்பில் அமர்ந்து கொண்டு எடை போட்டு வாடிக்கையாளர்களின் பைகளில் கொட்டும் கமிஷன் வியாபாரிகள் என்று பரபரக்க ஆரம்பித்திருக்கிறது. யாரையும் நிறுத்தி பேச்சுக் கொடுக்கக் கூட தோன்ற முடியாத பரபரப்பு. ஒரு நிமிடம் கூட வீணாக்க முடியாத ஓட்டம்.

பூ வாங்கிக் கொண்டு போகும் வியாபாரிகள் யாரிடமாவது பேசலாமா என்று தேடினால் ஒரு முற்றத்தின் மையத்தில் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். 60 வயது ஆகிறதாம். 25 வருடங்களுக்கு முன்பு டிவிஎஸ்சில் வேலை செய்து கொண்டிருந்தாராம். ஒரு தொழில் தகராறில் இவரை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். அன்று முதல் உழைப்புதான். காலை 3 மணிக்கு மதுரவாயலில் இருந்து புறப்பட்டு வந்து பூ வாங்கி கட்டி, பையில் எடுத்துக் கொண்டு அரும்பாக்கம் பகுதியில் விற்கிறார். விற்றுத் தீருவது வரை சுற்ற வேண்டும். காலை 10, 11 மணி வரை ஆகி விடலாம். ஒரே பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட்டார். பெண்ணை சார்ந்து இருக்க முடியாது. மனைவிக்கும் தனக்கும் வாழத் தேவையான பொருட்களுக்காக உழைக்கிறார். சலிப்பாக பேசுகிறார். “என் கூட வேலை பார்த்தவன் எல்லாம் நிறைய காசு சம்பாதிச்சு ரிட்டயர் ஆகிட்டான். சொந்த வீடு வாங்கிட்டானுங்க, நான்தான் இப்படி ஆகிட்டேன்” என்கிறார்.

மலிவு விலை மட்டும்தானா கோயம்பேடு
மலிவு விலை மட்டும்தானா கோயம்பேடு

அப்படி சலிப்பதற்கு நேரமில்லை அந்த இரண்டு பெண்களுக்கும். வாங்குவதை முடித்துக் கொண்டு தலையில் ஒரு மூட்டை, தோளில் ஒரு பை, கைகளில் இரண்டு பைகள் என்று விறுவிறு என்று நடக்கிறார்கள். “பேச எல்லாம் நேரமில்லப்பா, ரெண்டு நாள் முன்ன டிராஃபிக்ல மாட்டி போய்ச் சேர ஆறரை மணி தாண்டிருச்சி. வாக்கிங் வந்தவங்க எல்லாம் போய்ட்டாங்க, விக்காம நின்னுடுச்சு” என்கிறார்கள். அசோக் நகர் பகுதியிலிருந்து காலையில் 2 மணிக்கு புறப்பட்டு வந்து அருகம் புல், கீரை வகைகள் வாங்கிக் கொண்டு விரைகிறார்கள். 5.30 மணிக்கெல்லாம் கடை விரித்து காலையில் நடைப்பயிற்சி முடித்து விட்டு அருகம் புல் ஜூசும், வல்லாரைக் கீரை ஜூசும் குடிப்பவர்களின் உடல்நலனை பேணுவதற்காக இவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 100 – ரூ 200 வரை கிடைத்து விடுமாம். விற்காமல் தேங்கிப் போனால் நட்டம்தான். அடுத்த நாள் பாதிக்குப் பாதி கூட தேறாது.

இவ்வளவுக்கும் நடுவில் ஒரு கணவன், மனைவி, ஏழெட்டு வயது பையனுடன் ‘கோயம்பேட்டுக்கு காலையில போயிட்டா மலிவா காய்கறி வாங்கிட்டு போயிடலாம்’ என்று சுறுசுறுப்பாக வந்திருக்கிறார்கள். ‘எந்த கடையில் எந்த காய்கறி கிடைக்கும், எவ்வளவு குறைந்த விலைக்கு கிடைக்கும்’ என்று கணக்கு போட்டு இன்றைய ஷாப்பிங்கில், ‘பக்கத்து மளிகைக் கடையில் வாங்குவதை விட இத்தனை ரூபாய் சேவ் பண்ணி விட்டோம்’ என்று திருப்தி அடையும் சாமர்த்தியத்துடன் வந்திருக்கிறார்கள். நாம் பணம்  கொடுத்து வாங்கி விடுவதாலேயே இந்த காய்கறிகளுக்கு பின் இருக்கும் உழைப்பு நமக்கு சொந்தமாகி விடுவதாக நினைக்கிறோம். உண்மையில் ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை  இருக்கிறது.

“கோயம்பேட்டில கீரைய 5 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து இங்க 8 ரூபான்னு விக்கிறாங்க, என்னா லாபம் பாருங்க” என்று கணக்கு போடும் புத்திக்கு இந்த இரவு பகல் பாராத ஓட்டமும், ஏற்றும் கூலி, இறக்கும் கூலி, போக்குவரத்து செலவு, டீச்செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லாம் கண்ணில் படப்போவதில்லை.

லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகும் இந்த இடத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் இந்த சந்தையில் கழிப்பறை, குடிநீர் வசதி கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை. 60-70 மாநகராட்சி கட்டண கழிப்பறைகளின் குத்தகைதாரர் அவற்றை பராமரிக்க மாதச் சம்பளம் ரூ 1,200-க்கு பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார். ஒவ்வொரு கழிப்பறைக்கும் கட்டணம் மூலம் சில நூறு ரூபாய்கள் தினமும் கிடைக்கின்றதாம்.

“கக்கூஸ் போறதுக்கும், குளிக்கிறதுக்குமே ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவழிக்கிறேம்பா. நேரம் கிடைக்கும் போது இங்கேயே ஓரமா படுத்து தூங்கிக்கிறேன். இரண்டு மாசம், மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போய்ட்டு வர்றேன்” இதுதான் இங்கு தங்கி உழைக்கும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமை.

ஒன்று மட்டும் நிச்சயம். மென்பொருள், வங்கித் துறை, பங்குச் சந்தை, விளம்பர நிறுவனங்கள் எல்லாம் இல்லாமல் போய் விட்டாலும், இந்த விவசாயிகளும், உழைக்கும் மக்களும் தொடர்ந்து வாழ முடியும். இந்த விவசாயிகளும் உழைக்கும் மக்களும் இல்லாமல் வெள்ளை சட்டை போட்ட நடுத்தர வர்க்கமும் மேட்டுக் குடி வர்க்கமும்  ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம்.

சென்னை மக்களின் உணவு தேவைகளுக்காக கோயம்பேடு சந்தை தன்னை தாரை வார்த்திருக்கிறது. மற்றவருக்கு இருக்கும் ஓய்வு பொழுது போக்கு இதர வாழ்க்கையெல்லாம் இங்கு இல்லை. மிகக் குறைந்த கூலிக்கும், வருமானத்திற்கும் தயாராய் இங்கே ஒரு பெருங்கூட்டம் வேலை செய்கிறது. உழைப்பின் அழகையும், ஏழைகளின் துயரத்தையும் அறிய வேண்டுமென்றால் ஒரு முறை கோயம்பேடு சென்று ஓரிரவு தங்குங்கள்.

வினவு செய்தியாளர் குழு

  1. கர்த்தரின் ஆசி பெற்ற மேரி அனுப்பும் வில்வ இலையை சிவனுக்கு சாத்துவதா?அபச்சாரம்!அபச்சாரம்!!மிஸ்டர் ராம்கோபால் என்னப்பா பண்ணீன்டுருக்கே?

  2. HI, MD DID NOT COME NO PROBLEM, GM DID NOT COME NO PROBLEM, FM DID NOT COME NO PROBLEM, ACCOUNTANT DID NOT COME NO PROBLEM BUT IF OFFICE BOY DID NOT COME EVERY ONE WILL ASK WHY HE DID NOT COME.THIS IS THE FACT, I AGREE WITH YOUR CONCLUSION WITHOUT ANY OTHER PEOPLE THEY CAN SURVEY.

  3. அருமை. ஒவ்வொரு புகைப்படத்தின் கீழ் வாசகங்கள் கவிதையாய்…….உழைப்பின் நறுமணம் கமழும் பதிவு…………..

Leave a Reply to SENTHILKUMAR பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க