Wednesday, September 27, 2023

நாகராஜ்

-

ரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. பசுமையான அந்த நினைவுகள் இன்றும் நீங்காது நிறைந்திருக்கின்றன. உசிலம்பட்டி வட்டாரத்தில் அமைந்திருக்கும், அமைதியான கிராமங்களில் அதுவும் ஒன்று. முன்னூறு முதல் முன்னூற்றைம்பது வீடுகள் வரை இருக்கலாம். நகரப்பேருந்துகள் நுழைந்திராத கிராமம். மூச்சுக்காற்று வெளியேற போதுமான இடைவெளி விட்டு, பொதிமூட்டைகளென பயணிகளைத் திணித்துக்கொண்டு தவழ்ந்து செல்லும் ஷேர் ஆட்டோக்கள். அங்கிருந்து உசிலை செல்ல, நகரப் பேருந்து என்றால் மூன்று ரூபாய் கட்டணம் இருக்கலாம். ஷேர் ஆட்டோவில் செல்ல பத்து ரூபாய்.

முல்லைப் பெரியாறு போராட்டம்
முல்லைப் பெரியாற்றை பாதுகாக்கும் போராட்டத்தில் மக்கள்.

இப்போது, இது அவர்களுடைய அத்தியாவசிய செலவினங்களில் ஒன்றாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, அவ்வழி செல்லும் நகரப் பேருந்துகளின் மணிநேரக் கணக்கு வைத்து, அதற்கேற்ப கிளம்பிச் சென்றாக வேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை என்பதால், இத்தகைய சாகச பயணங்கள் சலிப்பைத் தருவதில்லை போல!

நாங்கள் சென்ற காலத்தில் இரு திருமண நிகழ்வுகள், ஒரு நிச்சயதார்த்தம், ஒரு இழவு என ஒட்டு மொத்த கிராமமே மகிழ்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியிருக்கிறது. இன்பத்தையும் துக்கத்தையும் சமமாய்ப் பங்கிட்டு சீமைச் சரக்கிட்டு தளும்பிய பெருசுகள். காதை கிழிக்கும் சினிமாப் பாடல்கள்.

நாங்கள் எங்கள் நட்பு குழாமாகச் சென்றது, அந்த கிராமத்தின் அமைதியை ரசிப்பதற்காக அல்ல;  ஓர் அரசியல் பிரச்சாரத்திற்காக. தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தொடர்ந்து, “முல்லைப் பெரியாறு அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடை போடு!” என்ற முழக்கத்தின் கீழ், “முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு” என்ற அமைப்பின் கீழ் அந்த விவசாயிகளை அணிதிரட்டுவதற்காக! பாசனத்திற்காகவும்  குடிநீருக்காகவும் முல்லைப்பெரியாற்று நீரை நம்பியிருக்கும் தென் தமிழக கிராமப்புறங்களில் களப்பணியாற்றிக் கொண்டிருந்தனர், தமிழகமெங்கிலும் வந்திருந்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள். மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு என்ற அமைப்புகளின் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வேலை செய்தோம்.

நாங்கள் சென்ற கிராமத்தில்விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற தோழமை அமைப்பின் பெயர் மட்டுமே எங்களுக்கு பரிச்சயம். குறுக்கும் நெடுக்குமாய் நீண்டும், முட்டுச் சந்துகளும் நிறைந்த எமக்கு பரிச்சயமற்ற இக்கிராமத்தின் தெருக்களில் எம்மை வழிநடத்திச் சென்றது, வி.வி.மு.வின் ஆதரவாளர் ஒருவரது மகன் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் மற்றும் வி.வி.மு.வின் மற்றுமோர் ஆதரவாளரான நாகராஜ்.

நாகராஜுக்கு வயது 35 இருக்கலாம். அப்பள்ளிச் சிறுவனின் கரம் பற்றிக் கொண்டு, அவ்வப்போது அவனிடம் ஏதோ விசாரித்துக் கொண்டும் குறுக்கும் நெடுக்குமாய் சீரற்று கிடந்த தெருக்களில் ஊடாடி, வீட்டிலுள்ளோர் பெரியோர்களது பெயரை விளித்து உரிமையுடன் அவர்களை வெளியே அழைத்து, “முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாக நம்ம தோழர்கள் பேச வந்துருக்காங்க, என்னென்னு கேளுங்க” என அவரது ஆளுமை கிராமத்துடன் இரண்டறக் கலந்திருந்தது.” அடுத்து மாயன் வீட்டுக்கு போ, அவன் வீட்டில யாரும் இல்லியா?” இவ்வாறு மொத்த கிராமத்து உறுப்பினர்களது பெயரும் சரளமாய் வந்து விழுகிறது,  நாகராஜ் வார்த்தைகளில்.

முல்லைப்பெரியாற்றுச் சிக்கலின் சுருக்கமான பின்னணியையும், கேரள ஒட்டுக் கட்சிகளின் அடாவடித்தனத்தையும், இப்பிரச்சினையில் பொதிந்துள்ள தண்ணீர் தனியார்மயமாக்கம் உள்ளிட்ட மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் நீட்டிப்பை முன்னிலைப்படுத்தியும்; சந்தர்ப்பவாத, இரட்டைநிலையெடுக்கும் தமிழக ஓட்டுக்கட்சிகளைப் புறந்தள்ளி புரட்சிகர அமைப்பில் விவசாயிகள் அணிதிரள வேண்டிய அவசியத்தையும் வீடுவீடாகச் சென்று விளக்கினோம்.

முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்; நாம் அமைப்பாக திரளவேண்டும்” என்ற மைய பிரச்சாரத்துக்கு ” சரிதான் தம்பி ஆகட்டும் கட்டாயம் செய்யலாம்.” என்பதாகவே மக்களின் மறுமொழி அமைந்திருந்தது. ஆதரவு வார்த்தைகள் ஒன்றுதான் எனினும், சிலரது உடல் மொழி உணர்த்தின, இவை செயலுக்கு வராத வாயசைவு வார்த்தைகள் தான் என்று. விவசாயிகளின் வர்க்கத்தன்மை, முல்லைப்பெரியாற்று நீருக்கும் அந்த விவசாயிக்கும் உள்ள தொடர்பை பொறுத்து அவர்களது ஆதரவு நிலை ஏற்ற இறக்கங்களுடன் மாறுபட்டிருந்தது.

இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், வெயிலின் களைப்போ, ஊரைச் சுற்றி வந்த அலுப்போ வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்மையும் சோர்வுக்குள்ளாக்காமல் உற்சாக ஊக்கியாய் கடைசிவரை உடன் வந்தார் நாகராஜ். அப்போது, குறுகிய சந்து ஒன்றில் உயரம் குறைந்திருந்த தாழ்வாரத்தின் தகடு ஒன்று நாகராஜின் நெற்றிப் பொட்டை பதம் பார்த்திருந்தது.

“பொதுப்பிரச்சினைக்காக பிரச்சாரம் செய்கிறோம். விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறோம். நமது பிரச்சினைக்காக வெளியூரிலிருந்தெல்லாம் தோழர்கள் வந்திருக்கிறார்கள்” என்ற பேருற்சாகம் அவரது உள்ளமெங்கும் நிரம்பி வழிந்ததால், தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, “அது ஒன்றுமில்லை தோழர்…” என்று விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.

இப்படி கிராமத்தின் சந்து பொந்துகளையும், இன்ப துன்பங்களையும், ஆண்கள் பெண்கள் அனைவரையும் அறிந்திருந்த நாகராஜுக்கு பார்வை தெரியாது. உடன் வந்த மாணவனை சாரதியாக வைத்துக் கொண்டே முழு கிராமத்திற்கும் எங்களை அழைத்துச் சென்றார். அவரது அக உலகில் அந்த கிராமம் வேறு எவரையும் விட அவருக்கு பளிச்செனத் தெரிந்தது உண்மை. புலனறிவில் ஒன்று குறைந்தால் கூட நடைமுறை சோர்வுடன் படுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதனால்தான் அந்த முழு கிராமத்திற்கும் நாகராஜ் ஒரு பட்டத்து இளவரசனைப் போல கொண்டாடப்படுகிறார்.

முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் நடைபெறும் போராட்ட செய்திகளை படிக்கும் பொழுதெல்லாம், எம்மை கடந்து செல்கின்றன நோய்த்தாக்குதல் ஒன்றுக்கு தம் இருவிழிப் பார்வையையும் பறிகொடுத்த அந்த உணர்வுமிக்க வி.வி.மு.வின் ஆதரவாளன் நாகராஜனைப் பற்றிய நினைவுகள்!

இளங்கதிர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க