Friday, August 12, 2022
முகப்பு கலை கதை தாய்ப்பால் சோசலிசம்

தாய்ப்பால் சோசலிசம்

-

“மக்க முகம் பாத்தா மனசு பாரம் கொறையும், கொழந்த முகம் பார்த்தால் கோடி சஞ்சலம் தீரும்”ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும். அப்படி மக்களையும் குழந்தைகளையும் ஒரு சேர அதிக நேரம் பாக்குற ஒரு பாக்கியம் எனக்கு கெடச்சது. ஒரு குழந்தைய பாத்தாலே சந்தோசத்துல முகமெல்லாம் பல்லாயிரும் எனக்கு, மூணு, நாலு வராந்தா முழுவதுமா குழந்தைங்க குட்டி குட்டி கை, கால ஆட்டிகிட்டு பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும் விதமா இருந்தத பாத்ததும் ஒரு வட்டி கருப்பட்டிய ஒன்னா சாப்புட்ட சந்தோசம். இந்த அற்புதத்துக்கு நடுவுல நானும் ஒரு வார காலம் அதிக நேரம் இருக்க முடிந்ததை நெனச்சு மனசெல்லாம் பரவசம் எனக்கு.

தாய்ப்பால்சமீபத்துல என்னோட சொந்தக்கார பொண்ணு பானுவுக்கு பிரசவ வலி வந்து அரசு மருத்துவ மனையில் சேர்ந்திருந்தோம். நீண்ட பிரசவ வலி போராட்டத்துக்கு பிறகு சுகப்பிரசவமா குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்கு சில பிரச்சனை இருக்குன்னு பிறந்தது முதல் ஆறு நாட்களுக்கு மேல அவசர பிரிவில் வச்சுருந்தாங்க. நான் ரெண்டு நாள் அவள் கூட உதவி ஒத்தாசைக்கு தங்கியிருந்தேன்.

அங்கு பிரசவம் ஆயிருந்தவங்க பெரும்பாலும் சாதாரண எளிய மக்கள்தான். அவங்க வாழ்க்கையில் இருக்கும் வறுமையும் உழைப்பின் சோர்வும் அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் ரோஜாப் பூவாய் கட்டிலில் கிடக்கும் குழந்தையை பார்த்து முகமெல்லாம் பரவசமாக பேசி சிரிந்து கொஞ்சி மகிழந்தார்கள். ஒரு சில பேரோட குழந்தைக்கி பிரச்சனைன்னு அவசர பிரிவில் வச்சிருந்ததால தாய் மட்டும் தனியாக பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை ஏக்கத்தோடு பார்ப்பதும், தன் குழந்தைக்காக கண்ணீரோடு காத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்படி காத்துக் கொண்டிருந்தவர்களில் என் சொந்தக்கார பொண்ணு பானுவும் ஒருத்தி.

பக்கத்து கட்டிலில் உள்ள குழந்தையை உத்து உத்து பாத்துகிட்டு இருந்த என்னை நர்சு கூப்பிட்டாங்க “நீங்கதானே மூணாவது கட்டில்ல இருக்கவங்களுக்கு உதவிக்கி வந்துருக்கவங்க. ஐ.சி.யூ-வ்ல இருக்க உங்க குழந்தை பாலுக்கு அழுவுதாம். இந்தாங்க டப்பா இதுல தாய்ப் பால் வாங்கிட்டு குழந்தைகள் வாடுல உள்ள நர்சுகிட்ட கொடுத்துட்டு வாங்க. போங்க” என்றார்.

பெத்தவகிட்ட பிள்ள மொதல்ல பால் குடிக்காம பால் எப்புடி வரும், கை வச்சு எடுக்கதான் முடியுமா வலி உயிர் போகுமேன்னு யோசிச்சுகிட்டே விசயத்த பானுகிட்ட சொன்னேன் “புள்ள அழுவும்போது வலியாவது ஒண்ணாவது எப்புடியாவது எடுத்து தர்ரேன்னு” சொல்லி புள்ள பாசத்துல முயற்சி பண்ணினா முடியல.

நர்சம்மாவோ “யார்கிட்டையாவது வாங்கிட்டு வந்தாவது குடுங்க. கொழந்த பசில துடிக்கிறான்”னு அவசரப்படுத்துனாங்க.

“பசிக்குது, கொஞ்சம் சோறு போடுங்க”ன்னு கூட தயங்காம கேட்றலாம். “தாய்ப் பால் எரவல் குடுங்கன்னு யார்கிட்ட போய் கேக்க முடியும், என்ன சொல்வாங்களோ”ன்னு தயக்கத்தோடவே பக்கத்துல உள்ள அம்மாகிட்ட “எங்க கொழந்தய, பிரச்சனைன்னு ஐ.சி.யூ.-ல வச்சுருக்காங்க. பாலுக்கு அழுவுது. எங்க பொண்ணுக்கு பாலு வரமாட்டேங்குது அதா…”ன்னு மெதுவா இழுத்தேன்.

“ஏங்கொழந்தைக்கே பாலு பத்தலைங்க, கத்திகிட்டே இருக்கு. வேற யார்கிட்டையாவது போய்க் கேளுங்க” என்றார்.

அந்த பொண்ணு பாலு இல்லன்னு சொன்னதும் பானு மொகம் சுருங்கிப் போச்சு. அவ சங்கடப் படுவாளோன்னு மீண்டும் அதே அறையில கேட்காம அடுத்த அறைக்குப் போனேன். கையில டப்பாவோடு ஒவ்வொரு கட்டிலாய் தயங்கி தயங்கி நின்றதை பார்த்த ஒரு அம்மா “இங்க வாம்மா” என்று கூப்பிட்டார்.

“என்ன பாலு வேணுமா? என் பேரப்பிள்ளையும் பத்து நாளா ஐ.சி.யூ.ல தாம்மா வச்சுருக்கோம். என்ன ஏதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க. மண்ணுல போட்ட கல்லுக்கணக்கா குந்திகிட்டு இருக்கோம். மாசம் முடியறதுக்குள்ள கொறப் பெறசவமா போச்சு. ஆப்ரேசன் பண்ணிதான் கொழந்தைய எடுத்தாங்க. நாங்களும் பால எடுத்துதான் குடுக்குறோம். பச்ச பிள்ள கத்துதுன்னு பாலு வாங்க வந்த ஒன்னோட அவசரம் புரியாம பேசிகிட்டே இருக்கேம்பாரு. இங்க கொண்டா டப்பாவ, என் பொண்ணுகிட்ட வாங்கி தர்ரேன்”னு சொல்லி ஒரு ஸ்பூன் அளவு பால கொடுத்து “இதாம்மா வந்துச்சு, தொண்ட காயாம ஊத்துங்க. அடுத்த தடவ வா இன்னம் கொஞ்சம் கூட வருதான்னு பாப்போம். இல்லாட்டி எதுத்த கட்டில்ல உள்ள பொண்ணு குடுக்கும், வந்து வாங்கிக்க” என்றார்.

ஒரு மணிநேரம் கழித்து மறுமுறையும் தயங்கியபடி வந்தேன். ஆனா அந்த அம்மாவோ பலமுறை பழகியது போல் சிரிந்த முகத்துடன் என் கையில இருந்த டப்பாவ வாங்கி அந்தம்மா பொண்ணு மட்டும் இல்லாது, பக்கத்துல உள்ள இன்னும் மூணுபேருகிட்ட பால வாங்கி ஒண்ணுசேத்து அரைமணி நேரம் போராட்டத்துக்கு பிறகு 20 மில்லி பாலு இருக்கும் குடுத்தாங்க. ஆப்ரேசன் செய்த ஒடம்போட அந்த வலிய தாங்கிக்கிட்டு அவங்க பால எடுத்து கொடுத்தத பாத்த அந்த நிமிசம் இவங்களை விட உலகத்துல உயர்ந்த மனிதர்கள் யாரும் இல்லன்னு தான் தோணுச்சு.

கைய அறுத்துகிட்டாலும் சுண்ணாம்பு தராத இந்த காலத்துல இல்லாத பட்டவங்களா இருந்தாலும் இருக்குறதை பகுந்து கொடுக்கும் குணம் மட்டும் மாறல என்பதை நடைமுறையில் உணர்ந்தேன். ஏதேதோ யோசனையோடு வந்த என்னை மெல்லிய குரலோடும் சைகையோடும் அழைத்தாள் கமலா என்ற பெண். “உங்க குழந்தைக்கி பால் கெடைக்கலையா. எனக்கு பால் அதிகமா இருக்கு. ஆனா பிள்ள வாய வச்சு குடிக்க முடியாம மார்பு அமைஞ்சிருக்கு. எம்பிள்ளைக்கும் எடுத்துதான் குடுக்குறேன். அதிகமா வீணாதான் போகுது. நான் வேணுன்னா ஒங்க பிள்ளைக்கி பால் எடுத்து தர்ரேன்” சொல்லிகிட்டே தானாகவே கட்டிலை சரிசெய்யவும் பாத்திரத்தை ஒதுங்க வைப்பதுமாக வேலையும் செய்தாள்.

தாய்ப்பால்ஒவ்வொரு முறையும் இப்படி தாய் பால் இரவல் வாங்குவதை பார்த்த பானு மனசு கலங்கி “நான் கனவுலயும் நெனச்சு பாக்கல, என் பிள்ளைக்கு யார் யார் பாலையோ வாங்கி கொடுப்பேன்னு. எனக்கு பாலு கட்டிக்கிட்டு நெஞ்செல்லாம் வலிக்குது. ஆனா ஏம்பிள்ளைக்கி இந்த நெலமையா” என்று அழுதாள்.

“இது ஒம்பிள்ளைக்கி கெடச்ச வரம்னு சொல்லணும், எத்தன கொழந்தைக்கு கொடுப்புன இருக்கு இதுபோல பால் குடிக்க. ஒரு தாயோட சீம்பால் குடிச்சாவே ஆரோக்கியம், ஆனா இதுவரைக்குமே பத்து பதினஞ்சு பேரேட பால குடிச்சுருப்பா ஒம்மக. எப்பிடி பலசாலியா வரப்போரான்னு பாரு. பெத்த பிள்ளைக்கி பால் குடுத்தாலே அழகு கெட்டுடும்னு பால் குடுக்க மாட்டாங்க பல பேரு, பிள்ளைய விட அழகுதான் முக்கியம்ங்கறத தாண்டி ‘தான்’ங்கற சுயநலமான எண்ணம் தான் அவங்கட்ட இருக்கும். அனா இவங்கல்லாம் பாரு, அன்னன்னைக்கி ஒழச்சு சாப்புட்ற சனங்க. கறி, மீனு பழமுன்னு திண்ண வசதியில்லாம ஒடம்புல சத்தே இல்லாம அவங்களுக்கு பாலு வடியல, ரெத்தத்த புழிஞ்சு தர்றாங்க. தன்னலம் பாக்காத நல்ல கொணம் இவங்க்கிட்ட இருக்கு. இப்பேர்ப்பட்ட மனுசங்களோட பால ஒம்புள்ளக் குடிக்கிறதுக்கு நீதான் புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றேன்.

“எங்கம்மா பொறந்த அன்னைக்கே அவங்க அம்மா எறந்துட்டாங்களாம். துக்கத்துக்கு வந்த புள்ளைக்காரங்க எல்லாரும் கொழந்தைய தூக்கி பால் கொடுத்தாங்களாம். பின்நாள்ளையும் சாதி மதமுன்னு பாக்காம யாரெல்லாம் பிள்ளைக் காரங்களோ அவங்கள்ளாம் எங்கம்மா வீட்டை கடந்து போகயில பிள்ளைய தூக்கி பால் கொடுக்காம போக மாட்டாங்களாம். ரெண்டு வயசு வரைக்கும் குடிச்சிருக்கு எங்கம்மா. இந்த மாதிரி ஒணுமண்ணா பழகற எதார்த்தம் கிராமத்து சனங்க மனசுல இருக்கும். இது நடந்து 55 அஞ்சு வருசமாச்சு ஆனா நகரத்துல இன்னைக்கும் ஏழ்மையிலயும் தாய்மை மனசு மாறாம நடந்துக்குற இந்த மனுசங்கள பாக்கும் போது சந்தோசமா இருக்கு…” என எங்கம்மா கதையையும் பானுவிடம் சொன்னேன்.

“இந்தாம்மா கொழந்த பெத்த பொண்ண கொஞ்சம் ஓய்வு எடுக்க விடும்மா. அந்தம்மா கிட்ட என்ன நொய் நொய்ன்னு கத பேசிகிட்டே இருக்கீங்க. டாக்டர் ரவுண்ட்ஸ் வராங்க வெளியில போங்க” என்று நர்சு சத்தம் போட்டதும் டீ குடிச்சுட்டு வரலாம்னு நகர்ந்தேன்.

தேய்ந்து இத்துப் போயி பெரும்பாலும் நோய் வாய்ப் பட்டிருந்த அனேக செருப்பு கூட்டத்தில், பரவாயில்லை என்ற கண்டிசனுடன் இருந்த என் செருப்பை காணவில்லை. பிரசவ வார்டில் நாப்கீன், பேம்பர்ஸ் போல செருப்பும் திருட்டு போய் விட்டது என்ற முடிவுடன் வெறுங்காலுடன் நடந்தேன். அரசு மருத்துவமனையில ஒரு இத்துப் போன செருப்புக்கு கூட திருடுற மதிப்பு இருக்குன்னா பாத்துக்கங்களேன். டீக் கடையில் நின்ற கமலாவின் கணவன் “என்ன உங்க செருப்பும் காணலையா, வெறும் காலோட வர்றீங்க, காலையில எதுத்த பெட்டுக்காரம்மா செருப்ப காணல, பேம்பர்ஸ காணலன்னு ஒரே கத்துக் கத்திச்சு. இங்க வந்தா இதெல்லாம் சகசம்ங்க” என்றவர் மேலும் கோபத்தோடு தொடர்ந்தார்.

“நாப்கீன், பேம்பர்ஸ், குழந்தைக்கு சட்டை, சொட்டர், கொசுவலையின்னு எல்லா பொருளுமே வார்டு உள்ளேயே விக்கிது. தனியார் ஆஸ்பத்திரி போலவே எதுக்கும் வெளிய போக வேண்டாம். எல்லா வசதியும் கெவுருமெண்டு ஆஸ்பத்திரியிலேயும் இருக்குது. காசுதான் இல்ல. ஆனா இந்த பொருள் கூட வாங்க வசதி இல்லாம இங்க கொண்டு வந்து சேக்க வேண்டிய நெலம நமக்கு. ஆனா பெத்தவளுக்கும் பிள்ளைக்கும் நாப்கீன் கூட கொடுக்க முடியாத நெலம அரசாங்கத்துக்கு. இவங்கள சொல்லி குத்தமில்லங்க. ஓட்டுப் போட்ட நம்மள சொல்லணும்.” அவர் பேச்சில் நியாயமான கோபம் தெரித்தது.

வெளிய வந்து ஒரு மணி நேரமாச்சே. இன்னேரம் குழந்தைக்கி பால் வேணுன்னு நர்சு கேட்ருப்பாங்களே, பானு என்ன செஞ்சாளோ என்ற பதட்டத்தோடு கிளம்பினேன். “வார்டுக்கா போறீங்க. இந்த காப்பிய கமலாகிட்ட கொடுத்துடுங்க. ஆம்பிளைகள இந்த நேரம் உள்ள விடமாட்டாங்க” என்ற கமலாவின் கணவர் கையில் இருந்த பாட்டிலை வாங்கிக் கொண்டு உள்ள வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. கமலா குழந்தையை மார்போடு அணைத்து சந்தோசமாக தாய்மையை அனுபவித்து பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் பானு. அவ குழந்தை பால் குடிக்க வழியில்லாம ஐசியுவுல இருக்கு. கமலாவுக்கு புள்ள பக்கத்துல இருந்தும் பால் கொடுக்குற மாதிரி மார்பு அமையல. பானுவுக்கு ஏதாவது குழந்தைங்க குடிச்சாதான் பால் ஊரும். எல்லாத்தையும் சேத்து நினைச்சு பாத்தேன். ஏழைங்கிட்டதான் சோசலிசம் இயல்பா இருக்குங்கிறதுக்கு இத விட என்ன வேணும்?

அமெரிக்காவுல குழந்தை பெற்ற தாய் ஒருத்தி உலகத்திலேயே அதிகமா தாய்ப் பால தானமாக தந்தவர்ன்னு கின்னஸ் புத்தகத்துல இடம் புடிச்சுருக்காராம். ஏழ்மை நிலையில், உடலில் வலிமையற்ற போதும் குழந்தைக்கு தாய்ப் பாலை தானமாக தரும் பொது நல மனம் படைத்த இவர்கள் முன் கின்னஸ் சாதனை பெரிதாக தெரியவில்லை.

– சரசம்மா

(உண்மைச் சம்பவம்)

 1. ஆப்ரேசன் செய்த ஒடம்போட அந்த வலிய தாங்கிக்கிட்டு அவங்க பால எடுத்து கொடுத்தத பாத்த அந்த நிமிசம் இவங்களை விட உலகத்துல உயர்ந்த மனிதர்கள் யாரும் இல்லன்னு தான் தோணுச்சு.

 2. இவர்களைத்தான் நாம் அம்மா என்று அழைக்கவேண்டும். எவ்வளவுதான் பேசினாலும் இத்தகைய பெண்ணினத்திற்கு ஆண்களால் நன்றிகூற முடியுமா?

 3. *Communism not only poor,
  *Its there for all…..
  *But unfortunately, no one interested to leave for them sophisticated life.
  Poor people, they know the problem and situation in life,(Everyday facing worst condition), so they are ready to help…

  *Moreover, The communist approach to people (Including your people, its not good)

  That’s why in world communist all are very back in present situation.

  With Regards
  Udayan

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க